Wednesday, 14 November 2018

சர்க்கரை நோய் தினம் 2018


நவம்பர் 14 - உலக நீரிழிவு நோய் தினம். இந்த ஆண்டுக்கான நீரிழிவு நோய் தினத்துக்கான மையக் கருத்து : சர்க்கரை நோயும் குடும்பமும்

இப்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 42 கோடிக்கும் அதிகம் (2014 கணக்கு). இவர்களில் பெரும்பாலோர் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகள்தான். டைப் 2 வகை சர்க்கரை நோயை உடற்பயிற்சி, சமச்சீர் உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றால் பெருமளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இதில் குடும்பம் பெருமளவுக்குப் பங்களிக்க முடியும். அதனால்தான் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சர்க்கரை நோயும் குடும்பமும்என்பதே மையக்கருத்தாக ஏற்கப்பட்டுள்ளது. (கடந்த ஆண்டின் மையக்கருத்து - பெண்களும்நீரிழிவு நோயும்.)

சர்க்கரை நோய் உள்ளவர்களில் 2 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதுதான் அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க / சமாளிக்க உகந்த வழியாகும். குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அதன் தாக்கம் குடும்பம் முழுவதையும் பாதிக்கும்.

சர்க்கரை நோய் சிகிச்சை செலவு பிடிக்கக்கூடியது. சர்க்கரை நோய் சிகிச்சையும் மருந்துகளும் அனைவருக்கும் எட்டும்படி இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை என்பதே நிதர்சனம். அன்றாடம் இன்சுலின் மருந்துக்கும், சர்க்கரை நோய் கண்காணிப்புக்குமான செலவு, அல்லது டயாலிசிஸ் செலவு போன்றவை குடும்பத்தின் வருவாயில் பெரும்பகுதியை விழுங்கிவிடும். இன்னும் பலருக்கு, சிகிச்சையும் மருந்துகளும் எட்டாதவை. இன்னும் பலர் சரக்கரை நோய் விழிப்புணர்வே இல்லாதவர்கள்.


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு மிக முக்கியம். சிகிச்சையில் மட்டுமல்ல, சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பிலும், உணவு முறையிலும் ஊக்கம் தருவதிலும் குடும்பத்தினர் பங்கு அதிகம். பொதுவாக சர்க்கரை நோயாளிகளில் 90 விழுக்காடு டைப் 2 வகையினர்தான். வாழ்க்கை முறை மாற்றங்களால் இதை கட்டுப்படுத்த முடியும் என்னும்போது, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சர்க்கரை நோய், என்றால் என்ன, டைப் 1, டைப் 2 வகைகள் என்றால் என்ன?
குளுக்கோஸ், உடலுக்குத் தேவையான எரிபொருள் ஆகும். நமது உணவுகளிலிருந்து இது கிடைக்கிறது. ஆனால் இந்த குளுக்கோஸ் உடலின் செல்களில் நுழைவதற்கு, இன்சுலின் தேவை. கணையம் என்கிற உறுப்பு அந்த இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ஆக, உடலின் ஆற்றலுக்கான எரிபொருள் கிடைப்பதற்கு இன்சுலின் தேவை. டைப் 1 வகை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பு இருக்காது. டைப் 2 வகையினருக்கு, போதுமான அளவுக்கு இன்சுலின் சுரக்காது, அல்லது சுரக்கும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்தாது. (டைப் 1, டைப் 2 தவிர வேறு சில வகைகளும் உண்டு.) இரண்டு வகை நோய்களுமே, செல்களுக்கு குளுக்கோஸை அனுப்பாமல், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயரும்போது, பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதுதான் சர்க்கரை நோய், அல்லது நீரிழிவு நோய் எனப்படும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?
  அடிக்கடி சிறுநீர் கழிதல்
 தாகம் மிகவும் அதிகரித்தல், தண்ணீர் நிறைய அருந்த வேண்டியிருத்தல்
  பசியுணர்வு அதிகரித்தல்
  களைப்பாக உணர்தல்
  பார்வைத்திறன் மங்குதல்
  காயங்கள் சீக்கிரமாக ஆறாமல் இருத்தல்
இவை பொதுவான அறிகுறிகள். இதைத்தவிர, கைகால்கள் மரத்துப்போவது போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.

டைப் 1 வகை சர்க்கரை நோய் விரைவாக தன் வேலையைக் காட்டும். ஆனால் டைப் 2 வகையினரில் பெரும்பாலோருக்கு சர்க்கரை நோயின் அறிகுறிகள் உடனே தெரியாமல் போகலாம், பல காலத்துக்குப் பிறகே தெரிய வரக்கூடும். அப்போது சிக்கல்கள் முற்றியிருக்கும்.

சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய முக்கியச் சிக்கல்கள்
 இதய நோய்
 பக்கவாதம்
 சிறுநீரக செயலிழப்பு
 பார்வைத் திறன் இழப்பு
 காயங்கள் ஆறாதபோது, உறுப்புகள் நீக்கப்படுதல்


டைப் 2 வகை சர்க்கரை நோய் யார் யாருக்கு வரக்கூடும்?
 உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்
 குடும்பத்தில் ரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் இருத்தல்
 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
 உடற்பயிற்சி ஏதும் செய்யாதவர்கள்
 பிரசவ கால சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள்
 அதிக எடை கொண்ட குழந்தையைப் பிரசவித்தவர்கள்
 தொப்பை உள்ளவர்கள்
 ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றாதவர்கள்

இந்தியாவில் 8.7 சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. சர்க்கரை நோய் கண்டறியப்படாதவர்கள் எண்ணிக்கையும் ஐந்து கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில் சர்க்கரை நோய் அதிகரித்து வருவது இன்னும் ஆபத்தான விஷயம்.

நாமும் சர்க்கரை நோயாளிகளில் ஒருவராக இல்லாதிருக்க, அல்லது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

   அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.
   ஆரோக்கியமான சமச்சீர் உணவைப் பின்பற்றலாம்
   சர்க்கரைச் சத்தும் கொழுப்பும் உள்ள உணவுகளைத் தவிர்க்கலாம்
   உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யலாம்
   உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்
   பதப்படுத்திய உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுக்கலாம்.
   புகை மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்கலாம்.

*

பி.கு. 1 – சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள், ஆனால் குறைவாக கவனிக்கப்படுபவர்களும் பெண்கள்தான். கடந்த ஆண்டின் மையக்கருத்தான பெண்களும் நீரிழிவு நோயும்என்ற தலைப்பை முன்வைத்து எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் கிளிக் செய்து வாசிக்கலாம்.