Wednesday, 10 June 2015

கல்விச்சாலைகளும் காசுச்சாலைகளும்

நேற்று காலை வாசலில் வந்து விழுந்த நாளிதழின் உள்ளே இருந்தது ஏ-4 அளவில் ஒரு துண்டறிக்கை, அதாவது நோட்டீஸ். இவற்றை உடனே தூக்கி எறிந்துவிடுவதே எனக்கு வழக்கம் என்றாலும், ஏனோ தெரியவில்லை, அதை ஓரமாகப் போட்டு வைத்தேன். மாலையில் அதன் நினைவு வரவே, தேடி எடுத்து திருப்பிப் பார்த்தேன். ஒரு பக்கம் ஒரு பள்ளியின் விளம்பரம், மற்றொரு பக்கம் ஒரு டியூஷன் சென்டரின் விளம்பரம். இரண்டையும் நடத்துபவர் ஒரே ஆளாக இருக்கலாம். இருக்கட்டும். விஷயம் அதுவல்ல.

ஆங்கில வழிக் கல்வி வழங்குவதாகச் சொல்லிக்கொண்ட அந்தத் தனியார் பள்ளியின் விளம்பரத்தில் இருந்த ஆங்கிலத்தின் தரம் சொல்லத் தரமன்று. இவற்றுக்கெல்லாம் எப்படி அங்கீகாரம் கிடைக்கிறது, ஒரு துண்டறிக்கையைக்கூட பிழைகளின்றி தயாரிக்கத் தெரியாத ஒரு நிறுவனம் என்ன கற்றுக் கொடுத்துவிட முடியும் என்று வியப்பாக அல்ல, அதிர்ச்சியாக இருந்தது. ப்ரீ-கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லா பாடங்களுக்கும் சிறந்த முறையில் டியூஷன் வகுப்புகள் என்று பறைசாற்றிய அந்த சுற்றறிக்கையின் தலைப்பு - ............. TUTON CENTRE. என் மனதுக்குள் எழுந்த திட்டுகள் இங்கே எழுதத் தரமற்றவை.

இப்படி இருந்தாலும் இத்தகைய பள்ளிகள்தான் ஊருக்கு ஊர் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. கிராமம், நகரம் என்ற வித்தியாசமின்றி பெற்றோர் இத்தகைய பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கத் துடிக்கிறார்கள். விளக்கில் விட்டில் பூச்சிகளைப்போலப் போய் விழுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளே இல்லாமல் மூட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லையா... ஆரம்பப் பள்ளிகள் அவ்வளவு மோசமாகவா இருக்கின்றன... நேரில் பார்த்தறிய வாய்ப்புக் கிடைத்தது நேற்று.

நேற்று ஒரு கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். அந்தப் பள்ளியில் இப்போது இருப்பது ஆறு மாணவர்கள் மட்டுமே. மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், ஆசிரியர் எண்ணிக்கையும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஒரு டீக்கடைகூட இல்லாத அந்தக் கிராமத்தை அடைய பேருந்து வசதி கிடையாது. இரண்டு கிலோமீட்டர் நடந்தாக வேண்டும். இப்போது அதில் ஆசிரியராக இருப்பவர் தினமும் நடந்து போய் நடந்து திரும்புகிறார். ஆனால் அந்த கிராமத்தின் பெற்றோர்களோ, தம் குழந்தைகளை எப்படியாவது பக்கத்தூரின் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்வது...

பள்ளியில் எல்லாம் இலவசம். புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், செருப்பு, புத்தகப் பை, மதிய உணவு என எல்லாமே இலவசம். இவற்றில் சில குறைகளும் ஊழலும் இருக்கலாம் என்றாலும் தரமற்றது என்றுகூட சொல்ல முடியவில்லை. பள்ளியின் கல்விமுறையும், கல்விச் சாதனங்களும்கூட சிறப்பாகவே இருக்கின்றன. இதை வாசிப்பவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளியின் கல்விமுறையை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் சில படங்களைக் காட்டுவது அவசியமாகிறது.


கம்பியில் கட்டிவிடப்பட்ட தோரணம்போல காட்சி தருகிறதே, அதன் பெயர் கம்பிப் பந்தல். குழந்தைகள் தமது கையால் வரைந்தவை. சூரியக் குடும்பம், தாவர வளர்ச்சி, பாடம் தொடர்பான கருத்து வரைபடம், படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் என பலவகையான படங்கள் மாணவர்களால் வரையப்பட்டு அதில் தோரணமாகத் தொங்க விடப்படுகின்றன. பாடத்தைப் படித்து முடித்த மாணவர்களின் புரிதல் அதில் வெளிப்படுகிறது. படங்கள் நன்றாகவே இருந்தன, படத்துக்கான குறிப்புகளும் தெளிவாகவே இருந்தன. இத்தனைக்கும் பெஞ்ச்சுகளோ, டெஸ்க்குகளோ இல்லாதவர்கள் அவர்கள்.


ஏணிப்படிகள் என்று சில வரைபடங்கள் இருக்கின்றன. அதில் சின்னச் சின்னதாக சில படங்கள் அல்லது குறிகள் இருக்கும். மற்றொரு பக்கத்தில் சுமார் நூறு பிளாஸ்டிக் டிரேக்கள் இருக்கின்றன. ஏணிப்படிகளின் வரைபடங்களில் என்ன குறிகள் அல்லது படங்கள் உண்டோ, அதே படங்கள் டிரேக்களில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த டிரேக்களில் வாசிப்பு அட்டைகள் அல்லது செயல்பாட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஏணிப்படிகள்.


குறிப்பிட்ட ஒரு படம் அல்லது குறியீட்டுக்கு நிகரான தட்டிலிருந்து அட்டையை எடுத்து, அதில் சொல்லப்பட்டிருப்பதை செய்து முடித்துவிட்டு ஏணியில் ஏறலாம். பிறகு அடுத்த அட்டை. வாசிப்பு அட்டைகள் அல்லது செயல்பாட்டு அட்டைகளும் தரமாக, குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு, லேமினேட் செய்யப்பட்டிருப்பதால் கையாளும்போது சேதம் அடைவதில்லை.


காலநிலை நாள்காட்டி என்று ஒரு நாள்காட்டி. தினமும் காலை, நண்பகல், மாலை என மூன்று நேரமும் வானிலை எப்படி இருக்கிறது என்பதை குழந்தைகளே குறித்து வைக்க வேண்டும். மாத இறுதியில் மொத்த மாதத்தின் காலநிலை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்று அவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

குழந்தைகள் சுத்தமும் சுகாதாரமுமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியச் சக்கரம் என்றொரு சக்கரம். ஏதேனுமொரு குழந்தையிடம் குறையிருந்தால், மற்றவர்களுக்குத் தெரியாமல் அவர்களுக்கு மட்டுமே தெரியும்படி சுட்டிக்காட்ட உதவுகிறது. தினமும் பத்து ஆங்கிலச் சொற்கள், அவற்றின் தமிழாக்கத்துடன் கற்பிக்கப்படுகிறது.



ஆரம்பப் பள்ளியின் இந்தச் சிறுவர்கள், அதே பள்ளியில் படித்த மூத்த மாணவர்களின் துணையுடன் அறிவியல் மாடல்களை உருவாக்கியிருந்தது வியப்பை அளித்தது. மோட்டார் பொருத்திய சிறிய காற்றாலை, எல்ஈடி விளக்குகள் அமைத்த ஒரு கோயில் வளாகம். பாவம், பேட்டரிகள்தான் இருக்கவில்லை. என்னுடைய கேமராவில் இருந்த பேட்டரியைக் கழற்றி அதில்போட்டு இயக்கிப் பார்க்க வேண்டியிருந்தது. அதனால் படம் தெளிவில்லை.

அவர்களுடைய நோட்டுப்புத்தகத்திலிருந்தும் புத்தகத்திலிருந்தும் சில கேள்விகளைக் கேட்டேன். கையெழுத்துகளைப் பார்த்தேன். பள்ளி நேரம் முடிந்து விட்டிருந்ததால், மூன்று பேர் மட்டுமே இருந்தனர். மூன்று பேரில் இருவரின் கையெழுத்துகள் அபாரம், ஒருவனின் கையெழுத்து சிறப்பாக இல்லை என்றாலும் மோசமில்லை.


பள்ளியைவிட்டுப் புறப்படும்போது, இங்கே படித்து முடித்து வேறொரு ஊரில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அது ஐந்து மைல் தூரம் தள்ளியிருக்கும் உயர்நிலைப்பள்ளி. மூன்று கிலோமீட்டர் வரை பஸ்சில் வந்து, இரண்டு மைல் நடந்து வந்தவன். டேய் கவுதம், இங்கே வாடா என்றதும் என்னங் டீச்சர் என்று பக்கத்தில் வந்து கைகட்டி நின்றவனின் பேன்ட் கணுக்காலுக்கு மேலேயே முடிந்து விட்டிருந்தது. சட்டையில் இரண்டு பொத்தான்களின் இடத்தில் பின்னூசிகள் குத்தப்பட்டிருந்தன. கால்களில் செருப்பு இருக்கவில்லை. அந்த நேரத்தில் என்னால் முடிந்தது, அவன் மறுக்க மறுக்க அவனுக்கு 200 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்கிக்கொள்ளச் சொன்னதுதான்.

ஏதோ ஒரு கிராமத்தைக் கடக்கும்போது, தார்ப்பாய்ச்சி வேட்டியும் புடவையும் கட்டியவர்களாக, தலையில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு ஒரு கூட்டம் நடந்து போய்க்கொண்டிருந்தது. பார்த்ததுமே அவர்கள் வடமாநிலத்தவர்கள் என்று தெரிந்தது. திருப்பூர் கம்பெனிக்காரர்கள் இப்போதெல்லாம் நகருக்கு வெளியே கிராமங்களில் சின்ன கம்பெனிகளை அமைத்து, இவர்களுக்கு வேலை தருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்பே இல்லை. நாங்கள் சென்ற கிராமத்தில் இதுபோல 12 குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை பள்ளியில் சேர்க்க முயற்சி செய்வதாகவும் சொன்னார் அந்த ஆசிரியர். தமிழ் தெரியாத அவர்களை எந்தப்பிரிவின்கீழ் சேர்ப்பது என்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும் சேர்ப்பதில் உறுதியாக இருந்தார் அவர். மகிழ்ச்சியாக இருந்தது.

திரும்பி வரும்போது, தான் இதற்கு முன் வேலை செய்த பள்ளிக் குழந்தைகளுக்கு வாலிபால் வாங்கிக் கொடுங்களேன் என்றார் ஆசிரியர். வாலிபால் என்ன, வேறு ஏதாவது விளையாட்டு சாதனங்களும் வாங்கினால் போயிற்று என்றேன். என் தாராள குணத்தைக் காட்டுவதற்காக இதைக் கூறவில்லை. இப்போது வேலைசெய்கிற பள்ளியின்மீது மட்டுமல்ல, முன்னர் வேலை செய்த பள்ளியின் மாணவர்கள் மீதும் அக்கறை காட்டக்கூடிய ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்று காட்டுவதற்காக.

இந்தப் பதிவைப் படித்த பிறகு, குருட்டுத்தனமாக ஆட்டுமந்தைகள் போல தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்ல இருக்கும் ஒருவர் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்தால், அது இந்தப் பதிவுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் நினைப்பேன்.



பி.கு. – உறுதியளித்தபடி, இன்று ஒரு வாலிபால், ஒரு ஃபுட்பால், இரண்டு ரிங்குகள் வாங்கிக் கொடுத்து விட்டேன்.

1 comment:

  1. கிராமத்துப் பள்ளிகளில் நிச்சயமாக நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையும், ஒரு சில கிராமங்களைத் தவிர்த்து, கணிசமாகவே உள்ளது. ஆனால், ஆரம்பபப் பள்ளியை முடித்து, உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த நகரத்திற்குப் போக வேண்டிய நிலை வரும்போது, கிராமத்துப் பள்ளி மாணவனை அவர்கள் இகழ்ச்சியாகப் பார்ப்பது கண்கூடு. தமிழ்வழியாக இவன் படித்ததும் ஒரு காரணமாகிறது. எனவேதான் எவ்வளவு தூரமாக இருந்தாலும் ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குத தம் பிள்ளைகளை அனுப்ப எத்தனிக்கிறார்கள் கிராமத்துப் பெற்றோர்கள். இந்தியா போன்ற பன்மொழிக் கலாச்சார அமைப்பில், தாய்மொழி, தேசீயமொழி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே நிலைமையைச் சீர்திருத்தமுடியும். அப்போதும் கூட, கற்பித்தலுக்கான மொழி என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்விக்கு எளிதில் விடை கிடைக்காது.

    ReplyDelete