Saturday, 7 May 2016

தேர்தல் நடத்தை நெறிமுறைகள்

தேர்தல் ஆணையத் தளத்திலிருந்து மொழியாக்கம் செய்தது. இன்றைய நிலையில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை சுமார் இரண்டு லட்சத்து பதினைந்தாயிரம் கோடி. எப்படி நிதிநிலைமையை சரி செய்யப்போகிறோம் என்ற கவலையின்றி இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளி வீசுகின்றன கட்சிகள். எப்படி நிறைவேற்றுவார்கள் என்ற கேள்வியே இன்றி நம்பப் போகிறார்கள் அப்பாவி வாக்காளர்கள். வாக்குறுதிகள் பற்றிய கடைசி பகுதி கவனத்துக்குரியது.



இந்திய தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான நடத்தை நெறிமுறைகள்

I. பொது நடத்தை
(1) நடப்பில் இருக்கிற வேறுபாடுகளை தூண்டக்கூடிய எந்தச் செயலிலும் எந்தக் கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது; அல்லது பரஸ்பர வெறுப்பைத் தூண்டவோ அல்லது பல்வேறு சாதிகள், மற்றும் மதம் சார்ந்த-மொழிசார்ந்த சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது.
(2) கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ மற்ற அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, அது அவர்களுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் மற்றும் பணிகளைப் பற்றியதாக மட்டுமே இருத்தல் வேண்டும். தலைவர்கள் அல்லது தொண்டர்களின் பொதுவாழ்க்கை நடவடிக்கைகளோடு தொடர்பற்ற வகையில் தனிப்பட்ட வாழ்க்கையின் எந்த அம்சங்களையும் விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அல்லது திரித்தல்களைத் தவிர்க்க வேண்டும்.
(3) வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது மத உணர்வுகளின் பேரால் வேண்டுகோள் விடுக்கக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் அல்லது இதர வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கான மேடையாகப் பயன்படுத்தக்கூடாது.
(4) தேர்தல் சட்டத்தின்படி ஊழல் நடவடிக்கைகள் அல்லது தேர்தல் குற்றங்கள் என்று சொல்லக்கூடியதான, வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது, வாக்காளர்களை அச்சுறுத்துவது, போலி வாக்காளர்களாக்குவது, வாக்குச் சாவடியிலிருந்து 10 மீட்டருக்குள் பிரச்சாரம் செய்வது, வாக்களிக்கும் நேரத்திற்கு முன் 48 மணிநேரத்திற்குள் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்துவது, வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வர போக போக்குவரத்து மற்றும் போக்குவரத்துச்செலவு தருவது போன்ற நடவடிக்கைகளை கட்சிகளும் வேட்பாளர்களும் முற்றிலுமாகத் தவிர்த்தாக வேண்டும்.
(5) ஒரு நபரின் அரசியல் கருத்துகள் அல்லது நடவடிக்கைகள் ஒரு கட்சி அல்லது வேட்பாளரால் ஏற்க முடியாததாக இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரின் அமைதியான, இடையூறற்ற இல்ல வாழ்க்கையை மதிக்க வேண்டும். அவர்களுடைய கருத்துகள் அல்லது செயல்பாடுகளுக்கு எதிர்ப்புக் காட்டுவது என்ற பெயரில் வீடுகளின் முன்னால் ஆர்ப்பாட்டம் அல்லது முற்றுகை போன்ற செயல்களை எந்தச் சூழலிலும் செய்யக்கூடாது.
(6) எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் எந்தவொரு தனிநபரின் நிலம், கட்டிடம், மதில்சுவர் போன்றவற்றை அவருடைய அனுமதியின்றி கொடி ஏற்றவோ, பதாகைகளை தொங்க விடவோ, கோஷங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ பயன்படுத்த தனது ஆதரவாளர்களை அனுமதிக்கக்கூடாது.
(7) அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் மற்ற கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு தமது ஆதரவாளர்கள் இடையூறு செய்யாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் அல்லது ஆதரவாளர்கள் மற்றொரு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் வாய்மொழி அல்லது எழுத்து வடிவில் கேள்விகள் எழுப்புவது, அல்லது தமது கட்சியின் துண்டறிக்கைகளை விநியோகம் செய்வது போன்ற செயல்களால் இடையூறு விளைவிக்கக்கூடாது. ஒரு கட்சி நடத்தும் கூட்டங்களின் பாதையில் மற்றொரு கட்சி ஊர்வலம் நடத்தக்கூடாது. ஒரு கட்சி ஒட்டிவைத்த சுவரொட்டியை மற்றொரு கட்சியின் ஊழியர்கள் நீக்க்க்கூடாது.


II. பொதுக்கூட்டங்கள்
(1) ஓர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தான் நடத்த இருக்கும் பொதுக்கூட்டத்தின் இடம் மற்றும் நேரம் குறித்து உரிய நேரத்துக்கு முன்பாகவே, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதற்கேற்ற வகையில், உள்ளூர் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
(2) ஒரு கட்சி அல்லது வேட்பாளர் தாம் நடத்தவிருக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் கட்டுப்பாட்டு அல்லது தடை ஆணை ஏதும் நடப்பில் உள்ளதா என்று முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்; அப்படி ஏதும் இருந்தால், அதை கறாராகப் பின்பற்ற வேண்டும். அத்தகைய ஆணைகளிலிருந்து விலக்குப் பெற வேண்டுமானால், உரிய காலத்தில் விண்ணப்பித்துப் பெற வேண்டும்.
(3) உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ஒலி பெருக்கிகள் அல்லது வேறு ஏதேனும் வசதிகளைப் பயன்படுத்த அனுமதி அல்லது லைசென்ஸ் தேவைப்படுமானால், அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு முன்னதாகவே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
(4) பொதுக்கூட்டம் நடத்துகிறவர்கள் யாராக இருந்தாலும், கூட்டத்துக்கு இடையூறு விளைவிப்பவர்கள் அல்லது குழப்பத்தை விளைவிப்பவர்களைக் கையாள்வதற்கு பணியில் உள்ள காவலர்களின் உதவியை நாட வேண்டும். அத்தகைய நபர்களுக்கு எதிராக அவர்களே நடவடிக்கை எடுக்கக்கூடாது.

III. ஊர்வலங்கள்
(1) ஊர்வலம் நடத்த இருக்கிற ஒரு கட்சி அல்லது வேட்பாளர் ஊர்வலம் துவங்க இருக்கும் இடம் மற்றும் நேரம், செல்ல வேண்டிய பாதை, முடிவடையும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, நிகழ்ச்சி நிரலிலிருந்து மாற்றம் ஏதும் இருக்கக்கூடாது.
(2) உள்ளூர் காவல் அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏதுவாக ஊர்வலம் நடத்த இருப்பவர்கள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்.
(3) ஊர்வலம் கடந்து செல்லும் பகுதிகளில் தடையாணைகள் ஏதும் நடப்பில் உள்ளதா என்பதை ஊர்வலம் நடத்துபவர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும், உரிய அதிகாரியால் விதிவிலக்கு அளிக்கப்பட்டாலன்றி, தடையாணைகளைப் பின்பற்ற வேண்டும். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் ஏதும் இருந்தால் அவையும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
(4) ஊர்வலம் நடத்துபவர்கள் போக்குவரத்துக்குத் தடையோ அல்லது இடையூறோ இல்லாமல் ஊர்வலம் நகர்ந்து செல்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னதாகவே மேற்கொள்ள வேண்டும். ஊர்வலம் மிகவும் நீளமாக இருந்தால், குறிப்பாக சாலைச் சந்திப்புகள் இருக்கும் இடங்களில் போக்குவரத்துக்கு கடும் நெரிசல் ஏற்பட்டு விடாதபடி, போதுமான நீளத்துக்கேற்ப பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல போதுமான இடைவேளைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
(5) ஊர்வலங்கள் இயன்ற வரையில் சாலையின் வலதுபுறத்திலேயே அமைய வேண்டும், செல்ல வேண்டிய திசை மற்றும் பணியில் உள்ள காவலர்களின் அறிவுரை கறாராகப் பின்பற்றப்பட வேண்டும்.
6) இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஒரே பாதையில் அல்லது அதே பகுதியில் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால், ஊர்வலங்களுக்கிடையே மோதலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறோ ஏற்படாத வகையில் ஊர்வலம் நடத்துபவர்கள் முன்னதாகவே தொடர்புகளை திட்டமிட வேண்டும். திருப்திகரமான ஏற்பாட்டு முடிவை எட்டுவதற்கு உள்ளூர் காவல்துறையின் உதவியைப் பெறலாம். இதற்காக, அரசியல் கட்சிகள் காவல்துறையை இயன்ற வரை முன்னதாகவே தொடர்பு கொள்ள வேண்டும்.
(7) ஊர்வலத்தில் பங்குபெறுவோர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்து அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் உச்ச அளவுக்கு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும், ஏனெனில், விரும்பத்தகாத சக்திகளால் உணர்ச்சி வேகத்தில் அவை தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடும்.
(8) மாற்று அரசியல் கட்சிகள் அல்லது அதன் தலைவர்களைக் குறிக்கும் உருவபொம்மைகளைத் தூக்கிச் செல்லுதல், பொது இடத்தில் எரித்தல் மற்றும் அதுபோன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தல் ஆகியவற்றை எந்தவொரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.

IV. வாக்களிப்பு நாள்
எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும்
(i) அமைதியான, ஒழுங்கான முறையில் வாக்களிப்பு நடைபெறுவதையும், வாக்காளர்கள் எந்தவித இடையூறோ அச்சுறுத்தலோ இல்லாமல் சுதந்திரமாக வாக்களிப்பதையும் உறுதி செய்ய தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ii) தமது ஊழியர்களுக்கு உரிய பேட்ஜ்கள் அல்லது அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.
iii) வாக்காளர்களுக்கு அவர்கள் வழங்கும் அடையாளத் துண்டுச்சீட்டுகள் வெள்ளைக் காகிதத்தில், எந்தவித சின்னமோ, வேட்பாளர் பெயரோ, கட்சியின் பெயரோ இல்லாதிருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
(iv) வாக்களிப்பு நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு மதுபானங்களை வழங்கவோ, விநியோகிக்கவோ கூடாது.
(v) கட்சிகளின் தொண்டர்கள், அனுதாபிகள் இடையிலும் வேட்பாளர்களுக்கு இடையிலும் மோதல்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டி, வாக்குச்சாவடிக்கு அருகே அமைக்கப்படும் முகாம்களில் தேவையில்லாத கூட்டம் சேர விடக்கூடாது.
(vi) வேட்பாளர் முகாம் எளிமையாக இருக்க வேண்டும். போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது வெறெந்த பிரச்சாரப் பொருளும் இருக்கக் கூடாது. உணவுப் பொருள் ஏதும் வழங்கக் கூடாது, கூட்டம் சேர்க்கக்கூடாது.
(vii) வாக்களிப்பு நாளில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்த கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும், வாகனங்களுக்கான அனுமதிகளைப் பெற்று அவற்றை வாகனங்களில் தெரியுமாறு காட்சிக்கு வைக்க வேண்டும. 

V. வாக்குச் சாவடி
வாக்காளர்களைத் தவிர, தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான அனுமதி வைத்திருப்பவர்கள் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிக்குள் நுழையக்கூடாது. 

VI. பார்வையாளர்கள
தேர்தல் ஆணையம் பார்வையாளர்களை நியமனம் செய்கிறது. தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களுக்கு ஏதும் புகாரோ அல்லது பிரச்சினையோ இருந்தால், பார்வையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். 

VII. ஆட்சியில் இருக்கும் கட்சி
மத்தியில், மாநிலத்தில், அல்லது மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சி, தனது அதிகாரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது என்ற புகார் எழாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக
(i) (a) அமைச்சர்கள் தமது அலுவல்ரீதியான பயணங்களை தேர்தல் வேலைகளுடன் இணைக்கக்கூடாது, அலுவலக எந்திரங்கள் அல்லது ஊழியர்களை தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது;
(b) விமானங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அரசுப் போக்குவரத்துகள், சாதனங்கள் மற்றும் ஊழியர்களை ஆட்சியில் இருக்கும் கட்சியின் லாபத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது;
(ii) பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான மைதானங்கள் போன்ற பொது இடங்கள், தேர்தலுக்காகப் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் தளங்கள் போன்றவற்றை தனக்கு மட்டுமே ஏகபோகம் ஆக்கிக்கொள்ளக் கூடாது. அதிகாரத்தில் இருக்கும் கட்சி எந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின்கீழ் அவற்றைப் பயன்படுத்தியதோ அதே விதிகளின்கீழ் மற்ற கட்சிகளும் வேட்பாளர்களும் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்;
(iii) ஓய்வில்லங்கள், அரசு பங்களாக்கள், அல்லது இதர அரசு இருப்பிடங்கள் ஆகியவை அதிகாரத்தில் இருக்கும் கட்சி அல்லது வேட்பாளரின் ஏகபோகம் ஆகவிடக் கூடாது. அவற்றை இதர கட்சிகள் அல்லது வேட்பாளர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் இத்தகைய கட்டிடங்களை (மேலே சொல்லப்படாத கட்டிடங்கள் உள்பட) பிரச்சார அலுவலகமாகவோ, தேர்தல் பிரச்சாரத்துக்கான பொதுக்கூட்டத்துகாகவோ பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்த அனுமதிக்கவும் கூடாது;
(iv) பொதுப்பணத்தில் (அரசு நிதியில்) செய்தித்தாள்கள் மற்றும் இதர ஊடகங்களில் விளம்பரம் தருவது, தேர்தல் காலத்தில் அரசு ஊடகத்தை தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்துவது, செய்திகளை பாரபட்சமான முறையில் வெளியிடுவது, அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் வகையில் சாதனைகளை விளம்பரம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
(v) தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்க்ப்ப்ட்ட பிறகு, அமைச்சர்களும் இதர அதிகார அமைப்புகளும் தமக்குத் தனியுரிமை உள்ள மானியங்கள் /நிதிக்கொடைகளை வழங்க்க் கூடாது;
(vi) தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அமைச்சர்களும் இதர அதிகார அமைப்புகளும்
(a) எந்தவித வாக்குறுதிகளின் அடிப்படையிலும் எந்தவித நிதி மானியங்களையும் அறிவிக்கக்கூடாது; அல்லது
(b) (குடிமைத்துறை அதிகாரிகள் தவிர) திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது; அல்லது
(c) சாலைகள் அமைப்போம், குடிநீர் வழங்குவோம் போன்ற வாக்குறுதிகளை வழங்கக்கூடாது; அல்லது
(d) அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களின்மீது தாக்கம் செலுத்தும் வகையில் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக நியமனங்கள் ஏதும் செய்யக்கூடாது.
(vii) மத்திய அல்லது மாநில அரசுகளின் அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் தான் ஒரு அமைச்சர் என்ற அந்தஸ்தில் நுழையக்கூடாது, வேட்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் என்ற வகையில் மட்டுமே நுழையலாம்.



VIII  தேர்தல் அறிக்கைகள்
1. தேர்தல் அறிக்கைகளில் என்ன இடம் பெற வேண்டும் என்பது குறித்து, சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தமிழ்நாடு அரசு மற்றும் பலருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து தேர்தல் அறிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. (5th July 2013 in SLP(C) No. 21455 of 2008)
(தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுவது குறித்தான இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முழு விவரத்தையும் தவிர்த்துவிட்டு நெறிமுறைகளை மட்டும் கீழே தருகிறேன்.)
...
2. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்தபிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் அறிக்கை குறித்து அவர்களின் பல்வேறுபட்ட கருத்துகளைப் பெற்றது.
ஆலோசனைக் கூட்டங்களின்போது, வாக்குறுதிகள்-சலுகை அறிவிப்புகள் பற்றிய நெறிமுறைகளுக்கு சில கட்சிகள் ஆதரவளித்தன. வாக்குறுதிகளையும் சலுகைகளையும் தருவது வாக்காளர்களின்பால் தமக்குள்ள உரிமையும் கடமையுமாகும், இதுவே ஆரோக்கியமான ஜனநாயகம் என்று சில கட்சிகள் கருதின. தேர்தல் அறிக்கை தயாரிப்பது அரசியல் கட்சிகளின் உரிமை என்பதை கொள்கையளவில் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் சில வாக்குறுதிகள் மற்றும் சலுகைகள் குறித்த உறுதிமொழிகள் நேர்மையான, நியாயமான தேர்தலுக்கும், சம்மான போட்டிக்கும் குந்தகமான விளைவுகளை எற்படுத்தக்கூடும் என்பதையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.  
3. நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. நேர்மையான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஆணையைக் கருத்தில் கொண்டும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியும், தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது:-
(i) அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள இலட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் முரணான எதுவும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடாது. தேர்தல் நடத்தை நெறிமுறையில் தரப்பட்டுள்ள நோக்கங்கள் மற்றும் விதிகளுக்கு இசைந்த்தாக இருக்க வேண்டும்.
(ii) அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள அரசுக் கொள்கைகளுக்கான நெறிப்படுத்துக் கோட்பாடுகள், அரசுகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து வரையறை செய்கிறது. ஆகவே, அத்தகைய நலத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதில் எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. இருப்பினும், தேர்தலின் புனித்த் தன்மையை மீறுகிற அல்லது வாக்காளர்கள் மீது முறையற்ற தாக்கம் செலுத்துகிற வகையில் எந்த வாக்குறுதிகளையும் அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

(iii) வெளிப்படைத்தன்மை, சமமான போட்டி, உறுதிமொழிகளில் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, தேர்தல் வாக்குறுதிகளின் பின்னால் இருக்கும் நியாயத்தையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதித் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வார்கள் என்பதையும் தேர்தல் அறிக்கை கூற வேண்டும். சாத்தியமுள்ள, நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

கதம்பம் - தேர்தல் நேரக் கிறுக்கல்கள்

அம்மா அறிக்கை
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் கண்மூடித்தனமாக அறிவிக்கப்படக்கூடாது.
தேர்தல் வாக்குறுதிகளின் பின்னால் இருக்கும் நியாயத்தையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதித் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வார்கள் என்பதையும் தேர்தல் அறிக்கை கூற வேண்டும். சாத்தியமுள்ள, நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.என்று தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன.

இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், இலவச வைஃபை, இலவச செல்போன், 100 யூனிட் மின்சாரம் இலவசம், ஸ்கூட்டருக்கு மானியம், இலவச ஆடுகள், இலவச மாடுகள், 500 ரூபாய்க்கு இலவச கைத்தறி ஆடைகள், இலவச செட்டாப் பாக்ஸ்....

நிதிநிலைமை குறித்த எந்தக் கவலையுமின்றி அடித்து விட்டிருக்கிற அம்மா தேர்தல் அறிக்கை, அவர் எந்த அளவுக்கு மக்களை முட்டாளாகக் கருதுகிறார், காலம் காலமாக முட்டாள்களாகவே வைத்திருக்க முடியும் என்று நம்புகிறார் என்பதையே காட்டுகிறது. அதிமுகவை வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
(தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முழுதும் நாளை பதிவாக வெளிவரும்)
*
ஒரு சந்தேகம்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே...
காட்சிதந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா...
அம்மா... நீ சுமந்த பிள்ளை...
அம்மா என்றால் அன்பு...
அம்மாவும் நீயே...
ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா...
போன்ற பாடல்களை மட்டுமே அம்மா போனில் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் வைக்கும் வகையில் செட்டிங் செய்தே தரப்படுமோ?
*
முழியாக்கம்

Sponsored என்ற சொல்லுக்கு தமிழில் என்ன தெரியுமா?
கருணாநிதி என்கிறது கூகுள். நீங்களே பாருங்களேன்!


 *
இலவசங்களை நம்பி வாக்களிப்பவர்கள் இந்த வீடியோவைப் பாருங்கள்...
இந்த அடி உங்கள் தலையில்தான் விழுகிறது என்று அர்த்தம்.
*
யாருக்கு வாக்களிக்கலாம்?

வெற்றி பெறுகிற கட்சிக்கே வாக்களிக்க வேண்டும், என்பதான சிந்தனை பொதுவாக நிலவுகிறது. இதுவே தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது. இது, அவசியமில்லாதது மட்டுமல்ல. தவறானதும் கூட.

பெரும்பாலோர் நாட்டின் முன்னேற்றத்தில் நம்பிக்கையின்றி இருந்த போதிலும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் ஜெயிப்பது பற்றி அலட்டிக் கொள்ளாமல் நேர்மையான கொள்கைக்கு நமது வாக்கினைச் செலுத்துவது.

தனிப் பெரும்பான்மை பெற்ற அரசின் சர்வாதிகாரத்தால் மக்களுக்கு நிகழும் கொடுமை கூடுதலாயும், தொங்கு நாடாளுமன்றம் / சட்டமன்றம் ஏற்படுவதால் மக்களுக்கு நிகழும் கொடுமை குறைவானதாகவும் இருக்கும் என்பதையே இந்திய மக்களாட்சி வரலாறு நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

எனவே, "எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விடுமே" - என்று கவலைப் பட்டால் அது கட்சி அபிமானக் கவலையே தவிர, மக்களைப் பற்றிய கவலை அல்ல. உங்கள் மனதிற்கு நேர்மையாய் படும் மக்கள் பிரதிநிதிக்கு மட்டுமே உங்கள் வாக்கினைத் தாருங்கள்.


சட்ட மன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் சிறிய கட்சி இருந்தால் அவற்றுக்கு வாக்களிக்கலாம்.

Friday, 6 May 2016

தேர்தலும் கருத்துக் கணிப்புகளும்

தேர்தல் கருத்துக் கணிப்புகள் இந்தியாவில் 1960களில் துவங்கின. ஆரம்பத்தில் வெறும் 500 வாக்காளர்களில் துவங்கியது, 1970களில் 10000 ஆனது, இப்போது 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை எட்டியிருக்கிறது. அதாவது, நாடு முழுமைக்குமான நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிலை.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 81 கோடி. கருத்துக்கணிப்புகளில் பதிலளித்தவர்கள் சுமார் ஒரு லட்சம். இப்படிப்பட்ட கணிப்புகள் உண்மை நிலையை சித்திரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒப்பீட்டில், கருத்துக்கணிப்புகளை விட தேர்தல் நாள் கணிப்புகள் முடிவுகளுக்கு சற்றே நெருங்கி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவையும் தோல்வி கண்டது உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 165 முதல் 200 இடங்கள் வரை பிடிக்கும், காங்கிரஸ் கூட்டணி 175 முதல் 235 வரை பிடிக்கும் என்று பல்வேறு கணிப்புகள் கூறின. நடந்தது என்ன? பாஜக கூட்டணி 157, காங்கிரஸ் கூட்டணி 262.

2014 தேர்தல் சற்றே வித்தியாசமானது. மோடியை முன்னிறுத்தியது பாஜக. எனவே கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு வெகுகாலம் முன்பே துவங்கி விட்டன. 2013 ஜனவரியில் துவங்கி, 2014 ஏப்ரல் வரை தொடர்ந்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. 2013 ஜனவரியில் காங்கிரஸ் கூட்டணி 150 இடங்கள் வரை பிடிக்கும் என்றிருந்தது, 2014 ஏப்ரலில் 120 எனக் குறைந்தது. 2013 ஜனவரியில் பாஜக கூட்டணி 180 இடங்களைப் பிடிக்கும் என்ற மதிப்பீடு, 2014 ஏப்ரலில் 250 வரை எட்டியது. எக்சிட் கணிப்புகள், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 முதல் 150 இடங்கள் வரையும், பாஜக கூட்டணிக்கு 270 முதல் 350 இடங்கள் வரையும் அளித்தன. உண்மையில் நடந்தது என்ன? பாஜக கூட்டணி 336 இடங்களைப் பிடித்தது, காங்கிரஸ் கூட்டணி வெறும் 60 இடங்களையே பிடித்தது. இதில் சி-வோட்டர் கணிப்புதான் முடிவுகளுக்கு சற்றே நெருங்கி வந்தது.

தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை விட்டு விட்டு, தமிழக அளவில் அலசிப் பார்ப்போம்.
2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் அதிமுக அணி 164 இடங்களும், திமுக அணி 105 இடங்களும் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டது. வாக்களிப்பு நாள் கணிப்பில் எக்சிட் போலில், அதிமுக அணி 100 முதல் 130 இடங்களும், திமுக 100 முதல் 130 இடங்களும் பிடிக்கும் என பல்வேறு கணிப்புகள் கூறின. நடந்த்து என்ன? அதிமுக கூட்டணி 203, திமுக கூட்டணி வெறும் 31. (இங்கும் எக்சிட் போலில் சி-ஓட்டர் கணிப்பு மட்டும்தான் பெருமளவு நெருக்கமாக வந்தது.)

2006 தமிழக தேர்தல் கணிப்புகள் தேர்தலுக்கு முந்தைய கணிப்பும், தேர்தல் நாள் கணிப்பும் உண்மை முடிவுகளுக்கு நெருக்கமாக இருந்தன. இத்தேர்தலில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் அதிமுக அணியில் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாமகவும் திமுக அணியில் இருந்தன.

தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கொட்டை போட்ட நிறுவனங்களின் கணிப்புகே இந்தக் கதி என்றால், நியூஸ்7, தினமலர், வகையறாக்களின் கணிப்புகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியுமா? அரித்மெடிக் கணிப்பு வாக்குகளின் விகிதத்திலான மதிப்பீட்டை செய்து பார்ப்போம். இது கடந்த தேர்தல் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், வாக்குகளின் அடிப்படையிலான மதிப்பீடு மட்டுமே.

நடக்கவிருக்கும் தேர்தல் முந்தைய தேர்தல்களைவிட வித்தியாசமானது. அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்த் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியாக சேர்ந்து விட்டன. திமுகவில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளும் ம.ந.கூ.வில் இருக்கிறது. திமுக அணியில் இருந்த பாமக இப்போது தனியாக இருக்கிறது, காங்கிரஸ் திமுகவிலேயே இருக்கிறது. காங்கிரசிலிருந்து பிரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் ம.ந.கூ.வில் இருக்கிறது.

ஆக, முந்தைய தேர்தலில் அதிமுக கூட்டணிக்குக் கிடைத்த 51.9% அப்படியே இப்போதும் இருக்காது. திமுகவுக்குக் கிடைத்த 39.5% இப்போதும் இருக்காது.

2006 தேர்தலில் திமுக அணி பெற்றது 44.8%, அதிமுக அணி பெற்றது 40%. தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக பெற்றது 8.4%. திமுகவுக்கு தனியாகக் கிடைத்தது 26.5%, அதிமுகவுக்குத் தனியாகக் கிடைத்த்து 32.6%. ஆக, கூட்டணி காரணமாகவே திமுக ஆட்சியைப் பிடித்தது என்பது தெளிவு. எனவே, கடந்த தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவிகித பலத்தை வைத்து கணிப்பது இந்த முறை சாத்தியமே இல்லை அதிமுகவைத் தவிர்த்து.

கடந்த தேர்தலில் அதிமுக தனியாகப் பெற்றது 38.34%. திமுக தனியாகப் பெற்றது 22.4%. அதிமுக தோல்வி கண்ட 2006இல் கிடைத்த 32.6% அதன் பலம் என்று கொண்டால், அதன் செல்வாக்கு சற்றே சரிந்த்து என்றே வைத்துக்கொண்டாலும், திமுகவில் இருந்த கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய கட்சிகள் இல்லாத நிலையில், அரித்மெடிக் கணக்கில் திமுகவின் நிலைமை கவலைக்குரியதுதான்.

அதேபோல, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த வாக்காளர்களில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பதை வைத்து கணக்கிடுவது சாத்தியமே இல்லை. தொகுதிக்குத் தொகுதி தேர்தல் முடிவுகள் வேறுபடும்.

மற்றொரு முக்கிய அம்சம் முடிவு செய்யாத வாக்காளர்கள். இவர்கள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள்.
2006 தேர்தலில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் திமுக-அதிமுக கடும்போட்டி என்ற நிலை இருந்த்து. திமுக அணிக்கு 44%, அதிமுக அணிக்கு 46% என கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் திமுக அணி வென்றது. கிடைத்தது 44.8%. அதிமுக அணி தோற்றது. கிடைத்தது 39.9%. கடைசி நேரத்தில் முடிவு செயதவர்கள் காரணமாக அதிமுகவுக்கு 6% குறைந்தது. அது திமுகவுக்கு சாதகமாகவில்லை, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றது.

2011 தேர்தலின்போது கருத்துக்கணிப்புகள் திமுக அணிக்கு 50%, அதிமுக அணிக்கு 49% – கடும்போட்டி என்று காட்டின. தேர்தல் நாள் எக்சிட் போலில், திமுக 48%, அதிமுக 46% என வந்தது. உண்மையில் அதிமுக அணி பெற்றது 52%, திமுக அணி 40%. கடைசி நேரத்தில் முடிவு செய்தவர்கள் காரணமாக அதிமுகவுக்கு 6% அதிகரித்தது, திமுகவுக்கு 8% குறைந்தது.


தேர்தல் கணிப்புகளை நம்பிக்கொண்டிருக்கிற, அல்லது அவற்றின் அடிப்படையில் விவாதித்துக் கொண்டிருக்கிற, சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிற, சண்டை போட்டுக் கொண்டிருக்கிற நண்பர்கள் மேலே இருக்கும் கேலிச்சித்திரத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.