Thursday 31 January 2013

உலகப் புத்தகத் திருவிழா 2013

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக இருந்தது.  கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது, இனி ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 21ஆவது உலகப் புத்தகத் திருவிழா பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கி 10ஆம் தேதி முடிவடையும்.

பொதுவாக இரண்டு சனி-ஞாயிறுகளைப் பயன்படுத்தும் வகையில் 9-10 நாட்கள் திருவிழா நடப்பதுண்டு.  ஆனால் குறுகிய காலத்தில் முடிவு செய்யப்பட்டதால் இந்த ஆண்டு ஏழு நாட்கள் மட்டுமே நடைபெறும்.  திங்கள் முதல் ஞாயிறு வரை.  எனவே விடுமுறை நாட்களில் வர விரும்புவோருக்கு கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கும்.

பார்வையாளர்களுக்கான நேரத்தில் சிறு மாற்றம்.  முதல் இரண்டு நாட்களும், அதாவது 4-5 தேதிகளில், 10 மணி முதல் 1 மணி வரை வர்த்தகம் தொடர்பான வருகையாளர்களுக்கு business vistors மட்டுமே அனுமதி.  பார்வையாளர்களுக்கு 1 மணி முதல்தான் அனுமதி. மற்ற நாட்களில் 11 மணி முதல் 8 மணி வரை அனைவரும் வரலாம்.

இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே அரங்குகள் - 1, 2 முதல் 5, 6, 7, 12, 12ஏ, 14, 18 ஆகிய அரங்குகளில் கடைகள் இடம்பெறுகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழிக் கடைகள் 14ஆம் அரங்கில் இடம்பெறுகின்றன.  இந்த அரங்கு உச்சநீதிமன்ற வளாகத்துக்கு நேர் எதிரே உள்ளது. எனவே தமிழ் நூல்களை மட்டுமே விரும்பி வருபவர்கள் 7ஆம் எண் நுழைவாயில் வழியாக வந்தால் இடதுபுறம் முதல் அரங்கம் இதுதான்.  மெட்ரோவில் வந்தால், நுழைவாயில் வழியாக நேராக நடந்து ஏரி போல அமைந்திருக்கும் இடத்தில் வலதுபுறம் செல்ல வேண்டும். குழந்தைகளுக்காக வரும் தமிழர்கள் இந்த அரங்குக்குப் பக்கத்தில் இருக்கும் 18ஆம் அரங்கையும் பார்க்கலாம். புரானா கிலா எதிரில் உள்ள  வாயில் வழியாக வந்தால் வெகுதூரம் நடக்க வேண்டும்.

தமிழ் பதிப்பாளர்களின் கடைகள் - அரங்கம் 14
கிழக்கு பதிப்பகம் - கடை எண் 107-108
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - 109
ஓங்காரம் பதிப்பகம் - 110
இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் - 111
பாரதி புத்தகாலயம் - ஸ்டாண்ட் 27

இதர அரங்குகள் பற்றிய தகவல் -
1, 2, 4, 5 - ஆங்கில பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள்
3 - அரசு நிறுவனங்கள், அரசுசார் பதிப்பகங்கள்
6 - அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்த பதிப்பகங்கள்
7 - வெளிநாட்டு பதிப்பாளர்கள் (இந்த ஆண்டு பிரான்ஸ் சிறப்பு விருந்தினர்)  
12, 12ஏ - இந்திமொழிப் பதிப்பாளர்கள்
14 - இந்திய மொழிகளின் பதிப்பாளர்கள், சில ஆங்கிலப் பதிப்பாளர்கள்
18 - குழந்தைகளுக்கான நூல்கள், குறுந்தட்டுகள், குழந்தைகள் அரங்கம்,

நாட்டுப்புற மற்றும் பழங்குடி இலக்கியங்கள் என்பதுதான் இந்த ஆண்டின் மையக்கருத்து.  இதற்காக பல மொழிகளில் வெளியாகியுள்ள பூர்வகுடி மக்கள் மற்றும் நாட்டுப்புற மக்களின் இலக்கிய நூல்களின் கண்காட்சி ஒன்றும் 7ஆம் அரங்கில் இடம் பெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் மாலைகளில் 4.30 மணிக்கு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சிகளை சங்கீத நாடக அகாதமி ஏற்பாடு செய்கிறது. லால் சவுக் அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

கலைக்கும் நூல்களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் வகையில் புத்தகக் கலை என்ற பெயரில் கலைக்கண்காட்சி ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதுவும் 7ஆம் அரங்கில் இடம்பெறும். கலைக்கல்லூரி மாணவர்கள் இதற்கான புத்தாக்க கலைவடிவங்களை உருவாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டின் புத்தகத் திருவிழான்போது கண்ணில்பட்ட சுவையான சில படங்கள் கீழே -

 
பையில் மட்டும்தான் இருக்கிறது சிரிப்பு...

வாங்கும் முன் பரிசோதிக்கிறாரா இல்லை யாரையாவது கண்காணிக்கிறாரா...

இப்படியும் நடக்கிறது வியாபாரம்... இந்த ஆண்டும் காணக்கிடைக்கலாம்

வாசிக்கும் ஆர்வத்திற்கு எதுவும் தடையாகாது

தலையில் சுமக்கும் இவர்கள் தலைக்குள் சுமக்கப்போவது எப்போது...


திருவிழாவின் அன்றாட நிகழ்வுகளை இந்த ஆண்டும் எழுத உத்தேசம். வழக்கம்போல இந்த ஆண்டும் திருவிழாவில்தான் இருப்பேன். சந்திப்போம் நண்பர்களே.

வாசிப்பை நேசிப்போம்.

2 comments:


  1. Books are the best friends. They enable you to live, as it is a collection of experience and views of the present & past society.
    k.Ram Mohan, PNB, Delhi

    ReplyDelete


  2. ஐந்து தமிழ் பதிப்பாளர்கள் மட்டுமே வருகிறார்களா?....

    சென்ற முறை சந்தியா பதிப்பகம் வந்திருந்தனர்.... இந்த முறை இல்லை போல!

    சந்திப்போம்....

    ReplyDelete