Thursday, 25 July 2013

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த.வி. வெங்கடேசுவரனையும் அழைத்தேன். இதற்கிடையே தினமணியிலிருந்து பா. கிருஷ்ணனும் அழைக்கப்பட்டு விட்டார். ஒருவர் மட்டுமே வரவில்லை. எனவே பேச்சாளர்கள் ஏழு பேராகி விட்டோம். எனவே நேரம் ஆளுக்கு 10 நிமிடம் என குறுக்கப்பட்டது. எவரும் 10 நிமிடங்களுக்குள் முடிக்க இயலவில்லை என்பது வேறு விஷயம்.

டாக்டர் சுந்தர ராஜனின் அறிமுக உரை, சங்கச் செயலர் முகுந்தனின் வரவேற்புரை, சங்கத் தலைவர் கிருஷ்ணமணியின் தலைமை உரை, பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளுக்கும் பின் ஏழு பேரும் உரையாற்றினோம். 

முதலில் உரையாற்றிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் த.நா. சந்திரசேகரன், சங்க இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் பற்றி உரை வாசித்தார்.

த.வி. வெங்கடேசுவரன் மைய அரசின் அறிவியல் பிரச்சார நிறுவனத்தில் பணிபுரிபவர். அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்டு ஏராளமான நூல்களை எழுதியவர். அறிவியல் பிரச்சாரமே அவருக்கு மூச்சு. அவருக்கு இத்தலைப்பு சர்க்கரைக்கட்டி. இலக்கியம் என்னும்போது, வாய்மொழி இலக்கியம், பழமொழி இலக்கியம் ஆகிய வடிவங்களிலிருந்தும் அறிவியல் குறிப்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார். இவருடைய உரைதான் கருத்தரங்கின் நோக்கத்திற்கேற்ற மிகச்சிறப்பான உரை. 

என் உரை கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

பா. கிருஷ்ணன், அறிவியல் என்பதில் உளவியல், நிர்வாக இயல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்று கூறி, திருக்குறளிலிருந்து பல உதாரணங்களைக் காட்டி அழகாக உரையாற்றினார்.

பொன்ராஜ், அப்துல் கலாமுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சித்த மருத்துவக் குறிப்புகளிலிருந்து ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், சர்க்கரை நோய்க்கு மருந்து விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார். இலக்கிய ஆதாரம் குறிப்பிடாமல் பேசும்போது அதில் வலிமை இருப்பதில்லை என்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்.

சிறப்புப் பேச்சாளர் அப்துல் காதர் பிரபலமான பேச்சாளராம். நான் அவரது நிகழ்ச்சிகள் எதையும் தொலைக்காட்சியில் பார்த்ததில்லை. தெள்ளிய நீரோடை போன்ற பேச்சு, வழக்கமான நகைச்சுவைத் துணுக்குகள், குறிப்புகளே இல்லாமல் இயல்பாக வரும் சொற்பொழிவு என அருமையாக உரையாற்றினார். பாரதிதாசன் உள்பட தமிழ் இலக்கியத்தின் சில அறிவியல் கருத்துகளை அழகாக விளக்கினார். 

கடைசியாக வந்த பேச்சாளர் நெல்லை சு. முத்து. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். திருக்குறளின் 1330 குறள்களுக்கும் அறிவியல் நோக்கில் புதிய உரை எழுதியிருப்பதாகக் கூறினார். விளக்கத்திற்காக பவர்பாயின்ட் பிரசன்டேஷன் பயன்படுத்தி அறிவியலின் பல கட்டங்களை விளக்கினார். ஆனால் நேரக்குறைவு பற்றிய கவனமின்றி நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பாதிக்கூட்டம் கலைந்து விட்டது.

* * *
என் உரை

நான் தமிழறிஞன் அல்லன். எளிய வாசகன். இலக்கிய ஆர்வலன். இலக்கியத்தின் சுவைகளை ருசிக்கத் துடிக்கும் பல்லாயிரம் ஆர்வலர்களில் ஒருவன். எனவே இந்த அரங்கில் என் பார்வை, பொதுவான பார்வையாகவே இருக்க முடியும். அதனை அவையோர் பொறுத்தருள வேண்டுகிறேன்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேசத் துவங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் கண்ணில்படுவது இதுவே.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கூறும்போதே அவ்வையுடன் வள்ளுவரும் நினைவில் வந்து விடுகிறார். அவ்வையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத்தேவையில்லை. மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான்.

தொடர்ச்சியாக நினைவில் வருவது வள்ளுவர் பெயர். உலக வாழ்க்கைக்கே அடிப்படையாக இருப்பது நீர்தான். ஆங்கிலத்தில் Water is the matrix of life என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் -
நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.
என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the matrix of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்வோம். தொல்காப்பியம் என்றாலே இலக்கண நூல் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் இன்று மொழி அறிவியல் என்றொரு வகை இருக்கிறது. லிங்க்விஸ்டிக்ஸ் என்னும் மொழியியல் கோணத்தில் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் முந்தைய தொல்காப்பியத்தில் மொழிக்கு இலக்கணம் மட்டுமல்ல, ஒலி அமைப்பும் உச்சரிப்பும்கூட தெள்ளத்தெளிவாக, இன்றும் திருத்தம் தேவைப்படாத. திருத்த முடியாத செம்மையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரிகிறது.

தொல்காப்பியம் வரையறுக்கிற ஒலிகளும் மாத்திரைகளும், மயக்கங்களும் திரிபுகளும் வியக்க வைக்கின்றன. பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் அதனை உணர்ந்து படிக்கவில்லை. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களுக்காக மட்டும்தான் படித்திருக்கிறோம்.

சுருக்கமாக சிலவற்றைப் பார்ப்போம்.
அகரமுத னகர விறுவாய் முப்பதென்ப.
உயிர் 12, மெய் 18 ஆக மொத்தம் முப்பது.
அப்புறம் சார்பெழுத்துகள்
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

அதைத் தொடர்ந்து உயிர்க் குற்றெழுத்துகள், நெட்டெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று விளக்கும் தொல்காப்பியர், சட்டென ஒரே வரியில் சொல்கிறார்
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

அதாவது, உயிரெழுத்து மெய்யோடு இயைந்து உயிர்மெய் எழுத்தாக ஆனாலும், அந்த உயிரின் இயல்பு மாறாது. இதுல என்ன பெரிய அதிசயம் இருக்கு.... என்று தோன்றக்கூடும்.
க் += கி, ப் += பூ, ம் += மா.

தமிழில் உயிரெழுத்துகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் இருக்கிற A E I O U என்னும் vowels எடுத்துக்கொள்வோம். இதர ஆங்கில எழுத்துகள் கான்சனன்ட்ஸ்.
இப்போது பார்ப்போம். B I K E – bike. K I T E – kite இங்கே, ஐ என்பது சரியாக அதன் இயல்பு திரியாமல் ஒலிக்கிறது.

இன்னொன்றையும் பார்ப்போம் B I T – bit, S I T – sit, W I T – wit. இங்கே ஐ என்ற உயிரெழுத்தின் இயல்பு திரிந்து விட்டது. இதே போல
S U N – sun, SON – son,  A D D – add, A L L – all

ஆங்கில உயிர் எழுத்துகளின் இயல்பு திரிவது பற்றி இதுபோல ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். ஆனால் தமிழில் எந்த உயிரெழுத்தும் மெய்யெழுத்தோடு சேரும்போது அதன் இயல்பு திரியாது. எஸ் யு என் சன் என்று கூறுவது போல MUTHU - முத்துவை மத்து என்று உச்சரிக்க முடியாது. உச்சரிக்க மாட்டோம்.

அதே போல, எந்தெந்த எழுத்துகள் முதலெழுத்தாக வரலாம், எந்தெந்த எழுத்துகள் அல்லது உயிர்மெய்கள் மொழிக்கு முதலாக வராது, மெய்யெழுத்தை அடுத்துவரும் உயிர்மெய் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும், எந்த உயிர்மெய்கள் திரியும், அல்லது மயங்கும், என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது தொல்காப்பியம்.

1.     பன்னீர் உயிரும் மொழிமுத லாகும்.
2.     உயிர்மெய் அல்லன மொழி முதலாகா.
3.     கதந பம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
4.     சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஔ எனும் மூன்றலங் கடையே
.5.    உஊ ஒஓ என்னும் நான்குயிர்
      வ என் எழுத்தொடு வருதலில்லை.
6.     ஆ எ ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய.
7.     ஆவோ டல்லது யகர முதலாவது.

இந்த எழுத்துகள் மட்டும்தான் முதலெழுத்துகளாக வரும். விளக்கிச் சொன்னால்,
1.     பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் முதலெழுத்துகளாக வரலாம்.
2.     உயிர்மெய் அல்லாத மெய்யெழுத்து எதுவும் முதலெழுத்தாக வராது.
3.     க த ந ப ம ஆகிய ஐந்து உயிர்மெய்களும், இந்த ஐந்துடன் பன்னிரண்டு உயிர்களோடு சேர்ந்த உயிர்மெய்களும் முதலெழுத்துகளாக வரலாம்.
4.     ச எனும் எழுத்துடன் அ, ஐ, ஒள ஆகிய மூன்று தவிர்த்து இதர உயிரெழுத்துகளுடன் இணைந்து முதலெழுத்தாக வரலாம்.
5.     அ ஐ ஔ தவிர்த்து இதர உயிர்களுடன் சேர்ந்து மட்டுமே ச முதலெழுத்தாக வரும்.
6.     ஞகரம், ஆ எ ஓ என்னும் மூன்று உயிர்களுடன் மட்டுமே முதலில் வரும்.
7.     யகரம் ஆ என்னும் உயிர் தவிர்த்து முதலெழுத்தாக வராது.

இதைத்தவிர பிற உயிர்மெய்கள் ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகியவை முதலெழுத்துகளாக வரவே வராது. சில விதிவிலக்குகள் தவிர.

உச்சரிப்பைப் பார்த்தால்,
ம் க்கு அப்புறம் ப வந்தால் BA என்றுதான் உச்சரிக்கப்படும். கம்பம், செம்பு, ப என்னும் எழுத்து முதலெழுத்தாக வந்தால் PA என்றுதான் உச்சரிக்கப்படும். பன்னீர், பல், பல்லி, பனை, பசி, பசு, பட்டினி... ங் க்கு அடுத்து க வந்தால் GA என்றுதான் உச்சரிக்கப்படும். இன்னும் இதுபோல விளக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு தெளிவான மொழியியல் விளக்கங்கள் எப்போது எழுதப்பட்டன... இப்போது இல்லை. வெள்ளைவாரணார் கருத்துப்படி கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்று கருதாவிட்டாலும், குறைந்தபட்சம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியியல் விதிகள் வரையறுக்கப்பட்டு விட்டன.

மொழியியல் குறித்து இதற்கு மேலும் விளக்கிக் கொண்டே போனால் இலக்கண வகுப்பு நடத்துவது போல உங்களுக்குத் தோன்றக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.

மதிப்புக்குரிய நண்பரும் சாகித்ய அகாதமி மொழியாக்க விருது பெற்றவருமான டாக்டர் எச். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியத்தை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அவருடைய மொழியாக்கத்தை தட்டச்சு செய்து, தமிழுடன் தொகுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அப்போது வாசிக்கக் கிடைத்த வரிகளைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. இலக்கண நூல் என நாம் கருதும் தொல்காப்பியம் தொடாத விஷயமே இல்லை.

திருக்குறளில் அறம், பொருள், இன்பம் போல, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. முன்னர் மொழியியல் குறித்து நான் எடுத்துக்கூறிய பகுதிகள் எழுத்ததிகாரத்தில் உள்ளவை. உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, கருப்பொருள்களைக் கொண்ட சூழல், ஆகியவற்றை எல்லாம் விவரிக்கிறது பொருளதிகாரம்.

நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இந்த உலகம் என்று கூறும்போது, கலந்த மயக்கம் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஒன்றொடு ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும், கலந்தும் கரைந்தும் இருப்பது உலகம் என்கிறார் தொல்காப்பியர்.

அடுத்து, உயிரினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம். உயர்திணை, அஃறிணை.
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
அதாவது, மனிதர்கள் என்போர் உயர்திணை
அஃறிணை என்றால் என்ன அல் திணை அதாவது திணை அல்லாதது. ஆக, திணை என்பதை மக்களுக்கும் திணை அல்லாத அனைத்தையும் அஃறிணை என்றும் வகுக்கிறது தொல்காப்பியம். இது வேறு எந்த மொழிகளிலும் இல்லாத ஒரு கருத்தாகும்.

இதைத்தொடர்ந்து, உயிர்களை பாலினங்களாக வகுக்கிறது.
தொல்காப்பியத்தை மட்டுமே தனித்தலைப்பாக எடுத்தாலே மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அறிவியல் கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. மாதிரிக்கு இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகிறேன்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

சுருக்கமாக விளக்குகிறேன் ஓரறிவு உயிரானது உடம்பினாலறிவது. ஈரறிவு உயிர் என்பது வாயும் கொண்டது. மூவறிவு உடையது மூக்கையும் கொண்டது. நான்கறிவு உடையது கண்ணையும் கொண்டது. ஐந்தறிவு உள்ளது செவித்திறனும் உடையது. ஆறறிவு என்பது சிந்திக்கும் மனமும் கொண்டது.
தொல்காப்பியத்தின் மரபியலில் வரும் இப்பாடலைத் தொடர்ந்து, ஓரறிவு உயிர்கள் எவை, ஈரறிவு கொண்ட உயிர்கள் எவை என்ற பட்டியலும் தரப்படுகிறது.
புல்லும் மரனும் ஓரறிவினவே
நந்தும் முரளும் ஈரறிவினவே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
மாவும் புள்ளும் ஐந்தறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே....
புல்லும் மரமும் ஓரறிவு கொண்டவை.
சங்கு, நத்தை கிளிஞ்சல் போன்றவை ஈரறிவு கொண்டவை
அட்டை, எறும்பு போன்றவை மூவறிவு உடையவை.
நணடு, தும்பி போன்றவை நான்கறிவு உடையவை.
நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவுடையவை.

இதைத்தொடர்ந்து உயிரினங்களைப் பற்றிய விளக்கமும் தொடர்கிறது. அதையும் விளக்க இங்கே நேரம் போதாது. ஆனால் சிந்தனை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ் இலக்கியத்தின் செழுமையை வியக்காமல் இருக்க முடிவதில்லை.

தொல்காப்பியரின் அதே கருத்தை -
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாகிப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.....
என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். சைவசிந்தாந்தக் கருத்தின்படி முனிவராய் தேவராய் எனவும் மறுபிறப்பு பற்றியும் பாடுவதை தனியாக ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், தொல்காப்பியர் சொன்ன அதே புல், பூண்டு, புழு, மரம், விருகம், பறவை, மனிதர் என உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழின் பக்தி இலக்கியமும் பாடுவதை நாம் அறிய முடிகிறது.

அண்மையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்த பிறகு ஏராளமான புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் எனக்குப் பிடித்த, தமிழின் சிறப்பை உணர்த்துகிற தகவல்களை சேகரித்து வருகிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நாம் பல விதமான அளவை முறைகளைப் பயன்படுத்துகிறோம். நீட்டல் அளவை, முகத்தல் அளவை, எடை அளவை, கால அளவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் தமிழில் பண்டைக் காலத்திலேயே பல்வேறு அளவைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

தொல்காப்பியத்திலேயே பல அளவைப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அளவுப்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என மூன்றாகப் பகுத்துக்கொள்கிறது தொல்காப்பியம்.

அளவைகள் பற்றி மேலும் அறிய விக்கிபீடியா பார்க்கவும்.
நில அளவையில் காணி என்பது நாம் அனைவரும் அறிந்தது. காணிநிலம் வேண்டும் என்று பாரதி பாடியதால், காணி நிலமாவது வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். உண்மையில் காணி என்பது சுமார் 92 சென்ட், 40000 சதுர அடி.

சரி, இப்படி வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு எல்லாவகை அளவைகளும் தமிழில் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை முற்ற முழுக்க மறந்து விட்டோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் சரிதான். ஆனால் பழையவை என்று நமது பொக்கிஷங்களை கழித்துவிட முடியுமா... ஆனால் நாம் கழித்துக்கட்டி விட்டோம் என்பதுதான் உண்மை.

குறவஞ்சியில் மட்டும் காணக்கிடைத்த பறவைகளின் பெயர்களை அண்மையில் பார்த்தேன்.
அகத்தாரா, அன்றில், அன்னம், ஆந்தை, ஆரா, ஆலா, ஆனைக்கால் உள்ளான், இராசாளி, உள்ளகன்,  கபிஞ்சலம், கம்புள், கருநாரை, கரும்புறா, கருவாலி, கவுதாரி, கருப்புக் கிளி, காட்டுக்கோழி, காடை, காணாக்கோழி, கிளிப்பிள்ளை, குயில், குருகு, கூழைக்கடா, கேகை, கொக்கு, கொண்டைகுலாத்தி, கோரை, சக்கரவாகம், சகோரன், சம்பங்கோழி, சம்பரன், சாதகம், சாரா, சிகுனு, சிச்சிலி, சிட்டு, சிட்டுல்லி, செந்நாரை, செம்போத்து, சேவரியான், தண்ணிப் புறா, தாரா, தீவகக் குருவி, தூக்கணம், நத்தைகொத்தி,  நாரை, நாங்கண வாச்சி, நாகை, நீர்க் காக்கை, நீர்த் தாரா, பகண்டை, பச்சைப்புறா, பஞ்சவர்ணக்கிளி, பஞ்சிலை, பணி, பருந்து, பாரத்துவாசம், பிருகு, மஞ்சணத்தி, மணித்தாரா, மயில், மாட்டுக்குருகு, மாடப்புறா, மீன்கொத்தி, லாத்தி, வட்டத்தாரா, வட்டா, வரிக்குயில், வரிசாளி, வல்லூறு, வலியான், வாலாட்டிக் குருவி, வாலான், வானம்பாடி, வெட்டுக்கிளி, வெண்கிளி, வெண்ணாரை, வெண்புறா, வெள்ளைப்புள், வெள்ளைப்புறா, வேதாளி

அண்மையில் ஒரு சிறுவர் நூலை தமிழாக்கம் செய்யும்போது ஹார்ன்பில் என்ற பறவைக்குத் தமிழ்ப் பெயர் கிடைக்காமல் தியடோர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இருவாட்சி என்ற பெயரைக் கேட்டறிந்தேன். இதுதான் இன்றைய நிலை.

மற்றொரு பக்கம், எப்போது எதைப்பேசினாலும் மிகையாக பெருமை பாராட்டுவதும் நம்மிடம் ஒரு குறையாக இருக்கிறது. எதைச் சொன்னாலும் அது தமிழில் இருந்திருக்கிறது என்பார்கள். சிலப்பதிகாரத்தை உதாரணம் காட்டி, விமானங்கள் இருந்தது என்பார்கள். கண்ணப்பநாயனார் கண்ணை ஈந்தது, பொற்கைப் பாண்டியன் பொற்கரத்தைப் பொறுத்திக் கொண்டதாகவும் உள்ள பாடல்களை வைத்து, அன்றே மாற்று உறுப்பு அறிவியலில் தமிழர்கள் சிறந்து விளங்கியது போன்ற மிகைப்படுத்தல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது இப்படியொரு குறிப்பை படிக்க நேர்ந்தது.
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  
என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. உதிரத்தில் மலம் மிகுதல் என்பது என்ன பொருளில் கூறப்பட்டிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.

அறிவியல் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பது. காப்பியங்களைப் படைத்தவர்களின் கற்பனையின் வளத்தை மட்டும் வைத்து முடிவு செய்வதல்ல என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம்.

பாரதியின் "வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்... சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.... போன்ற வரிகளும் நினைவில் வருகின்றன. இந்தக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கும் ஜூலை 21ஆம் நாளுக்கு முதல்நாள்தான் 1969 ஜூலை 20ஆம் நாள் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் கால் பதித்தார். சந்திர மண்டலத்தை இந்தியாவும் கண்டு, நீர் இருக்கிறது என்று அண்மையில் தெளிந்திருக்கிறோம் என்பதை எண்ணும்போது பாரதியின் தீர்க்கதரிசனத்தை வியக்கிறோம். ஆனால் பாரதியின் பாடல்களை மிகைகள் ஏதும் இருக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.

இத்தனை செழுமை கொண்டிருக்கும் தமிழின் அறிவியல் நூல்கள் இல்லாததும், அறிவியலை தமிழில் படிக்க முடியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்று ஆராய வேண்டியிருக்கிறது.

தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாக அமைய முடியாது என்பார் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.

எனவே, நம் முன்னே இருப்பது மிகப்பெரிய பணி. தமிழ் மொழியே பின்னுக்குத்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.

பல்வேறு அகராதிப் பணிகளை மேற்கொண்ட அனுபவத்தில் நான் இந்த இடத்தில் மற்றொன்றையும் சுட்ட விரும்புகிறேன். இந்தியில் கலைச்சொல்லாக்கத் துறை சங்கத்துக்கு நேர் எதிரே இருக்கிற கட்டிடத்தில்தான் இருக்கிறது. இந்தியில் கலைச்சொல் உருவாக்க முடியாத சொற்களுக்கு அவர்கள் மூலச்சொல்லையே பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஆனால் தமிழர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை. எந்தவகையான சொற்களுக்கு மூலச்சொற்களை அப்படியே ஏற்கலாம், எவற்றை தமிழ்ப்படுத்தலாம் என்பதெல்லாம் காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெரிய முன்னேற்றமோ ஒத்திசைவான கருத்தோ ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறிவியல் தமிழ் முயற்சி இந்தத் திசையில் உறுதியான பயணம் மேற்கொண்டால் அது தமிழுக்கும் பெருமை சேர்க்கும், தமிழ்ச் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும்.

Monday, 22 July 2013

அரங்கிற்கு வெளியே


ஜாஃபர் பனாஹி-யின், ஆஃப்சைட் (OffSide) என்ற ஈரானியப் படத்தைப்பற்றி பேஸ்புக் தோழி தீபா நாகராணி எழுதியிருந்தார். சனிக்கிழமை இந்தப்படத்தைப் பார்த்தோம். ஈரானிலிருந்து வந்திருக்கும் மற்றொரு வித்தியாசமான திரைப்படம். பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு உதாரணமாகச் சித்திரிக்கப்படும் இஸ்லாமிய நாடான ஈரானிலிருந்தே இப்படி பெண்களை மையமாக வைத்து அதிரடியான அற்புதமான திரைப்படமும் எடுக்கப்படும் முரண் எப்படி நிகழ்கிறது என்று புரியவில்லை.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தகுதி பெறுவதற்கான போட்டியில் ஆடுகிறது ஈரான் அணி. போட்டியைக் காண பெண்களுக்கு அனுமதியில்லை. என்னதான் தொலைக்காட்சியில் பார்த்தாலும் நேரடியாகப் பார்க்கும் சுவை இருக்காது என்பதால், ஆண்கள் போல வேடமிட்டுச் செல்லும் சில பெண்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கும் அவர்களை காவல் காக்கும் காவலர்களுக்கும் இடையிலான உரையாடல்கள், கால்பந்துப் போட்டி நடைபெறும் பின்னணி, நேரில் பார்க்க முடியாதபோதும் என்ன நடக்கிறது என்று அறியும் ஆர்வம் இவற்றை வைத்து நகர்கிறது கதை. இடையிடையே மெலிதான நகைச்சுவை. 

இந்தியாவில் கிரிக்கெட் ஆர்வம் போல ஈரானில் கால்பந்து ஆர்வம். காவலர்களுக்கும்கூட ஆர்வம் இருக்கவே செய்கிறது. கால்பந்துப் போட்டியைப் பார்க்க முடியாத ஏக்கம் ஒருபுறம், ஊரில் இருக்கும் குடும்பத்தை நினைத்துக்கொள்வதும், ஊருக்குச் செல்ல விடுமுறை கிடைக்காத ஏக்கம் மற்றொருபுறம் என காவலர்களின் உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அரங்கமும் போட்டியும் சில விநாடிகளுக்குக் காட்டப்படுகிறது. அதுவும்கூடக் காட்டாமலே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாகேஷ் நடித்த எதிர்நீச்சலில் இருமும் கிழவரைக் காட்டாமலே காட்டியிருப்பாரே பாலச்சந்தர், அதுபோல படம் முழுவதும் இரைச்சலையும், பின்னணிக் குரல்களையும், நேர்முக வர்ணனையையும் மட்டுமே காட்டும்போது, இந்த சில விநாடிக் காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.

கடைசிக் காட்சியில் அவர்கள் எல்லாரும் கொண்டாட்டத்தின் இடையில் தப்பிச்சென்று விடுகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் சற்றே நம்ப முடியாததாக இருக்கிறது. அதை மட்டும் மறந்துவிட்டுப் பார்த்தால் அற்புதமான படம். வெவ்வேறு வகைப்பட்ட பெண்களின் நடிப்பு, காவலர்களின் நடிப்பு, போட்டி துவங்குவதற்கு முன் அரங்கத்தின் முன் நிற்கும் கூட்டம், போட்டி முடிந்த பிறகான கொண்டாட்டம் என ஒவ்வொரு காட்சியும் இயல்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்தனைபேரும் உன்னதமாக நடித்திருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால் குறை சொல்ல முடியாது. ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சிவசப்பட்ட உரையாடல்களைப் பார்த்துப் பழகிப்போன நமக்கு, ஈரானிய மொழியில் எல்லாவகையான உணர்ச்சிகளும் ஒரேமாதிரி வெளிப்படுத்தப்படுவது சற்றே அன்னியமாக உணரச்செய்கிறது.

இருந்தாலும், காணத் தவறாதீர்கள்.

Monday, 15 July 2013

எண்களின் வலைகளில்...


எண்ணிப் பார்க்கிறேன்
எப்படி நிகழ்ந்ததென
எதுவும் புரியவில்லை.

ஒற்றை உலகத்தின் நிகழ்வுகள் எல்லாம்
சில எண்களுக்குள் அடங்கிப் போனது
எப்படி நிகழ்ந்ததென எதுவும் புரியவில்லை.

இரட்டைக் கோபுரங்களில் இடித்த விமானங்கள்
மக்களாட்சியை மலரச் செய்யவும்
இல்லாத ஆயுதங்களை இருப்பதாய்க் காட்டவும்
ஆப்கனும் ஈராக்கும் இடிபாடுகளாயின
ஆழ்கடலின் அடியே நிலம் நடுங்கியது
ஆர்ப்பரித்து எழுந்தன ஆழிப் பேரலைகள்
பூகம்பங்கள் சூறாவளிகள் குண்டுவெடிப்புகள்
ஓரிரு நாள்கள் ஓரிரு வாரங்கள்
பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்
தீனிகளாய் கிடைக்கின்றன செய்திகள்
இறுதியில் மனித உயிர்கள்
வெறும் புள்ளி விவரங்களில்.

உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் மட்டும்
உயிரோடு இருக்கும் இன்னும் பல காலம்.

கவிதை வேண்டும் என்றால்
எத்தனை வரிகளில் என்றார்கள்.
கதை ஒன்று வேண்டும் என்றால்
எத்தனை பக்கங்களில் என்றார்கள்.
கட்டுரை வேண்டும் என்றால்
எத்தனை வார்த்தைகளில் என்றார்கள்.
உரையாற்ற வேண்டும் என்றால்
எத்தனை நிமிடங்களில் என்றார்கள்.
படைப்பையும்கூட எண்களில் அடக்கிய விந்தை
எப்படி நிகழ்ந்ததென எதுவும் புரியவில்லை.

செல்பேசிப் புரட்சிக்குப் பின்
எண்களை வைத்தே
அந்தஸ்தும் அளக்கப்படுகிறது.

9868
இல் துவங்கும் டால்பின் எண்களில்
இளக்காரப் பார்வையை எதிர்கொள்ள நேரும்
9811
வோடபோன் என்றால்
பரவாயில்லை பார்வை முதுகை வருடும்
9810...
ஏர்டெல்காரர்தான்
எல்லாரிலும் சிறந்தவர்.

சக்கரங்களை வைத்தும் நீங்கள் யார் என்பது
தீர்மானிக்கப்படும் என்பதை
சக்கரத்தைக் கண்டுபிடித்தவன்
சற்றேனும் எண்ணியிருப்பானா?

இருசக்கர வாகனக்காரர்கள் இழிந்தவர்கள்
நான்கு சக்கர வாகனத்தார் நட்புக்கு உரியவர்கள்
ஆறுசக்கரப் பேருந்து பயணியா நீங்கள்...
அடப்பாவமே... பிழைக்கத் தெரியாதவர்.

பேருந்துகளுக்கும் எண்கள்
பெரும்பெரும் விமானங்களுக்கும் எண்கள்
விரைந்தோடும் ரயில்களுக்கும் எண்கள்
வீதிகளுக்கும் வீடுகளுக்கும் எண்கள்.

தொலைபேசி எண்கள் செல்பேசி எண்கள்
வங்கிக்கும் எண்கள் வங்கிக்கடன்
அட்டைக்கும் எண்கள்
அட்டைகளை பயன்படுத்தும்
சாவிகளுக்கும் எண்கள்

வீடு வேண்டும் என்றால்
எத்தனை அறைகள் என்றார்கள்
மனை வேண்டும் என்றால்
எத்தனை சதுரஅடி என்றார்கள்
நகரத்திலிருந்தும் விமான நிலையத்திலிருந்தும்
எத்தனை தூரம் பயணத்திற்கு
இவைதான் இன்றைய முக்கியக் கேள்விகள்

அண்டை வீட்டாரை அறியவும் வேண்டாம்
நட்புக் கரங்களை எண்ணவும் வேண்டாம்
அடுக்கு மாடிகளில் ஆயிரம் வீடுகள்
அத்தனையும் தனித்தனித் தீவுகள்
பெயர்களால் அறியப்பட்ட மனிதர்கள்
எண்களால் அறியப்படும் வீடுகளாகிப் போனார்கள்

திரைப்பட நடிகர் பெறுகிற
கோடிகளை வைதே புகழ்
கொடி கட்டிப் பறக்கும் படத்துக்கு
செலவிட்ட கோடிகளை வைத்தே
படத்தின் தரமும் மதிக்கப்படும்
திறமைகள் பெரும்பாலும் ஒற்றை பூஜ்யம்தான்

மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை
உள்ளடக்கங்கள் எல்லாம் உதவாக்கரைகள்
கொள்முதல்-லாப விகிதம் மட்டுமே
கொண்டவர்க்கு இன்னும் வெற்றிகள் வெற்றிகள்

கணினி யுகம் இன்று வெறும்
கணக்குகளில் அடக்கி விட்டது
ஒன்று-பூஜ்யம் என இரண்டே எண்களில்
ஒற்றை உலகம் உருவாகி விட்டதாம்

சராசரிக்குள் அடங்காத சிலபேர் கையில்
சகலமும் அடங்கியிருக்கிறது

பங்குட் சந்தையும் விலை வீக்கமும்
எண்களில் அடங்கி விட்டன
பணம் இழந்தவர்களும்
பட்டினி கிடப்பவர்களும்
அடுத்தடுத்த புள்ளி விவரங்களில் அலசப்படுவார்கள்.

நாடாளும் முறையையும்
மாற்றி விட்டன இந்த எண்கள்
சட்டமன்றங்களில்
சரிபாதிக்கும் மேல் கிடைக்க
சகல வழிகளையும் பயன்படுத்தலாம்.

சராசரி ஆயுள் அதிகரித்து வருகையில்
பிறப்புகளின் எண்ணிக்கை கூடி வருகையில்
பிறப்பில் இறப்புகள் குறைந்து வருகையில்
அச்சமாக இருக்கிறது எனக்கு
பேரக் குழந்தைகளுக்கு பெயர்கள் இல்லாமல்
எண்களை வைத்தே அழைக்க நேருமோ
என்று அச்சமாக இருக்கிறது எனக்கு.

கண்களை எங்கு திருப்பினாலும்
எண்களின் கண்ணாமூச்சி ஆட்டம்

எண்களின் ராஜ்ஜியத்தை இப்படியே தொடர்ந்தால்
கடிகார முட்களுக்கும் கண்கள் செருகும்

விடைகொடுங்கள் நான்
விரைய வேண்டும் உறக்கத்திற்கு
எண்களின் கட்டுக்குள்
என்றுமே அடங்காதவை
கனவுகள் மட்டும்தான்.
எத்தனை கனவுகளென்ற
எல்லைகள் ஏதுமின்றி
எத்தனை நொடிகளென்ற
வரம்புகள் ஏதுமின்றி
கனவுகளைத் தருவது உறக்கம் மடுமே

எனவே
விடைகொடுங்கள் நான்
விரைய வேண்டும் உறங்குவதற்கு.

Sunday, 7 July 2013

அழகிய தருணங்கள்

தன் மகளின் திருமணத்தை முன்னிட்டு விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக வெளியிட்ட கவிதைகள் கொண்ட சிறு பிரசுரம் ஒன்றை முகநூல் தோழி மரியா சிவானந்தம் ஓரிரு மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்திருந்தார். உறக்கம் தொலைத்த ஓரிரவில் பிடிஎஃப் வடிவில் இருந்த அதை முழுவதுமாகப் பார்க்க முடிந்தது.

வேலைக்குப் போகும் பெண், தாய், இயற்கையின் ரசிப்பு, கல்வி குறித்த கவலை, மனிதம் என பல்வேறு தலைப்புகளில் கவிதைகள். சுவைசேர்க்கத் துணையாக சில படங்கள். அந்நூலிலிருந்து சட்டெனப் பிடித்துப்போன சில கீற்றுகளை கீழே தரலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு தலைப்பிலும் முழுக் கவிதையும் தரவில்லை, சில வரிகளை மட்டுமே தந்திருக்கிறேன். நீங்களும் படித்து மகிழலாம்.

1. வீட்டுக்கொரு காந்தி -

அநியாய அடக்குமுறை
எழுப்பிடும் சப்தங்களில்
நியாயமான உரிமைகளின்
முனகல்கள்
நெறிக்கப்படுகின்றன.

இனிவரும் தலைமுறையேனும்
உரிமையின் குரலாக
எளிமையின் வடிவமாக
வாய்மையை வெல்லச்செய்து
வையத்தைத் துலங்கச் செய்ய
“வீட்டுக்கொரு காந்தி” வளர்ப்போம்.

2. வன்முறை வாழ்க்கை முறையல்ல -

விரைவான முடிவாக
தலைகளை உருட்டும்
தவறான வழக்கத்திற்கு
விதைதனை இட்டது யார்?

இம்முறை தோற்றதே
இறுதியாய் இருக்கட்டும்.
வன்முறை இனியும் நம்
வாழ்க்கை முறையல்ல.

3. வீதியோர செல்லங்கள் -

வண்ணவண்ண உடைகள்
வகைவகையாய் உணவுகள்
பஞ்சுப்படுக்கைகள் இவை ஏதும்
இவர் பார்த்தறியா சுகங்கள்.

எச்சில் இலைகளுக்காய்
இரவுபகலாய் போராடினாலும்
இவர்கள் புசிப்பதென்னவோ
பசியைத்தான்.

இச்சுதந்திர சொர்க்கத்தில்
ஆளுக்கொரு திட்டம்
அறிவிக்கையில்
வீதியோரம் நாளுக்கொரு
பிச்சைக்காரன் பிறக்கிறான்.

இவர் கட்டிடும் கந்தலைவிட
கனவுகள் நைந்து போயின.

முடியாத துயரோடு
முடிகிற இவர் வாழ்வு
என்று விடியும்?

“எது” நடந்தால்
இவர் துயர் தீரும்?

4. பொருந்தாத் திருமணம் -

பட்டுச்சேலையைக் கிழித்து
கந்தலுக்கு ஒட்டுப்போட்ட
முட்டாள்தனம்...
முள்ளின் நுனிக்கு
மணிமகுடம் சூட்டும்
வெட்டி வேலை...
வானத்துப் பறவையுடன்
வறட்டுத் தவளையைப்
பறக்க விரட்டும் பரிதாபம்.

5. பாலும் கசந்ததடி -

அடுக்களை அரசுகள்
ஆட்டம் காணுகின்றன.

பருப்பைத் தொடுகையில் நெருப்பு
பாலும் கசந்திடும் தவிப்பு

புளியா புலியா
புரியாத வியப்பு

விண்ணேறும் விலைவாசி
வீழ்கையில் எம்
விழியோரம் குறுநகை மலரும்

படைத்திடும் கவிதைபோல
சமைத்திடும் உணவும்
சுவையோடு மிளிரும்.

6. அழிந்த வரலாறு -

வளைத்த கறுப்புக் கம்பியில்
அப்பா அடுக்கி, குத்திவைத்த
காலப் பெட்டகங்கள்...

மஞ்சள் தடவிய சுபச்செய்தி
குழந்தை பிறப்பு
நலம் நாடும்
நீல நிறக் கடிதங்கள்
மரணம் சுமந்த உறைகள்...

பொங்கலுக்கு வெள்ளையடிக்கையில்
போகிக்கு கொளுத்துகையில்
ஆண்டுதோறும் அனலுக்கு இரையாயின...

எரித்த கடிதங்களில்
எரிந்தது என் வீட்டு வரலாறு.

7. உப்புக்கல்லை வைரம் என்றால்... -

நிறுத்தக்குறிகள் இடப்படாத
நீண்ட வாக்கியமாய்
அர்த்தமும் இன்றி
அழகும் இன்றி
சக்கரக் கால்களில் சுழன்று
சந்தியில் கலையுது
மக்கள் வாழ்க்கை.

வசதியாய் வளர்கையில்
வாழ்க்கை தொலைந்தது.

உண்மையை உரசிப்பார்க்கும்
உரைகற்கள் உடைந்ததால்
உப்புக்கல்லை வைரமென்று
ஒப்புக்கொள்வதில்
உள்ளுறுத்தல் யார்க்கும் இல்லை.

8. அழகிய தருணங்கள் -

கடற்கரை மணலில்
கணவருடன் விரல்கோத்து
கால்கடுக்க நடக்கும் தருணம்

சுட்டெரிக்கும் வெயிலில்
மட்டையடித்து திரும்பும் மகள்
மறக்காமல் தந்த - புழுதி
மணம்வீசும் ஈரமுத்தம்.

பள்ளி நண்பரைப் பார்க்கையில்
பழங்கதைகள் தொகுக்கும் தருணம்.

வெள்ளிக் காசுகளை
அள்ளி இறைத்தாற்போல்
விண்மீன்கள் சுயாட்சி நடத்தும்
நிலவில்லா இரவு.

தந்திக்கம்பிகளில் தலைசாய்த்து
எந்த ஊருக்கோ
சேதி அனுப்பும் குருவிகள்.

9. மாற்றுங்கள் -

வாடகை தராமல்
இங்கு வாசம் செய்யவந்த
வெள்ளைப் பறவைகள்
பறந்து போகையில்
எச்சமென நம் தலையிலிட்ட
மிச்சம் இந்தக் கல்விமுறை.

10. நீ -

இளமையில் கைகோத்தேன்
இறுதிவரை துணையானாய்.

அன்று உறவானாய்
இன்று எல்லாமே நீயானாய்.

என் சிரிப்பின்
பொருளாக,
நிறைவாக,
பலமாக,
கைநடுங்க
நான் எழுதும்
கடைசிக் கவிதையின்
கடைசி வரியாக
நீ.

Wednesday, 3 July 2013

கி.மு.வில் பிறந்திருக்க வேண்டியவன்


இது பழைய கதை. இதைப் படிக்கிறவர்கள் பலர் பிறப்பதற்கு முந்தைய கதை. 1970க்கு முன்பு. பள்ளியில் குடிநீர் வசதி எல்லாம் கிடையாது. அவரவர் மதிய சாப்பாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தோட்டங்களின் கிணற்றுக்குப் போக வேண்டும். அமராவதி வாய்க்காலில் தண்ணீர் வரும்பட்சத்தில் பள்ளிக்கு அருகே இருக்கிற கிளை வாய்க்காலில் தூக்குப்போணியும் கழுவிக்கொண்டு தண்ணீரும் அள்ளிக் குடிப்போம்.

கிணற்றுக்குப் போகிற நாட்களில் சாப்பாட்டைவிட குளியல்தான் முக்கியம். மணி அடித்ததுமே அள்ளி விழுங்கிவிட்டு ஓடத்துவங்குவோம். ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கும் மேடான ரயில் பாதையைக் கடந்ததுமே பள்ளியும் மாணவிகளும் கண்களிலிருந்து மறைந்து விடுவார்கள். ஓடுகிற வேகத்திலேயே துணிகள் எல்லாவற்றையும் கழற்றிவிடுவோம். ஈரமானால் மறுபடி பள்ளிக்குள் நுழைய முடியாதே...

ஓடிய வேகத்திலேயே கவுண்டர் தோட்டத்துக் கிணற்றில் குதிக்க வேண்டியது. டைவ் அடித்து விளையாடி, அரிதாக எவனிடமாவது இருக்கும் காசு போட்டுக் கண்டெடுத்து, தொட்டு விளையாடி, மூச்சடக்கப் போட்டி போட்டு ஒருவழியாக ஓய்ந்து வெளியே வருவோம். பாக்கெட் சீப்பெல்லாம் இருக்காது. கையாலேயே தலைமுடியை ஒருவழியாக ஒதுக்கிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக வகுப்புக்குத் திரும்பி வருவோம்.

வாய்க்காலில் தண்ணீர் வருகிற நாட்கள் வேறுவகையான சாகசங்கள். பக்கத்துக் காடுகளில் பயறு வகைகள் விளைந்திருந்தால் அதுதான் எங்கள் வேட்டைக்களம். சாலையையும் வேலியையும் ஒட்டிய பயறுச்செடிகள் எல்லாமே வீண்தான் என்பது அந்தக்காட்டுக்காரருக்கும் தெரிந்திருக்கும். எனக்கும் இன்னும் சிலருக்கும் அதைவிட சுவாரஸ்யமான விஷயத்தில் ஆசை வந்தது. கள்ளிப்பழம் தேடுவதுதான் அது. யாரிடமிருந்து அதைக் கற்றேன் என்பது நினைவில்லை.

வாய்க்கால் கரையை ஒட்டி கள்ளிகள் நிறையவே இருக்கும். கரையோரமாகவே நடந்து, செருப்பில்லாக் கால்களில் குத்துகிற முள்களைப் பொறுத்துக்கொண்டு அலைவதில் எனக்கு ஒரு செட் நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் வேலுச்சாமி முக்கியமான ஒருவன். (இந்த வேலுச்சாமியை அண்மையில் சந்தித்தது பற்றி இன்னொரு கதை, இன்னொருநாள் எழுத முயற்சிப்பேன்.)

சப்பாத்திக் கள்ளியின் ஓரங்களில் பச்சையாகக் காய்க்கும் காய்கள் பழுக்கப் பழுக்க வயலட் நிறத்தை அடையும். பழத்தின் பல பகுதிகளிலும் ரோமம் போல சிறுசிறு முட்கள் இருக்கும். கள்ளிப்பழத்தைப் இதுவரை பார்க்காதவர்கள் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம். பழத்தைப் பறிப்பதே பெரிய சிரமம். கள்ளிப்புதருக்குள் கைநுழைத்தால் முட்கள் கீறிவிடும். அதையும் மீறி எப்படியோ எட்டி, சூதானமாக பழத்தைப் பறிக்க வேண்டும். பறிக்கும்போதும் முட்கள் கையைப் பதம் பார்க்கும். பறித்த பழத்தை இரண்டு விரல்களால் பிடிப்பதுகூட சிரமமான வேலைதான். நான் இதில் முக்கியஸ்தன் ஆனதன் காரணம் நான் ஒல்லியானவன், கைகள் நீளமானவை, மெலிந்த விரல்கள். பறித்த பழத்தைச் சுற்றிலும் இருக்கிற முட்களை மீன் சுத்தம் செய்வது போல ஏதேனும் ஒரு கல்லில் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு பழத்தையும் இப்படி சுத்தம் செய்யவே நேரம் ஆகிவிடும்.

அப்புறம் பழத்தைப் பிதுக்கினால்.... அடாடா... உள்ளே சிவப்பும் வயலட்டும் கலந்த வண்ணத்தில் இருக்கும் பழம். பழத்தின் உள்ளேயும் நடுவில் பெரிய முள் ஒன்று இருக்கும். அதற்கு நாங்கள் வைத்த பெயர் தொண்டை முள். எனவே, பழத்தை அப்படியே சாப்பிட்டுவிடக் கூடாது. பழத்தின் சுவை... உலகத்தின் வேறெந்தப் பழத்துடனும் ஒப்பிட முடியாத சுவை அது. சப்புக்கொட்டிச் சாப்பிடுவது ஒரு சுகம் என்றால், பழம் நாக்கில் படிவதும், அதை பற்களால் சுரண்டுவதும் ஒரு சுகம். ஒரு பழம் சாப்பிட்டாலே போதும், வாயெல்லாம் வயலட் நிறமாகிவிடும். திரும்பவும் பள்ளியை நெருங்கும் நேரத்தில் வாய்க்காலில் நன்றாகக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்வோம்.

வழக்கம்போல ஒருநாள் மதியம் கள்ளிப்பழ வேட்டைக்குப் புறப்பட்டோம். எல்லாம் முடித்து திரும்பிக்கொண்டிருந்தோம். பள்ளி நெருங்கும்போது நான் வாயைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொண்டேன். வேலுச்சாமி நீயும் வாயைக் கழுவிக்கடா என்றேன். போடா... இப்படியே விட்டாதான் வாய்ல அந்த டேஸ்ட் அப்படியே இருக்கும் என்று மறுத்துவிட்டான்.

மதியம் முதல் வகுப்பு சரித்திர வகுப்பு. ஆசிரியர் குப்புசாமி. அபாரமாக சரித்திரம் சொல்லிக்கொடுப்பார். கண்டிப்பானவரும் கூட. ஒருவகையில் வேலுச்சாமிக்கு உறவினர். அதனால் அவனிடம் கூடுதல் கண்டிப்புக் காட்டுவார். நான், வேலுச்சாமி உள்பட சில நல்லாப்படிக்கிற பையன்கள் முன்பெஞ்சுகளில் இருப்போம். வகுப்பு துவங்கியது. பாடம் நடத்திய ஆசிரியர் ஏதோ கேள்வி கேட்டார். சுற்றுமுற்றும் பார்த்தவர், வேலுச்சாமி அப்படியே தலையை கீழே அமுக்கிக்கொள்வதைக் கவனித்து விட்டார்.
- டேய் நீ சொல்லுடா.
எழுந்து நின்ற வேலுச்சாமி வாயில் வெற்றிலை குதப்புகிறவன் போல உம்மென்று மூடிக்கொண்டு நின்றிருந்தான்.
- டேய்... கேக்கறது காதுல விழலே...  சொல்லுடா....
கையை வாய்மேல் வைத்து அடக்கமாக நின்றான்.
- வாயில என்னடா கொழுக்கட்டையா வச்சுருக்கிற... வாயைத் திறடா...
வாயைத் திறந்தான். செக்கச்சிவந்திருந்தது வாய் முழுக்கவும்.
- என்னடா இது... என்ன பண்ணினீங்க.
- கள்ளிப்பழம் சார்
- கள்ளிப்பழம்.... உம்... யார் யார்றா போனது....
நாங்கள் ஒவ்வொருவராக தயங்கித் தயங்கி ஆறு பேர் எழுந்து நின்றோம்.
- ஏண்டா.... கிமு-ல இருந்திருக்க வேண்டியவன் எல்லாம் கிபி-ல பொறந்து ஏண்டா எங்கழுத்தை அறுக்கறீங்க... ஓடு. போய் கழுவிட்டு வந்து காட்டிட்டு கிளாஸ் முடியற வரைக்கும் வெளியே நில்லு.

அதற்குப்பிறகு வேலுச்சாமி ஒருநாளும் வாயை சுத்தம் செய்யத் தவறவில்லை. கள்ளிப்பழத்தையோ படத்தையோ பார்க்கிற போதெல்லாம் அந்த நாளின் நினைவும் வரத் தவறுவதில்லை.