Friday 26 October 2018

மொழியாக்கத்தின் வாயிலில்....

இது 2013இல் எழுதிய கட்டுரை. இப்போதுதான் இங்கே பகிர்கிறேன்.

சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருது பெற்ற திரு பாலசுப்பிரமணியன் வந்திருந்தார்.  எடிட்டிங் குறித்து ஒரு நிகழ்வில் உரையாற்ற இருந்தார். அதைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது மொழியாக்கம் குறித்தும் பேச்சு வந்தது. மொழியாக்கத்தில் சுவையான சம்பவம் ஏதும் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்.


1996ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது இது. அப்போதுதான் நான் புதிதாக டெஸ்க்டாப் பப்ளிஷிங் தொழில் தொடங்கியிருந்தேன். நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகத்தில் பல்பீர் சிங் என்றொரு அதிகாரி இருந்தார். அவர்தான் தமிழ் நூல்கள் உற்பத்திப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்கு இனிய நண்பர். தில்லி வருவதற்கு முன்பு சென்னையில் நான் வசித்த காலத்திலேயே அச்சகப் பணிகள் தொடர்பாக அவருடன் அறிமுகம் உண்டு. 

ஒருநாள் வழக்கம்போல அந்த அலுவலகத்துக்குப் போனபோது, என்னிடம் ஒரு தாளைக் கொடுத்து, தமிழில் பிழைதிருத்தம் பார்த்துத் தருமாறு கேட்டார். தில்லியில் கணினியில் நூல்களை வடிவமைக்கிற, விளம்பரங்கள் மற்றும் பல வகையான பணிகளை மொழியாக்கம் செய்கிற ஒரு நிறுவனத்திற்கு வந்திருந்த மொழியாக்க வேலை அது. அவர்கள் யாரையோ வைத்து மொழியாக்கம் செய்த பிறகு, தமிழ் தெரிந்த யாரிடமாவது சரிபார்த்துத் தருமாறு பல்பீர் சிங்கிடம் அனுப்பியிருந்தார்கள். பல்பீர் சிங்தான் தமிழ் அச்சுப் பணிகளுக்குப் பொறுப்பாளர் என்பதால் அவருக்கு தில்லியில் தமிழர்களோடும் தொடர்பு உண்டு என்பதே காரணம்.

நான் அந்தத் தாளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கில வடிவம் எங்கே என்று அவரிடம் கேட்டேன். அதையெல்லாம் விடுப்பா, தமிழில் தவறு இருந்தால் மட்டும் பார்த்துக்கொடு (வடையை எண்ணச் சொன்னா துளையை எண்ணாதே) என்று சர்தார்ஜி பாணியில் பதிலளித்தார் பல்பீர் சிங்.

ஈழத்திலிருந்து புலம்பெயரும் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகச் சென்று கொண்டிருந்த காலம் அது. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் கொடுத்து வந்தன. அவற்றில், குறிப்பிட்ட ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அகதியாக வருவோர் எப்படி வரலாம், எங்கெங்கே அகதியாக நுழையலாம், அவர்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்கிற தகவல்கள்தான் அந்தத் தாளில் இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கே உரித்தான மனித உரிமை அக்கறையால், இலங்கைத் தமிழர்களுக்கும் புரியும் வகையில் தமிழிலும் தருவதென அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். அதைத்தான் நான் சரிபார்க்கத் துவங்கினேன்.

அதில் இருந்த வாசகங்களில் ஒன்று இது -
"உங்கள் பாலுணர்வு ஈடுபாட்டின் காரணமாக, நீங்கள் விரும்பினால், விசாரணையின்போது ஒரு பெண்ணை நீங்கள் ஏற்பாடு செய்துகொள்ள உங்களுக்கு உரிமை உண்டு."

படித்ததும் அதிர்ந்து போனேன். பல்பீர் சிங்குக்கு இதை ஆங்கிலத்தில் புரிய வைத்து, தொலைபேசியில் அந்த நிறுவனத்தை அழைத்து ஆங்கில வாசகத்தை படித்துக்காட்டச் சொன்னேன். அந்த வாசகம் -
Due to your sexual preferences, if you wanted to be interrogated by a female, you are entitled to get the same.

அதாவது, அகதியாகத் தஞ்சம் கோரி வருபவர் ஒரு பெண்ணாக இருந்தால், ஒரு பெண் அதிகாரிதான் தன்னை விசாரிக்க வேண்டும் என்று கேட்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. இதைத்தான் அப்படி வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்து அசத்தியிருந்தார் யாரோ ஒரு தமிழர்.

அப்போதுதான் முடிவு செய்தேன், நானும் மொழியாக்கத்தில் ஈடுபடுவதென. இப்போதும் அதே போன்ற அபத்தங்கள் நிறையவே காணக் கிடைக்கின்றன என்றாலும் இதை மட்டும் என்னால் மறக்கவே முடியாது.

1 comment:

  1. ஹாஹா.... மறக்க முடியாத அனுபவம் தான்.

    மொழியாக்கம் அத்தனை சுலபமல்ல, கொஞ்சம் தவறாக இருந்தாலும் அனர்த்தமாக ஆகிவிடும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

    தொடரட்டும் அனுபவப் பகிர்வுகள்.

    ReplyDelete