Sunday, 10 February 2013

படித்ததில் பிடித்தது - 3

நாகா வரலாறு: இந்தியாவில் முதல் ஆயுதப் போராட்டம்

முன்னுரை - இரண்டு நாட்களுக்கு முன், ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக அமைச்சர் ப. சிதம்பரம் பேசிய செய்தி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றது.  அரசுக்கும் ராணுவத்துக்கும் இந்த விஷயத்தில் கருத்து ஒற்றுமை இல்லை என்பதால்தான் இந்த சட்டத்தைத் திருத்த முடியவில்லை என்றார் அவர். அரசுக்கே சட்டத்தைத் திருத்துவதில் உண்மையான அக்கறை இல்லை என்பதே உண்மை.  இந்த அரசுக்கு மட்டுமல்ல, விடுதலைக்குப் பிந்தைய எல்லா அரசுகளுமே அடக்குமுறையை மட்டும் நம்பி வந்துள்ளன, வருகின்றன.  பத்து நாட்களுக்கு முன் மொழிபெயர்க்கத் துவங்கிய இந்த நூல் அறிமுகக் கட்டுரை, வடகிழக்குப் பிரச்சினையின் வேர்களின்மீது வெளிச்சம்போட்டுக் காட்ட உதவும் என நம்புகிறேன். வேலைப்பளு காரணமாக அப்போது வெளியிட முடியாமல் போனதும்கூட ப.சி. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்காகத்தானோ...
கஷ்மீரப் பிரச்சினை குறித்து தமிழில் பல நூல்கள் மொழியாக்கத்தில் வெளிவந்த பிறகும்கூட பொதுமக்கள் மத்தியில் கஷ்மீர் குறித்த புரிதல் பொதுப்புத்தி சார்ந்த தேசியவாத நோக்கிலானதாகவே இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுக்கு வடகிழக்குப் பிரச்சினை குறித்து என்னவிதமான கருத்து இருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
* * *
இந்தப் புத்தகம் வாசிக்கத் துவங்கியதுமே பிடித்து இழுத்து இருத்தி வைத்துக்கொள்கிறது. உலகப் புத்தகத் திருவிழா வேலைகளில் மூழ்கியிருப்பதால் இப்போது முழுதும் படிக்க முடியாது. ஆனாலும் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க இயலவில்லை. வடகிழக்கின் சிக்கல்களை வரலாற்றுபூர்வமாக பதிவு செய்கிறது இந்நூல்.
Spring Thunder என்னும் தலைப்புக்கொண்ட முதல் அத்தியாயத்திலிருந்து முதல் சில பக்கங்களின் மொழியாக்கம் இது. செம்மைப்படுத்தாத மொழியாக்கம் குறையாக இருக்காது என நம்புகிறேன். நாகா இனமக்கள் என்பதற்கான Nagas என்ற சொல்லை நாகர்கள் என மொழியாக்கம் செய்தால் தமிழகத்திலும் இலங்கையிலும் வசித்த நாகர்களாகப் பொருள்படக்கூடிய சிக்கல் இருக்கிறது. எனவே நாகாக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
* * *
வசந்தத்தில் இடிமுழக்கம்
1953 மார்ச் 30 தேதி வசந்தகாலக் காலை பிரகாசமாகவும் சுள்ளென்ற வெயிலுடனும் விடிந்தது.  அங்கமி, சாக்கேசாங், மாவோ, லோதா, ஆவோ என நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகாவாசிகள் கோஹிமா நோக்கி வந்திருக்கிறார்கள். வண்ணமயமான சால்வைகள் போர்த்திக்கொண்டும், விதவிதமான தலைப்பாகைகளோடும், கனமானதும் லேசானதுமான தந்தக் கைவளைகளை அணிந்தவர்களுமாய் இம்பாலிலிருந்து கோகிமா வரும் சாலையின் இருபுறங்களிலும் ஒழுங்கான வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். மணிப்பூரின் தலைநகர் கோஹிமாவுக்கு வருகை தர இருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அவரை வரவேற்கத்தான் காத்திருக்கிறார்கள் நாகாவாசிகள்.
நேரு முதல்முறையாக கோஹிமா வர இருந்தார். அவருடன் அவருடைய நண்பரும் பர்மாவின் பிரதமருமான ஊ நூ-வும் வருகை தர இருந்தார். தில்லியிலிருந்து வரும் ஊ நூ-விடம், பல ஆண்டுகளுக்கு முன் மணிப்பூருடன் இணைக்கப்பட்ட காபா பள்ளத்தாக்கை மீண்டும் பர்மாவுக்கு ஒப்படைப்பதற்காக வருகிறார் நேரு. இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இருவரும் கோஹிமா வருகிறார்கள்.
அவர்கள் வருவதற்கு சற்று முன்னர் கோஹிமாவின் காவல்துறை துணை ஆணையர் சத்யேன் பர்கடோகி ஆயுதமேந்திய குதிரைப்படை போலீசாருடன் அங்கு வந்து சேர்கிறார். சாலையோரம் காத்திருக்கும் நாகாக்கள் பிரதமரிடம் விண்ணப்பம் தர முயற்சி செய்யக்கூடும் என்று உளவுத்துறை அவரிடம் தெரிவிக்கிறது. நாகாக்கள் காலம்காலமாக தமக்கே உரிய வாழ்க்கை வாழந்து வந்திருக்கிறார்கள், அவ்வாறே தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமென அவர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்கிறது உளவுத்துறை. இப்படியொரு கோரிக்கை வைப்பது நேருவை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும், விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு ஏதும் தந்துவிடக்கூடாது என்றும் கருதுகிறார் பர்கடோகி. காத்திருக்கும் நாகாக்களை சாட்டைகளால் அடித்து விலக்குமாறு உத்தரவிடுகிறார்.
எதற்காகத் தம்மை அடிக்கிறார்கள், எதற்காக விரட்டுகிறார்கள் என்று புரியாமல் குழம்புகிறார்கள் நாகாக்கள். தமது சொந்த நிலத்தின்மீது நிற்கக்கூட தமக்கு உரிமை இல்லையா? அவர்கள் தன்னை வரவேற்பதை நேரு விரும்பவில்லையா?
சாலையில் நின்றுகொண்டிருந்த நாகாக்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்தி கோஹிமா நகரெங்கும் காட்டுத்தீபோலப் பரவுகிறது. நேருவை வரவேற்க வந்தவர்களில் நாகாக்களின் ஒரே அமைப்பான நாகா தேசிய கவுன்சிலின் உறுப்பினர்களும் இருந்தனர். நாகாக்களின் திறமைவாய்ந்த தலைவரும், கவுன்சிலின் பொதுச்செயலருமான தியோ சக்ரேயி தன் ஆதரவாளர்களுடன் இதைப்பற்றி ஆலோசனை நடத்துகிறார். காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியபின் நேருவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என முடிவு செய்கிறார்.
கோஹிமா கால்பந்து விளையாட்டு மைதானம் நாகாக்களால் நிரம்பி இருந்தது. சக்ரேயி அவர்களிடம் பேசினார் - நேரு பேசுவதை நாம் கேட்பதை அதிகாரிகள் விரும்பவில்லை போலத் தெரிகிறது. அவரை வரவேற்கக் காத்திருந்த நம் மக்கள் சாட்டைகளால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். நீங்களும் வீடுகளுக்குப் போகலாம்.
நேரு, ஊ நூ மற்றும் அவர்களுடன் வந்த பரிவாரம் கோஹிமாவை வந்தடைகிறது. நேரு உற்சாகத்துடன் மேடைமீது ஏறத்துவங்கும் நேரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய் புறப்படத் துவங்குகிறார்கள். பிரதமருக்கு ஏதும் புரியவில்லை. இவ்வளவு நேரம் காத்திருந்தவர்கள் எதற்காகச் செல்கிறார்கள்? மைக்கைப் பிடித்த நேரு அவர்களை சமாதானம் செய்ய முயன்றார் - தயவுசெய்து அமருங்கள். நான் உங்களிடம் பேச வேண்டும். அமருங்கள்.
ஆனால் கால்பந்து மைதானம் காலியாகி விட்டது. சிவப்புக் கம்பளிகள் போர்த்தியிருந்த அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் மட்டுமே அங்கே இருந்தனர். நேரு தன் வாழ்க்கையிலேயே இதுவரை சந்தித்திருக்காத நிலைமை இது. இதைவிட அவமானம், அதுவும் தன் பழைய நண்பர் ஊ நூ முன்னால், தனக்கு நிகழ்ந்ததே இல்லை என்று நேருவுக்குத் தோன்றியிருக்கும்.
சற்று நேரத்தில் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்ட நிர்வாகம், நாகா ஊழியர்கள், கிராமத் தலைவர்கள் என சிலரை ஏற்பாடு செய்தது. நேரு அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்தச் சிறிய கூட்டம் ஏதோ இரங்கல் கூட்டம்போலத் தோற்றமளித்தது.
குதிரைப்படை போலீசின் சாட்டையடிகள் இந்திய மக்களுக்கும் நாகாக்களுக்கும் இடையே இருந்த உறவை நொறுக்கி விட்டது. இந்தியர்களுக்கு இரக்கமே இல்லை, தம்மை ஆளவே அவர்கள் விரும்புவார்கள் என்று ஜபுஃபிஸோ போன்ற தலைவர்கள் கூறிவந்தது உண்மைதான் என்று தோன்றியது நாகாக்களுக்கு.
நேருவும் ஊ நூ-வும் மணிப்பூர் திரும்பினார்கள்.
நேருவுடன் பெரிய பரிவாரமே வந்திருந்தது. அவர்களில் பத்திரிகையாளர்களும் பலர் இருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான நாகாக்கள் நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்த செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
1956 ஜூன் 11. கோஹிமா போராளிகளுக்கும் கீழே இருந்த அசாம் ரைபிள் படையினருக்கும் இடையே மோதல் துவங்கியது. நேருவின் கூட்டத்தில் பங்கேற்காமல் மக்கள் வெளியேறியது குறித்து நான் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் நீண்ட கட்டுரை ஒன்றை நடுப் பக்கத்தில் எழுதினேன். அரசு வட்டாரத்தில் அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் ஃபிராங்க் மோராஸ் அப்போது பம்பாயில் இருந்து செயல்பட்டு வந்தார். கோகிமாவில் மக்கள் புறக்கணிப்பு பற்றிய என் கட்டுரைக்கு மறுப்பு ஒன்றை வெளியிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் அவருக்குத் தொலைபேசினார். தான் அவ்வாறு செய்ய இயலாது என்றும், அரசு இதை மறுத்து ஒரு அறிக்கை அளிக்குமானால் நிச்சயம் அதை வெளியிடுவேன் என்றும் கூறிவிட்டார் ஃபிராங்க். பிறகு, வெளியுறவுத்துறையின் இணைச்செயலராக இருந்த திரிலோகிநாத் கௌல் என்னை அணுகினார். என்னிடம் சொல்லப்பட்டதை வைத்து நான் எழுதிவிட்டதாகவும், அவையெல்லாம் உண்மையல்ல என்றும் ஒரு மறுப்பு எழுதுமாறு கேட்டுக்கொண்டார். நான் அதைச் செய்யவில்லை.
1950களில் நாகா மலைகளுக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டு, கைதுகளும் கிராமங்களுக்குத் தீவைப்பும் நிகழ்ந்தபோது தில்லியில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுந்தன. 1956 ஆகஸ்ட் 23ஆம் நாள் நேரு அதற்குப் பதிலளித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் தான் கோஹிமா சென்றபோது நிகழ்ந்ததைச் சொன்னார். அந்தக் கூட்டத்தை நாகாக்கள் புறக்கணித்தது பற்றி அவர் குறிப்பிட்டார் - பர்மாவின் பிரதமர் நாகாக்களிடம் சில வார்த்தைகள் பேசட்டும் என்பதற்காக நாகா மக்களைத் திரட்டுமாறு நான் நிர்வாகத்திடம் கூறியிருந்தேன். நாகாக்கள் என்னிடம் விண்ணப்பம் ஒன்று தர விரும்புவதாக பின்னர் தெரிய வந்தது. விண்ணப்பம் தர அனுமதிக்க முடியாது என்று கோகிமா காவல்துறை துணை ஆணையர் அவர்களிடம் கூறினார். பிறகு, நானும் ஊ நூ-வும் அந்த இடத்தை அடைந்தபோது நாகாக்கள் கலைந்து செல்லத்துவங்கி விட்டனர். எனக்கு மிகவும் வேதனை ஏற்பட்டது. எனக்காக அல்ல, நம் விருந்தினருக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக.
நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காக அஸாம் நிர்வாகம் நாகாக்கள்மீது கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது. அவர்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார் பர்கடோகி. நேருவின் கூட்டத்தைப் புறக்கணித்த சக்ரேயி மற்றும் அவரது தோழர்களைப் பிடிப்பதற்காக நாகா கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டார். கைதுகள் நிகழ்ந்தன. அரசு ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். சின்னஞ்சிறு கோஹிமா நகரத்தில்கூட ஏராளமான கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கைதுகளைத் தொடர்ந்து நாகாக்களின் ஒரே அமைப்பான நாகா தேசிய கவுன்சில் தலைமறைவு இயக்கமானது. விஸ்வேமா, ஜாகாமா, கிக்வேமா, ஃபெய்சாமா கிராமங்களில் காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியது. அனுமதி பெறப்பட்ட துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தது, ஏராளமானோரை கைது செய்தது.
நேரு இம்பாலுக்குத் திரும்பியதுமே கிராமங்களுக்குப் படையெடுத்த காவல்துறை மக்களை அடித்தது. கிராமத்தினருக்குப் பாடம் கற்பிக்க நினைத்தது. அமருங்கள் என்று நேருவே சொன்ன பிறகும் அதைக் கேட்காமல் இருக்கலாமா? வெளிநடப்புச் செய்ய எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
சிலர் கொல்லப்பட்டனர். பார்ப்பவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கோஹிமா அருகே இருந்த மீமா கிராமத்தின் பீச்சாடாமி என்ற கிராமவாசியின் சடலம் தெருத்தெருவாக இழுத்துச்செல்லப்பட்டது.
ஆனால் ஏற்பட்டது அச்சமல்ல, ஆத்திரம். நாகாக்கள் மனதில் கோபம் கனன்றது. இறந்தவரைக்கூட அவமானப்படுத்தும் இவர்கள் எத்தகைய மனிதர்கள் என்று வியந்தார்கள், வேதனைப்பட்டார்கள்.
. . . .
நாகாக்கள் சிலர் காடுகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள், பின்னர் தீவிரவாதிகள் ஆனார்கள். அரசுப் பணியில் இருந்த நாகாக்களை ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்தார்கள். கிராமங்களிலிருந்து துப்பாக்கிகளைத் திரட்டினார்கள், காவல் நிலையங்களிலிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடித்தார்கள். கோஹிமாவிலும் மோகோக்சுங்-இலும் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு நாகா தேசிய உயர்நிலைப் பள்ளிகளை நிறுவினார்கள்.
கிராமத் தலைவர்களை அரசு ஊழியர்களாகக் கருதிய அவர்கள், இனி ஆண்டுக்கு இரண்டு ரூபாய் வீட்டுவரி வசூலிக்கக்கூடாது என்று அறிவித்தார்கள். அரசு ஊழியர்கள் என்பதற்கு அடையாளமாக இருந்த சிவப்புக் கம்பளிகளைத் திருப்பித்தர உத்தரவிட்டார்கள்.
காடுகளில் ஒளிந்திருப்பவர்களை எதிரிகள் என்றது அரசு. அவர்களின் குடும்பத்தினருக்கு தண்டனை அளித்தது. பெரியவர்கள் இருதரப்பிலிருந்தும் துன்புறுத்தப்பட்டனர், சிலர் அரசுப் பணியைக் கைவிட்டனர்.
இளைஞர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. காடுகளில் இருந்தவர்களின் ஏஜென்டுகளால் இளைஞர்கள் சிலர் இழுத்துச் செல்லப்பட்டனர். தலைமறைவு ஹோம்கார்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். வேறு சிலருக்கு துப்பாக்கிசுடும் பயிற்சி தரப்பட்டது. கிராமத்தினர் காவல்துறையால் தாக்கப்பட்டனர். ஊதியமில்லாத கட்டாய உழைப்புக்கு இழுத்துச்செல்லப்பட்டனர்.
மலைப்பகுதிகளில் இருந்த நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு 1953 செப்டம்பரில் அஸாம் அரசு கட்டாய உழைப்பு என்னும் சட்டத்தை அறிமுகம் செய்தது. சாலை போடுவது, காடுகளை அழிப்பது போன்ற பணிகளில் கிராமத்தினர் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இதிலிருந்து தப்பிக்க பலர் தலைமறைவு இயக்கத்தில் சேர்ந்தனர். இவர்களை ஒடுக்க இந்தியா மேலும் படைவீரர்களை அனுப்பியது.
இந்தியப் படையினருக்கு இந்தப் பகுதியும், இதன் மக்களும், அவர்களின் வாழ்க்கைமுறையும் அறிமுகம் இல்லாதது. ராணுவம் அடக்குமுறையை ஏவியது, பலநூறு கிராமங்களை தீவைத்து அழித்தது. இதில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்றுவரை தெரியாது. ராணுவத்தினால் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இன்றுவரை தெரியாது.
நிலைமை மிகவும் மோசமடைந்தது. நாகாக்களின் தலைவர் ஜபுஃபிஸோ காட்டில் ஒளிந்திருந்தார். காட்டுக்குள்ளும் அவருக்கு பாதுகாப்பு இருக்காது என அவருக்கு நெருக்கமானவர்கள் கருதினர். அவரைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக அறிவித்திருந்தது இந்திய அரசு. எனவே, அவரை மணிப்பூரில் இருக்கும் தாமெங்க்லாங்க என்னும் பகுதிக்கு இடம் மாற்றினர். பின்னர் அங்கிருந்து அசாமின் சச்சார் மலைப்பகுதி வழியாக நடைபயணம் செய்து கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்றார் ஜபுஃபிஸோ. (கிழக்கு பாகிஸ்தான் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசமாக மாறியது.) ஜபுஃபிஸோ, தலைநகர் டாக்காவில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் நாகாக்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் நிதியையும் பெறத்துவங்கினர். அவர்களுக்கு உதவுவது தனக்குப் பயன் தரும் என்று கருதியது பாகிஸ்தான். அல்பச் செலவுதான், ஆனால் இந்திய ராணுவத்தின் கணிசமான வளத்தை இந்தியா வடகிழக்கில் செலவிட நேர்ந்தது. பாகிஸ்தான் இதை பகிரங்கமாகச் செய்யவில்லை, இதைப்பற்றி கேள்வி கேட்கும்போது மறுத்தது.
. . . .
இந்தியாவுக்கு இது மேலும் வசதியாகிப்போனது.
* * *
மேலும் வாசிக்க -
The Naga Story: First Armed Struggle in India; Harish Chandola; Chicken Neck (an imprint of Bibliophile South Asia), C-127 Sarvodaya Enclave, New Delhi-110017; Rs 600 (Paperback)

இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட யாரேனும் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். பதிப்பகத்தாருடன் பேசவும் உதவ இயலும்.

3 comments:

 1. Thank you so much for providing this info...

  Senthazal Ravi (FB)

  ReplyDelete
 2. நன்றி செந்தழல் ரவி. நீண்ட நாட்களுக்குப் பிறகு தீவிரமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். வாசிக்கத் தகுந்ததாய் இருக்கிறது எனப் புரிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. பகிர்ந்துள்ளேன். நன்றி

  ReplyDelete