Sunday, 24 February 2013

அம்மாவுக்கு ஒரு கடிதம்


அன்புள்ள அம்மா
நீங்கள் எல்லாருக்கும் அம்மா ஆக முடியுமா.... தமிழகத்தில் சில நகரங்களில் கடந்த சில நாட்களில் சுற்றிவந்தபோது எங்கு நோக்கினும் அம்மா அம்மா அம்மா என்ற சுவரெழுத்துகள், பிளெக்ஸ் பேனர்கள். பார்த்துப்பார்த்து பதிந்து போனதால் இப்படி விளிக்கிறேன். மற்றபடி அம்மாவைத் தவிர வேறெவரும் அம்மாவாக முடியாது என்பது என் நம்பிக்கை. இருக்கட்டும்.

இரண்டு மாதங்கள் முன் வந்திருந்தபோது ஊரெங்கும் சுவரெழுத்துகளைக் கண்டேன் -
     65ஆவது பிறந்த நாள் காணும அம்மா அவர்களை
     வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
அல்லது
     வணங்கி வாழ்த்துகிறோம்
என்று.
எனக்கு ஒரு கேள்வி. வாழ்த்துகிற வயதை எட்டியவர்கள் யாருமே உங்கள் கட்சியில் இல்லையா... அல்லது வயதானவர்கள் எல்லாருமே வணங்க மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் நிரந்தர ஆர்வமா...

வணங்கி வணங்கி உங்கள் அமைச்சர்கள் அனைவரின் முதுகெலும்புகளும் இனியும் நேராக்கவே முடியாது என்கிற அளவுக்கு வளைந்துபோய் விட்டன. போகட்டும், அது அவர்கள் விரும்பி வளைத்துக்கொண்டது.

அதுதவிர இந்த பேனர்களில் எல்லாவற்றிலும் கவனிக்க வேண்டியது அதன் வாசகங்கள். உங்களுக்கு மட்டுமே வயதாகி விட்டது, எங்களுக்கெல்லாம் வயதாகவில்லை என்று உங்கள் தொண்டர்கள் பகிரங்கமாக ஊர்ஊராக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது என்ன குசும்பு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா... போகட்டும்.

இந்த முறை தமிழகம் வந்தபோது எல்லா நகரங்களிலும் ஏராளமான பிளெக்ஸ் பேனர்கள். பேனர்கள் என்றாலும் சும்மா சாதாரண பேனர்களோ ஆளுயர பேனர்களோ அல்ல. மகா பிரம்மாண்ட பேனர்கள். அதில்தான் எத்தனைவிதமான பாராட்டுகள், துதிகள், புகழ்மாலைகள்...
மனிதநேயத் தலைவி
கருணைக் கடல்
காவேரித் தாய்
காவேரியின் கலங்கரை விளக்கு
புறநானூற்றுத் தாய்
தானே துயர் துடைத்த தாய்
ஏழைகளின் தெய்வம்
பெண்ணினத்தின் முன்னோடி
பாரத தேசத்தின் சிற்பி
எதிர்காலப் பிரதமர்
தங்கத் தாரகை
அன்புத் தாய்
இதய தெய்வம்
தமிழகம் காக்க வந்த தலைவி
தாய் திட்டம் தந்த தலைவி
கிங் மேக்கர்
நிரந்தர பொதுச்செயலர்...

இன்னும் குறிப்பெடுக்காதவை எத்தனையோ... முன்னர்
     வாழ்த்த வயதில்லாமல் வணங்கியவர்கள்
இப்போது
     கடவுளை வாழ்த்த இயலாது வணங்குகிறோம்
என்கிற அளவுக்குத் துதிபாடிகளாக ஆகியிருக்கிறார்கள்.
அம்மாவை ஒருமையில் அழைப்பது தமிழர்களின் வழக்கம். மரியாதைக் குறைவு அல்ல இது, அன்பின் உரிமையில் விளைவது. ஆனால் அம்மா தாயே, அம்மா தெய்வமே என்பதெல்லாம் அன்பின்பாற்பட்ட விளித்தல்தானா என்று நீங்கள் எப்போதேனும் கேட்டுக்கொண்டதுண்டா...

உங்களை பாராட்ட உங்கள் தொண்டர்களுக்கு உரிமை உண்டுதான். அவர்களுக்கு உங்கள்மீது அபார மரியாதை இருக்கவும்கூடும். ஆனாலும் இத்தனை துதிகளும் உளமார்ந்த துதிகள் என நீங்கள் நம்புகிறீர்களா... பதவிகளில் இருப்பவர்கள் தக்கவைத்துக் கொள்ளவும், பதவிகளில் இல்லாதவர்கள் புதிய பதவிகளைப் பெற அல்லது மற்றவர்களின் பதவிகளைப் பிடிக்கவே இந்தத் துதி என்பது உங்களுக்குப் புரியாததா... இதுகூடப் புரியாத அளவுக்கு உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லாமல் போய்விடவில்லை. புரிந்தும் இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், வயது உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது என்று கேட்கலாம் அல்லவா. இருக்கட்டும்.

திருப்பூரில் சில பேனர்கள் பார்த்தேன் - உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்கள் நடத்துகிறார்களாம். நல்லதுதான். மற்றொரு பேனரில் 10006 பேருக்கு அன்னதானம் செய்வார்களாம். தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வாலும் மின்வெட்டால் வேலைகள் இழந்தும் பட்டினி கிடப்போருக்கு ஒருவேளை சோறு கிடைத்தால் மகிழ்ச்சிதான். சரி, அது என்ன 10006 பேர்... 10007ஆவதாக வரும் நபருக்கு உணவு தரமாட்டார்களா... அல்லது ஆள் குறைந்து போனால் என்ன செய்வார்கள்.... என்ன மூடநம்பிக்கை இது. இதுபோன்ற மூட நம்பிக்கைகள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்க வேண்டும் என்பதே உங்கள் ஆசையா...

உடுமலையில் சில திருமண மண்டபங்களின் அருகே சில பேனர்களைப் பார்த்தேன். மணமக்களை வாழ்த்துவதன் பெயரால் உங்கள் துதிதான் அதிலும்.

புரட்சித் தலைவி என்ற பட்டம் உங்கள் பெயரோடு நிலைத்து விட்டது. நிலைக்கட்டும். தமிழகத்தில் யாருக்குத்தான் பட்டங்கள் இ்லலை உங்களுக்கு இல்லாதிருக்க. ஆனால் ஒரு சிறிய கேள்வி பெண்ணினத்தின் முன்னோடியே, தமிழகம் காக்க வந்த தலைவியே... நீங்கள் என்ன புரட்சி செய்தீர்கள் என்று எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா.... அப்படிக் கேட்டால் தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு பட்டப்பெயரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கும் என்பீர்களா.... சரி, விடுங்கள்.

இத்தனை பிளெக்ஸ் பேனர்களும் அடுத்த என்னவாகும் என்று ஒரு கணமேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்திருப்பீர்களா... பாலிதீன் பைகளுக்கும், டம்ளர்களுக்கும் தடை என்று விதித்திருக்கிற தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை நூறு பேனர்கள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா... பிளெக்ஸ் பேனர் கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல வேட்டைதான். ஆனால் இத்தனையும் மீண்டும் பயன்படுத்த முடியாத கழிவுகள் அல்லவா... எத்தனை கோடி ரூபாய் இந்த ஒருநாள் கூத்துக்காக வீணடிக்கப்பட்டிருக்கும்... சில மாதங்களுக்கு முன்னால் ஓர் ஆணை இட்டீர்கள் - பேனர்களில் சிறு-குறு தலைவர்களின் படங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்று. உங்கள் ஆணையை தொண்டர்கள் எப்படி சிரமேற்கொண்டு பின்பற்றுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஒரு ஊரிலும் ஒரு பேனரிலும் அண்ணா, எம்ஜிஆர், நீங்கள் ஆகிய மூன்று பேரின் படங்களைத்தவிர ஒரு தொண்டனின் படத்தையும் பார்க்கவே முடியாது.

இந்தப் படத்தைப் பாருங்கள் - தொடர்ச்சியாக ஒரே மாதிரி வாசகங்களுடன் ஒரே மாதிரி பேனர்கள் வரிசையாக, பிரம்மாண்டமாக நிற்கின்றன. அன்னூரில் கண்ட இந்தக்காட்சி ஓர் உதாரணம்தான். திருப்பூரில் ஐம்பது அடிக்கு ஒரு பேனர்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் பேனர்களே வைக்கக்கூடாது என்று ஓர் ஆணை விட்டிருக்க முடியாதா உங்களால்.... உங்கள் தொண்டர்களுக்கு சிறு வேண்டுகோள் விடுத்திருந்தால் போதுமே, நகரமே பேனர்கள் இல்லாமல் சுத்தமாகி விடுமே. பேனர் வைக்கும் பணத்தில் ஏழைக்குழந்தைகளுக்கு கல்விச் செலவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுபோன்ற நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யச் சொல்லியிருந்தால் நிச்சயம் நீங்கள் உண்மையிலேயே பெண்ணினத்தின் முன்னோடியாக, கருணையின் சின்னமாக ஆகியிருப்பீர்கள்.

கடந்த சில நாட்களில் பல ஊர்களைச் சுற்றி வந்தேன். அத்தனை ஊர்களுக்கும் பொதுவானவையாகத் தோன்றியவை இரண்டு விஷயங்கள் - ஒன்று, இந்த பேனர்கள். இரண்டு, மின்வெட்டு. ஊர் தவறாமல் கிராமம் தவறாமல் நாளுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு.

பள்ளி செல்லும் குழந்தைகள் படிக்க இயலாமல் தவிக்கிறார்கள். தாய்மார்கள் வீட்டு வேலைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய முடியாமலும், கிடைத்த ஆர்டர்களுக்கு சப்ளை செய்ய முடியாமலும் தவித்து தம் நிறுவனங்களை மூடிக்கொண்டு வருகிறார்கள். விவசாயிகள் மின்சாரம் இருக்கிற நேரத்தில் மட்டுமே வயல்களுக்கு நீர்பாய்ச்ச முடிகிற நிலையில் தவிக்கிறார்கள். எந்தெந்தத் தொழில் எல்லாம் மின்சாரத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறதோ அத்தனை தொழில்களிலும் உற்பத்தியாகும் பொருள்களின் விலை அதிகரித்து விட்டது. இதன் விளைவுகுறித்து நீங்கள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

மனித உடல் குறிப்பிட்ட நேரச் சக்கரத்தின்படி இயங்குவது. தமிழக மக்களின் உடலின் கடிகாரம், இப்போது மின்சாரம் இருத்தல்-இல்லாதிருத்தல் என்பதைப் பொறுத்து இயங்குவதாக மாறி விட்டிருக்கிறது. மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை கிட்டத்தட்ட எல்லா வகுப்பு மக்களின் நேரச்சக்கரம் மாறிவிட்டது. இதன் விளைவு அடுத்த இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கக்கூடியது.

இது தமிழகத்தின் இருண்ட காலம். இருண்டகாலத்தில் பிறந்தநாளை வெளிச்சம்போட்டுக் கொண்டாடுவதை நீரோ மன்னனின் செயலோடுதான் ஒப்பிட முடியும்.

இறுதியாக,
அதே அன்னூரில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த சாலையின் மறுபுறத்தில் காலையில் கடைகளின் முன்னால் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார் இந்தப் பெண்மணி. அவருக்கு பேனரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது, என்னென்ன பாராட்டுகள் உங்கள்மீது பாடப்படுகின்றன என்று படிக்கத் தெரிந்திருக்காது. அதனால் என்ன... அவர் கையை கவனமாகப் பாருங்கள். முடமான ஒரு கையில் நீர் வாளியை சுமந்து கொண்டு மறுகையால் நீர் தெளிக்கிறார்.

உங்கள் தொண்டர்கள் யாரை அம்மா என்று அழைக்கலாமென நீங்களே சொல்லுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகளுடன்


2 comments:

  1. மிக அருமையான பதிவு சார். சுட்டியதற்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல இதன் பக்க விளைவுகள் பயங்கரம். திடக் கழிவுகளை எவ்வாறு அகற்றவேண்டும் என்ற அறிவியல் அறிவில்லாத நமது முனிசிபாலிடிகள் , சோற்று கழிவுகளோடு ப்ளாஸ்டிக்கையும் சேர்த்து மலைபோல் வைப்பது போல, இதனையும் சேர்த்து வைப்பார்கள். உடனடியாக செயல்பட வேண்டிய எச்சரிக்கைப் பகுதி இது.மீண்டும் நன்றி. க.சுதாகர்

    ReplyDelete