Saturday, 25 June 2016

சினிமாவும் கினிமாவும்

படச்சுருள் இதழ் கைக்கு வந்தது. திறந்ததும் உள்ளடக்கத்தைப் பார்த்தேன். முக்தா சீனிவாசன் எழுதிய தமிழ் சினிமாவின் பெண் தயாரிப்பாளர்கள்என்ற கட்டுரை முதலில் கவனத்தை ஈர்த்தது. தமிழில் முதல் பேசும் படமான காளிதாசில் நடித்த டி.பி. ராஜலட்சுமி என்ற பெயரைப் பார்த்ததும் மனதுக்குள் மணியடித்தது.



தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, மணமான பின் வரதட்சணைக் கொடுமையால் பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்தவர். பிழைப்புக்கு என்ன செய்வது என்று கலங்கி இருந்த நேரத்தில், அவருடைய சங்கீத ஞானம் கைகொடுத்தது. சி.எஸ் சாமண்ணா அய்யர் என்பவரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் திரைப்பட நடிகையாகி, தமிழின் முதல் பெண் படத் தயாரிப்பாளர் ஆனார். 1936இல் வெளிவந்த மிஸ் கமலா திரைப்படத்தின் கதை வசனம் இயக்கம் தயாரிப்பு எல்லாமே இவர்தான். மேற்கண்ட கட்டுரையில் வந்த இந்த விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ். இதைத் தயாரித்தவர் தமிழர் அல்லர், பம்பாய்க்காரர் - அர்தேஷிர் இரானி. இந்தியாவிலேயே முதல் பேசும்படம் ஆலம் ஆரா 1931இல் வெளிவந்தது. அதைத் தயாரித்தது, இரானியின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனி. ஆலம் ஆரா தயாரிக்கப்பட்ட அதே அரங்கில்தான் காளிதாசும் தயாரிக்கப்பட்டது. இதில் நாயகி டி.பி. ராஜலட்சுமி. (இதற்குப் பிறகு சிவாஜி நடித்த மகாகவி காளிதாஸ் உள்பட பல காளிதாஸ்கள் வந்து விட்டன. அவற்றை இந்தக் கட்டுரையுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.)

காளிதாஸ், மகாகவி காளிதாசன் பற்றிய கதை. காளிதாசன் கதை தெரியும் அல்லவா? நுனிக்கிளையில் உட்கார்ந்து மரத்தை வெட்டும் அளவுக்கு முட்டாளாக இருந்தவன் காளியின் அனுக்கிரஹத்தால் கவிஞன் ஆகிறான். இந்தக் கதையில் நாயகி என்ன பாடல் பாடுகிறாள்?
இந்தியர்கள் நம்மவர்க்குள்
ஏனோ வீண் சண்டை?
இந்தியரே! நம்மவரை
வந்தவர்கள் ஆட்சி செய்ய
தந்திர உபாயம் நமது
சுயச் சண்டையே!
ஒருதாய் வயிற்றில் வந்த
உத்தம சகோதரர் நாம்
பெருகு மதஜாதி
பேதம் பேசலாகுமோ?
இந்து முசல்மான் ஒற்றுமை
நிறைந்த அல்லாகு அக்பர்
வந்தேமாதம் புகன்று
வாழந்திடுவோம்!

பாடலைப் பாடி நடித்தவர் டி.பி. ராஜலட்சுமி. இதில் இன்னொரு பாட்டுக்கு குறத்தி நடினம் ஆடியவர் மிஸ் ஜான்சி பாய். குறத்தி நடனப் பாட்டு
ராட்டினமாம் காந்தி கைபாணமாம்
பாரில் நம்மைக் காக்கும் பிரபாணம் சுதேசியே!

எந்தக் கதையாக இருந்தாலும், எந்தப் படமாக இருந்தாலும் அதில் தேசபக்தியையும் புகட்டிய அன்றைய திரைப்படங்களைப் பற்றி இப்போது பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கிறது.

இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்ல வேண்டும். காளிதாஸ் பாட்டுப் புத்தகத்தில் பாட்டுகளை எழுதியவர் பெயர் இல்லை. ஆனால் குறத்தி நடனப் பாட்டில் அதற்கான குறிப்பு இருக்கிறது.
வீட்டுக்கு வீடது மெய்யாக வேண்டுமே
மீட்சி பெறத் தூண்டுமே பாஸ்கரன்
ஆட்சி பிறந்தாண்டுமே!
ஆம், மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்கள்தான் இவை. குறத்தி டான்சில் வந்த மிஸ் ஜான்சி வேறு யாருமல்ல, அதே ராஜலட்சுமிதான்.

இப்படி இன்னும் பல விவரங்களைத் தந்துதவிய நூல் - அறந்தை நாராயணன் எழுதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுதந்திரப் போரில் தமிழ் சினிமா. 1980களில் வாசித்த நூலை மீண்டும் ஒரு முறை வாசிக்கும் வாய்ப்புக் கொடுத்தவர் சுரேஷ் கண்ணன். அவருக்காக நான் எடுத்து வைத்த சினிமா தொடர்பான நூல்களில், தன்னிடம் இந்த நூல் ஏற்கெனவே இருக்கிறது என்று சொன்னதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகள்.

காளிதாஸ் திரைப்படத்தைப் பார்த்த கல்கி, 1931 நவம்பர் 16 ஆனந்தவிகடன் இதழில் விமர்சனம் எழுதினார். அவருக்கே உரித்தான எள்ளலுடன் கூடிய விமர்சனத்தையும் படித்து மகிழுங்கள்.


இன்னொரு சுவையான விஷயம். சுதேசமித்திரனில் காளிதாஸ் திரைப்படத்துக்கான விளம்பரத்தில், திரையரங்கின் பெயர் கினிமா சென்டிரல் என்று இருக்கிறது? அது எது தெரியுமா?



முருகேச முதலியார் என்னும் பெரிய பணக்காரர் சென்னையை ஒட்டியிருக்கும் பொன்னேரியிலிருந்து சென்னைக்கு வந்து, மின்ட் அருகே பத்து கிரவுண்ட் இடத்தை வாங்கி வியாபாரத்தை ஆரம்பித்தார். வியாபாரம் சரிவராததால், அந்த இடத்தை மெஜஸ்டிக் தியேட்டர் என்று மாற்றினார். தமிழின் முக்கிய நாடகக் கலைஞர்கள் எல்லாரும் நடித்த நாடகங்கள் அங்கே அரங்கேறின.

மும்பைக்குச் சென்ற முருகேச முதலியார் அங்கிருந்து ஒரு திரைப்பட புரொஜக்டரை வாங்கி வந்தார். அவர் ரயிலில் வந்து இறங்கியபோது, புரொஜக்டரைக் காண மக்கள் திரளாக வந்தார்களாம். வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களாம். ஆக, தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் அந்த மெஜஸ்டிக் தியேட்டர்தான்.

இன்னொரு முதல் விஷயம் - 1923இல் அவர் அதே இடத்தில் இன்னொரு தியேட்டரும் கட்டினார். வேல்ஸ் இளவரசர் வருகையை ஒட்டி, அந்தத் தியேட்டருக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்தார். அந்தத் தியேட்டருக்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், மூடப்பட்டது. இல்லையேல் தமிழ்நாட்டின் முதல் மல்ட்டி-தியேட்டர் அதுவாகவே இருந்திருக்கும்!

1931இல் மெஜஸ்டிக் தியேட்டர் பெயர் மாற்றப்பட்டு கினிமா சென்ட்ரல் ஆனது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட முதல் பேசும்படம் ஆலம் ஆரா இங்குதான் திரையிடப்பட்டது. பிறகு, 1931 அக்டோபரில் தமிழின் முதல் பேசும்படம் காளிதாஸ் இங்கே திரையிடப்பட்டது. (முருகேச முதலியார் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன் 1948இல்இதை முருகேசன் டாக்கீஸ் எனப் பெயர் மாற்றினார். 2011இல் அது இடிக்கப்பட்டது.) இந்த விவரங்களை எல்லாம் இந்து நாளிதழில் மோகன் வி. ராமன் எழுதிய இந்தக்கட்டுரையில் காணலாம்.




அது சரி, எல்லாரும் சினிமா cinema என்று எழுதும்போது, இது மட்டும் ஏன் கினிமா kinema என்று பெயர் கொண்டிருக்கிறது? சினிமாவை கினிமா என்றும் உச்சரிப்பார்களாம். கிரேக்கச் சொல்லான கினிமா, கினிமாடோஸ் (kinema, kinematos) என்பதற்கு அசைவு, நகர்வு (movement, motion) என்று பொருள். முருகேச முதலியார் அப்பவே அப்படி!!!

Wednesday, 15 June 2016

சோழியன் குடுமி சும்மா ஆடுமா

அமெரிக்கப் பயணத்தில் இந்தியா பெறுவது என்ன?
காலாவதியான தொழில்நுட்பத்துக்கு 2.8 லட்சம் கோடி

அமெரிக்காவில் கைதட்டல் வாங்கிய மோடி குறித்து பக்தர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பேசுவது ஒன்றாகவும் உள்நாட்டில் செயல்கள் வேறாகவும் இருப்பதை தெள்ளத்தெளிவாக எழுதினால், அதில் உள்ள விஷயங்களில் ஒன்றுக்கும்கூட பதில் தராமல் எப்போதும் போல தேய்ந்துபோன ஒரே வாதத்தை முன்வைக்கிறார்கள் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆயிற்று. 60 ஆண்டுகளாக சீர்கெட்ட இந்தியாவை இப்போதுதான் சீர்செய்து கொண்டிருக்கிறார்.

பக்தர்களிடம் வேறு ஏதும் எதிர்பார்க்க முடியாது. போகட்டும். சிட்டிசன் டாட் இன் தளத்தில் ரபீர் புர்காயஸ்தா எழுதிய கட்டுரையின் சுருக்கத்தை தமிழில் தருகிறேன். அமேரிக்காகாரன் எதற்குக் கை தட்டினான் என்று புரிந்து கொள்ள விரும்புவோர் புரிந்து கொள்ளட்டும்.

 ஆங்கிலத்தில் வாசிக்க

அமெரிக்காவுக்கு நான்காவது முறையாக பயணம் மேற்கொண்ட மோடியைப் பற்றி பத்திரிகைகள் விதந்தோதுகின்றன. ஆறு அணு உலைகளை நிறுவுவதற்கான ஆரம்பப் பணிகள் என்று பாராட்டித் தள்ளுகின்றன. அது மட்டுமா? வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ஏபி1000 மாடல் அணுஉலைகளை 5ஆம் தலைமுறை உலைகள் என்றும் பாராட்டுகின்றன. இதற்கு முந்தைய ஏபி600 உலைகள் இரண்டாம் தலைமுறை உலைகள் என அழைக்கப்பட்டன. அதற்கு அடுத்து வருகிற ஏபி1000 மூன்றாம் தலைமுறை உலையாகத்தானே இருக்க முடியும்?! நடுவே இரண்டினை விட்டுவிட்டு நேராக ஐந்தாம் தலைமுறை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் இந்தியாவில் இருக்கும் சில ஊடக கனவான்களின் கண்களுக்கு மட்டும் அப்படித்தான் தெரிகிறது!

உண்மை என்னவென்றால், எட்டாண்டுகால பேரத்துக்குப் பிறகு, குஜராத்தில் மிதிர்விர்டி என்ற இடத்தில் அமைக்கப்படுவதாக இருந்ததை ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளத்தில் அமைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்வோம் என்று மட்டுமே வெஸ்டிங்ஹவுஸ் கூறியுள்ளது.

இன்றைய உலகில் அணு சக்தித் தொழில்நுட்பம் என்பது சாகும் தருவாயில் உள்ள தொழில்நுட்பம். அதன் முதலீட்டுச் செலவுகள் மிகவும் அதிகம். ஒருகாலத்திலும் எந்த நாட்டிலும் இலக்கு வைக்கப்பட்ட காலத்திற்குள் கட்டப்பட்டதே இல்லை. புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் முறைகளான காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்துக்கான முதலீட்டுச் செலவுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. எம்ஐடி டெக்னாலஜி ரிவ்யூ என்ற இதழ் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அமெரிக்காவின் அணு உலை சராசரியாக 35 ஆண்டுகள் பழமையானது, நவீன வடிவமைப்புத் தரங்களின்படிப் பார்த்தால் காலாவதி ஆனது, செயல்பாட்டு லைசன்ஸ் முடிவடையும் தருவாயில் இருக்கிறது என்று அது எழுதியது.

ஒருகாலத்தில் அணு சக்தியில் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, இனிமேலும் இந்தத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில்லை என முடிவு செய்து விட்டது. அமெரிக்காவின் செத்துக் கொண்டிருக்கும் அணுஉலைத் தொழில்நுட்பத்துக்கு உயிர் கொடுக்கக்கூடிய நாடுகள் இரண்டுதான் இந்தியாவும் சீனாவும். அமெரிக்காவின் முக்கியமான அணுஉலை நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ இரண்டுக்குமே அமெரிக்காவிலும் எந்த வியாபாரமும் கிடைக்கவில்லை, ஐரோப்பிய யூனியனிலும் ஏதும் கிடைக்கவில்லை. ஆக, அணுஉலைகளைத் தருவதன் மூலம் அமெரிக்கா இந்தியாவுக்கு பெரிய உதவி ஏதும் செய்து விடவில்லை. மாறாக, அமெரிக்காவில் மரணப்படுக்கையில் கிடக்கும் தொழில்நுட்பத்துக்கு இந்தியா உயிர் கொடுக்க முன்வந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அதற்காக இந்தியா என்ன விலை கொடுக்கப்போகிறது? ஜைதாபூர் அணுஉலைக்காக அரிவா நிறுவனத்துடன் என்ன பேரம் பேசப்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியாது அல்லவா? அதேபோல வெஸ்டிங்ஹவுஸ் பேரமும் எவ்வளவு என்று இதுவரை தெரியாது. இருந்தாலும், பழைய சில மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், 6 அணு உலைகளுக்காக இந்தியா 2.8 லட்சம் கோடி செலவு செய்யும் என்று கணக்கிடலாம். அதாவது, கிலோவாட் யூனிட்டுக்கு 12-14 ரூபாய்! நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையத்தின் உற்பத்திச் செலவைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு. காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கான செலவைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம்!
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் போட்டப்பட்டது. வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ ஆகிய இரண்டுக்கும் தலா ஒவ்வொரு இடம் தருவதென முன்வந்தது. ஸ்ரீகாகுளத்தை ஜிஈ-ஹிட்டாச்சிக்கு வழங்கியது இந்தியா. ஜிஈ அதை மறுத்து விட்டது. குஜராத்தில் உள்ள மிதிர்விர்டியை வெஸ்டிங்ஹவுசுக்கு வழங்கியது. ஆனால் குஜராத்தில் அணுஉலை அமைக்க எதிர்ப்பு வந்ததாலும், சுற்றுச்சூழல் அனுமதி காரணங்களாலும் மிதிர்விர்டி திட்டம் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக இப்போது ஸ்ரீகாகுளத்தை வெஸ்டிங்ஹவுசுக்குத் தரப்போகிறது. (வடமாநிலஙகள் ஒதுக்கும் திட்டங்கள் எல்லாம் ஏன் தென்மாநிலங்களில் திணிக்கப்படுகின்றன என்று நான் கேட்க மாட்டேன்!)

ஆக, மோடி-ஒபாமா அறிக்கையில் இடம்பெற்ற ஆறு அணுஉலைத் திட்டங்கள் என்பது மன்மோகன் சிங் காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நீட்சியே தவிர புதிதல்ல. எட்டு ஆண்டுகளில் நடந்தது என்னவென்று பார்த்தால் அடியைப் பிடிடா என்கிற கதையாக மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிற்பதுதான்.

(அப்போ காங்கிரஸ் காலத்தில் துவக்கியபோது என்ன செய்து கொண்டிருந்தாய் என்று என்னை யாரும் கேட்கத் தேவையில்லை. காங்கிரஸ் கால அணுஉலைத் திட்டங்களுக்கு எதிராக எழுதியவை நிறையவே என் பேஸ்புக் பக்கங்களில்உண்டு, வலைப்பூவிலும் உண்டு.)
காங்கிரஸ் காலத்திலாவது, அணுசக்தியின் ஆற்றல் குறித்த நம்பிக்கைகள் கொஞ்சம் இருந்தன. ஆனால் புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகெங்கும் எல்லா நாடுகளிலும் அணுசக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள்தான் இன்னும் அணுசக்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அணுசக்தி என்பதற்கும் மேலாக, அணுஆற்றல் நாடுகளின் பட்டியிலில் சேர அமெரிக்கா அளித்த ஒத்துழைப்புக்கு நன்றிக்கடன்தான் இது. இந்தியாவுக்கு அணுஉலை எரிபொருள் கிடைக்கும் வாய்ப்பு திறந்தது என்றாலும், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம், எரிபொருள் மறுபயன்பாடு, என்எஸ்ஜி-யில் உறுப்பினராதல் ஆகிய இதர வாக்குறுதிகள் எதுவும் இன்னும் நிறைவேறவில்லை.

கடந்த எட்டு ஆண்டுகளில் எவ்வளவோ நடந்து விட்டது. ஃபுகுஷிமாவிலிருந்து நிறையவே கதிர்வீச்சு கடலுக்குள் கசிந்து விட்டது. புதிதாக அணுஉலைகள் ஏதும் அமைப்பதில் என்று அமெரிக்கா கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது. ஓல்கிலுவாடோ, ஃபிளாமன்வில்லி ஆகிய இரண்டு இடங்களில் அணுஉலைகளில் கையைக் கடித்துக்கொண்ட பிரான்ஸ் இனிமேலும் அணுஉலைகளை விரிவாக்கம் செய்வதில்லை என நிறுத்தி விட்டது. மூடப்படும் அணு உலைகளுக்குப் பதிலாக புதிதாக மூன்றாம் தலைமுறை அணுஉலைகளை நிறுவலாமா என்று இங்கிலாந்து இன்னும் யோசித்துக் கொண்டேதான் இருக்கிறது. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்பிவிட்ட ஜெர்மனி அணுஉலைகளை மூடிக் கொண்டு வருகிறது.

இந்த நிலைமைக்குப் பிரதான காரணிகள் மூன்றாம் தலைமுறை அணுஉலைகளுக்கு ஆகும் பெரும் செலவு, கட்டுமானத்தில் உள்ள கடினமான சிக்கல்கள், காலத்துக்குள் முடிக்க முடியாமல் போவது. அணு உலைகளுக்குக் கிடைக்கும் மின்சாரம் தடைபட்டால் என்னவாகும் என்பதை புகுஷிமா விபத்து நமக்குக் காட்டி விட்டது.

நாம் வாங்கப்போகும் வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகள் குறித்தும், இன்றைய சூழலில் இது புத்திசாலித்தனம்தானா என்றும் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். பிரான்சின் அரிவா நிறுவனத்தின் ஈபிஆர் (மூன்றாம் தலைமுறை கனநீர் அணுஉலை) என்ன பிரச்சினைகளைத் தருகிறதோ அதே பிரச்சினைகளை வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணு உலையும் எதிர்கொள்கிறது. அரிவாவின் ஈபிஆர் உலைகள் அமெரிக்காவிலும் சீனாவிலும் கட்டப்படும்போது பெரும் செலவுகளை ஏற்படுத்தின, குறிப்பிட்ட இலக்குக் காலத்தைக் கடந்தும் முடிக்க முடியவில்லை. அதே நிலைமைதான் வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 அணுஉலைக்கும் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியாவிலும், தென் கரோலினாவிலும் ஏபி1000 அணுஉலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இரண்டும் தலா இரண்டு உலைகளைக் கொண்டிருக்கும், தலா 1100 மெவா மின் உற்பத்தி செய்யும். நான்கு ஆண்டுகளுக்குள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் ஏழு ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் முடியவில்லை. முதல் யூனிட் 2018இலும், இரண்டாவது யூனிட் 2019இலும் முடியும் என இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வெஸ்டிங்ஹவுஸ் சீனாவிலும் சான்மென், ஹையாங் ஆகிய இரண்டு இடங்களில் நான்கு யூனிட்களை அமைத்து வருகிறது. இவையும் திட்டமிட்ட காலத்தைவிட மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.

அரிவா பின்லாந்தில் அமைக்க முயன்ற மூன்றாவது யூனிட் ஈபிஆர் அணுஉலை போலவேதான் இதுவும். அரிவா திட்டம் ஐந்தாண்டுகளில் முடியும் என்று திட்டமிடப்பட்டு, மேலும் எட்டு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு 3 பில்லியன் யூரோ என்று மதிப்பிடப்பட்டது, ஆனால் திட்டமிட்டதைவிட மூன்று மடங்காகி, இப்போது 8.5 பில்லியன் யூரோவாக உயர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் தோஷிபாவுக்குச் சொந்தமான வெஸ்டிங்ஹவுஸ் அணுஉலைகளைப் பொறுத்தவரை, நிர்ணய விலை ஒப்பந்தம் உள்ளது. எனவே, அணுஉலை கட்டுவதற்கான கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் தாமதம் என்பதுதான் பிரதானக் கவலை. சீனா விஷயத்தில் ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் தெரியவரவில்லை. ஆனாலும், தாமதம் குறித்து சீனா பெரிதும் கவலை கொண்டுள்ளது. தாமதம் ஏற்படுவதாலும், செலவு அதிகரிப்பதாலும் ஏற்படும் நஷ்டத்தை யார் ஏற்பார்கள் என்பது தெரியவில்லை. சீனா இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. இப்போது அவர்கள் தமது சொந்த அணுஉலைகளின்பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்கள்.

ஏபி1000 உலையின் முதலீட்டுச் செலவு எவ்வளவு? தாமதம், அதனால் ஏற்படும் அதிகச் செலவு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டே பார்ப்போம்.

அமெரிக்காவில் நிறுவப்படும் உலைக்கு 2009இல் மதிப்பிடப்பட்டது 14 பில்லியன் டாலர் அதாவது, இன்றைய நாணய மதிப்பில் 94 ஆயிரம் கோடி ரூபாய். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், இலக்குக் காலம் கடந்த பிறகுதான் இயங்கும் என்றும் திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரிக்காது என்றே வைத்துக்கொள்வோம். ஸ்ரீகாகுளத்தில் நிறுவப்படும் உலைகளுக்கு 2,80,000 கோடி ரூபாய் ஆகும். அதாவது, இரண்டு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய். அதாவது, ஒரு மெவா மின்சாரத்துக்கு 42 கோடி ரூபாய். நிலக்கரி அனல்மின் நிலைய உற்பத்திச் செலவைவிட 7 மடங்கு! இது மிகைப்படுத்தியது என்று யாரேனும் நினைத்தால் ஜைதாபூர் அரிவா திட்டத்தையும், 7 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் பேரம் இழுத்துக் கொண்டே இருப்பதையும் நினைவுகொள்ளவும்.

மேலே குறிப்பிட்டபடி ஒரு மெவா மின் உற்பத்திக்கு 42 கோடி ரூபாய் என்றால், உங்களையும் என்னையும் போன்றவர்கள் பயன்படுத்துகிற யூனிட்டுக்கு எவ்வளவு ஆகும்? மிகக் குறைவான மதிப்பீட்டின்படியும் யூனிட்டுக்கு 12 முதல் 14 ரூபாய் வரை வரும். நிலக்கரி மின்சாரத்துக்கு இது 3-4 ரூபாய், காற்றாலை அல்லது சூரிய மின்சாரத்துக்கு 4 முதல் 6 ரூபாய். தெளிவாகச் சொன்னால், இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்திச் செலவு, புதுப்பிக்கப்படும் மின்செலவைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு.

பயன்படுத்திய எரிபொருளைக் கையாள்வது, அவற்றை காலத்துக்கும் பாதுகாப்பது, ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் ஏற்படுகிற மிகப்பெரிய இழப்புகள் எல்லாம் கணக்கில் கொண்டால்....!

அணு உலைக்கான செலவு அதிகமாவதைக் குறைப்பதற்காக, யூனிட் செலவைக் குறைப்பதற்காக அணு உலையின் திறனை அதிகப்படுத்துவதில் ஈடுபடுகின்றன. வெஸ்டிங்ஹவுஸ் ஏபி1000 உலை 1100 மெவா, அரிவாவின் ஈபிஆர் 1600 மெவா. இப்படி அதன் திறனை அதிகரிக்கும்போது அணுஉலைகளும் இன்னும் சிக்கலாகின்றன. வடிவமைப்பு, கட்டுமானம் எல்லாம் தாமதம் அடைந்து, திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாமல் போகின்றது. இதுதான் அணு உலைகள் திட்டம் பின்னடைவதன் காரணம். அமெரிக்கா அணுசக்தி திட்டத்தைக் கைவிட்டதற்குக் காரணம் த்ரீமைல் ஐலேண்ட் விபத்து மட்டுமே அல்ல, திட்டமிட்ட செலவுக்குள்ளும் காலத்துக்குள்ளும் முடிக்க இயலவில்லை என்பதே.

இன்னொரு முக்கிய சிக்கல் இருக்கிறது. பல யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவும்போது விபத்துக்கான சாத்தியங்களும் அதிகம். இருந்தாலும் நாம் அதிக யூனிட்களை ஒரே இடத்தில் நிறுவுவதன் காரணம், செலவைக் குறைப்பதற்கே. ஸ்ரீகாகுளத்தில் ஆறு 1100 மெவா உலைகள் அமைக்கும்போது, ஏதேனும் விபத்து நிகழந்தால் அதன் விளைவு கேஸ்கேடிங் விளைவாக மிகக் கடுமையாக இருக்கும்.

அணுசக்தித் தொழில்நுட்பம் ஒன்றுதான் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வரும் தொழில்நுட்பமாகும். மற்றவை எல்லாம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஆக, பொருளாதார ரீதியாகவும் சரி, சுற்றுச் சூழலுக்குத் தீங்கற்ற சக்தி என்ற வகையிலும் சரி, அணுசக்தி என்பது சரியான தீர்வு அல்ல. புதுப்பிக்கப்படும் ஆற்றல் வளங்களின் பக்கம் திரும்புவதே சரியான தீர்வாக இருக்கும்.
ஆங்கிலத்தில் வாசிக்க


சொல் ஒன்று செயல் வேறு

ஆமாய்யா. நம்மாளு பேசினாரு. செமையா பேசினாரு. அல்லாரும் கை தட்டுனாங்க. எந்திரிச்சு நின்னு கை தட்டுனாங்க, உக்காந்திருந்து கை தட்டினாங்க. 66 தடவை தட்டுனாங்க, 72 தடவை தட்டுனாங்கன்னு சொல்றீங்களே... அவரு என்னதான் பேசினாரு, எதுக்கு கை தட்டுனாங்கன்னு யாராச்சும் சொல்றாங்களா...?
(45 நிமிசப் பேச்சுல 72 தடவை எந்திரிச்சு நின்னு கை தட்டுனாங்கன்னா கொஞ்சம் மெர்சல் ஆகுதில்லே...!)

சுதந்திரம், விடுதலை என்னும் இழைகள்தான் நம் இரண்டு நாடுகளையும் உறுதியாக இணைக்கின்றன.
இந்தியா சுதந்திரத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாடு, சரி. நாம வேற எந்த நாட்டு மேலேயும் போர் தொடுத்தில்லை, யாரையும் ஆட்டிப்படைக்க நினைக்கலேன்னு வச்சுக்குவோம். அமெரிக்காக்காரனுக்கு ஒலகம் பூராவும் மக்கள் சுதந்திரமா இருக்கணும்கிறதுல அநியாயத்துக்கு அக்கறையாக்கும்! எல்லாரும் சுபிட்சமா சுதந்திரமா அமைதியா இருக்கணும்கிறதுக்குதான் ஆயுத வியாபாரம் செய்யறாங்களாக்கும்? வளைகுடா குழப்படி எல்லாம் மக்களுக்காகத்தான் செஞ்சாங்களாக்கும்! தெரியாதவங்க இப்பவாச்சும் தெரிஞ்சுக்குங்க.

இந்தியாவைக் கட்டமைத்த நமது முன்னோர்களும் இதே நம்பிக்கைதான் கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு தனிநபருக்கும் சுதந்திரத்தை உறுதிசெய்ய விழைந்தார்கள். ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நமது முன்னோர்கள் நவீன இந்தியாவைக் கட்டமைத்தார்கள். அந்தப் பணியைச் செய்யும்போது நமது பாரம்பரியமான பன்முகத்தன்மையைக் கொண்டாடும் விதத்தில் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
ஹப்பாடா... முன்னாடி ஆட்சியிலிருந்தவர்கள் உறுதியான ஜனநாயகத்தைக் கட்டமைத்தார்கள்னு ஒத்துகிட்டார். ஆனா ஒரு விஷயம்தான் புரியலே. அறுபது வருசமா நாடு குட்டிச்சுவராப் போச்சுன்னு உள்நாட்டுல புலம்பிகிட்டே இருக்காரே அது பொய்யா, இல்லே இது பொய்யா...? ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரத்தையும் மதிப்போம்னு சொல்றாரு. நல்லது. எவன் என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது, என்ன டிரெஸ் போடணும் என்ன போடக்கூடாதுன்னு இவரோட கட்சிக்காரங்களும் கட்சியை ஆட்டிப்படைக்கிற ஆர்எஸ்எஸ்சும் விதவிதமா பேசறாங்களே... அதைப்பத்தி இங்கே என்னிக்காச்சும் வாயைத் திறந்திருக்காரா? ஏண்டா கிறுக்கனுகளா இந்த மாதிரி உளறிகிட்டிருக்கீங்கன்னு கண்டிச்சிருக்காரா? பாஜகவுக்கு ஓட்டுப் போட்டா ராமர் ஜாதி, மத்தவங்களுக்கு ஓட்டுப் போட்டா நீச சாதின்னு இவரோட அமைச்சர் ஒருத்தர் பேசினாங்களே, அவங்களை இவரு பதவியிலிருந்து நீக்கிட்டாரா? 2014 தேர்தல்ல காங்கிரஸ் இல்லாத இந்தியா ஆக்கினோம், 2019 தேர்தல்ல முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவா ஆக்குவோம்னு இவரோட ஆளுக பேசறாங்களே, அவங்களை வாயை மூடச் சொன்னாரா? வெறுப்பை விதைக்கும் பேச்சுகளை இங்கே கட்டுப்படுத்தாம அங்கே போய் அளந்து வுடறாரு?

நவீன இந்தியாவுக்கு வயது 70. என்னுடைய அரசைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டம்தான் புனித நூல். ... நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கொலம்பியா பல்கலைக் கழகத்தில்தான் அம்பேத்கர் தன்னை உருவாக்கிக் கொண்டார்.
அரசமைப்புச் சட்டம்னாலே அம்பேத்கர் ஞாபகத்துக்கு வந்தாகணும். ஞாபகம் வந்த வரைக்கும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர்னு சொன்ன வரைககும் சந்தோஷம். ஆனா, அம்பேத்கர் ஒரு ஆணியும் புடுங்கலே, சும்மா காபி பேஸ்ட்தான் செஞ்சார்னு இவரால் நியமிக்கப்பட்ட இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் ஆர்ட்ஸ் சேர்மன் சொன்னாரே... அந்தாளை ஒரு வாங்கு வாங்கி விட்டிருக்க வேணாமா? அவரைத் தூக்கி எறிய வேண்டாமா? இங்கே வாயை மூடிக்கிட்டு இருந்துகிட்டு அங்கே போய் அளந்து வுடறாரு? நமது முன்னோர் முன்னோர்னு சொன்னாரே, நவீன இந்தியாவின் சிற்பி நேருவைப்பத்தி ஒரு வார்த்தைகூட சொல்லலியே...?

லஷ்கர்-ஏ-தாய்பா, தாலிபான், ஐஎஸ்... இந்த பயங்கரவாதிகளின் கொள்கை பொதுவானது - வெறுப்பு, கொலைகள், வன்முறை.
ரொம்ப கரெக்ட். அமெரிக்காவுக்குப் போகும்போது இஸ்லாமிய தீவிரவாதம் பத்தி பேசாம இருக்க முடியுமா? கண்டிப்பா பேச வேண்டியதுதான். அந்தத் தீவிரவாதக் குழுக்களும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனா ஒரு சந்தேகம்... உள்நாட்டுல பஜ்ரங் தள்ளும் ஆர்எஸ்எஸ்சும் அந்த சேனாக்களும் இந்த சேனாக்களும் இதே வெறுப்பு அரசியலை விதைச்சுட்டு இருக்காங்களே... அதைப்பத்தி இவரு ஒருவாட்டியாவது உள்நாட்டில் கண்டிச்சிருக்காரா? அதெப்படி அசீமானந்தாவிலிருந்து கொடனானி வரைக்கும் அத்தனை பேரும் பெயில்ல வெளிய வந்து ஜாலியா சுத்திட்டிருக்காங்க...?

• 80 கோடி இளைஞர்கள் பொறுமையின்றி துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருக்கிறது. அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்பதே என் இலக்கு
இந்தியாவுடைய மக்கள் தொகை 125 கோடி. அதில் 80 கோடி இளைஞர்கள்னு சொன்னா, கணக்கு ஒதைக்கலையா? இந்த மாதிரி அடிச்சு விடறது இவருக்கு வழக்கம்தான். அவரைச் சொல்லி தப்பில்லை, யாரு விஷயத்தைப் பார்க்கறா? அடிச்சு விட்டா அப்படியே அள்ளிட்டுப் போறவங்கதானே நம்ம சனங்கன்னு அவருக்கு நல்லாத் தெரியும். சரி போகட்டும்.

இந்த இரண்டு வருசத்துல இந்த 80 கோடி இளைஞர்களில் (!) எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகளுக்காக என்ன செஞ்சிருக்கு இந்த அரசு? வேலை வாய்ப்பு எங்கே அதிகரிச்சிருக்கு? பொருளாதார சுதந்திரம் பத்திப் பேசறாரே... மக்கள் மீது வரிச்சுமை அதிகரிச்சுட்டே போறாரே? விலைவாசி ஏறிட்டே போயிருக்கே தவிர இதுவரைக்கும் இறங்கவே இல்லையே? பருப்பு விலை விவகாரம் உச்சத்துல இருந்த சமயத்துல 40 ஆயிரம் டன் பறிமுதல் செஞ்சதா பத்திரிகைகளில் அமைச்சர்கள் எல்லாம் சொன்னாங்களே... பருப்பு இப்பவும் 180 ரூபாக்கு விக்குதே... அவருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா?

வாஷிங்டனுக்கு வந்து சேரும் முன் நான் மேற்கு ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தேன். இந்திய உதவியால் கட்டப்பட்ட ஆப்கன்-இந்தியா நட்பு அணையையும், 42 மெ.வா. நீர்மின் திட்டத்தையும் திறந்து வைத்தேன்.
ரொம்ப சந்தோஷம். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு காலத்தில் ரொம்பவே நெருக்கமா இருந்த நாடுகள். அந்த ஆப்கானிஸ்தானை இப்போ பிச்சைக்கார நிலைக்குக் கொண்டு வந்ததே இந்த அமெரிக்காதானே? தீவிரவாதம் பத்தி பேசினாரே, அந்த தீவிரவாதிகளை வளர்த்து விட்டதே இந்த அமெரிக்காதானே?

இப்படியே கைதட்டல் கிடைச்ச ஒவ்வொரு விஷயத்தையும் அலசிட்டே போனா, அந்தப் பேச்சுக்கும் இந்தியாவில் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு புரியும். ஆனா இங்கே இருக்கிற பலருக்கும் அந்த மாதிரி அலசறதுல எல்லாம் இஷ்டம் இல்லே. ஆஹா... நம்ம் தலைவர் பேசினார்.... அமேரிக்காக்காரனே எந்திரிச்சு நின்னு கை தட்டினான்னு சொல்லிப் பெருமைப்படறதுக்கு மேலே ஏதும் தேவையில்லை.

அமேரிக்காக்காரன் கை தட்டறது ஒண்ணும் புதுசும் இல்லே. 2013இல மன்மோகன்சிங் பேசினப்பவும் எந்திரிச்சு நின்னு கைதட்டினான். என்ன, அந்தாளுக்கு இந்தாளு மாதிரி தகிடுதத்தம் தெரியாது. பேஸ்புக்குல போட்டு பரப்பிக்கிடத் தெரியாது. பேஸ்புக் மாதிரி சமூக ஊடகங்கள்ல ஆளுகளை வச்சு பரப்பவும் தெரியாது. ஏன்னா அந்தாளு ஒரு எகானமிஸ்ட், அரசியல்வாதி இல்லை. அவங்களுக்கு இந்த விவரம் எல்லாம் பத்தாது. கேமரா எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கத் தெரியாது. ஆட்களை வச்சு பேஸ்புக்குல பில்டப் கட்டத் தெரியாது.

அப்புறம் இன்னொரு விஷயம், அமேரிக்க ஜனாதிபதி இருக்காரே, அவர் வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கிறது, வழியனுப்பி வைக்கிறது இதிலெல்லாம் சில புரொட்டகால் இருக்கு. அந்த புரொட்டகாலையும் மீறி ஒருத்தரை வழியனுப்பி வைக்கிறார்னா அது பெரிய விஷயமா பார்ப்பாங்க. அந்த மாதிரி ஒபாமா எந்திரிச்சு வந்து மன்மோகனை வழியனுப்பி வச்சிருக்காரு. ரீகன் ராஜீவ் காந்திக்கு குடை பிடிச்சிருக்காரு. நிக்சன் கூட உக்காந்திருக்கும்போது இந்திரா கால் மேலே கால் போட்டுகிட்டு கம்பீரமா உக்காந்திருக்காங்க. இதுக்கெல்லாம் புளகாங்கிதம் அடையணும்னா காங்கிரஸ்காரங்களுக்கு பெருமை அடித்துக்கொள்ள எவ்வளவோ விஷயம் இருக்கு.

இதெல்லாம் ஒருவகை ராஜதந்திரம்னு புரிஞ்சுக்கத் தெரியணும். அமெரிக்கா ஒரு நாட்டுத் தலைவருக்கு மரியாதை குடுக்குதுன்னா அது அந்தாளுக்குக் குடுக்கிற மரியாதை இல்லை. அந்த நாட்டின் தலைவனா யார் வந்தாலும் குடுக்கிற மரியாதை. அந்த நாட்டுடன் உறவு வைத்துக்கொள்வதால் தனக்கு என்ன லாபம் கிடைக்கும்னு பாத்து அதுக்காகக் குடுக்கிற மரியாதை. சுருக்கமாச் சொன்னா, சோழியன் குடுமி சும்மா ஆடாது.

2009இல் 30 அணு உலைகள் அமைக்கிறதா திட்டம் போட்ட அமெரிக்கா, 2013இல் அதை 5ஆகக் குறைச்சாச்சு. ஏற்கெனவே இயங்கிட்டு இருக்கிறதையும் அதுக்கான காலம் முடியறதுக்கு முன்னாடியே மூடிட்டிருக்கு. ஆனா அணுஉலைகளை மத்த நாடுகளோட தலையில் கட்டிட்டிருக்கு. இப்போ நம்ம தலையில 6 அணு உலைகள். இந்தியாவையே புரட்டிப் போட்டுட்டிருக்கார்னு சொல்றவங்க யாரும் நியூக்லியர் லயபிலிடி விஷயம் என்னாச்சு, அந்தக் கம்பெனிகள் அதுக்கு ஒத்துக்கிச்சா... நமக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னாகும்னு பேசறதே காணோம். (அணு உலை வேண்டாம்னா, மின்சாரத்துக்கு மாற்று என்ன்ன்னு கேட்டார் ஸ்ரீதர். ஏன், எந்த அமெரிக்காகாரன் கை தட்டினானோ அவன்கிட்டியே நம்மாளு கேக்கலாமே?)

அமெரிக்கா இந்தியாவின் இயற்கையான கூட்டாளி (நேச்சுரல் அல்லைஸ்) அப்படீன்னு 15 வருசம் முன்னாடி வாஜ்பாயி பேசினாருன்னு சொல்லிட்டு, அதையே இப்போ இவரும் சொல்லியிருக்கார். அந்த நேச்சுரல் அல்லை-தான் பாகிஸ்தானுக்கு இப்பவும் ராணுவ உதவியும் ஆயுத வியாபாரமும் செஞ்சுட்டுதான் இருக்கு.

சரி போகட்டும். சர்வதேச விவகாரங்கள் இப்படித்தான் இருக்கும்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு'ன்னு ஆடுச்சாம். அதுமாதிரி காங்கிரஸ் வேணாம்னு இவனுகளைக் கொண்டு வந்தா இவனுக அவனுகளுக்கே அப்பனா இருக்காங்க. நான் வரி கட்டுற ஆள். இந்த கவர்மென்ட் வந்ததிலிருந்து எனக்கு மாசத்துக்கு சுமார் 1500 ரூபா எக்ஸ்டிராவா டேக்ஸ்ல மட்டும் போகுது. வாழ்க்கைத் தரத்துல முன்னேற்றம் ஏதும் இல்லை. வருமானம் அதிகரிக்கலே. வாடகை உள்விபட லைவாசி அதிகரிச்சதால் செலவுகளைக் கட்டுப்படுத்தறேன், அல்லது முன்னாடி அனுபவிச்ச வசதிகளைக் குறைக்கிறேன். புள்ளைக படிச்சு முடிச்சுடுச்சு, அதனால தப்பிச்சேன். இல்லேன்னா நானும் கல்விநிதியுதவி கேட்டுக் கையேந்த வேண்டியிருந்திருக்கும். எனக்குத் தெரிஞ்சு, பெரும்பாலான மக்களுடைய நிலைமை இதுதான்னு நினைக்கிறேன். அடுத்து ஜிஎஸ்டி வந்தா என்னவாகப் போகுதோ தெரியலே. இந்தியாவுடைய ஜிடிபி-யில் 6 சதவிகிதம்தான் நேர்முக வரி. மத்ததெல்லாம் மறைமுக வரி. உலக நாடுகளிலேயே நம்ம நாட்டில்தான் மறைமுக வரி விகிதம் அதிகமாக இருக்குன்னு நினைக்கிறேன்.

அவரு டெலிபிராம்ப்டர் வச்சுப் பேசுனாரா, கையில ஸ்லிப் வச்சுகிட்டு பேசுனாரா, மாடர்ன் டைம்ஸ் படத்துல சார்லி சாப்ளின் கோட்டின் கைப்பகுதியில் ஸ்லிப் வச்சுகிட்டு பேச நினைச்சாரே அந்த மாதிரி ஸ்லிப் மறைச்சு வச்சுகிட்டு பேசினாரா, பள்ளிக்கூடப் புள்ளைக மாதிரி மனப்பாடம் செஞ்சுகிட்டு பேசினாராங்கிறதெல்லாம் முக்கியம் இல்லே.

வெளிநாட்டில் ஒரு பேச்சு, உள்நாட்டில் ஒரு பேச்சு, வெளியே சொல்றது ஒண்ணு, உள்ளே செய்யறது ஒண்ணுன்னு இல்லாம இருக்கணும். அதுதான் முக்கியம்.

எந்த காந்தியைப் பத்திப் பேசி அங்கே கைதட்டல் வாங்குனாரோ, அந்த காந்தி எந்த நோக்கத்துக்காக உயிரைக் கொடுத்தாரோ அந்த நோக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கிற வேலையைத்தான் இவரும் இவருடைய கட்சியும் செய்துட்டிருக்கு.

பொருளாதார முன்னேற்றம் முக்கியம்தான். ஆனா அதைவிட முக்கியம் சமூக நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும். இந்தியா வல்லரசு ஆகிறதுல எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. நல்லரசா இருக்கா... அதுதான் முக்கியம்.

அதுக்கு ஆக வேண்டியதைச் செய்யாம சும்மா வெளிநாட்டுல போய் பீலா உட்டுகிட்டு உள்நாட்டுல வாயைப் பொத்திகிட்டு இருக்கிற வரை...
சொல் ஒன்றும், செயல் வேறாகவும் இருக்கும்வரை... குட்டிக்கொண்டுதான் இருப்பேன்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்...
இது சும்மா பாடிக்கிறதுக்கு மட்டும் போதும்னு நினைக்கிறவா போயிக்கிட்டே இருங்க.


அம்புட்டுதான்.

Thursday, 9 June 2016

புத்தகத் திருவிழா புத்திமதிகள்

புத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே...



எல்லா பதிப்பாளர்களும், எல்லா வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கூடுகிற ஒரே வாய்ப்பு புத்தகத் திருவிழாதான். ஒரு குடும்பத்தில் பலவகைப்பட்ட ரசனைகளைக் கொண்ட அத்தனை பேருக்கும் அவரவர் விருப்பப்படி புத்தகங்களை வாங்குவதற்கான வாய்ப்பை புத்தகத் திருவிழாக்கள் வழங்குகின்றன. முற்போக்கு, பிற்போக்கு, பொழுதுபோக்கு, நவீனம், பின்நவீனம், முன்நவீனம், இந்திய தேசியம், தமிழ் தேசியம், அந்த இஸம், இந்த இஸம், நொந்த இஸம் என எல்லாவகை இலக்கியங்களையும் வாங்கலாம். சமையல் அல்லது அழகுக் குறிப்புகள், குழந்தைகளுக்கான நூல்கள், ஆன்மீக நூல்கள், ஜக்கி போன்ற போலிச் சாமியார்களின் உபதேசங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், பாடத்துணை நூல்கள், காமிக்ஸ்கள், .................. உங்கள் விருப்பப்படி காலி இடத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

எந்தெந்த வகையில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. தேவையான புத்தகங்களை 10 சதவிகித (அல்லது அதற்கும் அதிகமான) கழிவில் வாங்க முடியும் என்பதற்காகவே புத்தகத் திருவிழா எப்போது வரும் என்று காத்திருந்து செல்பவர்கள் ஒரு வகை. புத்தகத் திருவிழாவுக்குப் போகவில்லை என்று தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காகச் செல்பவர்கள் ஒரு வகை. வாங்கியதில் ஒரு புத்தகம்கூட வாசிக்காவிட்டாலும், வீட்டுக்கு வருகிறவர்களிடம் பெருமையடிப்பதற்காகவே ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்கி அலமாரியில் அழகாக அடுக்கி வைத்து அழகு செய்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப்பில் போட்டோ போடுவதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. சக நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. டெல்லி அப்பளத்தை சுவை பார்க்க அல்லது மாலைநேர அவுட்டிங்காக அல்லது சும்மா சைட் அடிக்க செல்பவர்கள் ஒரு வகை. நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் நண்பர்கள் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டும் (ஹும்... இதெல்லாம் வாங்கியாக வேண்டியிருக்கே) என்று செல்பவர்கள் ஒரு வகை.

இப்படி பல வகையினர் உண்டு என்றாலும், நீங்கள் புத்தகங்களை வாங்கவே செல்கிறவர் என்று அனுமானித்துக்கொண்டு, உங்களுக்காகவே சில டிப்ஸ். எல்லாம் அனுபவத்திலிருந்து சொல்வதாக்கும். எல்லாம் உங்கள் நன்மைக்காகவே. எனவே இதைப் புறக்கணித்து விட்டு பிற்பாடு அவதிப்பட வேண்டாம்.

கையில் எக்கச்சக்கமாக பணம் வைத்துக்கொண்டு விலையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பின்னட்டையில் இருக்கும் விவரத்தைப் படிப்பதுபோல பாவனை செய்துகொண்டே அதில் இருக்கும் பொடி எழுத்தில் உள்ள விலையை ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள், புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுபோல இரண்டாம் பக்கத்தில் தரப்பட்டுள்ள விலையை நோட்டம் விடுபவர்கள், பதிப்பகத்தின் பெயரைப் பார்த்தே விலகிச் செல்பவர்கள், என அனைவருக்கும் உதவக்கூடிய சில குறிப்புகள் இவை. இது சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டிய பதிவு என்பதால் அது தொடர்பாக சில விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்.

புத்தகத் திருவிழாவில் புத்தகக் கடைகள் இருக்கும் பகுதியில் நுழைவதற்கு முன்னால் வெளியே இருக்கும் கரும்பு ஜூஸ், டெல்லி அப்பளம், டீ-காபி, ........................... கடைகள் உங்களை இழுக்கும். வந்த களைப்பைப் போக்கிக்கொள்வோம் என்று உடனே அங்கே போய் விடாதீர்கள். முதலில் புத்தகங்களின் பக்கம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கொஞ்சம் களைத்துப்போனபிறகு புசிப்பின் பக்கம் திரும்பலாம். தெம்பேற்றிக்கொண்டு மீண்டும் புத்தகங்களைப் பார்க்கப் போகலாம்.

உள்ளே நுழைவதற்கான சீட்டை நீங்கள் நுழையும்போதே கிழித்துக் கொடுத்து விடுவார்கள். அதுதான் உள்ளே நுழைந்தாயிற்றே, இனி எதற்கு நுழைவுச்சீட்டு என்று அதை உடனே எறிந்து விடாதீர்கள். வெளியே போய்விட்டு மறுபடி நுழைய மீண்டும் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டியிருக்கலாம். எனவே, வெளியே போகும்போது வாசலில் இருப்பவரிடம், “டீ குடிச்சுட்டு வந்தா இதே டிக்கெட்டில் உள்ளே நுழையலாம் இல்லையா?” என்று நல்ல பிள்ளைபோல ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டுச் செல்வது நல்லது. திரும்பி வரும்போது அதே வாயில் வழியாக இன்னொரு புன்னகையைப் பரிசளித்து விட்டு நுழையலாம். 10 ரூபாய் மிச்சமாகும். திருவிழாக்காலம் முழுவதும் செல்வதற்கான சீசன் டிக்கெட் 50 ரூபாய் என்று நினைவு.

திருவிழாவுக்குச் செல்வதற்கு முன்பே சமூக ஊடகங்கள் அல்லது பத்திரிகைகளின் மூலம் என்னென்ன நூல்கள் புதிதாக வந்துள்ளன, அவற்றில் உங்களுக்குத் தேவையானவை எவை, அவற்றின் பதிப்பகம் எது என்ற விவரங்களை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு செல்வதும் நல்லது. பங்கேற்கிற பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் பட்டியல் நுழைவாயிலில் கிடைக்கும். அதை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளுங்கள். (சென்னை புத்தகத் திருவிழாவுக்காக விகடன் இப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.) வீண் அலைச்சலை இது குறைக்கும். தேவையான கடைக்கு மட்டும் போய் வேண்டியதை மட்டும் வாங்கிக்கொண்டு வரலாம்.

உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் படுகிற கடைகளில் புத்தகங்களை அள்ளி விடாதீர்கள். அப்புறம் அடுத்தடுத்த கடைகளுக்குப் போய், உங்களுக்குத் தேவையான நூல்களை வாங்க நினைக்கும்போது கையில் காசு இல்லாமல் போய்விடக்கூடும். இந்தப் புத்தகத்தை வாங்காம இருந்திருக்கலாம், அந்தப் புத்தகத்தை அப்புறமா வாங்கியிருக்கலாம் என்று பிற்பாடு மனதுக்குள் புலம்புவதைத் தவிர்க்கலாம். நேரம் இருந்தால், கண்காட்சியை முதலில் ஒரு சுற்றுச் சுற்றி பார்வையிட்டுவிட்டு பிற்பாடு வாங்கும் வேலையைத் துவங்கலாம்.

புத்தக ஆர்வலர்கள், தீவிர வாசிப்பர்களுக்கு சில கடைகள் பிடித்தமாக இருக்கும். உதாரணமாக, இடதுசாரி சார்பு நூல்கள் பிடித்தவர்களுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அல்லது பாரதி புத்தகாலயம்; வெகுஜன வாசகத் தரத்துக்கு கிழக்கு; தீவிர இலக்கியங்களுக்கு காலச்சுவடு; அல்லது எதிர் அல்லது அடையாளம் அல்லது சந்தியா. அவர்களுடைய கால்கள் தானாகவே அந்த விருப்பக் கடைகளுக்கே செல்ல முனையும். அப்படிச் செய்ய வேண்டாம். உங்கள் அபிமானக் கடைகளில் இருப்பதைவிடச் சிறந்த நூல்கள் வேறு கடைகளில் இருக்கக்கூடும்.

ஏகத்துக்குப் பணம் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வாங்கச் செல்பவர்கள் டிராலி பேக் எடுத்துச்செல்வது நல்லது. சுமைவலி தாங்க முடியாமல் கை மாற்றிக் கை மாற்றி விரல்கள் மாற்றி விரல்கள் மாற்றி அவஸ்தைப்படத் தேவையில்லை. சக்கரப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டு இஷ்டைலாக இழுத்துக்கொண்டு போகலாம்.

அளவாகப் புத்தகம் வாங்குபவர்களும் ஜோல்னாப்பை போல பைகளை எடுத்துச்செல்வது நல்லது. முதுகுப்பையும் கொண்டு போகலாம்தான். ஆனால் ஜோல்னாப்பை அறிவுஜீவி லுக் கொடுக்கும், முதுகுப் பை காலேஜ்/ஐடி பையன் லுக் கொடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. (நான் இரண்டையும் வைத்துக்கொள்வது வழக்கம்.)

சில பதிப்பாளர்கள் மெல்லிய பாலிதீன் பைகளில் புத்தகங்களைப் போட்டுக்கொடுப்பார்கள். புதிய மொடமொடப்பான புத்தகம் சில நிமிடங்களில் பாலிதீன் பையைக் கிழித்துவிடும், அல்லது ஒரு கைப்பிடி கிழிந்து புத்தகங்கள் பொத்தென்று கீழே விழும். பையில் ஒருபக்கக் கைப்பிடிதானே போயிற்று, இன்னொரு பக்கக் கைப்பிடி இருக்கிறதே என்று சமாளித்து விரல்களில் சுற்றிப் பிடித்துக்கொண்டு நடக்க முனைந்து விடாதீர்கள். சில நிமிடங்களில் விரலில் ரத்தம் கட்டிக்கொள்ளும். எந்தப் பையாக இருந்தாலும் சரி, பையில் கொள்கிறதே என்று ஏகப்பட்ட புத்தகங்களை அமுக்காதீர்கள். பீலிபெய் சாக்காடும்..... சாலமிகுத்துப் பெயின் திருக்குறள் பள்ளியில் படித்தது நினைவிருக்கும்தானே?

சில கடைகளில் நோட்டுப்புத்தகங்களுக்கு அட்டைபோடும் பிரவுன் கவரில் போட்டுக் கொடுப்பார்கள். ஏதோ கவரில் போட்டுக் கொடுக்கிறார்களே என்பதற்காக அதை வாங்காதீர்கள். ஒரு மண்ணுக்கும் உதவாத உறை அது. அதிகபட்சம் அந்தந்தக் கடையில் வாங்கியது என்று தனியான அடையாளமாக வைத்துக்கொள்ள உதவுமே தவிர, அந்தக் காகிதப்பைகள் உறுதியோ, மீள்பயன்பாட்டு வசதியோ இல்லாதவை. அத்தகைய கவர்களில் போட்டுக்கொடுப்பவர்களிடம், கவர் வேண்டாம் அப்படியே கொடுங்க என்று கூறி கடைக்காரரின் மதிப்பையும் பெறலாம்.

ஒவ்வொரு கடையிலும் பில்களை வாங்கத் தவறாதீர்கள். வீடுபோன பிறகு எவ்வளவுக்கு வாங்கினோம் என்று கணக்குப்போட வசதியாக இருக்கும் என்பது மட்டுமல்ல. சில புத்தகங்களில் பைண்டிங் கோளாறு இருக்கலாம், பக்கங்கள் விடுபட்டிருக்கலாம். மிக அரிதாக என்றாலும், மேலட்டை ஒன்றாகவும் உள்ளே புத்தகம் வேறாகவும் இருக்கலாம். இதெல்லாம் வீடு போய்ச்சேர்ந்த பிறகு, அல்லது வாசிக்க எடுக்கும்போதுதான் தெரியும். திருட்டுப்பய இப்படி ஏமாத்திப்புட்டான் என்று திட்டாதிருக்கவும், மிகவும் அவசியமான புத்தகம் என்றால் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு வேறு பிரதி வாங்குவதற்கும் பில் அவசியம் தேவைப்படும்.

பிரபலங்கள் திடீரென்று நுழையக்கூடும். கூட்டம் அவர் பின்னே ஓடும். எல்லாரும் ஓடுகிறார்களே என்று நீங்களும் ஓடாதீர்கள். அவர் உங்களுக்குப் பிடித்த அல்லது அறிமுகமான எழுத்தாளராக இருந்தாலும். அந்தக் கூட்டத்தில் உங்களை சந்தித்ததை அவர் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஓரிரு விநாடிகள் அவரோடு பேசி நீங்கள் அடையப்போவதும் ஏதுமில்லை. உங்களுக்குத் தேவை அவருடைய எழுத்துதானே தவிர, ஆள் அல்ல. எழுத்தாளர்களிடம் உரையாட அதிகம் ஏதும் இருப்பதில்லை. என்ன பேசுவது என்று தெரியாமல் கெக்கே பிக்கே என்று உளறிக்கொண்டிருப்பது தவிர அந்தக் குறுகிய நேரத்தில் பெரிதாக இலக்கிய விசாரத்தில் ஈடுபடப்போவதுமில்லை.

ஒருவேளை யாராவது ஒரு எழுத்தாளர் ஒரு கடையில் இருந்தால், உரையாட நேரமும் வாய்ப்பும் கிடைத்தால், சந்திப்பதில் தவறில்லை. சில பதிப்பாளர்கள் தமது பிரபல எழுத்தாளர்களை வரவழைத்து, கடையில் உட்கார வைத்து, அவருடைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தால் அதில் கையெழுத்துப்போட்டுத்தர ஏற்பாடு செய்திருப்பார்கள். மிகவும் அவசியமான, நீங்கள் வாங்க விரும்பிய நூல் என்றிருந்தால் தவிர அந்த வலையில் விழுந்து விடாதீர்கள்.

சில எழுத்தாளர்கள் திருவிழாவில் பந்தாவாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாசிப்புக்காக புத்தகம் எழுதவே அவதாரம் எடுத்தவர் போலவும், ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவர் போலவும், நீங்கள் அவருடைய நூல்களை வாங்குவது உங்களுடைய கடமை என்பது போலவும் அவருடைய பாவனைகள் இருக்கக்கூடும். அவருடன் பேசியபிறகு அவர்மீதான உங்கள் மதிப்பு சரியக்கூடும். அதனால்தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், எழுத்தாளனின் எழுத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.

வழியில் நண்பர்கள் எதிர்ப்படக்கூடும். நண்பர் அந்தப் பக்கம் போகிறாரே என்று அவர்களோடு நீங்களும் இணைந்து விடாதீர்கள். அப்புறம் உங்களுக்கு விருப்பமான நூல்களை வாங்குவதற்குப் பதிலாக அவருக்கு விருப்பமான நூல்களை வாங்க நேரிடும். அவரிடம் பைசா காலியாகி உங்கள் பைசா கடனாகப் போகக்கூடும், அல்லது அவரிடம் நீங்கள் கடன் வாங்கவும் நேரக்கூடும்.


வெளியே மைதானத்தில் மாலைநேரத்தில் யாராவது பிரபலங்களின் உரைகள் இருக்கக்கூடும். நீங்கள் மிகவும் மதிக்கிற, தவறவிடக்கூடாத பிரபலம் என்றால் அவருடைய பேச்சைக் கேட்க நேரம் செலவு செய்யலாம். சாலமன் பாப்பையா அல்லது லியோனி வகையறாக்கள் என்றால் அதற்காக நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. எத்தனையோ காலமாக டிவிக்களில் பார்த்த/கேட்ட அதே விஷயங்கள்தான் அங்கும் உளறப்படும். அந்த நேரத்தை நீங்கள் புத்தகங்களை வாங்குவதில் செலவு செய்யலாம்; அல்லது டெல்லி அப்பளமோ சமோசாவோ தின்பதில் செலவு செய்யலாம்; அல்லது திருவிழா முடிந்து எல்லாரும் ஒரேநேரத்தில் கூட்டமாக வெளியே போய் ஆட்டோவோ பஸ்ஸோ பிடிக்க அவதிப்படுவதைத் தவிர்க்க சற்று முன்னதாகவே புறப்பட்டு வீடு போய் சேரலாம். 

ஓலா போன்ற கால் டாக்சிக்காரர்கள் அந்தப் பக்கம் வர மறுக்கிறார்கள். மாலைநேரத்தில் கால் டாக்சி கிடைப்பதும் கடினம். போர் நினைவுச்சின்னம் இருக்கும் பகுதியை ஒட்டி வெளியேறினீர்கள் என்றால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பேருந்துகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆட்டோக்களை அங்கே நிற்க அனுமதிப்பதில்லை. சற்றே முன்னே நடந்து போய்த்தான் ஆட்டோ பிடிக்க வேண்டும். உங்கள் கைகளில் சுமைகளும் இருக்கும்போது, ஏற்கெனவே நடந்து நடந்து களைத்துப்போன முகங்களுடன் வெளியே வரும் உங்களிடம் எப்படிக் கறக்க வேண்டும் என்று ஆட்டோக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். சனி ஞாயிறுகளைத் தவிர்ப்பது உத்தமம். அல்லது பகலிலேயே போய்விட்டுத் திரும்பிவிடுவது நல்லது. 

சென்னை புத்தகத் திருவிழா அரங்கிற்குள் செல்பேசிகளின் சிக்னல் கிடைப்பது சிரமமாகவே இருந்தது. தொடர்புகளுக்கு செல்பேசியை அதிகம் நம்பியிருக்க வேண்டாம்.

கடைசியாக...
மழையில் நிறைய நூல்கள் நனைந்து போய் பலருக்கும் நஷ்டம் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால், திட்டமிட்ட பட்ஜெட்டுக்கும் மேலே இரண்டு அல்லது நான்கு நூல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு வரலாம்.


வாசிப்பை நேசிப்போம்.