Thursday, 7 February 2013

உலகப் புத்தகத் திருவிழா 2013 - 2


புத்தகத் திருவிழா 4ஆம் தேதி துவங்கியது. மைய அமைச்சர் சஷி தரூர் திருவிழாவைத் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் இந்திய பண்பாட்டு உறவு மன்றத் தலைவருமான கரன் சிங், பிரான்ஸ் தூதர் ஃபிராங்கைஸ் ரிச்சேர், இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத் தலைவர் ரீடா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். 

4-5 இரண்டு நாட்களும் தில்லியை வாட்டிய மழையால் திருவிழாவுக்கு வருகை தந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. 6ஆம் தேதி சற்றே முன்னேற்றம். இன்னும் நான்கே நாட்கள்தான் உள்ளன. புத்தக நிறுவனங்களும் விற்பனையாளர்களும் வார விடுமுறை நாட்களை எதிர்நோக்கி உள்ளனர்.

வழக்கம்போல இந்த ஆண்டும் எனக்கு இங்கே வேலை. ஆனால் வேலைப்பளு காரணமாக அன்றாடப்பதிவுகள் எழுத இயலவில்லை. இந்தத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக சிலவற்றைக் குறிப்பிடலாம்.

மையக்கருத்து - ஆதிகுடிகளின் குரல்கள்: இந்திய நாட்டுப்புற மற்றும் பழங்குடி இலக்கியங்களை பதிவு செய்தல் (Indigenous Voices: Mappting India's Folk and Tribal Literature)


இதற்காக 7ஆம் அரங்கில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள பல நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சந்தாலி, கோக்பரோக், பிலி-குஜராத்தி நூல்கள் இதுவரை யாரும் பார்த்தறியாத நூல்களாக இருக்கும். சந்தாலி மொழிக்கு ஓல் சிக்கி என்றொரு எழுத்துவடிவம் இருக்கிறது. ஓல் சிக்கி மற்றும் கோக்பரோக் எழுத்துகளில் உள்ள நூல்கள் பார்க்கப் புதியவை.


இந்த சிறப்பு அரங்கின் உள்பகுதி, பல்வேறு மாநிலங்களின் பழங்குடி மற்றும் நாட்டுப்புற வீடுகளின் மாதிரிகளால் செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கம் நடைபெறும் மேடையும்கூட பழமையை நினைவுபடுத்தும். நாட்டுப்புற மற்றும் பழங்குடி மக்களின் நாட்டியங்கள், கலைகள் போன்றவற்றை விளக்கும் வகையில் பட்டறைகளும் இங்கே நடைபெறுகின்றன.
பழங்குடிப் பகுதிகளின் கதவுகள், வண்டி, சிலைகள், உலோகப்பொருட்கள் போன்றவையும் காணத் தகுந்தவை. 

மாலை 4.30 முதல் 8.00 மணி வரை பழங்குடி மக்களின் கலைநிகழ்ச்சிகள் லால் சவுக் அரங்கில். வாய்ப்பு இருந்தால் காணத் தகுந்தவை. 


7ஆம் அரங்கின் மற்றொரு பகுதியில் புத்தகங்களின் கலை என்றொரு கண்காட்சி. புத்தகங்களைக் கொண்டும், புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டும் படைப்புகளை அமைத்திருக்கிறார்கள் தில்லி கலைக் கல்லூரி மாணவர்கள் சிலர். இதைப்பற்றி தனி பதிவு எழுத வேண்டும். 

7ஆம் அரங்கில் சிறுவர்-இளைஞர்களின் பகுதி ஒன்றும் இருக்கிறது. தினமும் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் - நாடகங்கள், எழுத்தாளர் சந்திப்புகள், நடனங்கள், புதிர் நிகழ்ச்சிகள், அறிவியல் பிரச்சாரம் இன்னபிற.

7ஆம் அரங்கில் வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பிரான்ஸ் சிறப்பு விருந்தினர் நாடு என்பதால் பிரான்ஸ் சில சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. தினமும் ஒரு திரைப்படமும் அதில் உண்டு. திரைப்படங்கள் சாகுந்தலா அரங்கில்.


1, 2-5, 12 ஆகிய அரங்குகளில் எழுத்தாளர் பகுதி என்று ஒன்று உள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் தினமும் 3 அல்லது 4 எழுத்தாளர்களை சந்திக்கலாம், உரையாடலாம், அவர்கள் தமது படைப்புகளிலிருந்து வாசிப்பதைக் கேட்கலாம். விருப்பம் உள்ளவர்களை கையெழுத்து வாங்கலாம்.....

18ஆம் அரங்கில் குழந்தைகளுக்கான கடைகள் நிறைய உள்ளன. இங்கே மூன்று கருத்தரங்க அரங்குகள் உள்ளன. தினமும் பல்வேறு பதிப்பாளர்கள் நடத்தும் புத்தக வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் இங்கும் நடைபெறும்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் இந்தமுறை என்னை ஏமாற்றி விட்டார்கள். கிழக்கில் இந்த முறையும் ஆர்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது. கூடவே மின்-நூல்கள் பற்றிய விளம்பரம். என்சிபிஎச் மட்டும்தான் பொதுவான நூல்களை வைத்திருக்கிறது. ஓங்காரம் முழுக்கவும் பக்தி. இஸ்லாமிக் பவுண்டேஷனில் முழுக்கவும் இஸ்லாம். ஒற்றை ஸ்டாண்ட் பாரதியிலும் நிறைய நூல்கள் இல்லை. 

வாசிப்பை நேசிப்போம்.

2 comments:

  1. நான் இன்று [ஞாயிறு] வந்து தமிழ்ப் புத்தகங்கள் இல்லாது திரும்பினேன்! உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென அழைக்கவில்லை....

    ஏமாற்றம் தான்.

    ReplyDelete
  2. அடடா... என்ன வெங்கட் இப்படிச் செய்துவிட்டீர்கள். உங்களை சந்திப்பதெல்லாம் தொந்தரவா என்ன... புத்தகங்கள் குறைவுதான். ஆனாலும் நான் 3-4ஆயிரம் வரை வாங்கியிருப்பேன். அடுத்த பதிவில் எழுதுகிறேன். தேவையான புத்தகங்கள் என்னிடம் இரவல் பெறலாம்.

    ReplyDelete