Sunday, 7 May 2017

கோடையும் குழந்தைகளும்

கோடை விடுமுறை வந்துவிட்டது. பெற்றோர் தம் குழந்தைகளை சகல கலா வல்லவர்களாக ஆக்குவதில் தீவிரமாகி விடுவார்கள். குழந்தைக்குப் பிடித்த கலை எது, அந்தக் கலை தேவையா என்ற அலசல்கள் ஏதுமில்லாமல், பக்கத்து வீட்டுக் குழந்தை போகிறது என்பதற்காகவே தன் குழந்தையும் கராத்தே கற்க வேண்டும், பரத நாட்டியம் கற்க வேண்டும், பாட்டுப் பாடக் கற்க வேண்டும்.... என பல கலைகளைத் திணிக்கிறார்கள். இப்படித்தான், விருப்பமில்லாத ஒரு குழந்தைக்கு பெற்றோர் நீச்சலைத் திணிக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அதையொட்டிதான் இந்தப் பதிவு.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் இதெல்லாம் திணிப்பில் வராது. அவை வாழ்க்கைத் தேவைகள். ஒரு மொழியைக் கற்கிறீர்கள். தொடர்ந்து அந்த மொழியைப் பயன்படுத்தவில்லை என்றால் மறந்து போகும். (உருது எழுத/படிக்க எனக்கு அப்படித்தான் மறந்து போனது.) ஆனால் நீச்சலும் சைக்கிள் ஓட்டுவதும் ஒரு முறை பழகி விட்டால் ஆயுள் இருக்கிற வரையில் மறக்காதவை. (வேறேதாவது திறமைக்கு இப்படியொரு பெருமை இருக்கிறதா என்று தெரியவில்லை.) தட்டச்சும் பழகி விட்டால் மறக்காது. பல ஆண்டுகள் தொடர்பு அறுந்துபோனால், விரல்களின் பழக்கம் சற்றே விட்டுப்போகும், ஆனால் மறுபடி தட்டச்ச உட்காரும்போது தானாகவே விரல்கள் வளையும்.

இந்தக்கோடையில், வாய்ப்பு கிடைத்தால், குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட அவசியம் கற்றுக் கொடுங்கள். சைக்கிளை பேலன்ஸ் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது போலவே வாழ்க்கை முழுவதையும் பேலன்ஸ் செய்து கொள்வதற்குத் தேவையான தன்னம்பிக்கையை அது கொடுக்கும்.

ஊருக்கு வரும்போது பள்ளி மாணவிகள் சைக்கிளில் செல்வதைக் கண்டால் உள்ளமெல்லாம் பூரிக்கும். பையன்கள் சைக்கிளில் செல்வது பெரிய விஷயமில்லை. தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் (மெய்டுகள்) சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். எவ்வளவு பெரிய வசதி அது! வீட்டுக்கு வீடு நடப்பதிலேயே எவ்வளவு நேரமும் உழைப்பும் வீணாகும்!


சைக்கிள் என்பது வெறும் வாகனமல்ல. சுயத்தின், சுதந்திரத்தின், தன்னம்பிக்கையின், தைரியத்தின் அடையாளம்.

ஒரு காலம் இருந்தது. தெருவில் அக்கம் பக்கத்து எல்லா வீடுகளுடனும் உறவுகள் இருந்த காலம் அது. எனக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்தது பக்கத்துத் தெரு அண்ணாக்கள்தான். வீட்டுக்கு டியூஷன் படிப்பதாக வந்து, வீட்டிலேயே பெரும்பாலும் பழி கிடப்பவர்கள் அவர்கள். அப்பாவின் ஆணைப்படி என்னை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று சைக்கிள் பழக்க வைத்தவர்கள் - அண்ணாதுரை, பரமசிவம், காமாட்சி என்ற மூன்று அண்ணாக்களும்தான். சைக்கிள் எல்லாம் வாங்கும் அளவுக்கு எங்கள் வீட்டில் வசதி இருந்ததில்லை. ஓசி சைக்கிள் அல்லது வாடகை சைக்கிள்தான். கற்றுக் கொடுக்க என்று சின்ன சைக்கிள் எல்லாம் எங்கள் காலத்தில் கிடையாது. பாதங்களுக்கு பெடல் எட்டுமோ எட்டாதோ, பெரிய சைக்கிள்தான். பேலன்ஸ் தவறினால் காலை ஊன்றிவிட முடியாது. அதிகபட்சமாக, சீட்டை கீழே இறக்கும் வசதி இருந்தால், ஓரிரு இன்ச்சுகள் சீட் கீழே இறக்கலாம். அதற்கு சைக்கிள் கடைக்குப் போய் ஸ்பேனர் வாங்கி சீட்டை இறக்க வேண்டும். பழக்கும் வேலை முடிந்ததும் மறுபடி சைக்கிள் கடைக்குப்போய் மேலே ஏற்ற வேண்டும்.

நாளைக்கு உனக்கு ரயில் ரோட்டுலதான் டிரெயினிங்என்று சொல்லி விட்டார்கள். அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை. ரயில் ரோடு என்று அவர்கள் சொன்னதை, ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டச் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு சிறிய தண்டவாளத்தின்மீது எப்படி பேலன்ஸ் செய்யப் போகிறேன்... ரயில் வந்து விட்டால் என்னாகும்... என்றெல்லாம் பயங்கர கலக்கம். அடுத்த நாள் எவ்வளவோ டிமிக்கி கொடுக்க முயற்சி செய்தும் இழுத்துப் போய் விட்டார்கள். அங்கே போன பிறகுதான் மூச்சு வந்தது. பிரதான சாலையிலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் ஒரு பர்லாங் நீளத்துக்கு சிறிய சாலை ஒன்று உண்டு. அங்கேதான் கற்பிக்கப் போகிறார்கள்!

இதுபோல ரயில் நிலையத்துக்குச் செல்கிற சாலைகளுக்கு ரயில்வே பீட்டர் ரோடு என்று பெயர் இருக்கும். அதென்னது... எல்லா ஊர்களிலும் பீட்டர் இருந்தாரா? எங்கே பார்த்தாலும் பீட்டர் ரோடு இருக்கிறதே என்ற குழப்பம் பல காலத்துக்கு எனக்கு இருந்தது. அப்புறம்தான் புரிந்தது - அது பீட்டர் ரோடு அல்ல, ஃபீடர் ரோடு. ரயில் நிலையத்துக்கு இட்டுச் செல்லும் சாலை - feeder road! 

ரயில் நிலைய வாசலில் ஒருவர் நின்று கொண்டு என்னை சைக்கிளில் ஏற்றி ஆரம்பித்து வைத்து, சீட்டைப் பிடித்தவாறே பின்னாலேயே ஓடி வருவார். சற்றுத்தள்ளி இன்னொருவர் நின்று, முன்னவரிடமிருந்து சைக்கிளையும் என்னையும் கைப்பற்றி அடுத்த நபரை நோக்கி ஓட்டச் செய்வார். மூன்றாவது நபரை அடைந்த பிறகு, மீண்டும் சுழற்சி தொடரும்.

ஹாண்டில் பாரைப் பாக்காதே... இடுப்பை வளைக்காதே... பெடல் பண்றதை நிறுத்தாதே... குரங்குப் பெடல் போடாதே... என்ற அவர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். நாம் பார்க்காவிட்டாலும் நம் கண்கள் மட்டும் ஹேண்டில் பாரின் மையத்தை அனிச்சையாக நோக்கியிருக்கும். சைக்கிள் பாட்டுக்கு ஒரு மாதிரியாக சாய்ந்து நெளிந்து நாம் அறியாமலே சாலை ஓரத்துக்குப் போகும். ஏதோவொரு கட்டத்தில் நாம் அறியாமலே சைக்கிள் நம் கட்டுக்குள் வந்திருக்கும். பின்னாலிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் உண்மையில் சீட்டைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை, பிடித்திருப்பது போல சும்மா நடிக்கிறார் என்று தெரிய வரும். அந்தக் கட்டம் உன்னதமானது! சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தத் தருணம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. காமாட்சி அண்ணன் சைக்கிளைப் பிடித்திருக்கவில்லை என்று உணர்ந்த பிறகு, அதீத உற்சாகத்தில் உய்யென்று விரைவாகப் பெடல் செய்து, கீழே விழுந்து...

கடுமையான சிராய்ப்புக் காயம் ஏற்பட்ட பின்னும் கெக்கெக்கே என்று சிரித்தது அந்தத் தருணமாகவே இருக்கும்!

எங்களுக்கு நீச்சல் பழகுவதெல்லாம் கோடை விடுமுறைகளில்தான் சாத்தியம். மற்ற நாட்களில் ஆற்றில் தண்ணீர் நிறைய இருக்கும். கோடையில் அங்கங்கே சில இடங்களில் மட்டும் ஆழமாக இருக்கும். அப்படி சில இடங்கள் எங்கள் அமராவதி ஆற்றில் இருந்தன - யானைக் கட்டாயம், குதிரைக் கட்டாயம், சக்கிலியன் கெஜம். (சக்கிலி சமூகத்தைச் சேர்ந்த யாரோ எப்போதோ அங்கே மூழ்கி இறந்து விட்டதாக ஒரு கதை. யானை இறந்ததாகக் கருதப்படும் இடம் யானைக் கட்டாயம், குதிரை இறந்தது குதிரைக் கட்டாயம்.)

ஆற்றின் கரையில் ஒருபக்கம் தோப்பு. தோப்பின் வேலியை ஒட்டி யானை அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் சரிவாக பெரியதொரு பாறை. தெற்கிலிருந்து ஓடி வரும் தண்ணீர் அந்தப் பாறையின் ஒருபக்கம் தேங்கி நின்று வடக்கே ஓடும். ஒரு வரப்பளவுக்கு நீர் வந்தாலும் அந்த இடத்தின் வழியாகவே கடந்து செல்லும் என்பதால் எப்போதும் அங்கே தண்ணீர் இருக்கும். கடும் கோடையில் நீரும் சூடாக இருக்கும். பாறையை ஒட்டியிருக்கும் பகுதியில் 6-8 அடி ஆழமும், மணல் பகுதிக்கு வரவர ஆழம் குறைந்தும் இருக்கும். பாறையில் ஏறி டைவ் அடிக்கலாம். ஒரு நீச்சல் குளத்துக்கேற்ற அமைப்பு அங்கே இருந்தது. தொட்டு விளையாட்டும், குதிரை ஏறுதலும் என மணிக்கணக்கில் களித்துக் கிடக்கலாம். வீடு போகும்போது கண்கள் செக்கச் செவேல் என்று சிவந்திருக்கும்.


நாங்கள் சிறுவர்கள் மணல் கரையோரமாகத்தான் குளித்துக் கொண்டிருப்போம். தண்ணீர்க் கரைக்கு சற்று அப்பால் மணலில் ஒரு குழி வெட்டி, ஆற்றிலிருந்து சிறிதாக வாய்க்கால் வெட்டி அந்தக் குழிக்கு நீர் பாய்ச்சி, சட்டையால் மீன் பிடித்து அந்தக் குழிக்குள் மீன்களை விட்டு.... இப்படி முழுகவும் செய்யாமல், வெயிலில் காயவும் செய்யாமல் உடலை மட்டும் நீருக்குள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது....

பெரிய பையன்கள் திடீர் என்று நம்மைத் தூக்கி ஆழத் தண்ணீரில் போட்டு விடுவார்கள். தையா தக்கா என்று கையக் காலை அடித்து, தண்ணீர் குடித்து, திட்ட முடிந்தால் திட்டி, கெஞ்ச முடிந்தால் கெஞ்சி, ஒவ்வொரு முறை வாய்திறக்கும்போதும் வாய்க்குள் தண்ணீர் போக... கண்ணெல்லாம் சிவந்து அழுது.... அப்போது புரியும், உண்மையில் நாம் தண்ணீரில் இல்லை. அந்த அண்ணனின் கை நம் வயிற்றைத் தாங்கி இருக்கிறது என்று. இப்படி கொஞ்ச நேரம் தவிக்கவிட்டு, “ஒழுங்கா நீச்சல் பழகலே... இந்தப்பக்கமே வரக்கூடாது... வந்தே... செத்தே நீ...என்று மிரட்டி விரட்டி விடுவார்கள். அடுத்த நாள் அதே இடத்துக்கு மறுபடி போவோம். அந்த அண்ணன்கள் இருக்கிறார்களா என்று பயந்து கொண்டே தண்ணீரில் இறங்குவோம். அவர்கள் இருக்க மாட்டார்கள், அனால் வேறு அண்ணன்கள் இருப்பார்கள்.

இப்படிதான் நாங்கள் நீந்தக் கற்றுக்கொண்டோம். என்னுடன் படித்த ஜான்சன் என்பவனின் தம்பியை இதே போல ஓர் அண்ணன் தண்ணீரில் தூக்கிப்போட, அவன் மீண்டு வந்ததும் செமத்தியாக “............த் தண்ணிஎன்று கெட்ட வார்த்தைகளால் திட்டியது இப்போதும் காதில் ஒலிக்கிறது.


இப்போதெல்லாம் அப்படி கற்றுக் கொடுக்கிற அளவுக்கு ஆறுகளில் நீரும் இல்லை. ஆற்றுக்குப் போய் குளிக்கிறவர்களும் இ்லலை. குளிக்கப் போனாலும் கற்றுக் கொடுக்கிறவர்களும் இல்லை.

ஆக... பக்கத்தில் நீச்சல் குளம் / ஆறு / கிணறு இருந்தால், குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வாய்ப்பு இருந்தால், இந்தக் கோடையை வீணடித்து விடாதீர்கள்.

1 comment:

  1. நீச்சல் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

    இப்போதெல்லாம் கோடை விடுமுறை வந்தால் குழந்தைகளை ரொம்பவே படுத்துகிறார்கள்! என்னென்னமோ வகுப்புகள். கேட்கும் நமக்கு தலை சுற்றுகிறது!

    ReplyDelete