Saturday 17 June 2017

புகை உயிருக்குப் பகை-8

அனுபவக் கட்டுரைத் தொடர் - பகுதி-8

சிலியா... ஓ மை சிலியா....

பெயர் அழகாக இருக்கிறதே... அது யார் சிலியா... என்று தோன்றுகிறது அல்லவா? பெயர் மட்டுமல்ல, சிலியாவின் செயலும்கூட அழகுதான்

சிலியா (cilia) என்பது நம் உடலின் செல்களின் மேலே இருக்கும் மென்பிசிறுகள். கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளின் செல்களிலும் இருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியிலும், அன்றாட வாழ்விலும் சிலியாவுக்கு பெரும் பங்கு உண்டு. சிலியாவைப் பற்றி இப்போது நிறையவே தெரியும் என்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



ஒரு சிலியத்தின் நீளம் 1 முதல் 10 மைக்ரோமீட்டர், அகலம் 1 மைக்ரோமீட்டர். சிலியம் தனியாக இயங்குவதும் உண்டு, பலவற்றுடன் இணைந்து தொகுப்பாக செயல்படுவதும் உண்டு. நுண்ணிய ரோமங்கள் போல வரிசைகளில் அமைந்திருக்கும்.

மோடைல் சிலியா அதாவது, அசையும் சிலியா சுவாசப்பாதை, நுரையீரல், காது போன்ற உறுப்புகளில் இருக்கும். பசிய நெல்வயலில் காற்று அடிக்கும்போது நெற்பயிர்கள் அலையலையாக அசையுமே, அதுபோல அவை அசைந்து கொண்டே இருக்கும். நுரையீரலில் இருக்கும் சிலியா எதற்காக அசைந்து கொண்டே இருக்கின்றன? வெளியிலிருந்து வரும் தூசுகள், உள்ளே உருவாகும் கபம் ஆகியவற்றை வெளியேற்றி, இடையூறின்றி, எரிச்சலின்றி சுவாசிக்க வழி செய்யத்தான் அவை அசைகின்றன. சிலியா எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்குவது புகைப்பவர்களுக்கு பயன் தரக்கூடும்.


ஒரு நிமிடத்துக்கு 12 முதல் 20 முறை நாம் சுவாசிக்கிறோம். 24 மணி நேரமும், ஒரு நாளில் நாம் சுமார் 20 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். மூக்கின் வழியாக நுழையும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. நுரையீரலுக்குள் இருக்கும் பிராங்கியோலிஸ் வழியாக, அல்வியோலி என்னும் பலூன்களை அடைகிறது. (சுமார் 300 மில்லியன் அல்வியோலி பலூன்கள் உள்ளன என்பது கூடுதல் செய்தி.) ஆக்சிஜன் இரத்தத்துடன் கலக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதையெல்லாம் பள்ளியிலேயே படித்திருப்போம். இந்தச் செயல்பாடு செவ்வனே நடைபெற வேண்டுமானால், சுவாசக்குழாய் முதல் நுரையீரல் வரை எல்லாப் பாதைகளும் அடைபடாமல், சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தங்கள் படியாமல் இருக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றில் தூசுகளும் துகள்களும் நிறையவே உண்டு. மூக்கில் உள்ள ரோமங்கள், மூச்சுக் காற்றில் உள்ள பெரிய அளவிலான மாசுகளைத் தடுத்து விடுகின்றன. ஆனால் ரோமங்களால் தடுக்க முடியாத நுண்ணிய துகள்களும் தூசுகளும் சுவாசப் பாதை வழியாக நுரையீரலை அடையும். அப்படியே விட்டால் அவை அங்கேயே தங்கி விடும். மூச்சுக்காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் நுரையீரலின் பணி சரியாக நடைபெறாது. குருதியில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் இதர பிரச்சினைகளும் வரும். எனவே, நுரையீரலுக்குள் நுழையும் மாசுகளை வெளியேற்ற வேண்டும். அந்தப் பணியைத்தான் சிலியா செய்கிறது.

சிலியா பிசுபிசுப்பான ஒரு பசையை வெளிவிடுகிறது. அது வெளியிலிருந்து வந்த மாசுத் துகள்களையும் சேர்த்து வெளியேற்றுகிறது. (அதற்குத்தான் அசைந்து கொண்டே இருக்கிறது.) இதுதான் கபமாக வெளி வருகிறது.

புகைப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரும். பொதுவாக, காலையில் எழுந்ததும் எல்லாருக்கும் தொண்டைக் கமறல் வரும். புகைப்பவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இதை ஸ்மோக்கர்ஸ் காஃப் என்றும் சொல்வதுண்டு. அது ஏன் காலையில் மட்டும் வருகிறது? இந்த இரண்டு கேள்விகளையும் இணைத்து, பதிலைப் பார்ப்போம்.

சிகரெட் புகையில் ஆபத்தான 250 இரசாயனக்கூறுகள் உள்ளன என்கிறது ஆய்வு. இவற்றில் சில இரசாயனங்கள் சிலியாவுக்கு ஒவ்வாதவை. புகைப்பதன் காரணமாக இவை செயலிழந்து விடுகின்றன; தூசுகளை அகற்றும் வகையில் கபத்தை உருவாக்க முடிவதில்லை. ஆக, வெளியிலிருந்து நுழைந்த மாசுத்துகள்கள் நுரையீரலுக்குள்ளும் சுவாசப் பாதையிலும் தங்கி விடுகின்றன. புகைப்பவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக வருவது அதனால்தான்.

நம் உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் எப்போதுமே உண்டு. வெளியிலிருந்து வரும் எதையும் உடலின் நோயெதிர்ப்பு செல்கள் வெளியேற்றவே பார்க்கும். நுரையீரலுக்கும் அது பொருந்தும். அதேபோல, புகை உள்ளே நுழையும்போது நுரையீரலும் அதை எதிர்க்கிறது, இருமச் செய்கிறது. ஆனால் தொடர்ந்து புகைப்பவருக்கு சிலியா பாதிக்கப்பட்டு விடும். பெரும்பாலும் நாம் பகலில்தான் புகைக்கிறோம். எனவே பகலில் அவை செயலற்று விடுகின்றன. புகைக்காத இரவில் அவை மீண்டும் செயல்பட முயற்சி செய்கின்றன, உள்ளே நுழைந்த மாசுகளை வெளியேற்ற முனைகின்றன. அதன் விளைவாகத்தான் காலையில் எழுந்ததும் இருமல், கபத்தை உணர்கிறோம். சிலருக்கு இந்த இருமல் மிகவும் கடுமையாகவும் இருக்கலாம்.

புகைப்பழக்கத்தின் காரணமாக சிலியா செயலிழப்பது மட்டுமல்ல, அவற்றின் அசைவையும் பாதிக்கிறது, அவற்றின் நீளத்தையும் குறைத்துவிடுகிறது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. தொடர்ந்து புகைத்து வந்தால் சிலியா முற்றிலும் செயலிழந்து போகும். நுரையீரல் தொற்றுகளைத் தடுக்க வழியில்லாது போகும்.

ஆனாலும் ஆறுதலான ஒரு விஷயம் உண்டு புகைப்பதை நிறுத்தியதும் நுரையீரல் தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. புகையை விட்டொழித்ததும் சிலியா மீண்டும் வளரும், மீண்டும் பழையபடி செயல்படத்துவங்கும். எல்லாம் சில மாதங்களுக்குள்.


இப்போது சொல்லுங்கள். சிலியா வேண்டுமா, சிகரெட் வேண்டுமா?

*

சிகரெட் பழக்கத்தை விட்டொழிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட பதிவுகளை வாசிக்கலாம் : புகைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி (பகுதி-1), புகையிலைத் தொழில் புள்ளிவிவரங்கள் (பகுதி-2), ஏன் விட்டொழிக்க வேண்டும் (பகுதி-3), அரசு எடுக்கும் நடவடிக்கைகள் (பகுதி-4), சிகரெட்டால் விளையும் தீமைகள் (பகுதி-5)விட்டொழிப்பதற்கான ஆலோசனைகள் (பகுதி-5), (பகுதி-6), விட்டொழித்தபின் ஏற்படும் முன்னேற்றங்கள் (பகுதி-7)

3 comments:

  1. only you can write like this sir...

    ReplyDelete
  2. http://www.pfizer.com/news/press-release/press-release-detail/chantix_champix_varenicline_demonstrates_smoking_cessation_efficacy_in_smokers_unwilling_or_unable_to_quit_abruptly


    முயற்சி செய்தும் விட முடியாதவர்கள், மேலே இருக்கும் சாம்ப்பிக்ஸ் உபயோகிக்கலாம். ஓரிரு மாதங்கள் சாப்பிட வேண்டும். மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.


    Pugazh..



    ReplyDelete
  3. Very useful na Insha allah seekiram stop panniduran

    ReplyDelete