பன்முகப் பண்பாட்டு
சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்
சிங்கப்பூரின் தமிழ்
இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம் – விடுதலைக்கு முந்தைய
சிங்கப்பூர் கதை, விடுதலைக்குப்
பிந்தைய சிங்கப்பூர் தமிழரின் கதை என்றார் ராம கண்ணபிரான். சிங்கப்பூரின்
இலக்கியவட்டத்தில் பிரபலமான எழுத்தாளர், பல நூல்களை
எழுதியிருப்பவர், விருதுகளைப்
பெற்றிருப்பவர். உலகப் புத்தகத் திருவிழாவின் சிங்கப்பூர் அரங்கில் ‘பன்முகப்
பண்பாட்டு சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
அவர் உரையாற்றினார்.
சிங்கப்பூரின் வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிக்கொள்கை, பள்ளிகளில் சீனம், மலேயமொழி, தமிழ் மூன்றும்
இரண்டாம் மொழிகளாக உள்ளமை என விரிவாகப் பேசினார். சிங்கப்பூரில் 1888இல் முதல் தமிழ் சிறுகதை எழுதியவர் மகதூன் சாயபு
என்றும், அவருடைய கதை
உரையாடல் வடிவில் அமைந்த்து என்றும் கூறியவர்,
தமிழ் நடையின் வளர்ச்சி குறித்தும் பேசினார். உதாரணமாக, ஜெயந்தியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள்
சிங்கிலீஷ் பேசும், பழனிவேலு கதைகளில்
சீனமும் மலாய் மொழியும் இருக்கும். இவருடைய கதைகள் தற்கூற்று முறையில்
அமைந்திருக்கும். இளங்கண்ணனின் வைகறைப்பூக்கள்,
இந்திய தேசிய ராணுவத்தினைப் பின்னணியாக்க் கொண்டது, என பல எழுத்தாளர்களை வரிசைப்படுத்தினார். பொதுவாக, சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர்கள் தமது
படைப்புகளில் நான்கு மொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பது அவரது
கருத்து.
தமிழ் கவிஞரும் எழுத்தாளரும்
தமிழ் முரசு ஆசிரியருமான கனகலதா தற்கால எழுத்துகள் குறித்துப் பேசினார்.
சிங்கப்பூரின் ஆரம்பகால எழுத்துகள் தமிழ்நாட்டின் தாக்கத்தைக் கொண்டிருந்தன.
இப்போது தமக்கான அடையாளத்தைக் கொண்டவையாக மாறியிருக்கின்றன என்றார். தமிழ்ப்
படைப்புகள் மற்ற மொழியினராலும், மற்ற மொழிப்
படைப்புகள் தமிழர்களாலும் எவ்வாறு வரவேற்கப்படுகின்றன என்று கேட்டேன்.
மொழியாக்கமும், பதிப்புக்கு
நிதியுதவி செய்யும் நிறுவனங்களும் இதில் பெரிதும் பங்களிக்கின்றன என்றார்.
உதாரணமாக, பாடநூல்களில்
இடம்பெறும் கவிதைகளில் மூன்று மொழிக் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்யப்பட்டு இடம்பெறுகின்றன என்றார். தவிர,
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கப்பூர் இலக்கிய விருதுகளும்
வழங்கப்படுகின்றன.
கிரிம்சன் எர்த் என்னும்
பதிப்பகத்தின் விற்பனைத்துறை மேலாளர் விஜய் தாமோதரனும் பேசினார். நேஷனல் ஆர்ட்ஸ்
கவுன்சில் போன்ற அரசு அமைப்புகளின் ஆதரவு எழுத்தாளர்களுக்கு பெரும் உதவியாக
இருக்கிறது.
நிகழ்ச்சியின்போது, ராம கண்ணபிரான் எழுதிய வாழ்வு என்னும் சிறுகதைகளின்
தொகுப்புநூலும் வெளியிடப்பட்டது. இந்நூலின் நாயகி பூங்கோதை ஓர் ஆசிரியர். தமிழ்க்
குழந்தைகள் ஏன் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற வருத்தமே இந்தக் கதையின்
மையக்கரு. இது சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, தில்லிக்கும்
பொருந்தும். புலம்பெயர் சமூகங்கள் போகும் இடங்களிலெல்லாம், அவர்களுடைய குழந்தைகள் உள்ளூர் மொழியைக் கற்பதில்
காட்டும் ஆர்வம் தாய்மொழியில் இருப்பதில்லை. சுற்றுச் சூழல் இதன் பிரதான காரணமாக
இருக்கிறது.
இந்தியாவைப் போன்றே
சிங்கப்பூரும் பன்முகப் பண்பாடும், பல இனங்களும் பல
மொழிகளும் கொண்ட நாடு என்பதால் இந்தியாவும் சிங்கப்பூரும் பரஸ்பரம் பகிர்ந்து
கொள்ள நிறையவே உண்டு.
//தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற வருத்தமே இந்தக் கதையின் மையக்கரு. இது சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, தில்லிக்கும் பொருந்தும்.//
ReplyDeleteதில்லிக்கும் பொருந்தும்!
உண்மை தான்.....