Thursday, 15 June 2017

புகை உயிருக்குப் பகை-7

அனுபவக் கட்டுரைத் தொடர் - பகுதி-7

புகைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி (பகுதி-1), புகையிலைத் தொழில் புள்ளிவிவரங்கள் (பகுதி-2), ஏன் விட்டொழிக்க வேண்டும் (பகுதி-3), அரசு எடுக்கும் நடவடிக்கைகள் (பகுதி-4), பழக்கத்தை விட்டொழிப்பதற்கான ஆலோசனைகள் (பகுதி-5) (பகுதி-6) ஆகியவை குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்தோம். புகைப்பதை நிறுத்தியபிறகு உடலில் என்னென்ன மாற்றங்கள் / முன்னேற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.


20 நிமிடங்களில் இதயத்துடிப்பு சாதாரண நிலைக்குத் திரும்பத் துவங்கும்.
2 மணி நேரத்துக்குப் பிறகு இதயத்துடிப்பும் இரத்த அழுத்தமும் கிட்டத்தட்ட சாதாரண நிலைக்குத் திரும்பியிருக்கும். நிகோடின் ஏக்கத்தின் அறிகுறிகள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு துவங்கும். அவை சிகரெட் பிடிக்க வேண்டும் என்னும் தீவிர ஆர்வம், பதற்றம், விரக்தி, மயக்க உணர்வு, உறக்கம் வராமை, பசி அதிகரிப்பு.
12 மணிநேரத்துக்குப் பிறகு சிகரெட் புகைக்கும்போது, கார்பன் மோனாக்சைட் புகையுடன் சேர்ந்து குருதியில் கலந்திருக்கும். அது இரத்த செல்களுடன் எளிதாக இணையக்கூடியது. எனவே, இரத்தம் ஆக்சிஜனுடன் சேர்வதை தடுக்கும். குருதியில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் அது வேறு நோய்களுக்கு இட்டுச் செல்லும். சிகரெட் நிறுத்திய 12 மணி நேரத்தில் உடலில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறைந்து விடுகிறது. எனவே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு உயரும்.
24 மணி நேரத்துக்குப் பிறகு புகைப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து 70 விழுக்காடு அதிகம். ஆனால், ஒரு நாள் புகைக்காமல் விட்டாலும் போதும், இதய நோய்க்கான ஆபத்து குறைந்து விடும். முற்றிலும் ஆபத்து இல்லை என்றாலும், ஆரோக்கியத்தை நோக்கிய முன்னேற்றம் துவங்கி விடுகிறது.
48 மணி நேரத்துக்குப் பிறகு – நாக்கு சுவைகளை உணரும். மூக்கு வாசங்களை உணரும். உடலின் உணர்விகள் செயல்படத் துவங்கும். வாழ்க்கையின் அம்சங்களை மீண்டும் ரசிக்கத் துவங்கலாம்.
3 நாட்களுக்குப் பிறகு உடலிலிருந்து நிகோடின் வெளியேறியிருக்கும். அதாவது, நிகோடின் ஏக்கம் உச்சத்தை அடையும். இதன் காரணமாக, உடல் மற்றும் உளரீதியாக சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் தலைவலி, குமட்டல், தசைப்பிடிப்பு, வியர்த்தல், பதற்றம், எரிச்சல், மன அழுத்தம் போன்றவை. இந்த நேரத்தில்தான் சிகரெட்டை விடுவது சிரமமாக இருக்கும். இந்தக் கட்டத்தை கடந்து விட்டால் வெற்றி நிச்சயம். (இந்த அறிகுறிகள் எல்லாமே எல்லாருக்கும் ஏற்படும் என்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடலாம்.)
• 2-3 வாரங்களில் – உடற்பயிற்சி செய்யவும், உடல்சார்ந்த வேலைகளை செய்யவும் முடியும். புகைத்துக் கொண்டிருந்த காலத்தில் சில நிமிடங்களில் களைப்பு, மூச்சிரைப்பு ஏற்படும், இப்போது அது இருக்காது. இரத்த ஓட்டமும் இதயச் செயல்பாடும் வெகுவாக முன்னேறும். நுரையீரல் சுத்தமாகும், எனவே சுவாசம் எளிதாகும். புகைப்பதை நிறுத்திய இரண்டு வாரங்களில் பெரும்பாலானவர்களுக்கு சிகரெட் ஏக்க அறிகுறிகள் மறையத் துவங்கும்.
• 1-9 மாதங்கள் நுரையீரலில் இருக்கும் சிலியா என்னும் மென்பிசிறுகள் சீரடையத் துவங்கும். சிலியா சரியாகச் செயல்படத்தொடங்கி விட்டால், அவை தொற்றுகளை எதிர்த்துப் போராடும், நுரையீரலை நன்றாக சுத்தம் செய்யும். நுரையீரல் சரியாகும்போது, இருமலும், மூச்சிரைப்பும் விரைவாகக் குறையத் துவங்கும். (சிலியா குறித்து தனியாகப் பார்ப்போம்.)
• 9 மாதங்களில் - புகைப்பதை நிறுத்திய 9 மாதங்களில் சிகரெட் ஏக்கமும் முற்றிலும் மறைந்து போயிருக்கும். 9 மாதங்கள் என்பது எல்லாருக்கும் பொருந்துமா? இல்லை, இது சராசரிதான். சிலருக்கு 9 மாதங்களுக்கு முன்பே மறையலாம். நிறுத்துவதற்கு முன்னால் எத்தனை காலம், நாளுக்கு எத்தனை சிகரெட்டுகள் புகைத்தோம் என்பதைப் பொறுத்தது இந்தக் கால அளவு.
• ஓராண்டுக்குப் பிறகு — புகைப்பவர்களுக்கு இதய நோய் வருகிற வாய்ப்பு (ஆபத்து) எவ்வளவு உண்டோ அதில் பாதிதான் இருக்கும்.
• 5 ஆண்டுகளுக்குப் பிறகு புகைக்கும்போது, பலவகையான விஷப்பொருட்கள் வெளிவருகின்றன. இவை படிப்படியாக உடலுக்குள் சேரும். குறிப்பாக, இரத்தக் குழாய்களை குறுகச் செய்துவிடும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் பக்கவாதம் ஏற்படக்கூடும். புகைத்தலை நிறுத்திய 15 ஆண்டுகளில், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மறைகிறது.
• 10 ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்பவர்களுக்கு பலவிதமான புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து மிக அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். இவற்றில் நுரையீரல் புற்றுநோய் ஆபத்துதான் அதிகம். உலகில் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு புகைப்பழக்கம் காரணம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. புகைப்பதை நிறுத்திய பத்தாண்டுகளில் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது. இதர புற்றுநோய்களுக்கான வாய்ப்புகளும் குறைந்து விடும்.
• 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அகன்று போகும். புகைப்பழக்கம் இல்லாத ஒருவருக்கு நிகராக ஆகி விடலாம். அரித்மியா போன்ற இதயத்துடிப்புக் குறைபாட்டு நோய்களின் ஆபத்து மறையும்.

• நீண்டகாலப் பயன்கள் – ஆயுள் நீடிக்கும். புகைப்பவர்களைவிட புகைக்காதவர்கள் 10 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார்கள் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. அதைவிட முக்கியமாக, வாழும் காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம். உடல் ஆரோக்கியம் பெறும்போது மருத்துவ சிகிச்சைகளைத் தவிர்க்கலாம், அவற்றுக்கான செலவுகளைத் தவிர்க்கலாம், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் குறைக்கலாம். குடும்பத்துக்குள் மோதல்களைத் தடுக்கலாம். புகைப்பதற்காகச் செலவு செய்த பணம் மிச்சமாகும், அதைப் பயனுள்ள செயல்களுக்கு செலவழிக்கலாம். புகை நாற்றத்துடன் காதலியை/காதலனை நெருங்கும்போது அவர் முகம் சுளிப்பதைக் காண நேர்வதைத் தவிர்க்கலாம். உடலுறவின்போது எழுச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.....
எத்தனையோ கலாம்கள்...

அனைத்துக்கும் மேலாக, புகைக்காதவன் / புகைப்பதை நிறுத்தியவன் என்று மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழலாம்.

அத்தனைக்கும் முதல்படி புகையை விட்டொழிப்பதைத் துவங்குவது.

தொடரும்... பகுதி-8

1 comment: