வலைப்பூ, பேஸ்புக் நண்பர்கள்
பலர் எழுத்தாளர்களாக, பதிப்பாளர்களாக
இருக்கிறார்கள். பலர் புதிய, வளரும்
எழுத்தாளர்கள். அவர்களுடைய நூல்களின் பின்னட்டையில் என்ன விவரங்கள் இருக்க
வேண்டும் என்பது குறித்து பலருக்கு குழப்பம் இருக்கிறது அல்லது தெரியாதிருக்கிறது. அதைப்பற்றி அலசுவதே இந்தப் பதிவு. இங்கே நூல் எனக்
குறிப்பிடுவது பொது நூல்களைக் குறிக்கும். சிலருக்கு கட்டாயம் வாங்கியாக வேண்டிய
பாடநூல்களையோ, துறைசார் சிறப்புநூல்களையோ
குறிக்காது.
பின்னட்டை குறித்து பல்வேறு
பதிப்பகங்களும் பல்வேறு வழக்கங்களைக் கொண்டிருக்கின்றன. நூல் பதிப்புக்கு என
ஒவ்வொரு பதிப்பகமும் சில விதிகளைக் கொண்டிருக்கும். சில பதிப்பகங்கள், நூலை
வடிவமைக்கத் தரும்போதே இந்த விதிகளையும்கூட ஒரு பிரதி எடுத்து வடிவமைப்பாளரிடம் தந்துவிடும்.
(அதுவே ஒரு நூல் அளவுக்கு இருக்கும்!) இருந்தாலும், ஒரே பதிப்பகம் தனது எல்லா நூல்களுக்கும் பின்னட்டை விஷயத்தில் ஒரே
முறையைப் பின்பற்றுகிறது என்று கூற இயலாது. நூலின் அட்டையில் இடம்பெறும்
விவரங்கள் என்ன என்பது அந்தந்த எழுத்தாளரைப் பொறுத்ததும்கூட அமைகிறது. பிரபலம்
என்றால் அதிக விவரங்கள் தேவையே இருக்காது.
சில பதிப்பகங்கள் தமது இதர
நூல்களின் விவரங்களை விளம்பரம்போலத் தருகின்றன. அல்லது, நூலைப்பற்றி பிரபல பத்திரிகைகளில் வெளிவந்த மதிப்புரைகளிலிருந்து
சில வரிகளைத் தருகின்றன. அல்லது ஒரு பிரபலத்தின் பரிந்துரையைத் தருகின்றன. சில
பதிப்பகங்கள், நூலைப்பற்றிச் சில
வரிகளும் எழுதியவர் பற்றி சில வரிகளும் தருகின்றன.
தமிழ்ப் பதிப்பகங்களைப்
பொறுத்தவரை மோசமான நிலைமைதான் இருக்கிறது. பெரும்பாலும் நூலைப்பற்றி சில வரிகள்
இருக்கும், எழுத்தாளர் பற்றி
எதுவும் இருக்காது. (மாதிரிக்கு கிழக்கு பதிப்பக நூல்கள்.) அல்லது எழுத்தாளர்
பற்றிய விவரங்கள் மட்டுமே இருக்கும் - அதுவும் அவருக்கு எத்தனை மனைவிகள், எத்தனை குழந்தைகள், எத்தனை பேரக் குழந்தைகள், அவர்கள் என்ன
படிக்கிறார்கள் என்ற விவரங்களை எல்லாம் பார்க்கையில், நாம் அவற்றைத் தெரிந்து கொண்டு திருமண சம்பந்தமா
செய்து கொள்ளப்போகிறோம் என்று மனதுக்குள் கேள்வி வரும்.
நூலைப்பற்றியும் எழுதியவர்
பற்றியும் எல்லா விவரங்களையும் பின்னட்டையில் தருவது சாத்தியமற்றதாகவும்
இருக்கலாம். அதிலும், மொழியாக்கம் செய்த
நூல் என்றால், மொழிபெயர்ப்பாளர்
பற்றிய விவரமும் தர வேண்டியிருக்கலாம். அதற்காக ஆங்கிலப் பதிப்பகங்கள் வேறொரு
வழிமுறையைக் கையாள்கின்றன.
நூலின் உள்ளே முதல்
பக்கத்தில் நூல் தலைப்பு மட்டும் இருக்கும் - இது Half Title என அழைக்கப்படும். இதன் பின்புறம் வெறுமையாக இருக்கும்
அல்லவா, அங்கே நூலாசிரியர்
குறித்த விவரங்களைத் தரலாம். (தமிழ் பதிப்பாளர்கள் பலரும் ஹாஃப் டைடில்
தருவதில்லை.) சில ஆங்கிலப் பதிப்பகங்கள், அந்த முதல்
பக்கத்திலேயே, நூல் தலைப்பு தராமல், நூலாசிரியர் விவரங்களைத் தருவதும் உண்டு.
அதிலும், இப்போதெல்லாம் பல பதிப்பகங்கள் நூல்களை பாலிதீன்
பேக்கில் தருவதால், உள்ளே இருக்கும்
விவரங்களையோ, முன்னுரையையோ
அலசிப்பார்த்து வாங்க இயலாத நிலை இருக்கிறது. அட்டையைப் பார்த்து மட்டுமே வாங்க
வேண்டியிருக்கிறது. பிரபலம் இல்லாத - வளரும் எழுத்தாளர்களின் நூல்களுக்கு இந்த
பாலிதீன் உறை பாதகமான அம்சம் என்பது என் கருத்து. (பெரும்பாலான ஆங்கில அல்லது
இந்திய மொழிப் பதிப்பாளர்களின் நூல்கள் பாலிதீன் உறைகளுடன் வருவதில்லை, தமிழில்தான் இந்தப் போக்கு அதிகம் என்பதையும்
கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன்.)
எந்தவொரு நூலை வாங்கும்
முன்னாலும் அது என்ன சொல்ல வருகிறது, எழுதியவருக்கு என்ன
தகுதி என்று அறிந்தே வாங்க விரும்புகிறேன் நான். நீங்களும் அப்படித்தான் என்று
நம்புகிறேன். வரலாறு, சுயசரிதை போன்ற
நூல்களில் நூலாசிரியர் பற்றிய விவரம் இல்லை என்றால் அது விக்கிபீடியா போன்ற
இணையதளங்களிலிருந்து சுட்டு எடுத்து தமிழாக்கம் செய்தவை என ஊகிக்கலாம். பல பதிப்பாளர்களிடமும் என் கருத்துகளைத் தெரிவித்தும்கூட தமிழில்
பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை.
பதிப்புத்துறை அனுபவமும்
பதிப்புத்துறையோடு தொடர்பும் உள்ளவன் என்ற முறையிலும், ஏராளமான நூல்களை வாங்கிப் படிப்பவன் என்ற வகையிலும், நான் விரும்புவது அல்லது எதிர்பார்ப்பது என்ன என்று
தருகிறேன்.
பாலிதீன் உறையுடன் வருகிற
நூல் என்றால் --
1.
நூலைப்பற்றி ஒரு பத்தி. இயன்ற அளவுக்குச் சிறப்பாக அந்நூலை சாதகமாகச்
சித்திரிக்க வேண்டும். இதே துறையில் வந்திருக்கும் மற்ற நூல்களைவிட இது எவ்வாறு
வித்தியாசப் படுகிறது என்று காட்ட வேண்டும்.
2.
நூலாசிரியர் பற்றி ஒரு பத்தி. அதில் அவரது பிறந்த வருடம், (பிறந்த தேதி,
மாதம் தேவையில்லை), கல்வித்தகுதி - பணி
அனுபவம் (குறிப்பிடத்தக்கதாக இருந்தால் மட்டும்), தற்போது ஈடுபட்டுள்ள பணி, இலக்கிய அல்லது
எழுத்து அறிமுகம், அவருடைய படைப்புகள்
வெளிவந்த பத்திரிகைகளின் பெயர்கள், அவர் எழுதிய இதர
நூல்கள் ஆகிய விவரங்கள் தர வேண்டும். (பெற்றோர், மனைவி, குழந்தைகள், பேரக் குழந்தைகள் பெயர்கள் தேவையில்லை.)
3.
மொழியாக்க நூல் என்றால், மொழிபெயர்ப்பாளர்
விவரம் இருக்க வேண்டும். (எழுத்தாளர் அளவுக்கு இதை விரிவாகதர வேண்டியதில்லை.)
குறிப்பாக, அவர் மொழியாக்கம்
செய்த இதர நூல்களின் பட்டியல் இடம்பெற வேண்டும். அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளர் என்ற
நம்பிக்கை இதன்மூலம் கிடைக்கும். (கீழே உள்ள படத்தைக்
காண்க)
பாலிதீன் உறை இல்லாத நூல்
என்றால் --
- பின்னட்டையில் நூலைப்பற்றிய விவரம் - மேலே விளக்கியதுபோல .
- நூலைப்பற்றி பிரபலத்தின் மதிப்புரை அல்லது அத்துறைசார் வல்லுநரின் பாராட்டு அல்லது பத்திரிகைகளில் வெளியான மதிப்புரைகளிலிருந்து சில வரிகள் - பெயர்களுடன் இடம்பெறலாம்.
- முதல் பக்கத்தில், அல்லது ஹாஃப் டைடிலின் பின்புறத்தில் நூலாசிரியர் / மொழிபெயர்ப்பாளர் விவரம் தரலாம்.
- பக்க எண்களைப் பொறுத்து, அச்சுத்தேவைகளுக்காக கடைசியில் காலிப்பக்கம் வரும் என்றால், முதல் பக்கத்துக்குப் பதிலாக அதில் நூலாசிரியர் அல்லது மொழிபெயர்ப்பாளர் விவரங்களைத் தரலாம்.
சுருக்கமாகச் சொன்னால், நூலை எடுத்துப் பார்க்கிற நுகர்வோன்/வாசகன் அதை ஏன்
வாங்க வேண்டும் என்று நியாயப்படுத்தக்கூடிய விவரங்கள் நூலுக்குள் போகாமலே
அவனுக்குக் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
எழுதியவரின் படமும்
பின்னட்டையில் பாஸ்போர்ட் சைசில் இடம்பெறலாம். இது பதிப்பகத்தின் கொள்கையைப்
பொறுத்தது என்றாலும், பிரபலங்கள்
அல்லாதவர்களின் நூல்களில் படம் இருப்பது, அதுவும் அழகாக
இருப்பது, நூலை வாங்குவதற்கு
ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
கெட்டி அட்டை நூல்கள், மேலே தனி உறைகளைக் கொண்டவையாக வெளிவருவதும் உண்டு.
இவற்றில் –
- முன்பக்க உள்மடிப்பில் நூலைப்பற்றிய விவரம்.
- பின்பக்க உள்மடிப்பில் ஆசிரியர் / மொழிபெயர்ப்பாளர் பற்றிய விவரம்
- பின்னட்டையில் நூலைப்பற்றிய மற்றவர்களின் கருத்துகள் / பத்திரிகை மதிப்புரை / பிரபலத்தின் பரிந்துரை / நூலிலிருந்தே மிகச்சிறப்பான ஒரு பகுதி / அதே துறையின் இதர நூல்களின் விளம்பரங்களும் இடம்பெறலாம்.
- பின்னட்டையில் நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் விவரங்கள் இடம்பெற்றால், உள்மடிப்புகளில் நூலிலிருந்து சில பகுதிகளை இடம்பெறச் செய்யலாம்.
ஒரே பக்கத்தில் எல்லா
விவரங்களும் இடம் பெறுகின்றன என்று வைத்துக்கொள்வோம். நூலைப்பற்றிய விவரம் 10 வரிகள் என்றால், எழுதியவர் பற்றிய விவரங்கள் 8 வரிகள், மொழியாக்கம் செய்தவர் பற்றிய விவரங்கள் 6 வரிகள் என்ற வகையில் இருப்பது நல்லது.
*
பி.கு. 1. இது குழந்தைகளுக்கான நூல்களுக்குப் பொருந்தாது. அவை
பின்னட்டையிலும் படங்களைக் கொண்டிருக்கலாம். 2. மாதிரிக்கான படங்கள் இணையத்திலிருந்து
எடுத்தவை.
நல்லது.... முகநூலில் பதிவிட்டிருந்தாலும் இங்கு ப்ளாக்'இல் போட்டால் மேலும் நிறைய பேர் படிக்கலாம்... வலையில் தேடுவதும் எளிது... :)
ReplyDeleteஅருமையான வழி காட்டு நெறிகள் நண்பரே
ReplyDeleteநன்றி
நல்ல பகிர்வு சார்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.
ReplyDelete