Saturday 17 September 2016

லாரி டிரைவர் கனவு

(ஓட்டுநர்கள் தினத்தை முன்னிட்டு - நெடுஞ்சாலை வாழ்க்கை)


பெரியவனாகி என்ன செய்யப்போறே?” என்ற கேள்விக்கு டிரைவர் ஆகப் போறேன்என்று சொல்லாத சிறுவர்கள் இருந்திருக்கவே முடியாது என்பது என் நம்பிக்கை. டிரைவர் என்பவர் சிறுவர்களுக்கு அவ்வளவு பெரிய ஆதர்சமாக இருந்திருக்கிறார். பஸ்சில் பயணிக்கும்போது முன் வரிசையில் உட்காரத் துடிப்பதும், டிரைவர் அஸால்டாக ஸ்டியரிங்கைத் திருப்பி வண்டியை ஓட்டுவதும், கியர் மாற்றுவதும், பின்னால் திரும்பிப் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அவ்வப்போது ஹாரனை அமுக்குவதும்... கண்டு வியக்காத சிறுவர்கள் யார்தான் இருக்க முடியும்? ஊருக்குள் வரும் லாரிகளின் பின்னால் ஓடாதவர்கள், பின்பக்கப் பலகையைப் பிடித்துத் தொங்காதவர்கள் யார்?

அம்மா பொட்டுக்கடலை வாங்கி வரச் சொல்லும்போதும், பக்கத்து வீட்டு மாமா சிகரெட் வாங்கி வரச் சொல்லும்போதும் நான் லாரியை எடுத்துக்கொண்டுதான் புறப்படுவேன். சாவியைப் போட்டு டுர்ர்ர்ர்.... என்று கிளப்பி, நிறுத்தியிருக்கும் இடத்திலிருந்து ரிவர்ஸ் எடுத்து, சரசரவென ஸ்டியரிங்கைத் திருப்பி, வண்டியை கடைக்கு விடுவேன். சமயத்தில் மோட்டார் பைக்கில்கூடப் போவதுண்டு. திரும்பி வரும்போது என்னை அறியாமலே அது லாரியாக மாறியிருக்கும். மோட்டார் பைக்கின் ஹாண்டிலை திருப்புவதில் சுவாரசியம் அதிகம் கிடையாது. இடது பக்கமோ வலது பக்கமோ திருப்பியதும் இடுப்பில் முழங்கை இடிக்கும். ஆனால் லாரி அல்லது பஸ்சின் ஸ்டியரிக் அப்படியல்ல, இரண்டு கைகளாலும் சுழற்றுவதில், எவ்வளவு சுகம்! இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப வேண்டுமானால், பவர் ஸ்டியரிங் என்றால் என்னவென்றே தெரிந்திராத அந்தக் காலத்திலேயே என்னுடைய ஸ்டியரிங் சொய்ங் என்று இரண்டு மூன்று சுற்றுச் சுற்றும். வழியில் ஆள் வந்தால் என் வண்டியின் வேகத்தைப் பார்த்து ஒதுங்க வேண்டும். ஒதுங்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பாம்... பாம்... ரப்பர் ஹாரன். வழியில் ஆட்கள் இல்லாதபோது வண்டி டாப் கியரில் சத்தமில்லாமல் ஓடும். கடைக்குப் போய் காசு கொடுத்து பொருள் வாங்கும்போது வண்டியிலிருந்து இறங்காமலே வாங்குவதுண்டு. ஆனால் திரும்பி வந்து கொடுக்கும்போது வண்டியின் வலது பக்கத் கதவைத் திறந்து கீழே குதித்து, டமாரென்று கதவை அறைந்து சாத்திவிட்டுத்தான் கொடுப்பேன். யு போல வளைத்த கம்பியின் இடையில் சைக்கிள் ரிம்மை ஓட்டிக்கொண்டு போய் திரும்பும்போது அதே ரிம் ஸ்டியரிங்காக மாறிவிடுவதும் உண்டு.

முதல்முதலாக லாரியில் பயணித்தது மங்கலாக இப்போதும் நினைவில் உண்டு. வெள்ளகோவிலிலிருந்து மடத்துக்குளத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிய அப்பா, லாரியில்தான் சாமான்களையும் எங்களையும் ஏற்றிக்கொண்டு வந்தார். ஓர் அதிகாலையின் மங்கிய ஒளியில் தூக்கக் கலக்கத்துடன் லாரியின் பின்னாலிருந்து இறங்கி நின்றது அந்தக் காலையைப் போலவே மங்கலாக நினைவிருக்கிறது. உயர்நிலைப் பள்ளிப்பருவத்தை எட்டியபோது நிஜ லாரியில் அதாவது, லாரியின் கேபினில் ஏறி உட்காரும் வாய்ப்புகள் கிடைத்தன.

எனக்கு சொந்த ஊர் தாராபுரம். அங்கே எங்களுக்கு நிறைய உறவினர்கள். ஆண்டு இறுதியில் கோடை விடுமுறைகள் பெரும்பாலும் தாராபுரத்தில் கழியும். சுல்தானியா பள்ளிவாசலின் வடக்கே, மாரியம்மன் கோவில் வீதியின் கிழக்கே, வாய்க்காலை அடுத்து பெரிய மைதானம் இருக்கும். அதுதான் லாரிகளின் ஷெட். நிறைய லாரிகள் நின்றிருக்கும்.

உறவினர்களில் ஒருவர் கலீம் - ஒன்று விட்ட சித்தப்பா. அவர் ஒரு லாரியின் டிரைவராக இருந்தார். விடுமுறையில் ஊருக்குப் போகும்போதெல்லாம் என் பொழுதுகள் பெரும்பாலும் லாரி ஷெட்டிலேயே கழியும். அல்லது அமராவதி ஆற்றில் கழியும். கலீமுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. நண்பனாக நடத்துவார், அதீத பாசத்துடன் பேசுவார். இப்போதும் கலீம் என்று பெயர் சொல்லித்தான் அழைக்கிறேன். அவருடைய சகோதரி என் சின்னம்மாவும் அளவற்ற பாசத்தைப் பொழிவார். அவருடைய கணவர் டிங்கரிங் வேலை செய்பவர். அவருடைய தொழிலும் செவ்வாய்க் கிழமை வாரச் சந்தை நாள் தவிர இதர நாட்களில் லாரி ஷெட்டை நம்பித்தான் இருந்தது. இன்னொரு உறவினர் தின்பண்டங்களை ஒரு டின்னில் போட்டுக்கொண்டு லாரி ஷெட்டில் அலைந்து விற்றுக் கொண்டிருப்பார்.

மாமா தாராபுரத்தில் தாசில்தாராக இருந்தார். விடுமுறைக்குச் செல்வது அவர் வீட்டுக்குத்தான். ஆனால் பேருக்குத்தான் அங்கே போவது. இரவு உறங்கவும், காலை உணவுக்கும் மட்டும்தான் மாமா வீடு. மற்ற நேரமெல்லாம் சேக்காளிகளோடும் மற்ற உறவினர்களின் வீடுகளிலும்தான் இருப்பேன். (சின்னம்மா வீட்டில் பழைய சோறும், பெண்கள் கூடைக்குள் பாத்திரத்தை வைத்து விற்றுக் கொண்டு வந்த தாராபுரத்துத் தயிரும், கோடை காலத்துக்கென்றே வரம் வாங்கி வந்த மாம்பழமும் உணவாகக் கிடைக்கும்.) கலீம் தவிர, இன்னொரு தோழன் சிராஜ். என் வயதுக்காரன், உறவுமுறைச் சகோதரன். அவன் தன் அண்ணனின் லாரியில் கிளியாக இருந்தான். (கிளி என்பது கிளீனர் என்பதன் சுருக்கம்.) அவர்களுடைய லாரியின் பெயர் நாம் இருவர் தமிழ் அல்ல ஆங்கிலம் – WE TWO. அதாவது, அண்ணனும் தம்பியும் இணைந்து ஓட்டும் லாரியாம். சிறிது காலத்துக்குப் பிறகு சிராஜும் டிரைவராகி விட்டான்.

லாரியில் டிரைவர் ஆவதற்கு முதல் தகுதி, யாராவது ஒரு டிரைவரிடம் கிளீனராகச் சேர வேண்டும். சொல்லப்போனால் டிரைவரைவிட கிளிக்குத்தான் அதிக வேலை இருக்கும். வாடகைக்குப் போய்விட்டு வந்த டிரைவர் வண்டியை விட்டுவிட்டு ஹாயாகப் போய்விடலாம். பக்கத்து வாய்க்காலிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வந்து கிளீனர்தான் வண்டியைக் கழுவ வேண்டும், தார்பாலினை முறையாக மடித்து வைக்க வேண்டும், கயிறைச் சுருட்டி வைக்க வேண்டும்.... ஓரிரண்டு ஆண்டுகள் கிளியாக இருந்து நம்பிக்கை வந்த பிறகுதான் லாரியை ஓட்ட அனுமதிப்பார். அதுவும் வாடகைக்குப் போகும்போது அல்ல. இதுபோல ஷெட்டில் நிற்கும்போது ரிவர்ஸ் எடுக்க, நகர்த்தி நிறுத்த, கழுவிய பிறகு லேசாக ஒரு டிரையல் பார்க்க அனுமதிப்பார் டிரைவர். அவ்வப்போது அடியும் கிடைக்கும். அடிக்குப் பயந்தவன் டிரைவர் ஆகவே முடியாது. ஒரு டிரைவரிடம் கிளியாகத் தாக்குப் பிடிக்காதவன் இன்னொரு டிரைவரிடம் அவ்வளவு சுலபமாக கிளியாகச் சேர்ந்து விட முடியாது. கிளிகள் எல்லாருமே தம் வாத்தியார்களிடம் எப்போதும் மரியாதையாகவே இருப்பார்கள் - அந்தக் கிளி இன்னும் பத்துக்கிளிகளை உருவாக்கி விட்ட பின்பும்கூட.

தாராபுரம் லாரி ஷெட்டில் இன்னொரு கவர்ச்சிகரமான விஷயமும் இருந்தது கேரம் போர்டுகள். நான்கைந்து கடைகளில் கேரம் போர்டுகள் வைத்திருப்பார்கள். ஒரு ஆட்டத்துக்கு இவ்வளவு என்று காசு கொடுத்துவிட்டு விளையாடலாம். ஆடுபவர்கள் தமக்குள் பந்தயம் கட்டிக் கொள்வார்கள். மங்களூர் ஓடு வேய்ந்த கூரையிலிருந்து சில்க் வயரில் மஞ்சள் குண்டு பல்பு கேரம் போர்டுக்கு மேலாகத் தொங்கும். போரிக் பவுடர் பஞ்சமே இல்லாமல் கொட்டப்படும். முரடர்கள் என்று கருதப்படும் லாரிக்காரர்களின் விரல்கள் நளினமாக காய்களைத் தள்ளும். ஆடுபவர்கள் நான்கு பேர் என்றால், வேடிக்கை பார்க்கவும் உசுப்பிவிடவும் நாற்பது பேர் இருப்பார்கள். சமயத்தில் சண்டையும் வருவதுண்டு. நான் முதன்முதலாக கேரம் ஆடியது அங்கேதான்.

பொழுது போகாமல் லாரி ஷெட்டுக்குப் போனால் கலீம் கிடைப்பார், அல்லது சிராஜ் கிடைப்பான். சும்மா லாரியில் ஏறி ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டு வருவேன். அதிக நேரம் அப்படி உட்கார்ந்திருக்க முடியாது. எனக்கு வேலையில்லை, ஆனால் கலீமுக்கும் சிராஜுக்கும் வேலைகள் இருக்கும். இப்போது போல செல்போன் இருந்திருந்தால் செல்பி எடுத்து வைத்திருக்கலாம்! இரண்டு பேரும் வாடகைக்குப் போய்விட்டிருந்தால் சும்மா சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பேன். உறவுகளில் மேலும் சிலரும் லாரித் தொழிலில் இருந்தார்கள். அவர்களிடம் கலீம் எங்கே, சிராஜ் எங்கே என்று விசாரிப்பேன். அவர்கள் இல்லாத நேரங்கள் நரகவேதனையாக இருக்கும்.

மாமா தன் மகனுக்காக, வேறொருவருடன் கூட்டு சேர்ந்து சென்னாக்கல் பாளையம் அருகே செங்கல் சூளை வைத்திருந்தார். தாராபுரத்தில் முதல் மாடர்ன் பிரிக்ஸ் சூளை அதுதான். லக்ஷ்மி பிரிக் வொர்க்ஸ் ஒவ்வொரு செங்கல்லிலும் LBW என்று அச்சுப் பதிந்திருக்கும். செங்கல் ஏற்றிச்செல்ல, மண் கொண்டுவர லாரி இருந்தது. மாமா மகனுக்கு சேக்காளியாக தூரத்து உறவைச் சேர்ந்த சையத் சான் இருந்தான்.. பெயரைக் கொஞ்சம் மாற்றினால் சைத்தான். அதற்கேற்ப சைத்தானாகவே இருந்தான். சொந்த லாரியிலேயே டீசல் கணக்கில் கமிஷன் அடித்தவர்கள் அவர்கள் சைத்தானுடன் நட்பு சேர்ந்த மாமா மகன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி, கடைசியில் சூளை கையைவிட்டுப் போனது வேறு கதை. கலீமும் சிராஜும் இல்லாத சமயங்களில் அந்த லாரியில் ஏறி சூளைக்குப் போய் வருவதும் உண்டு.

கலீமும் சிராஜும் வாடகைக்குப் போய்வந்த பிறகு கதைகதையாக அளப்பார்கள். அவற்றில் சில கதைகள் மிகைப்படுத்திய பொய்கள் என்று இப்போது தெரிகிறது. ஆனால் அப்போது அவற்றை ஆவென்று வாய் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன். எனக்கும் லாரி டிரைவர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் கிளியின் வேலைப் பளுவைப் பார்த்தபிறகு ஆசையை அமராவதி ஆற்றில் விட்டுவிட்டேன். அது காவிரியில் கலந்து கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.
 
ஆந்திர மாநிலத்தில் சவுக்கு மரங்களுக்காகக் காத்திருக்கும் லாரிகள்
கலீமும் சிராஜும் சிராஜின் அண்ணனும் சொன்ன கதைகளில் லாரி டிரைவர்களின் வாழ்க்கை அறிமுகமாகியது. எவ்வளவு சிரமமான வேலை என்று தெரிந்தது. வழிப்பறிக் கொள்ளை, இரவு தூங்குவதற்கு நிறுத்திய இடத்தில் திருட்டு, டீசல் திருட்டு, லாரி ஓடும்போதே பின்னாலிருந்து தொற்றி ஏறி, தார்பாலினைக் கிழித்து பொருட்களை எடுத்து கீழே வீசிவிட்டு, ஏதேனுமொரு மேட்டில் லாரி மெதுவாகச் செல்லும்போது கீழே இறங்கி ஓடிவிடுவது, போலீஸ்காரர்களின் தொல்லை... இப்படி பல கதைகளும் அறிமுகமாகியிருந்தன. ஏதேனுமொரு ஊருக்கு சரக்கு ஏற்றிச் சென்று இறக்கியபிறகு திரும்பி வரும்போது ரிடர்ன் லோடுக்காக காத்திருக்க நேரும். சரியாக அமையாத பட்சத்தில் கிடைத்ததை ஏற்றிக்கொண்டு வர வேண்டியிருக்கும். அதுவும் அவருடைய ஊராக இல்லாவிட்டாலும் பக்கத்து நகரமாக இருந்தாலும் போதும் என்று லோடுக்காக ஏங்க வேண்டியிருக்கும். அப்புறம் அந்த நகரத்திலிருந்து ஊருக்கு காலியாகத் திரும்ப வேண்டியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாவட்டங்களுக்கு எல்லைகளிலும் செக் போஸ்ட் இருந்தது. ஒவ்வொரு செக் போஸ்டிலும் லாரிகள் வரிசையாக நிற்கும். தாலூகா அலுவலக ரெவின்யூ அலுவலர்களில் செக் போஸ்ட்டில் டியூட்டி கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏகப்பட்ட காசு கிடைக்கும். லாரி டிரைவர்கள் மனதுக்குள் திட்டிக்கொண்டுதான் காசைக் கொட்டியிருப்பார்கள். 

கலீமும் சிராஜும் பிற்காலத்தில் சேரன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் - சிடிசி - பஸ் டிரைவர்களாக ஆகி, இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள். தாராபுரம் லாரி ஷெட் இப்போது கலீமைப் போலவே மெலிந்து போய் விட்டது. கலீம் இப்போது ஆட்டோ ஓட்டுகிறார்.

நாம் நினைப்பதுபோல லாரி ஓட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று அப்போதே எனக்குப் புரிந்திருந்தது. சரக்கை ஏற்றிக் கட்டுவதுகூட பெரிய கலைதான். கட்டு கொஞ்சம் இளகி விட்டால் சரக்கு ஒருபக்கமாகச் சாயும். ஏதேனுமொரு திருப்பத்தில் கவிழ்ந்துவிடக்கூடும். எங்கள் ஊருக்கு மூன்று மைல் மேற்கே சர்க்கரை ஆலை இருந்தது. சீசனில் கரும்பு லாரிகளும் வண்டிகளும் வரிசையாகப் போய்க் கொண்டே இருக்கும். ஊருக்கு மேற்கே யூனியன் ஆபீஸ் மேட்டில் லாரி முக்கி முனகி ஏறும்போது ஓடும் லாரியிலிருந்து கரும்பு உருவியதும் உண்டு. பாடிக்கு மேலே கரும்பை ஏற்றிக் கட்டிக்கொண்டு லாரிகள் போகும். சரியாகக் கட்டாத கரும்பு ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கும். கிருஷ்ணாபுரம் கடந்து, நரசிங்காபுரத்தில் சர்க்கரை ஆலையை நோக்கி இடதுபக்கம் லாரி திரும்பும்போது அப்படியே படுத்து விடும்.

நரசிங்காபுரத்துக்கும் மேற்கே, மைவாடி பிரிவுக்கும் சற்று கிழக்கே சாலையோரம் ஒரு கிணறு உண்டு. ஒருகாலத்திலும் எவரும் பயன்படுத்தாத அந்தக் கிணற்றில் மட்டும் ஒருபோதும் தண்ணீர் வற்றியதே இல்லை. சாலை லேசாக வளைகிற இடத்தில் அந்தக் கிணறு இருக்கிறது. இரவில் மேற்கிலிருந்து வரும் லாரிகளில் மாதத்துக்கு ஒரு லாரியாவது கிணற்றுக்குள் விழுந்துவிடும். லாரிக்குத் தாகம் போலிருக்கு... தண்ணி குடிக்கப் போயிருக்கும்டா...என்று நாங்கள் கேலி பேசிக்கொள்வோம். ஆனால், வெகுதொலைவு ஓட்டிவந்த களைப்பில் இரவில் டிரைவரின் கணநேர உறக்கத்தில்தான் விபத்து நிகழ்ந்திருக்கும் என்பது பின்னர் புரிந்தது. மலைப்பகுதிகளிலிருந்து மரங்களை ஏற்றிவரும் லாரிக்கு தனியான சப்தம் உண்டு. அதன் உறுமல் வித்தியாசமாக இருக்கும். இறக்கத்தில் வரும்போது அதை பிரேக் போட்டு நிறுத்துவது சிரமம் என்பது அப்போதே எங்களுக்குத் தெரியும்.

இப்போதெல்லாம் 12 – 16 சக்கர லாரிகள் வந்து விட்டன. கன்டெய்னர் லாரிகள் வந்து விட்டன. அப்போது இருந்தவை பெரும்பாலும் 6 சக்கர லாரிகள் மட்டுமே. ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் லாரி டிரைவர்களின் வாழ்க்கையில் மட்டும் மாற்றமே இல்லை, முன்னேற்றமே இல்லை அதே போலீஸ் தொல்லை, செக் போஸ்ட் தொல்லை, திருட்டுத் தொல்லை, வழிப்பறித் தொல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது புதிதாக டோல் கேட் கொள்ளை. கலவரம் செய்பவர்களுக்கு எளிதான இலக்கு லாரிதான். கண்ணாடிகளை உடைக்கலாம், சக்கரங்களில் காற்றைப் பிடுங்கலாம், தீ வைக்கலாம். பாதசாரிகளை அல்லது ஸ்கூட்டர்-பைக் போன்ற வாகனத்தை லாரி இடித்தாலும் சரி, அல்லது அவர்கள் லாரியில் இடித்தாலும் சரி - தவறு எப்போதுமே லாரிக்காரன் மீதுதான்! பிரம்மாண்டமான இயந்திரத்தை இயக்குபவன்மீது மறைமுகமான பொறாமை நமக்குள் இருக்கிறதோ என்னவோ?! ஒன்றிரண்டு லாரி வைத்திருப்பவர்களின் வாழ்க்கை புலிவாலைப் பிடித்த கதை. வாங்கிய கடனுக்கு தவணை கட்ட முழி பிதுங்கும், விற்கலாம் என்றால் விலையும் கிடைக்காது. ஒரு விபத்து அல்லது ஒரு திருட்டு போதும் அவர்களின் வாழ்க்கையையே சிதறடிக்க. ஓனராக இருந்துவிட்டு டிரைவராகப் போவது மிகப்பெரிய அவமானம். நாற்கரச் சாலைகளில் லாரிகள் ஓடுவதைப் பார்த்து, ஆஹா... அவர்களுக்கு எவ்வளவு வசதியாகி விட்டது, எவ்வளவு விரைவான போக்குவரத்து வசதி வந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்கவும் மாயைதான்.



நம்ப முடியவில்லையா? இப்போது எதற்காக இதை எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்களா? லாரி டிரைவர்களின் உண்மையான வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினால் தவறாமல் வாசியுங்கள் நெடுஞ்சாலை வாழ்க்கை. கா. பாலமுருகன் எழுதியது. விகடன் வெளியீடு. (ரூ. 175) மோட்டார் விகடனில் தொடராக வெளி வந்ததாம். லாரி டிரைவர்களுடன் பயணித்து அவர்களுடைய அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாநி இந்நூலைப்பற்றி பதிவு எழுதியிருந்தார். மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கிய மற்ற நூல்கள் எல்லாம் கண்ணில் பட்டதால் வாங்கியவை. இதை மட்டும்தான் விகடன் கடையைத் தேடிப்போய் வாங்கி வந்தேன்.

தில்லி வந்ததிலிருந்தே லாரியிலேயே தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறது. லாரி டிரைவராக இந்தப் பக்கம் வந்து சென்று கொண்டிருக்கும் முத்துக்குமாரிடம் இதுபற்றிப் பேசியதாகவும் நினைவு. இதுவரை சாத்தியமாகவில்லை. தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்குப் போகும்போதாவது லாரியில் போக வேண்டும் என்ற ஆசை. நிறைவேறுமா என்று தெரியாது. ஆனால் ஆசையையும் கற்பனையையும் எதற்காகக் கட்டுப்படுத்த வேண்டும். அதுபாட்டுக்கு ஒருபக்கம் இருந்து விட்டுப் போகட்டும். இப்போது இருப்பதுபோல பெட் ரெஸ்டில் இருக்கும்போது, எதையும் செய்யத் தோன்றாதபோது, மனதுக்குள் லாரியில் பயணம் செய்யலாம். கேபினில் சமைக்கலாம், பாட்டுக் கேட்கலாம், திறந்த வெளிகளில் உறங்கலாம், வாய்க்கால்களிலும் கால்வாய்களிலும் குளிக்கலாம், இருந்த இடத்திலிருந்தே நெடும் பயணங்களை மனதுக்குள் அனுபவிக்கலாம்.



உங்களுக்குள்ளும் இதுபோல ஆசை இருந்தால், உங்கள் கற்பனைகளுக்கு சுவை சேர்க்க இந்த நூல் உதவக்கூடும்.

3 comments:

  1. NINAIVUGALUKKU SALANGAI KATTI NARTHANAM AATTUVIKKUM KALAIYAI ARUMAIYAI SEIGIREERGAL ANNA.

    ReplyDelete
  2. நினைவுகளுக்கு சலங்கை கட்டி நர்த்தனம் ஆட்டுவிக்கும் கலையை அருமையாய் செய்கிறீர்கள் அண்ணா.

    ReplyDelete
  3. உங்கள் நினைவுகளை அழகாய்ச் சொல்லி ஒரு புத்தக அறிமுகம். புத்தகம் படிக்க ஆவல்.

    தில்லியிலிருந்து லாரியில் ஊருக்குச் செல்ல ஆசை - இப்போது எனக்கும் வந்துவிட்டது! :))

    ReplyDelete