Friday, 18 November 2016

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 4

முந்தைய பகுதிகளை வாசிக்க : பகுதி 1, பகுதி 2, பகுதி 3

? இந்த நடவடிக்கையால் பணத்தை கையில் வைத்திருப்பது குறையும், வங்கி மூலம் பரிமாற்றம் அதிகரிக்கும், கரன்சி இல்லாத சமூகம் என்ற திசையில் நாடு முன்னேறும் அல்லவா?
•-• இது மிகவும் ஆழமான கேள்வி. இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துகிறவர்கள், இணைய வசதி உள்ளவர்கள் என பல விவரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
2014இல் ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவிக்கக்கூடாது என்று பாஜக எதிர்த்தபோது, பாஜகவும் ஒத்துக்கொண்ட விஷயம் இந்தியாவில் 65 விழுக்காட்டினர் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் என்பது. இருந்த வங்கிக் கணக்குகளிலும் செயலற்ற கணக்குகள் நிறையவே இருக்கும். அது 43% என்கிறது ஒரு மதிப்பீடு. மோடி அறிவித்த ஜன் தன் திட்டத்தால் சேர்க்கப்பட்ட கணக்குகள் 22 கோடி. ஏற்கெனவே கணக்கு வைத்திருந்தவர்களும் ஜன் தன் திட்டத்தில் கணக்கு ஆரம்பித்தது சுமார் 7 கோடி. இப்படி எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 52 விழுக்காடுதான். செயலற்ற கணக்குகளையும் கழித்தால், 32 விழுக்காடுதான் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துகிறவர்கள். டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள் 22.1%. கிரெட்டி கார்ட் பயன்படுத்துவோர் 3.4%.


ஆக, இந்த 25 விழுக்காட்டினரை சுட்டிக்காட்டி, நாடு முழுமைக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா? ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் துறையில் வேலை செய்கிற, நாற்காலியில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிற, வார விடுமுறை இருக்கிற, வங்கிக்குச் செல்லக்கூடிய அல்லது வங்கியை அணுகக்கூடிய வசதி இருக்கிறவர்களுக்கு கரன்சி அதிகம் தேவைப்படாதிருக்கலாம்; பல வேலைகளையும் இணைய வழியில் செய்யலாம். ஆனால் அனார்கனைஸ்டு செக்டாரில் இருப்பவர்கள்தான் இந்தியாவில் அதிகம். இவர்களில் பலருக்கு வார விடுமுறைகூட கிடையாது. தினமும் புழங்குகிற பணத்தை செலுத்தவும், தேவைப்படும் பணத்தை எடுக்கவும் வங்கிக்குப் போய் வந்துகொண்டிருக்க முடியாது.
அவசரத் தேவைகளுக்கு நண்பர்கள் அல்லது உறவினரிடமிருந்து கடன் பெறுவோர் 32%. வங்கிகள் அல்லாத தனிநபர்களிடமிருந்து (கந்து வட்டி) கடன் பெறுவோர் 12.6%. இவர்கள் எல்லாருக்கும் கையில் பணப்புழக்கம்தான் அன்றாடம் தேவை. காலையில் கடன் வாங்கி, மண்டியில் காய்கறி எடுத்துவந்து விற்றுவிட்டு, மாலையில் வட்டியுடன் கொடுப்பவர்கள் ஏராளம். இவர்களை எல்லாம் கரன்சிகளைப் பயன்படுத்தாமல் வங்கிக் கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்யச் சொல்வது அபத்தம். அவர்களுடைய தொழில், வியாபாரம், எல்லாமே அடிபட்டுப்போகும்.
கரன்சி இல்லாத சமூகம் இயல்பாக உருவாவது என்பது வேறு. அதை இலக்காக வைத்து திணிப்பது என்பது வேறு. இப்போதைய நடவடிக்கை, அப்படித் திணிக்கும் முயற்சியின் அங்கம்தான் என்பதை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களில் 80 விழுக்காடு வங்கிச் சேவைகளைப் பெறாதவர்கள். வீட்டு வேலைக்காரிகள், சித்தாள்கள், பீடி சுற்றுபவர்கள், தீப்பெட்டித் தொழிலில் இருப்பவர்கள், என பல துறைகளில் உழைக்கும் பெண்கள் தமது வருமானத்தை அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடிவதே பெரிய விஷயம். அவர்கள் தமது வேலைகளை நிறுத்திவிட்டு, வங்கிக்கும் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அநியாயம் இல்லையா? வங்கிச்சேவை அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் மாற்றம் நிகழலாம். ஆனால் மகளிருக்காக என உருவாக்கப்பட்ட மகிளா பேங்க் என்ற அமைப்பை, அது சிதம்பரம் கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே, ஒழித்துக்கட்டியது இந்த அரசு.

நமது ஜிடிபியில் உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காடு அன்-ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் ஒருங்கிணைக்கப்படாத தொழில்துறையிலிருந்து வருவது. பணநெருக்கடி அந்த செக்டரின் தொழில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம். இதன் விளைவாக ஜிடிபி குறையும். தினக்கூலிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிற கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் தினக்கூலிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வேலையின்மையும், வருவாய் இழப்பும், விரக்தியும் வசதியாக நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு உபதேசம் செய்பவர்களால் உணர முடியாது.
உதாரணத்திற்கு ஒரு விஷயம் வீட்டுக்கு அருகே உள்ள நாற்சந்தியில் அதிகாலையிலிருந்தே நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். தச்சர்கள், மேஸ்திரிகள், பெயின்டர்கள், சித்தாள்கள்,... அவரவர் தொழிலுக்கேற்ப மட்டக்கோல், அல்லது பிரஷ் கையில் வைத்துக்கொண்டு சாலையோரம் காத்திருப்பார்கள். வேலைக்கு ஆள் தேவைப்படுகிறவர்கள் அங்கே வந்ததும் அத்தனைபேரும் மொய்த்துக்கொள்ள, அவர் தனக்கு எத்தனை ஆட்கள் தேவையோ அவர்களைப் பொறுக்கி எடுத்து அழைத்துச்செல்வார். 10 மணிவாக்கில் பெரும்பாலோர் போய்விட, அப்போதும் வேலை கிடைக்காத 10-20 அங்கேயே ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு, எவராவது வரமாட்டாரா என்று காத்திருப்பார்கள். ஆனால் இப்போதோ, காத்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலை கிடைக்காமல் அப்படியே முடங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் கறுப்புப்பணத்தில் ஒரு பகுதி முடங்கி இருக்கும். இன்னொரு பகுதி புழக்கத்தில் இருக்கும் என்பதை முன்னரே பார்த்தோம். அந்தப்பணத்தை செலவு செய்யும்போது, அதன் மூலமும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது, வியாபாரம் நடக்கிறது, அதிலும் ஒரு பகுதி வரி வருவாயாக அரசுக்குப் போகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது வெள்ளையாகி விட்டது. இதைச் சொல்வதால் கறுப்புப்பணம் நல்லது என்று சொல்வதாகப் பொருளாகாது, முடக்கத்தில் இருக்கும் பணம்தான் பொருளாதாரத்துக்கு உதவாத பணம், அதன் பங்கு ஒப்பீட்டில் குறைவு என்று காட்டுவதற்காக இதைச் சுட்டுகிறேன்.
மக்கள் எப்போதும் தம் கையில் பணம் வைத்திருக்க விரும்புவார்கள், வைத்திருக்க வேண்டும். பணம் கையில் இருக்கிறது என்பது ஒரு மனதைரியத்தைக் கொடுக்கிறது. பணமில்லாத நேரத்தில் சிறிய பிரச்சினைகள்கூட பெரிதாகத் தெரியும். கடனாக வாங்கியதாக இருந்தாலும், சம்பாதித்தாக இருந்தாலும், பணம் கையில் இருக்கும்போது, பெரிய பிரச்சினைகள்கூட சிறியதாகத் தோன்றும். இது மனித இயல்பு. அதுதவிர, மக்கள் கையில் பணம் இருப்பது எத்தகைய பொருளாதார நெருக்கடி ஏற்படும்போதும் சமாளிக்க உதவுகிறது. கையில் பணம் இருந்தும் பயன்படுத்த முடியாத காரணத்தால்தான் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மக்களிடையே கோபமும் அதிகரித்துள்ளது. திருமணம் முதல் சொத்துப் பரிமாற்றம் வரை, மருத்துவம் முதல் கல்விக் கட்டணம் வரை என பலவற்றிலும் உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
வங்கியின் மூலம் மட்டுமே பரிவர்த்தனை என்னும்போது இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்போது வங்கியில் இருக்கும் பணத்திலிருந்து கிடைக்கும் வருவாய் மிகக்குறைவு. எல்லாரும் வங்கியில் செலுத்தி, வங்கியில் சேமிப்பு அதிகமானால், சேமிப்பின்மீதான வட்டி விகிதம் குறையும். அதிலிருந்து கிடைக்கும் வருவாய் இன்னும் குறையும். நடுத்தர வர்க்கத்தினருக்கு, சேமிப்பிலிருந்து கிடைக்கும் வருவாயை நம்பியிருப்பவர்களுக்கு இது பெரிய அடியாக இருக்கும். அதே நேரத்தில், நூறு கோடி ஆயிரம் கோடி என்று கடன் வாங்குகிறவர்களுக்கு வட்டி விகிதம் குறைவது பெருத்த லாபமாக இருக்கும்.
இவற்றைத்தவிர, ஆன்லைன் பர்ச்சேஸ், ஆன்லைன் மளிகை போன்றவற்றினால் மிக முக்கியமான மற்றொரு பண்பாட்டு மாற்றம் நிகழும் மக்களை சிறு வியாபாரிகளிடமிருந்து பெருவர்த்தகர்களின் பக்கம் திருப்புவதே அது. இப்போது கையில் வைத்திருக்கும் பணத்தைக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடைகள், பெட்டிக் கடைகள், காய்கறிக்கடைகளில் வாங்குவோம். அவர்களோடு ஓர் உறவு உருவாக்கி வைத்திருப்போம். அவசரத்துக்கு கொடுக்கல் வாங்கல் இருக்கும். ஆன்லைனில் இது இருக்காது. ஆன்லைன் வர்த்தகம், மால்களின் பெருக்கம் ஆகியவை சிறுகச்சிறுக சிறு வியாபாரிகளை அழிக்கும். அவர்களுடைய வியாபாரத்தை, அதன் மூலம் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளைக் குறைக்கும், பலரை புலம்பெயர வைக்கும், சிலரை தெருவுக்கு வர வைக்கும். உறவுகள் மறைந்து இயந்திரத்தனம்தான் அதிகமாகும். அப்புறம் எலிசியம் என்னும் திரைப்படத்தில் வருவதுபோல, இரண்டு வகையான சமூகங்கள் இருக்கும். ஒன்று, எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் ஒரு சிறுபான்மை சமூகம்; மற்றது, எந்த வசதியும் இல்லாத பெரும்பான்மை சமூகம். ரூபாய் நோட்டை ஒழித்ததை ஆதரித்தவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலோர் மேல்நடுத்தர, உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்று புரியும்.

? பிரதமர் மோடி ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார். அதனால்தான் இதைச் செய்திருக்கிறார். அவர்மீது உங்களுக்குள்ள காழ்ப்பின் காரணமாகத்தான் நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்கிறேன். என்ன சொல்வீர்கள்?

•-• பிரதமர் மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. பங்காளி-பகையாளி உறவும் இல்லை. எனவே காழ்ப்பு என்று ஏதுமில்லை. “கல்யாணம் செய்யணும்... கையில் பணமில்லை” என்று இந்தியர்களின் நிலையை ஜப்பானில் இருக்கும்போது கேலியாகப் பேசி கைதட்டல் வாங்கியவர், இங்கே வந்ததும் “நாட்டுக்காக குடும்பத்தை தியாகம் செய்தேன்” என்று சினிமா வசனம் பேசி கைதட்டல் வாங்கப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது குமட்டலாக இருக்கிறது. இந்த நாட்டின் எந்தவொரு பிரதமரும் இப்படி பிலாக்கணம் வைத்ததில்லை. அது ஒருபுறம்பா இருக்கட்டும். மோடியின் அரசியல், அவர் சார்ந்திருக்கும் கட்சியின் அரசியல்பார்வை மீது ஒவ்வாமை உண்டு. ஏனென்றால், அது சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கிற, நாட்டின் பன்மைத்துவத்தை மறுத்து ஒற்றைத்துவத்தை நிலைநிறுத்த முனைகிற அரசியல். அதை இந்தியர்கள் எல்லாரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.
மோடி அரசில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது, வரிகள் அதிகரித்துள்ளன, ஏழைகளின், நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் சீர்கெட்டிருக்கிறது, வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அவை சாத்தியமும் அல்ல. ஆனால் இந்தத் தோல்விகளை மறைப்பதற்கு, அல்லது தோல்விகளிலிருந்து திசை திருப்புவதற்கு, மாநிலங்களின் தேர்தல்களுக்கு, அவ்வப்போது இந்த அரசுக்கு ஏதேனும் விஷயம் தேவைப்படுகிறது. முந்தாநாள் அது மாட்டிறைச்சியாக இருந்தது. நேற்று கஷ்மீர் பிரச்சினையாக இருந்தது. இன்று கறுப்புப்பணமாக இருக்கிறது. நாளை அண்டை நாட்டுடன் போராகவும் இருக்கலாம். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஊழல்வாதிகள் என்று யார்மீது குற்றம் சாட்டினார்களோ அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அல்லது தமது கட்சிக்குள் இருக்கும் ஊழல்வாதிகளைத்தான் வெளியேற்றினார்களா? காங்கிரசின் ஊழல் வெளியே தெரியக்கூடியது. இவர்களுடைய ஊழல் வெளிப்படையாகத் தெரியாதது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 63 நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருந்த 7000 கோடி ரூபாயை இப்போதுதான் வாராக்கடன் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இனி அந்தப்பணம் வரப்போவதில்லை. சாமானிய மனிதர்கள், சம்பளம் வாங்குவோர், முதியோர் சிறுகச் சிறுக வங்கிகளில் சேமிக்கிறார்கள். அவற்றை கோடிகோடியாக சிலருக்கு கடனாகக் கொடுத்து, திரும்பி வராவிட்டால் தள்ளுபடி செய்யும் பெரிய மனது இந்த ஆட்சிக்கு உண்டு. இதெல்லாம் வெளியே தெரியாது. முகமூடிகளை மட்டும் பார்ப்பவர்கள் நல்ல திட்டம் என்றுதான் நினைப்பார்கள். வாய்ஜாலத்தில் மயங்குபவர்கள் நமது மக்கள். இதில் வியப்பேதும் இல்லை. நமது மக்கள் மிகவும் அப்பாவிகள்.

7000 கோடி தள்ளுபடி செய்ததில் விஜய் மல்லையாவின் 1200 கோடியும் அடக்கம். விஜய் மல்லையாவை நாட்டைவிட்டுத் தப்பிச்செல்ல விட்டவர்கள் யார்? அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உதவிய அதே கட்சியினர்தான். இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது.

? அப்படியானால் மோடியும் ஊழல் செய்திருக்கிறார் என்கிறீர்களா?
•-• முதலாளித்துவக் கட்சிகளில் ஊழலில் ஈடுபடாத, வேண்டப்பட்ட ஆட்களுக்கு சலுகைகளை வழங்காதவர் என்று யாரும் இருக்கவே முடியாது. குஜராத்தில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கணக்கற்றவை. குஜராத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஊழல் விவகாரம் இன்னும் கவனிக்கப்படவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொரு ஊழல் செய்தி வெடித்திருக்கிறது. ஊடகங்கள் ஏன் அதை கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மூழ்கியிருப்பதால், சமூக ஊடகங்களிலும் அந்த விவகாரம் கவனத்தைப் பெறவில்லை. பிரசாந்த் பூஷண் சி.பி.டி.டி. தலைவரிடம் ஊழல் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். விரைவில் உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறார். நியாயமான, நேர்மையான விசாரணை நடக்குமானால் குஜராத்தில் ஆட்சியில் இருந்தபோது மோடி அரசின் ஊழலும் வெளிவரும். ஊழல் செய்தவர்களே ஆட்சியில் இருக்கிறார்கள், விசாரணை அமைப்புகளும் அவர்கள் கையில்தான் இருக்கின்றன. விசாரணையை முடுக்கி விடுவார்களா, முழுக்கடித்து விடுவார்களா என்பதை எவரும் ஊகிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.



? அப்படியானால் மோடிக்கு ஊழலை ஒழிக்கும் நேர்மை இல்லை என்கிறீர்களா?
•-• நான்தான் முதலிலேயே சொன்னேனே நமது மக்கள் அப்பாவிகள். எதையும் எளிதில் நம்பி விடுவார்கள். குஜராத்தில் லோகாயுக்தா குறித்து சொல்கிறேன். இதைப் படித்தபிறகு நீங்களே கேள்விக்கான பதிலை முடிவு செய்து கொள்ளுங்கள்.
லோக்ஆயுக்தா தெரியும் அல்லவா? (லோக் = மக்கள், ஆயுக்த = அதிகாரி அல்லது ஆணையர்). ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலுக்கு எதிராக நியமிக்கப்படுகிற அமைப்பு இது. ஊழல் அல்லது மோசமான நிர்வாகம் குறித்து மக்கள் இந்த அமைப்பிடம் புகார் செய்யலாம். லோக் ஆயுக்தாவுக்கு பெருமளவு விசாரணை அதிகாரங்கள் இல்லை. ஆனாலும், லோக்ஆயுக்தா கண்டறிந்த விவகாரத்தால்தான் எடியூரப்பா பதவி ஆட்டம் கண்டது. எங்கெல்லாம் லோக்ஆயுக்தா இருக்கிறதோ அங்கெல்லாம் முதல்வர்கள் சற்றே எச்சரிக்கையாக இருக்க நேர்கிறது. குஜராத்திலும் மோடி வருவதற்கு முன் லோக்ஆயுக்தா இருந்தது. அப்போது லோக்ஆயுக்தாவாக இருந்த சோனி, கேஷுபாய் படேல் நியமித்தவர். 2003இல் அவர் விலகிய பிறகு, அடுத்து வந்த முதல்வர் மோடி, லோக்ஆயுக்தா வராமல் பார்த்துக் கொண்டார். அதற்குப் பிறகு நடந்தவற்றை எல்லாம் தனி அத்தியாயமாகவே எழுதலாம். சுருக்கமாகச் சொல்கிறேன்.
• 2003 முதல் 2011 வரை லோக்ஆயுக்தா வராமல் பார்த்துக் கொண்டவர் மோடி.
• 2011இல் மேத்தா என்பவரை லோக் ஆயுக்தாவாக ஆளுநர் நியமனம் செய்தபோது அதற்கு எதிராக வழக்குத் தொடுத்தது மோடி அரசு.
இதற்காக மூன்றுமுறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது அவருடைய அரசு.
இதற்காக செலவு செய்த தொகை 45 கோடி!
அதாவது, லோக்ஆயுக்தா அமைப்பு செயல்பட்டிருந்தால் எவ்வளவு செலவு ஆகியிருக்குமோ அதைவிட அதிகமாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து லோக்ஆயுக்தா வரவிடாமல் செய்தது மோடி அரசு.
அதற்குப் பிறகு, எந்த அதிகாரமும் இல்லாத, அரசுக்குத் தாளம்போடுகிற லோக் ஆயுக்தாவாக ஆக்கும் சட்டத் திருத்தம் செய்த்து மோடி அரசு.
விசாரணை அதிகாரம் இல்லாத லோக் ஆயுக்தா விஷயத்துக்கே மக்களின் வரிப்பணத்தில் 45 கோடி வீணடித்து, பத்தாண்டுகள் தடங்கல்கள் செய்த இவர்தான் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவீர்கள் என்றால்...

“கேப்பையில் நெய் ஒழுகுதுன்னு சொன்னா கேக்கறவனுக்கு எங்கே போச்சு புத்தி?” என்ற ஒரே பழமொழியை எத்தனை முறைதான் சொல்வது?!
முற்றும்

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 3

முந்தைய பகுதிகளை வாசிக்க : பகுதி 1, பகுதி 2

? சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் அவசரகோலத்தில் செய்து விட்டார்கள் என்று சொன்னீர்கள். என்ன முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?
•-• பருப்பு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கும் இன்றைய விலைவாசிச் சூழலில் 500 ரூபாய் என்பது பெரிய மதிப்பு உடையது அல்ல. எனவே அதை செல்லாமல் ஆக்கியிருக்க வேண்டாம், 1000 ரூபாய் நோட்டோடு நிறுத்தியிருக்கலாம். அது ஒருபக்கம் இருக்கட்டும்.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86% நோட்டுகள் 500/1000 ரூபாய் நோட்டுகள்தான். மீதி 14% நோட்டுகள்தான் 100/50/20/10 ரூபாய் நோட்டுகள். 86 சதவிகித நோட்டுகளை திடீரென்று ஓர் இரவில் செல்லாது என அறிவித்து விட்டார்கள். அடுத்த நாளிலிருந்து, அந்த 86% நோட்டுகளின் இடத்தை 14% நோட்டுகள் தீர்த்து வைக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்? இது ஒரு சிக்கல்.
இரண்டாவது சிக்கல், வங்கிகளில் நோட்டுகள் இல்லை, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது என்று தெரிந்ததும், 100 ரூபாய் நோட்டு வைத்திருந்தவர்கள் எல்லாரும் அவரவர் தேவைக்காக பத்திரப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது இயற்கைதான். எனவே, இருக்கிற நோட்டுகளும் புழக்கத்தில் இல்லாது போயின.
மூன்றாவது சிக்கல், புதிதாக அறிமுகம் செய்த 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே உடனடி புழக்கத்தில் வந்தன. 500 ரூபாய் நோட்டுகள், இன்று வரை வந்து சேரவில்லை. ஆக, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றினாலும்கூட அதைப் பயன்படுத்த முடியாத நிலை. கடைகளில் முழு 2000க்கும் பொருட்கள் வாங்கினால் மட்டுமே பயன்படுத்த முடியும். இது கையில் பணம் இருந்தும் செலவுக்குப் பயன்படாத நிலை. நாயிடம் கிடைத்த தேங்காய் நிலை. இதுதான் மக்களை பாதித்தது. ஒருவாரம் ஆகிவிட்டது. இப்போதும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. கீழே இருக்கும் படம் நேற்று எடுத்தது. மகள் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் எதுவும் கிடைக்காமல் திரும்பி வந்த வங்கியில் காத்திருந்த ஆண்கள் வரிசை இது.


வங்கிகளில் நாளுக்கு 4000 எடுக்கலாம் என்பதை 4500 எடுக்கலாம் என்றார்கள். ஆனால் நடைமுறையில் 2000தான் தர முடியும் என்று பல வங்கிகளில் சொல்கிறார்கள். இருக்கிற பணத்தை இயன்ற வரையில் பலருக்கும் பகிர நினைக்கிறார்கள் வங்கி ஊழியர்கள். ஆனால் மக்கள் அவர்களைக் குற்றம் சொல்லுகிறார்கள். அரசு செய்த குளறுபடிக்கு வங்கி ஊழியர்கள் திட்டு வாங்க வேண்டும்.
இன்று முதல் இன்னும் சிக்கல். வங்கியில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான வரம்பு 4500 என்று இருந்ததை 2000 ஆகக் குறைத்து விட்டார்கள். முன்னேற்பாடுகள் குறித்து சிந்திருந்தால் இப்படி நாளுக்கு ஒருவிதமாய் குழப்புவார்களா?

? இதற்கு என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?
•-• நான் பொருளாதார நிபுணன் அல்ல. இந்த நடவடிக்கை பயன் தராது என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னதை முன்னரே சுட்டியிருக்கிறேன். எலியைக் கொல்ல வீட்டுக்குத் தீ வைத்த கதை இது.
பாதிப்பைக் குறைக்க என்ன செய்திருக்கலாம்? 2000 ரூபாய் நோட்டுகள் எத்தனை அடிக்க உத்தேசித்துள்ளார்களோ, அந்த எண்ணிக்கையைக் குறைத்து, அதற்கு நிகராக 100 ரூபாய் நோட்டுகளை முன்னரே அச்சிட்டு நாடு முழுவதும் அனுப்பியிருக்கலாம். பழைய நோட்டுகளுக்கு புதிய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காகவும் அனுப்புகிறோம் என்று சொன்னால் யாருக்கும் சந்தேகமும் வந்திருக்காது. 500/1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்த நேரத்தில் நோட்டுகளின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்காது. 2000 ரூபாய் நோட்டுகளையும் போதுமான அளவுக்கு வங்கிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தமது கணக்கிலிருந்து எடுப்பதற்கு வாரம் 20000 என உச்சவரம்பு தேவைப்பட்டிருக்காது. புழக்கத்தில் குறைபாடும் ஏற்பட்டிருக்காது. இத்தனை குழப்பங்களும் நேர்ந்திருக்காது. தற்கொலைகளும் நிகழ்ந்திருக்காது. நம்முடைய ரூபாய் நோட்டு அச்சகங்களில் ஒரு மாதத்தில் 300 கோடி நோட்டுகள்தான் அச்சிட முடியும். தேவைப்படுவது 2100 கோடி. எனவே, ஏழு மாதங்கள் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார் சிதம்பரம். இதுகுறித்து அரசுத்தரப்பிலிருந்து பதிலே காணோம். அதாவது, தேவை-இருப்பு-உற்பத்தி குறித்து இவர்கள் சிந்திக்கவே இல்லை. எந்த முன்னேற்பாடும் செய்யாமல் திடீரென அறிவித்தார்கள் என்பதைத்தான் அடுத்து நடந்த சம்பவங்களும் காட்டின.

? அடுத்து நடந்த சம்பவங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்?
•-• 500/1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவிக்கும்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் அதை வெள்ளையாக்கப் பார்ப்பார்கள் என்று ஊகிக்க வேண்டாமா? அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா? 8ஆம் தேதி இரவு திடீரென அறிவித்ததும், மக்கள் நகைக்கடைகளுக்கு ஓடினார்கள். விடிய விடிய வியாபாரம் நடந்தது. ரயில்களில் அதிக கட்டணம் உள்ள முதல்வகுப்பு ஏசி டிக்கெட்டுகளை புக்கிங் செய்தது. இப்படி பலவிதமாக மக்கள் தமது பணத்தை மாற்றிக்கொண்டிருந்தார்கள். இதையாவது விடுங்கள். விஷயம் தெரிந்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் ஏடிஎம்கள் பற்றி விஷயமே தெரியாமல் இருந்திருக்கிறார்களே! ஏடிஎம்கள் விஷயத்தில் முதலிலேயே கவனம் செலுத்தியிருந்தால் நாட்டில் இவ்வளவு குழப்பம் வந்திருக்காதே?!

? ஏடிஎம்கள் விஷயத்தில் அவர்களுக்கு என்ன தெரியவில்லை, அல்லது அப்படி என்ன குழப்பம்?
•-• ஏடிஎம்களில் இதுவரை இருந்தவை 1000/500/100 ரூபாய் நோட்டுகள். இப்போது 1000, 500 நோட்டுகள் செல்லாது. 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்க முடியும். ஆக, பத்தாயிரம் ரூபாய்க்கு பத்து 1000 ரூபாய் நோட்டுகள் இருந்த இடத்தில், 100 ரூபாய் நோட்டுகள் நூறு தேவைப்படும். சராசரியாக ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 நோட்டுகள் வைக்கலாம். 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்கெனவே பற்றாக்குறை, அப்படியே நோட்டுகள் இருந்தாலும் ஏடிஎம்களில் வைக்க இடம் இருக்காது. இதை அவர்கள் முன்னரே ஊகித்திருக்க வேண்டும். சிக்கலை எதிர்கொள்ள போதுமான அளவுக்கு 100 ரூபாய் நோட்டுகளை முன்னரே வங்கிகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
அடுத்த குழப்பம், புதிய நோட்டுகளை வைக்க முடியாமல் போனது. இதுவரை இருந்த 1000/500 ரூபாய் நோட்டுகளின் அளவுகள் வேறு. இப்போது வந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டின் அளவு வேறு. 1000/500 ரூபாய் நோட்டுகள் இருந்த இடத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்க முடியாது. அதற்கு இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும். சாப்ட்வேரிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அதுபோக, 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பரவலாக வரவில்லை என்பதால், அதுவும் வந்தபிறகுதான் இயந்திரங்களில் மாற்றங்கள் முழுமை அடையும். நாட்டில் உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இயந்திரங்களில் இந்த மாற்றங்களைச் செய்ய சில வாரங்கள் ஆகும். இந்தச் சூழலில், முன்னரே யோசித்திருந்தால், குறைந்தபட்சம் புதிய நோட்டின் அளவையேனும் மாற்றாமல் இருந்திருக்கலாம். பெரியதொரு சிக்கல் குறைந்திருக்கும். ஆனால் அரசு இதைப்பற்றி யோசித்ததாகவே தெரியவில்லை. ஓரிருநாளில் சரியாகி விடும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பெரிய அளவுக்குதொழில்நுட்ப அறிவு இல்லாத என்னைப்போன்ற சாமானியர்கள் ஏடிஎம் சிக்கல் பற்றி எழுதிய பிறகுதான், “ஆமாம், ஏடிஎம்களில் சிக்கல் இருக்கிறது, இதை சரிசெய்ய இரண்டு-மூன்று வாரங்கள் ஆகும்என்றார் நிதியமைச்சர். இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன் இவர்கள் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அதிரடியாகச் செய்திருக்கிறார்கள் என்று. இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ பிரச்சினை ஏற்பட, காவல்துறை தடியடி நடத்திய சம்பவங்கள் நிறையவே நடந்தன. இந்த வீடியோவைப் பாருங்கள். என்னதான் இருக்கட்டும், இப்படி முரட்டுத்தனமாக அடிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டா? இந்த நிலைமைக்கு யார் காரணம்?

? நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் இந்த சின்னச்சின்ன விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமா? அவர்கள் நிர்வாகிகள்தானே?
•-• நிதியமைச்சருக்கு ஏடிஎம் இயந்திரத்தின் செயல்முறை, சாப்ட்வேர் பற்றியெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் சிறந்த நிர்வாகி என்ன செய்வார்? இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கும் முன்னால் வல்லுநர்களுடன் ஆலோசித்திருப்பார். என்னென்ன சிக்கல்களை எப்படி எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசித்திருந்தால், இதெல்லாம் பிரச்சினைகள் ஆகியிருக்காது. நோட்டின் அளவுகளைக் குறைக்காமல் இருந்திருக்கலாம். சிறிய மொபைல் ஏடிஎம்களை நிறுவியிருக்கலாம். முன்னரே குறிப்பிட்டதுபோல 100 ரூபாய் நோட்டுகளை போதுமான அளவுக்கு ஏற்பாடு செய்து ஏடிஎம்களின் தேவையைக் குறைத்திருக்கலாம். வல்லுநர்களுக்கு இன்னும் பல யோசனைகள் வரக்கூடும். ஆனால் இவர்கள் தம் அரசியல் வட்டத்துக்கு வெளியே அதிகம் ஆலோசித்த்தாகத் தெரியவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினை.

? ஆலோசித்திருக்க மாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
•-• சொல்லிக்கொண்டே போனால் தீரவே தீராது. ஒரு ஏடிஎம்மில் ஒரு நாளுக்கு 2000 ரூபாய் எடுக்கலாம் என்றார்கள். என்னுடைய கணக்கில் 1500 ரூபாய்தான் இருக்கிறது, அவ்வளவுதான் எடுக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். எனக்கு உடனே 1500 ரூபாய் தேவை இருக்கிறது. ஆனால் ஏடிஎம்மில் 2000 ரூபாய் மட்டும்தான் இருக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? என் கணக்கில் பணம் இருந்தும், ஏடிஎம்மில் பணம் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலை அல்லவா? அபத்தமாக இல்லையா? எவ்வளவு அபத்தமாக முடிவுகளை அறிவிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
ஏடிஎம்களில் நாளுக்கு 2000 ரூபாய் எடுக்கலாம் என்ற வரம்பை 2500 எடுக்கலாம் என்று 13ஆம் தேதி அறிவித்தார்கள். 1. ஏடிஎம்கள் இயங்குவதற்கே 2-3 வாரங்கள் ஆகும் - 90 விழுக்காடு ஏடிஎம்கள் இயங்கவில்லை என்னும்போது இந்த அறிவிப்பால் என்ன பயன்? புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்து விட்டன என்றார்கள். இன்றுவரையில் இவை வங்கிகளையோ ஏடிஎம்களையோ அடையவில்லை. ஏடிஎம்களில் 2000 நோட்டுகள்தான் அதிகம். நூறு ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறை இருக்கும்போது ஏடிஎம்களில் எப்படி 2500 ரூபாய் நோட்டுகள் எடுக்க முடியும்? 500 ரூபாய் எங்கிருந்து வரும்? வங்கிகளிலும் சில்லறை நோட்டுகள் இல்லை. 4500 ரூபாய் மாற்றலாம் என்றது அரசு. ஆனால் பல வங்கிகளில் 2000க்கும் மேல் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இருக்கிற நோட்டுகளை எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க முயற்சி செய்தார்கள்.
ஆக, இவர்களுடைய அறிவிப்புகள், திட்டங்கள் எல்லாம் இப்படி அபத்தமாகவே இருக்கின்றன. கறுப்புப்பணத்தின் மீதான நடவடிக்கை என்றால் நவம்பர் 8ஆம் தேதி தடாலடியாக அறிவித்தால்தான் செயல்படும், என்பதில்லை. முன்னேற்பாடுகள் செய்துவிட்டு சற்று பின்னரும்கூட எடுத்திருக்கலாம். அதற்குள் ஒன்றும் முழுகி விடாது. பின் ஏன் இந்த அவசரம்? ஏனென்றால், இது கறுப்புப்பணத்தின் மீதான நடவடிக்கை அல்ல. அரசியல் லாபம் தேடும் நடவடிக்கை.

? நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பெரியதொரு நோக்கத்துக்காக சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும் அல்லவா? இந்த அரசு நல்லதொரு நடவடிக்கை எடுத்திருப்பதாகவே எல்லாரும் பார்க்கிறார்கள்.
•-• எப்போதும் சாமானிய மக்கள்தான் தியாகங்கள் செய்ய வேண்டியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இந்த அரசு நல்லதொரு நடவடிக்கை எடுத்தது என்கிறீர்கள். இப்போது அரசை நடத்துவது பாரதிய ஜனதா கட்சி. இதே கட்சி 2014இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது, என்ன சொன்னது தெரியுமா? கறுப்புப்பணத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2005க்கு முற்பட்ட ரூபாய் நோட்டுகளை ஒழிக்கலாம் என்று காங்கிரஸ் யோசித்தபோது, இது ஏழை மக்களை பாதிக்கும் முயற்சி என்று கடுமையாகத் தாக்கியது இப்போது ஆளுகிற அதே பாஜகதான். ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவிக்கும் நிதியமைச்சகத்தின் நவீன நாடகம் எந்தப் பயனையும் தராது. கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் மிக எளிதாக மாற்றி விடுவார்கள். உண்மையில் பாதிக்கப்படப் போகிறவர்கள் சாமானிய மக்களும் பெண்களும்தான். படிப்பறிவு இல்லாத, வங்கிச் சேவைகளை அணுகும் வசதியற்ற சாமானிய மக்கள்தான் இந்த திசைதிருப்பல் நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் ஏழை மக்கள், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், வாழ்க்கைக்காக சேமித்து வைத்தவர்கள், ஆகியோர்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தால் கறுப்புப் பணத்தை ஒழியவே ஒழியாது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் எந்த சிரம்மும் இல்லாமல் மாற்றி விடுவார்கள். இந்தியாவில் 65 விழுக்காடு மக்கள் வங்கிக்கணக்கு இல்லாதவர்கள். அவர்கள் தமது பணத்தை ரொக்கமாகவே வீட்டில் சேமித்து வைப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் எழுத்தறிவற்றவர்கள், ஏழைகள், முதியவர்கள், கடைக்கோடிப் பகுதிகளில் வாழ்பவர்கள். இவர்கள்தான் தரகர்களால் பாதிக்கப்படுவார்கள். ரூபாய் நோட்டுகள் பயனற்ற வெறும காகிதங்கள் என்ற மிரட்டலால் பாதிக்கப்படுவார்கள்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏழைகளைப் பாதிக்கும் நடவடிக்கையாக இருந்தது, இப்போது நல்லதாக மாறிவிட்டது எப்படி? இது அரசியல் நாடகமன்றி வேறேதும் இல்லை என்று இதிலிருந்து தெரியவில்லையா?

? அரசியல் நடவடிக்கையாகவே இருக்கட்டும். அதனால் நீண்டகால நோக்கில் பயன் கிடைக்கும்தானே?
•-• இந்த நடவடிக்கையால் பெரிய பயன் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை என்பதுதான் உண்மை. பொருளாதார வல்லுநர்கள் சொன்னதும் அதுவே. பல கோடி மக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள், பல்லாயிரம் தொழில்களுக்கும் வியாபாரங்களுக்கும் ஏற்பட்ட நெருக்கடிகள் இவற்றின் விளைவாக ஏற்படும் இழப்பைவிட இதனால் கிடைக்கும் பயன் குறைவாகவே இருக்க முடியும்.என்றார் உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான பாசு.


கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கு இப்போதைய சிக்கல்கள் தற்காலிகம்தான். அவர்கள் மாற்று வழிகளை நன்றாகவே அறிவார்கள். பாதிகப்படுவது சாமானிய மக்கள்தான். சிக்கல்கள் தீர்ந்ததும் மீண்டும் கறுப்புப்பணம் உருவாகும். தீர்ந்ததும் என்ன, நேற்றே உருவாகி விட்டது. குஜராத்தில் துறைமுக ஊழியர் ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் ரொக்கமாக லஞ்சம் தரப்பட்டுள்ளது. அதுவும் புத்தம்புதிய 2000 ரூபாய் நோட்டுகள். சாமானிய மக்களுக்கு 2000 ரூபாய்க்கு மேல் மாற்ற முடியாது என்னும்போது, இவர்களுக்கு மட்டும் எப்படி கட்டுக்கட்டாகக் கிடைத்தது? ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால் லஞ்சம் ஒழியாது, ஊழல் ஒழியாது, கறுப்புப்பணம் ஒழியாது. கறுப்புப் பொருளாதாரத்தின் வழிகளை அடைக்காமல் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது.

- தொடரும்

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டுகளும் - பகுதி 2

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

? பெலகேரி துறைமுக ஊழலில் பல்லாயிரம் கோடி சுருட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவோம். 500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் செய்ததால் கறுப்புப் பணம் வெளியே வரும்தானே?
•-• வரக்கூடும்தான். ஆனால் எவ்வளவு? இந்திய மக்களில் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 12 லட்சம் பேரின் மொத்த வருவாய், ஏழைகளாக இருக்கும் 66 கோடி மக்களின் வருவாயைவிட அதிகம். இப்போது வங்கிகளில் வரிசையில் நிற்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? அந்த 12 லட்சம் பேரா, இல்லை 66 கோடிப் பேரா?


இப்போது சாமானிய மக்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள். பெரும் பணக்காரர்களும் நாளை நிற்க வேண்டிவரும் அல்லது கணக்கில் போட வேண்டி வரும் என்றே வைத்துக்கொள்வோம். இந்த அவசர அடி நடவடிக்கையால் ஏற்பட்ட நட்டங்கள் என்ன என்று யாரேனும் மதிப்பிட்டார்களா? நாடு முழுவதும் தொழில்முடக்கம், தொழில் நெருக்கடி, வியாபாரச் சரிவு, மக்களுக்கு ஏற்பட்ட அலைச்சல், அலைச்சலின் காரணமாக ஏற்பட்ட பொருளிழப்பு, திரும்பப் பெறப்பட்ட ரூபாய்கள் உற்பத்தி செய்தமைக்கான செலவுகள், அவற்றை நாடு முழுவதும் பரப்பவும் பாதுகாக்கவும் பல ஆண்டுகளாக செய்து வந்த போக்குவரத்து, சேமிப்பு, பாதுகாப்புச் செலவு, இப்போது பாதுகாப்பாக திரும்பக் கொண்டு வந்து அழிப்பதற்கான செலவு, புதிய நோட்டுகளுக்கான செலவு, அவற்றை பாதுகாப்பாக நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான செலவுகள், ஏடிஎம் இயந்திரங்கள் சீர் செய்வதற்கான செலவு, நோட்டுகளை மாற்ற மக்கள் எழுதிக் கொடுத்த விண்ணப்பத்துக்கும் அடையாள அட்டை நகலுக்கும் பலகோடிக்கணக்கான காகிதங்களுக்கான செலவுகள், அவற்றை வங்கிகளில் மூட்டை மூட்டையாக வைத்திருக்க, பராமரிக்க வேண்டியதற்கான செலவு, மக்கள் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, ஒரு ஏடிஎம்மிலிருந்து இன்னொரு ஏடிஎம்முக்குப் பயணிக்க நேர்ந்த்தால் ஏற்பட்ட செலவுகள், கடைக்கோடி கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வங்கிகளுக்கு நடையாய் நடந்த செலவு.... இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போது யோசித்துப் பாருங்கள் - நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதால் கிடைக்கக்கூடிய பயன்களைவிட, அதன் விளைவுகளால் ஏற்பட்ட நஷ்டம் அதிகமாக இருக்குமா இல்லையா?

? லாப நஷ்டத்தை பொருள் ரீதியாக மட்டும் பார்க்க முடியாது அல்லவா? ஒருமுறை எல்லாப் பணமும் கணக்குக்கு வந்து விட்டால் மீண்டும் கறுப்புப்பணம் உருவாகாது இல்லையா?
•-• நான் பொருள் ரீதியாக மட்டும் பார்க்கவில்லை. சாமானியர்கள் எத்தனை கோடிப்பேருக்கு மன உளைச்சல்? அதற்கு ஏதாவது மதிப்பு உண்டா? அது ஒருபுறம் இருக்கட்டும்.
கறுப்புப் பணம் 500/1000 ரூபாய் நோட்டுகளாகத்தான் பதுக்கப்படுகிறது என்பதற்காகவே அவை செல்லாமல் ஆக்கப்பட்டன. ஆனால் இப்போது அதைவிட அதிக மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் வந்து விட்டன! அதுபோக, மீண்டும் 500/1000 ரூபாய் நோட்டுகளும் வருகின்றன. எனவே, அந்த வாதம் அடிபட்டுப் போகிறது. அதுவும் ஒருபுறம் இருக்கட்டும். ஏற்கெனவே சொன்ன அதே பதில்தான் இப்போதும் சொல்ல வேண்டும். இந்த நடவடிக்கையால் ரொக்கமாகப் பதுக்கி வைத்திருந்த சிலருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்தான். ஆனால் அது தற்காலிகம்தான். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் இப்படி பலவகையான வழிகளை கையில் வைத்திருப்பார்கள். எதுவுமே முடியாவிட்டாலும் எரித்துவிட்டுப்போகலாம், கறுப்புப்பணம் போனதால் கையில் காசில்லாமல் பட்டினி கிடந்து தெருவுக்கு பிச்சையெடுக்க வந்துவிடப் போவதில்லை. இப்போதே அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
எனவே, கறுப்புப் பொருளாதாரத்தை முடக்காத வரையில் கறுப்புப் பணத்தை அழிக்க முடியாது. கறுப்புப்பொருளாதாரத்தின் வழிகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அந்த வழிகளை அடைப்பதற்கான எந்த நடவடிக்கையும் காணோம் என்பதற்கான உதாரணம்தான் பெலகேரி துறைமுக ஊழல். அவ்வளவு ஏன், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான அக்கறையின் காரணமாகவே இதைச் செய்ததாகக் கூறும் அரசியல் கட்சிகள் தம்முடைய வருமானத்தின் வழிகளை வெளியிடுவதில்லையே?! யார் அவர்களுக்குக் கோடி கோடியாக வழங்குகிறார்கள் என்று விவரத்தைச் சொல்லுவதில்லையே?! அவர்கள் சொல்லாவிட்டாலும் யார் தருவார்கள் என்பதும், அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுப்பவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் சும்மா தர மாட்டார்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
பல்லாயிரம் கோடி ஊழல் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் கொடுக்கும் பணத்துக்காக அவர்களை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, நாட்டுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவர்களுக்கு கடனாக வாரி வழங்கிக்கொண்டு, வாங்கிய கடனைத் திருப்பித் தராதிருக்கும்போதும் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து கொண்டு, மக்கள் பணத்தை வாராக்கடனாக தள்ளுபடி செய்து கொண்டிருப்பவர்கள் கறுப்புப் பணத்தின்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று சொல்வதை நம்ப வேண்டும் என்றால்... கேப்பையில் நெய் வடிகிறது என்றால் நம்பக்கூடிய கேனையர்களாக நம்மைக் கருதுகிறார்கள் என்பது தெளிவு.

? இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டுகளுக்கு முடிவு வரும் அல்லவா?
•-• நிச்சயமாக. இந்த விஷயத்தில் அதனை நல்ல பயனாகச் சொல்ல முடியும். இங்கே இன்னும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கள்ள நோட்டு என்று சொல்லும்போதே அதுகுறித்து ஒரு சித்திரம் நமக்குள் உருவாகிறது - இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் கள்ளநோட்டுகளை அனுப்பி வைக்கிறது என்பதாகும். அது உண்மையாகவும் இருக்கலாம். உள்நாட்டில் சிலர் அதற்கு உடந்தையாகவும் இருப்பார்கள். இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கள்ள நோட்டு ஒரு தலைவலியாகத்தான் இருக்கிறது. கள்ளநோட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும், கள்ள நோட்டுகளை பரப்புவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இந்தியப் பணப்புழக்கத்தில் கள்ளநோட்டுகளின் பங்கு என்ன? 0.04 விழுக்காடு என்கிறது ஓர் மதிப்பீடு. ஆனால் வெளியே பரப்பப்படும் செய்தி என்ன? “நான்கில் ஒரு நோட்டு கள்ளநோட்டு.இவ்வாறு மிகைப்படுத்திய செய்திகளை தொலைக்காட்சி உரையாடல்களில் பங்கேற்போர், சமூக ஊடகங்களில் எழுதுவோர் மூலமாகப் பரப்பி ஓர் அரசியல் செய்கிறது பாஜக. இதன் நோக்கமாகத் தெரிவது ஒன்று, கறுப்புப்பணம்-கறுப்புப் பொருளாதாரம் என்ற பிரச்சினையை கள்ளநோட்டுகள் என்ற அளவுக்குள் குறுக்கி, கறுப்புப் பொருளாதாரம் பற்றிய விவாதம் எழாமல் திசைதிருப்புவது. இரண்டாவது, அவசரகோலத்தில் ரூபாய் நோட்டை செல்லாமலாக்கிய நடவடிக்கையை விமர்சிப்பவர்கள் எல்லாரையும் கள்ள நோட்டுக்கு ஆதரவாகப் பேசும் தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டுவது. எந்தவொரு பிரச்சினையையும் தேசபக்தி என்ற வளையத்துக்குள் அடக்குவது. இது மிகவும் அபாயகரமானது. இந்த அரசும், ஆளும் கட்சியும் இதை தொடர்ந்து செய்து வருகின்றன.
மற்றொரு விஷயம் அவசர கோலத்தில் செய்த இந்த அறிவிப்பால் கள்ள நோட்டுகளும் வங்கிக்குப் போய்ச்சேரும். கள்ளநோட்டுகளை மட்டுமே வைத்திருக்கிறவர்கள் அதை எடுத்துக்கொண்டு வங்கிக்குப் போக இருக்கலாம். ஆனால் அறியாமையால் மக்கள் கைக்கு வந்து கலந்துவிட்ட கள்ள நோட்டுகள் வங்கிக்குப் போய்ச்சேரும். எல்லா வங்கிகளிலும் கள்ளநோட்டுகளை சோதனை செய்து நிராகரிக்கும் வசதி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கள்ள நோட்டுகள் இருந்தால், அவை வங்கிக்கு வந்தால், நல்ல நோட்டுகளாக மக்களிடம் திரும்பிப் போகும் என்பது எவ்வளவு பெரிய முரண்.

? இந்த நடவடிக்கை ஏழைகளையும் பணக்காரர்களையும் சமமாக்கி விட்டது என்று சொல்கிறாரே பிரதமர்?
•-• அவர் என்ன சொல்கிறார் என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அவருடைய பக்தர்களுக்கும்கூடப் புரியுமா என்று தெரியவில்லை. உங்களுக்குப் புரிந்திருந்தால் நீங்கள் சொல்லுங்கள், நானும் புரிந்து கொள்கிறேன்.

? கறுப்புப்பணம் வைத்திருந்தவன் எல்லாம் இன்று 4000 ரூபாய்க்காக வரிசையில் நிற்கிறான் என்று கூறியிருக்கிறாரே?
•-• வங்கிகளிலும், அரிதாகச் செயல்படுகிற ஏடிஎம்களிலும் மணிக்கணக்கில் வரிசையில் நிற்பவர்கள் யார்? அதானி, அம்பானிகளா? டாடா பிர்லாக்களா? ரெட்டிகளா? வைரவியாபார படேல்களா? பெலகேரி ஊழல் புரிந்தவர்களா? அரசியல்வாதிகளா இல்லை அதிகார வர்க்கத்தினரா? அன்றாடம் காய்ச்சிகளும் சம்பளக்காரர்களும், கூலிக்காரர்களும், ஓய்வுபெற்ற முதியவர்களும்தானே நிற்கிறார்கள். அவசியச் செலவுக்கு தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக, அல்லது கையில் இருப்பதை மாற்றுவதற்காக, ஏற்கெனவே ஏதேனுமொரு செலவுக்காக எடுத்து வைத்திருந்த்தை வங்கியில் செலுத்துவதற்காக நொந்துபோய் மணிக்கணக்கில் நிற்கும் குடிமக்களை கறுப்புப் பணக்காரர்கள் என்று அவமதித்திருக்கிறார் மோடி.
மற்றவர்களின் பணத்தை மாற்றித் தருவதற்காக கமிஷன் வாங்கிக்கொண்டு வங்கிகளுக்கு வருகிறார்கள் என்று நேற்று செய்திகள் வந்தன. இருக்கலாம். வரிசையில் நின்று பழக்கமில்லாத செல்வந்தர்கள் கூலிக்கு ஆட்களை அனுப்பி வைத்திருக்கலாம். வரிசையில் நிற்கும் தெம்பில்லாத முதியவர்கள், நோயாளிகள், ஓய்வு பெற்றவர்கள் அனுப்பி வைத்திருக்கலாம். கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் அனுப்பி வைத்திருக்கலாம். இது தவிர்க்க முடியாதது. அதற்காக, வரிசையில் நிற்பவர்கள் எல்லாரையும் கேவலப்படுத்தக்கூடாது.


கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடத்தியபோது அமைச்சராக இருந்தவர், கனிமவளச் சுரண்டலில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிறையில் இருந்தவர் ரெட்டி. தன் மகளின் திருமணத்துக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்கிறார். (2000 கோடி என்கிறார்கள் சிலர்.) இவர் எந்த வங்கியில் சென்று பணத்தை மாற்றியிருப்பார் என்று யாராவது சொல்லுவார்களா!
அது கிடக்கட்டும். உண்மையில், ராகுல் காந்தி வங்கிக்குச்சென்று வரிசையில் நின்றதைத்தான் அவர் கேலி செய்திருக்கிறார். பிரதமர் என்ற தகுதிக்கு இது அழகல்ல. முன்னாள் பிரதமர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். தனிநபர் கேலிகளில் எவரும் இறங்கியதில்லை. ஆனால் இப்போதைய பிரதமருக்கு அது வழக்கம். இருக்கட்டும்.
ராகுல் காந்தி செய்தது அரசியல் நாடகம் என்றே வைத்துக்கொள்வோம். ஊழல் செய்தார்கள் என்று ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய இவர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் ராகுல் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? சகல அதிகாரங்களும் இவர் வசம் இருக்கிறதே? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அது ஒருபுறம் இருக்க, அவர் பேசிய வசனம் அவரையே திருப்பித் தாக்கியிருக்கிறது. அவருடைய 96 வயது தாயார், பழைய நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்றிருக்கிறார் (அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.) ராகுல் செய்தது விளம்பரம் என்றால் இது விளம்பரம் அல்லவா? தான் செய்த ஒரு குளறுபடியை நியாயம் என்று காட்டுவதற்காக, அதற்கு அனுதாபம் கிடைக்கும் வகையில் விளம்பரம் செய்து கொள்வதற்காக தள்ளாத வயதில் தாயை அனுப்பியிருக்கிறார்.
ஆக, இது வெறும் நாடகம். இந்த நாடகம் மக்களுக்குப் புரிந்துவிட்டது என்பதால்தான் நான் நாட்டுக்காக குடும்பத்தை தியாகம் செய்துவிட்டு வந்தேன், என் எதிரிகள் என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்...போன்ற பசப்பு வசனங்களை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

...தொடரும்