Friday, 26 October 2018

புத்தி கொள்முதல்


1988-89 என்று நினைவு. சென்னையில் பெரியதோர் அச்சகத்தின் முழு நிர்வாகி நான். எனக்கும் மேலே பெரியவர் ஒருவர்.

ஆந்திரத்திலிருந்து மூன்று பேர் வந்தார்கள். தெலுங்கில் ஒரு நூல் அவசரமாக அச்சிட வேண்டும் என்றார்கள். நூலை தட்டச்சு செய்து, பிரின்ட் செய்வதற்கு ரெடியாக பேஜ் செட்டிங்கும் செய்து வைத்திருந்தார்கள். 120 பக்கம்தான் இருக்கும். 10 ஆயிரம் பிரதிகள் ஆர்டர் என்று நினைவு.

அவசரம் என்பதால் ரொக்கப் பணமாகவே தருவதாகச் சொன்னார்கள். இப்படி வாடிக்கையாளர்கள் அடிக்கடி வருவது இல்லையே! அச்சுக்கூலி கொஞ்சம் அதிகமாகவே சொன்னேன். நான் சொன்ன தொகையில் பெரும்பகுதியை ரொக்கமாக அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். மொத்தமாக 60-70 ரீம் பேப்பருக்கு ரொக்கமாக ஆர்டர் கொடுக்க முடிந்ததால், ஏற்கெனவே நாங்கள் கடன் நிலுவை வைத்திருந்த பேப்பர் டீலருக்கும் ஒரு சந்தோஷம். அடுத்த சில நாட்களுக்கு பணம் கேட்டு தொல்லை செய்ய மாட்டார். ஆக, இது எல்லாருக்கும் வின்-வின் டீல்தான். வெள்ளிக்கிழமை கொடுத்தார்கள். உடனே நெகடிவ் போட்டு, பிளேட் போடச்சொல்லி, ஞாயிற்றுக்கிழமைக்குள் நூலை அச்சிட்டு விட்டேன். பின்னிங்கும் முடிந்தது. கட்டிங் மட்டுமே செய்ய வேண்டும்.

எனக்கும் மேலே இருக்கும் பெரியவர் திங்கள்கிழமை வந்தபோது பெருமையாக விவரம் சொல்லி, இப்படி இப்படி ஒரு பார்ட்டி வந்து, அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டேன் என்றேன்.

அப்படியா என்று சொன்னவர், ஒரு புத்தகத்தைக் கொண்டு வருமாறு சொன்னார். கைக்கு வந்த புத்தகத்தை திருப்பிப் பார்த்தார். எல்லாம் தெலுங்கு. எனக்கும் புரியாது, அவருக்கும் புரியாது. ஆனால் நடுவே சில படங்கள் இருந்தன. நான் கவனிக்காத படங்கள் அவை.

ஏதோவொரு மஞ்சள் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட தரம்கெட்ட படங்கள். அதில் என்.டி. ராமாராவ் யாரோ பெண்ணுடன் சல்லாபம் செய்வதான படங்களும் இருந்தது. அது தேர்தல் நேரம். ராமாராவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் தயார் செய்த புத்தகம் அது. நான்தான் கவனிக்கவில்லை.

பாத்தீங்களா என்றார்.

நான் பேச்சறறு நின்றிருந்தேன். அவருடைய அனுபவம் எனக்கு இல்லை. நிறையப் பணம் தரக்கூடிய ஒரு வாடி்கையாளர் கிடைத்தார் என்று நான் நினைத்தேன். அவரோ, ஏன் அந்த வாடிக்கையாளர் நிறையப் பணம் கொடுக்க முன்வந்தார் என நினைத்தார்.

பெரியவர் தலையைச் சொறிந்தார், அதாவது, தன் சொட்டைத் தலையைத் தடவிக் கொண்டார். தீவிரமாக யோசிக்கும்போது இப்படிச் செய்வது அவர் வழக்கம்.

புத்தகம் டெலிவரி ஆயிடுச்சா என்று கேட்டார். இல்லை என்றேன். எங்கே இருக்கு என்றார். கட்டிங் டேபிளில் இருக்கு என்றேன்.

உள்ளே போனார். கட்டிங் ஆளைக் கூப்பிட்டு, மொத்தப் புத்தகங்களையும் பீஸ் பீஸாக வெட்டி துண்டுகளாக்கி வேஸ்டில் போடச் சொன்னார்.

மீண்டும் நாங்கள் அறைக்கு வந்தோம்.
பணம் குடுத்த பார்ட்டி வந்தால் என்ன சொல்வது என்று கேட்டேன்.
பிரின்ட் செய்ய முடியாதுன்னு சொல்லிடுங்க என்றார்.
அட்வான்ஸ் குடுத்திருக்காங்களே என்று கேட்டேன்.
அட்வான்ஸ் திருப்பித் தரச் சொல்லி ரொம்ப பிரச்சினை செய்ய மாட்டானுக. ரொம்ப கேட்டானுகன்னா திருப்பிக் குடுத்துடலாம் என்றார்.
அப்போ பேப்பருக்கான காசும் உழைப்பும் அவ்வளவும் நஷ்டம் இல்லையான்னு கேட்டேன்.

புத்தி கொள்முதல்என்றார்.



அப்போதுதான் புத்தி கொள்முதல் என்ற வார்த்தையை முதன்முதலாகக் கேட்டேன். இப்போதும் அந்தப்பாடம் நினைவில் இருக்கிறது.
*
புத்தி கொள்முதல் என்பது ஒரு விஷயத்தில் முதல் தடவை அடி பட்டதும் விழித்துக்கொள்வது. எப்போதும் மூளைக்குள் இருத்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

ஒரு விஷயத்தில் ஒருவரிடம் பட்ட பிறகு, மறுபடி மறுபடி அவரிடமே பட்டதாகச் சொன்னால், அது புத்தி கொள்முதல் அல்ல.

மொழியாக்கத்தின் வாயிலில்....

இது 2013இல் எழுதிய கட்டுரை. இப்போதுதான் இங்கே பகிர்கிறேன்.

சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருது பெற்ற திரு பாலசுப்பிரமணியன் வந்திருந்தார்.  எடிட்டிங் குறித்து ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்தார். அதைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது மொழியாக்கம் குறித்தும் பேச்சு வந்தது. மொழியாக்கத்தில் சுவையான சம்பவம் ஏதும் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்.


1996ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது இது. அப்போதுதான் நான் புதிதாக டெஸ்க்டாப் பப்ளிஷிங் தொழில் தொடங்கியிருந்தேன். நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகத்தில் பல்பீர் சிங் என்றொரு அதிகாரி இருந்தார். அவர்தான் தமிழ் நூல்கள் உற்பத்திப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்கு இனிய நண்பர். தில்லி வருவதற்கு முன்பு சென்னையில் நான் வசித்த காலத்திலேயே அச்சகப் பணிகள் தொடர்பாக அவருடன் அறிமுகம் உண்டு. 

ஒருநாள் வழக்கம்போல அந்த அலுவலகத்துக்குப் போனபோது, என்னிடம் ஒரு தாளைக் கொடுத்து, தமிழில் பிழைதிருத்தம் பார்த்துத் தருமாறு கேட்டார். தில்லியில் கணினியில் நூல்களை வடிவமைக்கிற, விளம்பரங்கள் மற்றும் பல வகையான பணிகளை மொழியாக்கம் செய்கிற ஒரு நிறுவனத்திற்கு வந்திருந்த மொழியாக்க வேலை அது. அவர்கள் யாரையோ வைத்து மொழியாக்கம் செய்த பிறகு, தமிழ் தெரிந்த யாரிடமாவது சரிபார்த்துத் தருமாறு பல்பீர் சிங்கிடம் அனுப்பியிருந்தார்கள். பல்பீர் சிங்தான் தமிழ் அச்சுப் பணிகளுக்குப் பொறுப்பாளர் என்பதால் அவருக்கு தில்லியில் தமிழர்களோடும் தொடர்பு உண்டு என்பதே காரணம்.

நான் அந்தத் தாளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில வடிவம் எங்கே என்று அவரிடம் கேட்டேன். அதையெல்லாம் விடுப்பா, தமிழில் தவறு இருந்தால் மட்டும் பார்த்துக்கொடு (வடையை எண்ணச் சொன்னா துளையை எண்ணாதே) என்று சர்தார்ஜி பாணியில் பதிலளித்தார் பல்பீர் சிங்.

ஈழத்திலிருந்து புலம்பெயரும் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகச் சென்று கொண்டிருந்த காலம் அது. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்தன. அவற்றில், குறிப்பிட்ட ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அகதியாக வருவோர் எப்படி வரலாம், எங்கெங்கே அகதியாக நுழையலாம், அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்கிற தகவல்கள்தான் அந்தத் தாளில் இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கே உரித்தான மனித உரிமை அக்கறையால், இலங்கைத் தமிழர்களுக்கும் புரியும் வகையில் தமிழிலும் தருவதென அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். அதைத்தான் நான் சரிபார்க்கத் துவங்கினேன்.

அதில் இருந்த வாசகங்களில் ஒன்று இது -
"உங்கள் பாலுணர்வு ஈடுபாட்டின் காரணமாக, நீங்கள் விரும்பினால், விசாரணையின்போது ஒரு பெண்ணை நீங்கள் ஏற்பாடு செய்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு."

படித்ததும் அதிர்ந்து போனேன். பல்பீர் சிங்குக்கு இதை ஆங்கிலத்தில் புரிய வைத்து, தொலைபேசியில் அந்த நிறுவனத்தை அழைத்து ஆங்கில வாசகத்தை படித்துக்காட்டச் சொன்னேன். அந்த வாசகம் -
Due to your sexual preferences, if you wanted to be interrogated by a female, you are entitled to get the same.

அதாவது, அகதியாகத் தஞ்சம் கோரி வருபவர் ஒரு பெண்ணாக இருந்தால், ஒரு பெண் அதிகாரிதான் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கேட்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதைத்தான் அப்படி வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்து அசத்தியிருந்தார் யாரோ ஒரு தமிழர்.

அப்போதுதான் முடிவு செய்தேன், நானும் மொழியாக்கத்தில் ஈடுபடுவதென. இப்போதும் அதே போன்ற அபத்தங்கள் நிறையவே காணக் கிடைக்கின்றன என்றாலும் இதை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.

கண்ணாடி பாட்டிலுக்குள் ஒரு காதல்


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் டேனியல்-கேத் தம்பதிக்கு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி, கடலில் மிதந்து வந்த ஒரு பாட்டில் கண்ணில் பட்டது. மூடப்பட்டிருந்த அந்த பாட்டிலைத் திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே ஒரு காகிதத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.



அது என்னவென்று புரியாததால், தனது பேஸ்புக் பக்கத்தில் அந்தக் காகிதத்தின் படத்தைப் போட்டு, இதில் இருப்பது என்னவென்று கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார் டேனியல். இதில் ஏதோ காதலும் இருப்பதுபோலத் தெரிகிறது என்றும் ஊகித்திருந்தார் டேனியல். (கடிதம் எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை.)

அந்தக் கடிதம் பேஸ்புக்கில் பரவியது. விரைவிலேயே மொழியாக்கமும் கிடைத்தது.
"I'm a sailor sailing on the Indian Ocean. I deeply miss my fiancee at home. Shortly after we were engaged, I am travelling far away on the sea. I am sorry for leaving her behind, I could only jot down my deep feelings to her and seal it in a floating bottle... My only wish is to return home to live a beautiful and happy life with Jing, a long life in harmony,"

நான் இந்தியப் பெருங்கடலில் கப்பல் பணியில் சென்று கொண்டிருக்கிறேன். என் வருங்கால மனைவியின் பிரிவால் வாடுகிறேன். எங்கள் திருமணத்துக்கான நிச்சயம் ஆன உடனேயே நான் புறப்பட வேண்டியதாயிற்று. அவளை விட்டுவிட்டு வந்ததற்காக வருந்துகிறேன். அந்தப் பிரிவின் உணர்வை இந்தக் காகிதத்தில் கொட்டி பாட்டிலில் மிதக்க விடுகிறேன். என் ஒரே ஆசை வீடு திரும்பி என் காதலி ஜிங் உடன் இனிய மகிழ்ச்சியான நீண்டகால இணக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

கடிதம் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. விரைவிலேயே கேத்-துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கடிதம் எழுதியவரின் நண்பன் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பேசினார். தன்னுடைய நண்பன்தான் இதை எழுதியவர் என்றார்.

ஆனால்...

அவர்களுடைய காதல் நிறைவேறவில்லை. அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விட்டது. இப்போது அந்தப் பெண் வேறொருவருடன் வாழ்ந்து வருவதால், இரண்டு பேரில் எவருடைய அடையாளம் வெளியே தெரிந்தாலும் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி விடும். அதனால் அவருடைய அடையாளம் தெரிய வேண்டாம் என அவர் விரும்புகிறார். இப்போதும் அந்த நண்பர் தனியராகவே இருக்கிறார். விரைவில் அவருக்கு வேறொரு நல்ல பெண் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்

இப்படிச் சொன்னார் அந்த நண்பர்.
*
எத்தனை பேருக்கு 96 ஞாபகம் வருகிறது?

Friday, 12 October 2018

பெண் குழந்தைகள் தினம்


நேற்று பெண் குழந்தைகள் தினம். உங்கள் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய சொத்து கல்விதான். சரியான கல்வி இன்னும் பல திறமைகளை சேர்த்துவிடும்.
  • யாரையும் சார்ந்திருக்காமல், சோதனைகள் வரும்போது கலங்காமல், சுயமாக நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை வழங்குவது கல்வி.
  • கல்விதான் பாலின சமத்துவத்துக்கு அடிப்படை
  • கல்விதான் பொருளாதார சூழலையும் சமூக அந்தஸ்தையும் மேம்படுத்தும்
  • கல்விதான் திட்டமிட்ட வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைத் தரும்.
  • கல்விதான் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த அறிவைத் தரும்
  • கல்விதான் சகல துறைகளிலும் பெண்களும் வேலைவாய்ப்புப் பெற வழிவகுக்கும்



பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தவர்கள் யார் என்று யோசித்தால், தமிழகத்தில் பெரியார் முதன்மையாக நினைவுக்கு வருகிறார். பாரதியார் பெண் சமத்துவத்துக்காகப் பாடியிருக்கிறார். பாரதிதாசன் பெண் கல்வியை வலியுறுத்திப் பாடியிருக்கிறார். ஆண்களோடு பெண்களும் சரிசமமாக்க் கல்வி கற்றால்தான் முன்னேற்றம் விரைவாக இருக்கும் என்றார் அம்பேத்கர். கல்வியிலும் சொத்திலும் பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றவர் அம்பேத்கர். சமூக சீர்திருத்தம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது ராஜா ராம்மோகன் ராய் பெயர்.


ஆனால், இந்தியாவில் பெண் கல்வியின் முன்னோடி என்றால் நினைவுக்கு வர வேண்டியது ஜோதிராவ் பூலே, அவருடைய துணைவியார் சாவித்திரிபாய் பூலே. ஏனென்றால், பாரதிக்கும் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்னால் 19ஆம் நூற்றாண்டிலேயே பெண் கல்விக்குக் குரல் கொடுத்தவர்கள் செயலிலும் காட்டியவர்கள் இவர்கள். சமூக சீர்திருத்தவாதி என்று அறிந்த அளவுக்கு இவர்களின் கல்விப்பணி குறித்து நாம் அறியவில்லை. இவர்களோடு, நாம் இதுவரை அறியாத இன்னொருவரைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

1848இல் புனேவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டும் பணியைத் துவக்குகிறார்கள் பூலே தம்பதியினர். இதற்காக உள்ளூர் மக்களால் மிரட்டப்படுகிறார்கள். இந்தக் கல்விப் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். வீட்டைக் காலி செய்கிறார்கள் பூலே தம்பதியினர்.

பூலே குடும்பத்தினரோ, அவருடைய சமூகத்தினரோ ஆதரவு தரவில்லை. வசிப்பதற்கும் பள்ளிக்கும் இடம் தேடி அலைகிறார்கள். அப்போது அறிமுகம் ஆனவர்தான் உஸ்மான் ஷேக். புனே நகரின் கஞ்ச் பேட் பகுதியில் இருந்த உஸ்மான், தன்னுடைய வீட்டை அவர்களுக்கு வழங்க முன்வருகிறார். அவர்களுக்குத் துணையாக நிற்கிறார் உஸ்மானின் தங்கை ஃபாதிமா ஷேக்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்று கருதப்படும் சாவித்திரிபாய் பூலேயுடன் சேர்ந்து கொண்டு பாத்திமாவும் பள்ளியில் ஆசிரியப் பணி புரிகிறார். (மூன்றாவதாக வந்து சேர்கிறார் சகுணா பாய்.) பாத்திமா-சாவித்திரி கல்விப் பணிக்கு முழு ஆதரவாக நிற்கிறார் உஸ்மான்.

அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போது ஆதிக்க சாதியினர் அவர்கள்மீது பல வகையிலும் தாக்குதல் தொடுப்பார்கள். கற்களை வீசுவார்கள், வசவுச் சொற்களைப் பிரயோகிப்பார்கள், சாணியை வீசியடிப்பார்கள். இதற்கெல்லாம் கலங்காமல் தமது பணிகளைத் தொடர்ந்தார்கள் பாத்திமாவும் சாவித்திரிபாயும்.

பாத்திமாவுக்கு புதிய சிக்கல் வந்தது. இந்துக்களின் எதிர்ப்புடன், இஸ்லாமிய சமூகத்தினரும் அவரைத் தூற்றினார்கள். ஆனால் அவர் தயங்கவில்லை. வீடு வீடாகச் சென்று பெண் கல்விக்காகப் பிரச்சாரம் செய்தார். பெண்களை கல்வி கற்க அனுமதிக்காத ஒவ்வொரு வீட்டிலும் மணிக்கணக்கில் பேசி, சமாதானம் செய்து, தமது வீட்டுப் பெண்களை பள்ளிக்கு அனுப்புமாறு செய்தார். அதனால்தான் இந்தியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியை என்று கருதப்படுகிறார் பாத்திமா ஷேக்.

பாத்திமா ஷேக் குறித்து அதிக தகவல்கள் இல்லை. 1848 முதல் 1856 வரை பள்ளியில் ஆசிரியப் பணி செய்திருக்கிறார் என்று தெரிகிறது. சாவித்திரி பாய் பூலே தன் கணவர் ஜோதிராவ் பூலேவுக்கு எழுதிய பல கடிதங்களில் பாத்திமா குறித்து நெகிழ்ந்து எழுதியிருக்கிறார்.

இது நடந்தது 19ஆம் நூற்றாண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போதும் தலித்களும் முஸ்லிம்களும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சொல்லப்போனால், முன்னெப்போதும் இருந்ததைவிட இப்போது அதிகம் தேவை இருக்கிறது.

பாத்திமா- சாவித்ரிபாய் பூலே நடத்திய பள்ளியின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டாமா? கீழே இருப்பதுதான் அதன் படம். வரலாற்றுச் சிறப்புகளில் இது இடம்பெற்றிருக்க வேண்டாமா? அரசு இதை நினைவுச்சின்னமாக ஆக்கியிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? முந்தைய பத்தியில் விடை இருக்கிறது.


Monday, 1 October 2018

ஸ்வச்ச பாரத் : மகத்தான வெற்றியா நாடகமா ?

அக்டோபர் 2. ஸ்வச்ச பாரத் (தூய்மை இந்தியா) திட்டம் துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

மேனுவல் ஸ்கேவஞ்சிங் எனப்படுகிற கையால் மலம் அள்ளுகிற வழக்கமே நிறுத்தப்பட்டு விட்டது அல்லவா? சட்டம் போட்டு ஒழிக்கப்பட்டு விட்டது அல்லவா?

கையால் மலம் அள்ளும் வழக்கம் ஒழிக்கப்பட்டது என்றால், அந்த வேலை செய்து வந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? அவர்கள் மறுவாழ்வுக்கு அரசு என்ன செய்தது என்ற கேள்வி வரும் அல்லவா? ஸ்வச்ச பாரத் கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்களுக்காக என்ன செய்தது என்று பார்ப்போமா?

அவர்களின் மறுவாழ்வுக்காக (முந்தைய) அரசு சில திட்டங்களை வகுத்தது. (இப்போதும் அவை நடப்பில் உள்ளன.)
1.      ஒரு மலமள்ளும் குடும்பத்தின் ஒரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிப்பது. இதன் மூலம் அவர் மறுவாழ்வுக்கு வழி செய்வது!
2.      வேறு தொழில்களைக் கற்றுக்கொள்ள பயிற்சி அளிப்பது. இதற்கு, துறைசார் பயிற்சிக்கு மாதம் 3000 வீதம் அளிப்பது.
3.      குறிப்பிட்ட தொகை வரை கடனுதவி அளிப்பது.
இவைதான் அந்தத் திட்டங்கள்.

2015-16இல் 8627 பேருக்கு 40 ஆயிரம் தரப்பட்டது.
2016-17இல் 890 பேருக்கு 40 ஆயிரம் தரப்பட்டது.

வெறும் 40 ஆயிரம் ரூபாயில் ஒரு குடும்பம் என்ன தொழில் தொடங்கி நடத்திவிட முடியும் என்பது ஒரு கேள்வி. கடனுதவியைப் பெற அவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளை திருப்பித்தர முடியாவிட்டால் அரசு கழுத்தைப் பிடிக்குமே என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் அவர்களுடைய நலனுக்காக உழைக்கும் மகசெசே விருதாளர் வில்சன். அவர்கள் வியாபாரம் செய்யலாம் என்று சொல்கிறது அரசு. இவர்களுக்கு வியாபாரம் என்பது பழக்கமில்லாத தொழில் என்பது ஒருபுறம் இருக்க, காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் வியாபாரம் செய்தால் வாங்குவதற்கு யார் வருவார்கள்என்பது இன்னொரு கேள்வி.

ஸ்வச்ச பாரத் என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு உடலெல்லாம் பற்றி எரிவதுபோல இருக்கிறது. ஏன் தெரியுமா?

ஸ்வச்ச பாரத்துக்கு இந்த அரசு ஒரு சிறப்பு வரிகூட (செஸ்) விதித்தது என்பது உங்களுக்கும் தெரியும்தானே?

இல்லை, அந்த வரியின் காரணமாக எனக்கு எரிச்சல் இல்லை.

அந்த வரி வருவாயை எல்லாம் இந்த அரசு என்ன செய்தது என்பதுதான் எரிச்சலுக்குக் காரணம்.

தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.

இந்த அரசு, கைகளால் மலமள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கவில்லை.

ஆமாம். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை.

முந்தைய யுபிஏ அரசு கடைசியாக ஒதுக்கியது 2013-14ஆம் ஆண்டில் 55 கோடி.

யுபிஏ அரசு ஒதுக்கிய நிதியும்கூட இன்னமும் முழுமையாகப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது இந்த அரசு. மேலும் விவரங்களை இங்கே வாசிக்கலாம்.

இந்த வெட்கம் கெட்ட அரசுதான் ஸ்வச்ச பாரத் என்று மார்தட்டிக்கொண்டு விளம்பரம் செய்துகொள்கிறது.

ஆண்டுதோறும் நடப்பதுபோல ஆட்களை விட்டு குப்பைகளைக் கொட்டி தலைவர்கள் கூட்டிப்பெருக்கும் நாடகங்கள் இன்றும் நடக்கும். அதைப் படமாகப் போட்டுப் புல்லரித்துப் போகும் வெட்கங்கெட்ட ஊடகங்கள். தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு ஊரார் தெரிந்து கொள்ளப் படம்பிடித்தால் சுயநலமுண்டு என்ற பாட்டு நம் மனதுக்குள் ஒலிக்கும். அப்புறம் மறுபடி ஸ்வச்ச பாரத் வரும். மறுபடி நாடகம் நடக்கும். மறுபடி ஊடகங்கள் ஊதுகுழலாகும்....


படத்தில் இருப்பது ராஜஸ்தானைச் சேர்ந்த மலமள்ளும் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஊதியமே கிடையாதாம். வீட்டுக்கு 2 ரொட்டி கொடுப்பார்களாம்.

மேனுவல் ஸ்கேவஞ்சிங் ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறது அரசு.

இப்போது சொல்லுங்கள் ஸ்வச்ச பாரத் மகத்தான வெற்றியா இல்லை நாடகமா !