(இந்தக் கட்டுரை கடந்த ஆண்டு எழுதப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றிய பதிவு. எங்கோ மறைந்து கிடந்தது. நேற்று ஒரு தோழியுடன் நடைபெற்ற உரையாடலின்போது இதைத் தேடித் தருகிறேன் என்று குறிப்பிட்டேன். அதனால் பதிவிடுகிறேன்.)
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை கடந்த மாதம் புலம் பெயர்ந்தோர் குரல்கள் - Voices of Diaspora - என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. லண்டனில் வசிக்கும் இரா. உதயணன் எழுதிய "பனி நிலவு", "நூலறுந்த பட்டங்கள்", டென்மார்க்கில் வசிக்கும் கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய "இப்படிக்கு அன்புள்ள அம்மா", பிரான்சில் வசிக்கும் வீ.த. இளங்கோவன் எழுதிய "பிரான்ஸ் மண்ணிலிருந்து சில தமிழ்க் கதைகள்" ஆகிய நான்கு நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டன. நான்கையும் மொழிபெயர்த்தவர் நண்பர் திரு எச். பாலசுப்பிரமணியன்.
இந்த மூன்று எழுத்தாளர்களோடு டென்மார்க்கிலிருந்து ஜீவகுமாரனும் வந்திருந்தார். இவரைத்தவிர,
உஸ்பெகிஸ்தானிலிருந்து வந்திருந்த மக்தூபா,
இந்தியிலிருந்து உஸ்பேக் மொழிக்கு மாற்றம் செய்த "பவளாயி" நாவலும் இங்கு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியைப்பற்றி பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் தன் வலைப்பூவில் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் தனியாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.
நூலை வெளியிட்டபிறகு நூல்களைப்பற்றி உரையாற்றியவர்கள் தமிழர்கள் அல்லர். ஜே.என்.யு. மற்றும் இதர கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். அவர்கள் சரளமாக இந்தியில் பேசியது அந்த எழுத்தாளர்களுக்குப் புரிந்திருக்கும் என்று தோன்றவில்லை. உரையாற்றிய நால்வரும் இயல்பான மொழிபெயர்ப்பு என்று பாராட்டினார்கள். அவர்கள் குறிப்பிட்டதில் ஒரு விஷயம் எனக்கு முக்கியமாகப்பட்டது. மொரிஷீயஸ், சுரிநாம் போன்ற நாடுகளுக்கு அடிமைகளாகச் சென்றவர்களின் சில எழுத்துகள் இந்திக்கு வந்துள்ளன. ஆனால் பொதுவாக இந்தியில் புலம்பெயர் இலக்கியம் மிக அரிது. எனவே, இந்தி இலக்கியத்திற்கு இது புதியதோர் இலக்கிய இனம் என்றார்கள். அந்த நிகழ்ச்சியில் தமிழரல்லாதவர்கள் பத்து-பதினைந்து பேர்தான் இருந்தார்கள் என்பதுதான் துரதிர்ஷ்டம்.
புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை,
வேதனைகளை,
வசிக்கச் சென்ற தேசத்துடன் தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளை அவர்கள் மட்டுமே எழுத முடியும். நாம் என்னதான் தொப்புள்கொடி உறவு என்று கூறிக்கொண்டாலும், அவர்களுடைய சிக்கல்களை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டாலும் உண்மையில் புரிந்தது அதில் கால்வாசி கூட இராது.
(இதிலிருந்து பிறந்தவைதான் நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் வரிகள் –
உன் வலி எனக்குப் புரிகிறது என்று நானும்
என் வலி உனக்குப் புரிகிறது என்று நீயும்
சொல்லிக்கொள்கிறோம்தான் என்றாலும்
உனக்குப் புரிந்ததும் எனக்குப் புரிந்ததும்
புரிய வேண்டியதன் பகுதி மட்டுமே எனினும்
புரிந்து கொண்டதாய் அத்தனைபேரும்
புளுகிக்கொண்டுதான் திரிகிறோம்...)
கலாநிதி ஜீவகுமாரன் எழுதியது டேனிஷ் மொழியில். அவருடைய கணவர் அதை தமிழில் தந்திருக்கிறார். கலாநிதி,
டேனிஷ் மொழியைக் கற்றுக்கொண்டு அதிலேயே எழுதியதற்குப் பாராட்டலாம். அதற்குக் காரணமாக அவர் கூறினார் - "நான் வாழும் நாட்டினர் எங்கள் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டும், என் குழந்தைகளைப் போன்ற அடுத்த தலைமுறையினர் டேனிஷ்தான் புரிந்து கொள்ள முடியும், எனவே அவர்களுக்குப் புரிகிற மொழியில் எழுத வேண்டும்." பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
தில்லியில் தமிழர் குழந்தைகள் எவ்வாறு தமிழ் வாசிக்கத் தெரியாமலே வளர்கிறார்களோ அதேபோலத்தான் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளும் தமிழ் தெரியாமலே வளர்கிறார்கள். (தமிழ்நாட்டிலும் நிலைமை அப்படித்தான் என்று சிலர் எண்ணினால் அதுவும் சரிதான்.) வீடுகளில் தமிழ் பேசுவார்களாய் இருக்கலாம். ஆனால் வாசிக்கவோ, தமிழ் இலக்கியங்களை புரிந்து கொள்ளவோ,
பண்பாட்டை முன்னெடுத்துச்செல்லவோ அவர்களால் இயலாது. இன்னும் பத்து-இருபது ஆண்டுகளில் புலம்பெயர் இலக்கியமே இருக்காது என்று எழுத்தாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார். இதைக் கேட்டதுமே என் மனதில் தோன்றியது - இனி யாருமே புலம்பெயர வேண்டிய சூழ்நிலைகள் உருவாகாதிருக்கட்டும்.
மேற்குறிப்பிட்ட இளம் தலைமுறை பற்றி யோசிக்கும்போது இரண்டு செய்திகள் நினைவுக்கு வந்தன.
ஒன்று - கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குக் கலைகளைப் பயிற்றுவித்து ஆடம்பரமாக நடத்தும் அரங்கேற்றங்கள் பற்றிய ஒரு வலைப்பதிவு. கூடவே ஜெர்மனியிலும் பிரான்சிலும் தமிழர் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் கண்முன் நிழலாடுகின்றன. தில்லியில் எனக்குப் பழகிப்போன செய்தி இது என்றாலும் புலம்பெயர் நாடுகளிலும் இதே நிலைதான் என்னும்போது தமிழர்கள் எங்கே சென்றாலும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. தம் குழந்தைகளை சகலகலா வல்லவர்களாக்குவதாக எண்ணிக்கொண்டு அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய அனுபவங்களைப் பறிப்பது.
இரண்டாவது - லண்டனில் வசிக்கும் இளைய அப்துல்லா எழுதிய நூல். கடந்த புத்தகக் கண்காட்சியின்போது வாங்கியது இப்போதுதான் படிக்க முடிந்தது. லண்டன் உங்களை வரவேற்பதில்லை என்ற கட்டுரைத்தொகுப்பு. இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு இனி புலம்பெயர்ந்து வருவது சாத்தியமில்லை என்பதை, வந்தவர்கள் பலரும் சரியான வேலைகள் இன்றி சுரண்டப்படுவதை, உரிய ஆவணங்கள் இல்லாதபோது கைது செய்யப்படுவதை, பிள்ளைகள் ஆங்கிலேயப் பண்பாட்டை ஏற்கவே விரும்புவதை என்பதான பல பிரச்சினைகளை அலசியிருக்கிறார். புலம் பெயர்ந்தவர்கள் எல்லாருமே உயிரைக் காத்துக்கொள்ளத்தான் சென்றார்கள், புலம்பெயர்ந்த தேசங்களில் சீரோடு வாழ்கிறார்கள், தமிழ்ப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்த முயல்கிறார்கள் போன்ற பிம்பங்களை எல்லாம் உடைத்துப்போடுகிறார் அப்துல்லா. வாசிக்க வேண்டிய புத்தகம். காலச்சுவடு வெளியிட்டுள்ளது.
ஜே.என்.யு. நிகழ்ச்சியில் இளங்கோ - அல்லது உதயணன் - கூறியது நினைவு வருகிறது – “பனைமரங்கள் நாங்கள், பிடுங்கப்பட்டு பனிப்பிரதேசத்தில் நடப்படுகிறோம்.”
வேரறுந்து, புதிய இடத்தில் வேர் பிடிக்கவும் முடியாமல், சொந்த நிலத்துக்கு மீளவும் இயலாமல், பாரம்பரியப் பண்பாடுகளை மனதில் சுமந்து கொண்டு புகலிட தேசத்தின் பண்பாடுகளுக்கு இசைய முயற்சி செய்வதிலேயே காலம் கழிந்துவிடும் பலருக்கும். இதை இலக்கியமாக்க முயற்சிக்கும்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்றாலே புலம்பல் இலக்கியம் என்ற பேர் சூட்டப்படும் அபாயமும் அவர்களுக்கே. இதனையும்மீறி அவர்களின் எழுத்துகள் காத்திரமாகவே இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்குமிடங்களில்தான் நல்ல இலக்கியங்கள் பிறக்கின்றன என்பதே முழு உண்மைதானோ....?