Wednesday, 14 August 2013

தேசிய கீதம் எது ?

ஜன கண மன தேசிய கீதமா, வந்தே மாதரம் தேசிய கீதமா... --- இப்படி  ஒரு கேள்வி பேஸ்புக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

தேசிய கீதம் எது என்ற விவாதம் விடுதலையின்போதே எழுந்து அடங்கிவிட்டது. இப்போதும் குழப்பம் இருக்கிறது என்றால், அரசமைப்புச்சட்ட உருவாக்கத்தின்போது நடைபெற்ற விவாதங்களின் இறுதியில் சில விஷயங்கள் தெளிவாக்கப்படாததும் ஒரு காரணம். நம் வரலாறு பற்றிய புரிதலின்மையும் காரணம்.

ஜன கண மன பாடல் தேசிய வாழ்த்துப் பாடலாக அல்லது பரவலாக அறியப்படுவதுபோல தேசிய கீதமாக முடிவு செய்யப்பட்டது 1950இல்தான். நம் அரசியலமைப்புச்சட்டம் ஏற்கப்பட்டு குடியரசு ஆவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெற்ற அமர்வில், 24 ஜனவரி 1950இல்தான், ஜனகணமன தேசிய கீதம் என பிரகடனம் செய்யப்பட்டது.

சமஸ்கிருதமும் வங்க மொழியும் கலந்து தாகூர் எழுதிய இந்தப்பாடல் 1911இல் ஜனவரி 27ஆம் தேதி கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதல்முதலாகப் பாடப்பட்டது. அப்போதே சர்ச்சை எழுந்துவிட்டது. கல்கத்தாவுக்கு வருகை தந்த ஜார்ஜ் மன்னரை வாழ்த்தி எழுதப்பட்ட பாடல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தவறான கருத்து என்று தாகூரே வருத்தத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார்.

வந்தே மாதரம் பாடல், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய ஆனந்தமடம் நாவலில் இடம்பெற்ற பாடல். தாயே வணக்கம் என்று பொருள்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. இந்தப் பாடலும் 1896இல் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டதுதான். இதுவும் சமஸ்கிருதமும் வங்கமும் கலந்த பாடல். பங்கிம் சந்திரர் எழுதியதை மாநாட்டில் பாடியவர் வேறு யாருமல்ல, தாகூர்தான்.

அதற்குப்பிறகு, தேசிய விடுதலைப்போராளிகளின் முக்கிய கோஷமாக வந்தே மாதரம் முதலிடம் பெற்றது. சீர்திருத்த இயக்கத்திலும் ஆரம்பகால காங்கிரஸ் பேரியக்கத்திலும் பெரும்பாலும் வங்கத்தினரின் ஈடுபாடு அதிகமாக இருந்ததாலும் வந்தே மாதரம் முன்னிலை பெற்றது. தவிர, வந்தே மாதரம் என்று முழங்குவது எளிதாகவும் இயல்பாகவும் இருந்தது. லாலா லஜபதி ராய், வந்தே மாதரம் என்றொரு பத்திரிகை நடத்தினார். மேடம் பிகாஜி காமா ஜெர்மனியில் ஏற்றி வைத்த முதல் இந்தியக்கொடியில் வந்தே மாதரம் என்ற வரிகள் இடம்பெற்றன. (தெற்கு தில்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸ் என்னும் வணிக வளாகம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டதுதான்.)


விடுதலையைத் தொடர்ந்து தேசிய கீதமாக எதை ஏற்பது என்ற பிரச்சினை எழுந்தபோது, வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு வந்தது. விடுதலைப் போராட்ட காலம் முழுவதும் கோஷம் எழுப்பியவர்கள் எதற்காக இப்போது எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமே முன்னிலை வகிக்கவில்லை. முஸ்லீம் லீகும் இருந்தது, கம்யூனிஸ்டுகளும் வலுவாக இருந்தனர். ஆக, விடுதலைப் போராளிகளுக்கு வந்தே மாதரத்துடன், அல்லாஹு அக்பர், இந்துஸ்தான் ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத் ஆகிய கோஷங்களும் இருக்கவே செய்தன.

இது மட்டுமின்றி, உண்மையில் வந்தே மாதரம் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டது. அதில் நேரடியாக துர்க்கையைப் போற்றிப் பாடுகிற வரிகளும் உண்டு. இந்தியா இந்துக்களை மட்டுமே கொண்ட நாடு அல்ல. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள்,  பார்சிக்கள் என பல மதத்தினரும் சமஉரிமையுடன் வாழும் நாடு. எனவே ஒரு மதத்தின் கடவுளைப் போற்றுகிற பாடல் தேசிய வாழ்த்துப்பாடலாக இருக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்றது. (ஆனந்தமடம் நாவலும்கூட முகலாயர் எதிர்ப்புத் தொனியைக் கொண்டது என்பது தனி விஷயம். நான் அதற்குள் போக விரும்பவில்லை.)

விடுதலைக்கு முன்பே இந்தப் பிரச்சினை எழுந்து விட்டிருந்தது. சர்ச்சைக்குரிய பாடலை தேசிய கீதமாக ஏற்கத் தேவையில்லை என்று 1937இலேயே சுபாஷ் சந்திர போசுக்கு தாகூர் கடிதம் எழுதியிருக்கிறார். பங்கிம் சந்திரர், தாய்மண்ணை துர்க்கையோடு ஒப்பிடுகிறார் என்றாலும், பல்வேறு சமூகங்களைக் கொண்ட நாட்டில், துர்க்கையை வணங்குவதாக வரும் வரிகளை ஏற்பதில் சிக்கல் வரும் என்று விளக்குகிறார் தாகூர்.

The core of Vande Mataram is a hymn to goddess Durga: this is so plain that there can be no debate about it. Of course Bankimchandra does show Durga to be inseparably united with Bengal in the end, but no Mussulman [Muslim] can be expected patriotically to worship the ten-handed deity as 'Swadesh' [the nation]. ..... The novel Anandamath is a work of literature, and so the song is appropriate in it. But Parliament is a place of union for all religious groups, and there the song cannot be appropriate. When Bengali Mussulmans show signs of stubborn fanaticism, we regard these as intolerable. When we too copy them and make unreasonable demands, it will be self-defeating. … Bengali Hindus have become agitated over this matter, but it does not concern only Hindus. Since there are strong feelings on both sides, a balanced judgment is essential. In pursuit of our political aims we want peace, unity and good will—we do not want the endless tug of war that comes from supporting the demands of one faction over the other.

ஆக, நாம் விடுதலை பெறும்போது நமக்கு தேசிய கீதம் ஏதும் இருக்கவில்லை. 1947 ஜூலை 15ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் கிருபளானிக்கு எழுதிய கடிதத்தில், தேசிய கீதம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்கிறார் ஜவாஹர்லால் நேரு. 1947 ஜூலை 22ஆம் தேதி அரசமைப்புச்சட்டப் பேரவைக்கூட்டத்தில் பேசிய சரோஜினி நாயுடு, நமக்கென ஒரு தேசிய கீதம் இல்லையே என்று ஆதங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார். இன்னும் சில ஆதாரங்களை இப்படிக் குறிப்பிடலாம்.

ஆக, அரசமைப்புச் சட்ட பேரவையில் ஜன கண மன தேசிய கீதமாக ஏற்கப்பட்டது. இருப்பினும், பலரின் வற்புறுத்தல் காரணமாக, இத்தனை காலமும் விடுதலை முழக்கமாக இருந்த வந்தே மாதரம் பாடலையும் மதிக்க வேண்டும் என்பதால், அதன் முதலிரண்டு பத்திகளை மட்டும் ஏற்று, சம அந்தஸ்துள்ள பாடலாக வைத்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

The composition consisting of words and music known as Jana Gana Mana is the National Anthem of India, ... and the song Vande Mataram, which has played a historic part in the struggle for Indian freedom, shall be honored equally with Jana Gana Mana and shall have equal status with it. I hope this will satisfy the Members.
- ராஜேந்திர பிரசாத்.

மேலே உள்ள ஆங்கில வாசகத்தில் தெளிவின்மை இருக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை யாரும் ஊகிக்கலாம். இந்த விஷயத்தில் வீணான விவாதம் தொடர்வதைத் தவிர்ப்பதற்காக, வந்தே மாதரத்தை ஆதரித்தவர்களையும் திருப்தி செய்யும் வகையில், கடைசியாக, உறுப்பினர்கள் திருப்தி அடைவார்கள் என நம்புகிறேன் (I hope this will satisfy the Members) என்றுதான் ராஜேந்திர பிரசாத் கூறி முடித்து வைக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, வந்தே மாதரம் National Song என அதிகாரபூர்வமாக எங்கும் கூறப்படவில்லை.

மேலும், வந்தே மாதரம் பாடப்படுவது குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கின்றன. பாஜக ஆட்சியில் இருந்தபோது மைய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சரஸ்வதி வந்தனமும்கூட அதிகாரபூர்வமாகப் பாடப்பட்டு வந்தது. மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் கட்டாயமாக வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவும் ஓர் சர்ச்சையாகத் தொடர்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளின்மீதான விவாதங்களே வந்தே மாதரம் தேசிய கீதமா இல்லையா என்ற தொடர் சர்ச்சைக்கு வழிவகுக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ-வின்கீழ், அடிப்படைக் கடமைகளில் to abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுவதைத் தடுக்கும் 1971 சட்டத்திலும் வந்தே மாதரம் அல்லது National Song இடம் பெறவில்லை. National Flag, Constitution of India, National Anthem ஆகிய மூன்றும்தான் இடம் பெறுகின்றன. தெளிவாகச் சொல்வதானால், அரசமைப்புச் சட்டத்தில் song என்ற சொல்லே இல்லை. ஆகவே, national song என்று நாம் சொல்லிப் பழகி விட்டிருக்கிறோமே தவிர, அரசமைப்புச்சட்ட ரீதியாக அப்படியொரு பாடல் இல்லை.

ஆகவே, ஜன கண மன - மட்டும்தான் தேசிய கீதம், National Anthem.
வந்தே மாதரம் சம அந்தஸ்துள்ள பாடல். ஆனால் தேசிய கீதம் என்று இதைக் குறிப்பிட முடியாது.

* * *

இப்போது முக்கியமாக ஒரு கேள்வி. இவை இரண்டுமே 1950இல்தான் முடிவு செய்யப்பட்டது என்றால், 1947இல் நள்ளிரவில் இந்தியா விடுதலை பெற்றபோது எந்தப் பாடல் பாடப்பட்டது....

இதோ.... வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு. 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் அரசமைப்புச் சட்டப் பேரவைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளிலிருந்து.....

Constituent Assembly of India
Thursday, the 14th August 1947
The Fifth Session of the Constituent Assembly of India commenced in the Constitution Hall, New Delhi, at Eleven P.M., Mr. President (The Honourable Dr. Rajendra Prasad) in the Chair.
SINGING OF VANDE MATARAM
Mr. President: The first item on the Agenda is the singing of the first verse of VANDE MATARAM. We will listen to it all standing.
திருமதி சுசேதா கிருபளானி வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தியைப் பாடுகிறார்.

மேற்கண்ட தலைப்பில், வந்தே மாதரம் பாடுதல் என்றுதான் குறிப்பிடப்படுகிறதே அன்றி தேசிய கீதம் பாடப்படுவதாக அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

விடுதலைநாள் விழாவில், ஆட்சி அதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு வந்த பிறகு, இந்திய அரசமைப்புச்சட்ட அவையினர் உறுதிமொழி ஏற்ற பிறகு, மவுன்ட்பேட்டன் கவர்னர் ஜெனரல் ஆன பிறகு, சரோஜினி நாயுடு வராத காரணத்தால் திருமதி ஹன்சா மேத்தா தேசியக் கொடியை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு, நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற நிகழ்ச்சியின் முடிவில் ....

SINGING OF NATIONAL SONGS
Mr. President: The next item is the singing of the first few lines of Sare Jahan se Acaha Hindustan Hamara and the first verse of Janaganamana Adhinayaka Jaya He.
(Shrimati Sucheta Kripalani sang the first few lines of Sare Jahan Se Achcha Hindustan Hamara and the first verse of Janaganamana Adhinayaka Jaya He.)

திருமதி சுசேதா கிருபளானி, ஸாரே ஜஹான் ஸே அச்சா பாடலின் முதல் சில வரிகளையும், ஜனகண மன பாடலையும் பாடினார்.

அதாவது, மேலே உள்ள தலைப்பில் தேசிய கீதம் என்ற சொல் இல்லை என்பதையும், தேசியப் பாடல்கள் என்றே குறிப்பிடப் படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக,
• வந்தே மாதரம்
• ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா
• ஜன கண மன
ஆகிய மூன்று பாடல்களும் விடுதலை நாள் விழாவில் பாடப்பட்ட பாடல்கள்.


(கட்டுரையில் செய்யப்பட வேண்டிய முக்கியமான திருத்தங்களை சுட்டிக்காட்டிய தோழர் இரா. ஜவஹர் அவர்களுக்கு நன்றி.)

பி.கு. 1. முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலாமா கூடாதா என்ற கோணத்தில் இந்தக் கட்டுரை ஆராயவில்லை. இந்தப் பிரச்சினையும் விரைவில் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மேற்கோள்கள் விக்கிபீடியா, அரசமைப்புச் சட்டம், 1947ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டப் பேரவை விவாத ஆவணங்கள், ஆகியவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.



Saturday, 3 August 2013

படித்ததில் பிடித்தது - கனவு ஆசிரியர்


ஆசிரியர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? கல்வி ஏன் இப்படியாகி விட்டது? என்ற புலம்பல்களின் பின்னணியில் நாம் தொடர்ந்து ஆசிரியர்களை மட்டுமே எவ்வளவு காலத்திற்குக் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ... ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடப்புத்தக வடிவில் சொல்லாமல் கொஞ்சம் இலக்கிய ரசனையோடும் சமூகப் பார்வையோடும் ஒரு புத்தகம் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையின் விளைவை இந்த நூல்.
- முன்னுரையில் தொகுப்பாசிரியர் க. துளசிதாசன் கூறுவதே இந்த நூலின் அறிமுகத்துக்கும் போதும்.

அசோகமித்திரனில் தொடங்கி, பிரபஞ்சன், பொன்னீலன், தியடோர் பாஸ்கரன், தமிழ்ச்செல்வன், பிரளயன், பாமா, ஞாநி, டிராட்ஸ்கி மருது, எஸ். ராமகிருஷ்ணன், த.வி. வெங்கடேசுவரன், இறையன்பு, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

* * *

திங்கட்கிழமைதோறும் அரைப்பக்கம் பிஸினஸ் லைன் என்ற தினப் பத்திரிகையில் எட்டு பிரமுகர்களைக் கட்டம் கட்டிய அமைப்பில் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அதில், உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வி இருக்கிறது. எட்டு பேரில் ஆறு பேர் பள்ளி ஆசிரியர் ஒருவரைத்தான் குறிப்பிடுகிறார்கள்....

அசோகமித்திரன் கூறுவதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. கனவு ஆசிரியர் என்ற தலைப்பைக் கேட்டதுமே நம் ஒவ்வொருவருக்குமே இதேபோன்ற எண்ணம்தான் தோன்றுகிறது. அதேபோலத்தான் இந்த நூலில் கட்டுரை எழுதிய பலரும் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான கட்டுரைகள் இப்படிப்பட்ட நினைவலைகளாகவே இருக்கின்றன.

தன் பிள்ளை என் குறைவான மார்க் வாங்கினான் என்பதை ஆசிரியரிடம் கேட்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு. ஆசிரியர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பதிலளிக்க முடியாதவர்கள் தம் பணியைச் சரியாகச் செய்யத் தவறுகிறார்கள் என்று கருதுகிறது பிரெஞ்சு அரசு. வேலைக்குச் சேர்ந்து விட்டால் 60 வயது வரை எவனும் நம்மை ஆட்ட முடியாது என்கிற கித்தாப்பு பிரெஞ்சு அரசில் இல்லை என்கிறார் பிரபஞ்சன். மற்றபடி பிரபஞ்சனின் கட்டுரை தன் நினைவலைகளைப் பகிர்வதாக இருக்கிறது. 

பிரபஞ்சன் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். பிரபலப் பள்ளி ஒன்றில் தன் சிநேகிதியுடன் அவரது குழந்தையைச் சேர்க்கச் செல்கிறார். என்ன படித்திருக்கிறீர்கள் என்று பிரின்சிபல் கேட்க, பட்டதாரி சிநேகிதி, பத்தாம் வகுப்புவரை படித்ததாகச் சொல்கிறார். பட்டதாரிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே இடம் உண்டு என்கிறார் பிரின்சிபல். நான் எழுத்தாளன், இந்தப் பையனுக்கு நீங்கள் சீட் தரவில்லை என்றால் அதை எழுதி உலகத்தின்முன் கொண்டு செல்வேன் என்கிறார் பிரபஞ்சன். பையனுக்கு சீட் கிடைத்து விட்டது. 

பிரபல தனியார் பள்ளிகளின் அவலநிலையைச் சுட்டுவதற்காக எழுதப்பட்ட இந்தச்சம்பவம், என்ன சொல்ல வருகிறது? மறுக்கப்படுகிற ஒவ்வொரு குழந்தைக்கும் பிரபஞ்சன் ஆதரவாக வருவாரா அல்லது பிரபலத்தை அழைத்துச்செல்ல வேண்டுமா? பள்ளியின் பெயரையும் சுட்டி தோலையுரித்திருக்க வேண்டும் அல்லவா ஒரு எழுத்தாளர்?

மாணவர்களை அடிப்பது குறித்தும், ஆசிரியர்களின் சாதிப் பார்வைகளையும் அலசுகிறது தியடோர் பாஸ்கரனின் சுருக்கமான கட்டுரை. அவருடைய பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். இவரும் தன் ஆசிரியர்கள் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டுரைகளை அனுப்புமாறு அனைவருக்கும் கடிதம் எழுதிய தொகுப்பாசிரியர், கட்டுரைகளை கடித வடிவில் அனுப்புமாறு கூறியிருப்பார் போலத் தெரிகிறது. சில கட்டுரைகள் கடித வடிவில் உள்ளன. ஆனால் துவக்கம் கடித வடிவிலும் போகப்போக கட்டுரையாகவும் மாறி பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. குறிப்பாக, இந்திய ஆட்சிப்பணித்துறையைச் சேர்ந்த ஆர் பாலகிருஷ்ணன், இறையன்பு ஆகியோரின் கடிதக் கட்டுரைகள் உபதேச நடையில் உயிர்ப்பின்றி இருக்கின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவராக இருந்த, ஆசிரியப் பணி புரிந்த ச. மாடசாமியின் 3 கடிதங்களும் மேற்கண்ட வகையாகவே இருக்கின்றன.

பேராசிரியர் இரத்தின நடராசனின் நடை இரத்தினச் சுருக்கமான நடை. பட்டுப் பட்டென்று சின்னச்சின்ன வாக்கியங்களில் நினைவுகளைப் பகிர்கிறார். இறுதியில், நல்ல ஆசிரியருக்கான பத்து அம்சங்களை முன்வைத்திருக்கிறார். பிரளயனும் தன் நினைவலைகளைப் பகிர்கிறார் என்றாலும் சுவையான நடையில் சம்பவங்களை விவரிக்கிறார். 

பாமாவின் கடிதக் கட்டுரையும் முன்சொன்ன ரகமாக, கடிதமாகத் துவங்கி கட்டுரையாக முடிகிறது. முழுக்க முழுக்க தன் நினைவுப் பதிவுகளைக் கொண்டது. எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையும் கடிதமாக இருக்கிறது. உபதேசங்களின் குவியல். டிராட்ஸ்கி மருதுவின் சுருக்கமான கட்டுரையும் நினைவுகளைப் பகிர்கிறது. தலைப்புக்கு நியாயம் சேர்க்கவில்லை. 

நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஞாநி. முத்தாய்ப்பான வரிகள் - ஆசிரியன் வேலை அறிவாளியை உருவாக்குவது அல்ல. நல்ல மனிதனை உருவாக்குவது. ... என் மகனின் பள்ளித் தலைமையசிரியர் சகுந்தலா சொல்வார். தினமும் ஒரு குழந்தை ஸ்கூலுக்குப் போகணுமேன்னு அழறது. அப்படி இல்லாம, ஸ்கூல் முடியச்ச அய்யோ வீட்டுக்குப் போகணுமேன்னு அது அழுதாத்தான் அது நல்ல ஸ்கூல்.அப்படிப்பட்ட ஒரு பள்ளியை உருவாக்கும் ஆசிரியர்களில் ஒருவராகவே நான் இருக்க விரும்புவேன்.

த.வி. வெங்கடேசுவரன் கட்டுரை தன் கணித ஆசிரியர் சங்கரனைக் குறித்தது. கசப்பு எனக் கருதப்படும் கணிதத்தை எவ்வாறு சுவையாகக் கற்றுக்கொடுத்தார் என்று உதாரணத்தோடு விளக்குகிறார். சங்கரன் என்னும் வித்தியாசமான, புரட்சிகரமான ஆசிரியரை அறிமுகம் செய்கிறார்.

கீரனூர் ஜாகிர் ராஜா, பவா. செல்லத்துரை ஆகியோரின் கட்டுரைகளும் தன் ஆசிரியர்களின் நினைவலைகளைத் தாங்கியிருக்கிறது. க. துளசிதாசன் கட்டுரை, ஏதொவொரு சொற்பொழிவின் சுருக்கமாகத் தோன்றுகிறது. 

கடைசியாக இடம்பெற்றுள்ளது ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளித் தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம். இது வலையுலகில் ஏற்கெனவே பலரால் பகிரப்பட்ட கடிதம். அதைப்பற்றித் தனியாகக் கூறத்தேவையில்லை.

இந்நூலின் மிகச்சிறப்பான கட்டுரைகள் என்றால் மூன்றைக் குறிப்பிடுவேன். மூன்றாம் இடம் பெறுகிற கட்டுரை ஆயிஷா இரா. நடராசனின் கட்டுரை. தன் அனுபவங்களைப் பகிர்கிற இவர், புத்தாக்க முறையில் கற்பித்த ஆசிரியர்களின் வழிகள் பலவற்றை உதாரணங்களாகச் சுட்டுகிறார். வாசிப்புச் சுவாரஸ்யத்துடன் தகவல் களஞ்சியமாகவும் திகழ்கிறது.

இரண்டாமிடத்தில் ச. தமிழ்ச்செல்வனின் கட்டுரை. இதைப்பற்றி விவரமாகச் சொல்லப் போவதில்லை. அப்புறம் யாரும் வாங்கிப் படிக்க மாட்டீர்கள். முத்தாய்ப்பாக இவர் சொன்னது வரலாற்றுக்கும், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக பாடத்திட்டம் என்னும் மேடையில் நின்று பேசுகிறவர் என் கனவு ஆசிரியர்.

ஆகச் சிறந்ததாகக் கருதும் கட்டுரையாசிரியர் பொன்னீலன். இவரது கட்டுரையைப் பற்றியும் நான் இங்கே எழுதப் போவதில்லை. பதிப்பகத்தாரிடம் அனுமதி பெற்று முழுக் கட்டுரையையும் தனிப்பதிவாக வெளியிட யோசித்திருக்கிறேன். அனுமதி கிடைத்தால் வெளியிடுவேன்

* * *

கடித வடிவிலான பலரின் கட்டுரைகள் எனக்கு ஏமாற்றம் என்று குறிப்பிட்டதை நீங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை. நான் தீவிர வாசகன் மட்டுமல்ல, நூல்களை வடிவமைப்பதையும் செம்மைப்படுத்துவதையுமே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவன். எனவே எந்த நூலிலும் அதன் வடிவக் குறைகள் சட்டென என் கண்ணில்படும். எனவே, எனக்குக் குறைகளாகத் தோன்றுகிற நடைகள் உங்களுக்கும் குறைகளாகத் தோன்ற வேண்டும் என்பதில்லை. 

வாத்தியார் பிள்ளை மக்கு, கண்ணை மட்டும் விட்டுவைத்து விட்டு தோலை உரித்து விடுங்கள்... என்பது போன்ற வழக்குகள் நூலெங்கும் பரவிக்கிடக்கின்றன. எழுதியவர்கள் பெரும்பாலும் என்னைவிட மூத்தவர்கள் என்பதால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க... ஏன்னு கேக்க மாட்டேன்” – ஆசிரியராக இருந்த என் அப்பாவின் பொறுப்பில் மாணவனை விடவந்த பெற்றோர் ஒவ்வொருவரும் கூறிய வாசகம் இது. இன்றைய பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் அறிமுகம் இல்லாத வசனம் இது.

இந்நூல் ஆசிரியர்களுக்கு மட்டுமானதல்ல, பெற்றோருக்கும் பயன்தரக்கூடியது. நூலை வாசிக்க வாசிக்க, ஒவ்வொருவரும் தன் ஆசிரியர்கள், பள்ளி அனுபவங்கள், வாங்கிய அடிகள், வகுப்பறைச் சம்பவங்கள், சக நண்பர்கள் பற்றிய உங்கள் அனுபவங்களும் இணையாக மனதுக்குள் ஓடுவதை உணர்வீர்கள். உங்கள் கடந்த காலத்தை மறுபடி வாழ்ந்து பார்ப்பீர்கள். நீங்கள் அறியாமலே உங்கள் இதழ்களில் புன்னகை நெளிவதை உணர்வீர்கள். அந்த அனுபவத்துக்காகவும் இதைப் படிக்கலாம்.

கனவு ஆசிரியர், க. துளசிதாசன், பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, சென்னை-18.
978-93-81908570. ரூ. 90.


(அட்டைப்படத்தில் இடதுபுறம் ஆசிரியர் மாணவரை அணைத்திருக்கும் முகப்புப்படம் இணையத்தில் கிடைத்தது, பழைய அட்டை போலும். வலப்புறம் தெரியும் அட்டைப்படம் என்னிடம் இருப்பது, புதிய பதிப்பு எனத் தோன்றுகிறது.)

Thursday, 25 July 2013

தமிழ் இலக்கியத்தில் அறிவியல்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த.வி. வெங்கடேசுவரனையும் அழைத்தேன். இதற்கிடையே தினமணியிலிருந்து பா. கிருஷ்ணனும் அழைக்கப்பட்டு விட்டார். ஒருவர் மட்டுமே வரவில்லை. எனவே பேச்சாளர்கள் ஏழு பேராகி விட்டோம். எனவே நேரம் ஆளுக்கு 10 நிமிடம் என குறுக்கப்பட்டது. எவரும் 10 நிமிடங்களுக்குள் முடிக்க இயலவில்லை என்பது வேறு விஷயம்.

டாக்டர் சுந்தர ராஜனின் அறிமுக உரை, சங்கச் செயலர் முகுந்தனின் வரவேற்புரை, சங்கத் தலைவர் கிருஷ்ணமணியின் தலைமை உரை, பொன்னாடை போர்த்தும் நிகழ்வுகளுக்கும் பின் ஏழு பேரும் உரையாற்றினோம். 

முதலில் உரையாற்றிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் த.நா. சந்திரசேகரன், சங்க இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் பற்றி உரை வாசித்தார்.

த.வி. வெங்கடேசுவரன் மைய அரசின் அறிவியல் பிரச்சார நிறுவனத்தில் பணிபுரிபவர். அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்டு ஏராளமான நூல்களை எழுதியவர். அறிவியல் பிரச்சாரமே அவருக்கு மூச்சு. அவருக்கு இத்தலைப்பு சர்க்கரைக்கட்டி. இலக்கியம் என்னும்போது, வாய்மொழி இலக்கியம், பழமொழி இலக்கியம் ஆகிய வடிவங்களிலிருந்தும் அறிவியல் குறிப்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று எடுத்துக்காட்டுகளோடு விளக்கினார். இவருடைய உரைதான் கருத்தரங்கின் நோக்கத்திற்கேற்ற மிகச்சிறப்பான உரை. 

என் உரை கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

பா. கிருஷ்ணன், அறிவியல் என்பதில் உளவியல், நிர்வாக இயல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்று கூறி, திருக்குறளிலிருந்து பல உதாரணங்களைக் காட்டி அழகாக உரையாற்றினார்.

பொன்ராஜ், அப்துல் கலாமுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சித்த மருத்துவக் குறிப்புகளிலிருந்து ஒருவர் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், சர்க்கரை நோய்க்கு மருந்து விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார். இலக்கிய ஆதாரம் குறிப்பிடாமல் பேசும்போது அதில் வலிமை இருப்பதில்லை என்பதைக் கவனிக்கத் தவறி விட்டார்.

சிறப்புப் பேச்சாளர் அப்துல் காதர் பிரபலமான பேச்சாளராம். நான் அவரது நிகழ்ச்சிகள் எதையும் தொலைக்காட்சியில் பார்த்ததில்லை. தெள்ளிய நீரோடை போன்ற பேச்சு, வழக்கமான நகைச்சுவைத் துணுக்குகள், குறிப்புகளே இல்லாமல் இயல்பாக வரும் சொற்பொழிவு என அருமையாக உரையாற்றினார். பாரதிதாசன் உள்பட தமிழ் இலக்கியத்தின் சில அறிவியல் கருத்துகளை அழகாக விளக்கினார். 

கடைசியாக வந்த பேச்சாளர் நெல்லை சு. முத்து. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். திருக்குறளின் 1330 குறள்களுக்கும் அறிவியல் நோக்கில் புதிய உரை எழுதியிருப்பதாகக் கூறினார். விளக்கத்திற்காக பவர்பாயின்ட் பிரசன்டேஷன் பயன்படுத்தி அறிவியலின் பல கட்டங்களை விளக்கினார். ஆனால் நேரக்குறைவு பற்றிய கவனமின்றி நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பாதிக்கூட்டம் கலைந்து விட்டது.

* * *
என் உரை

நான் தமிழறிஞன் அல்லன். எளிய வாசகன். இலக்கிய ஆர்வலன். இலக்கியத்தின் சுவைகளை ருசிக்கத் துடிக்கும் பல்லாயிரம் ஆர்வலர்களில் ஒருவன். எனவே இந்த அரங்கில் என் பார்வை, பொதுவான பார்வையாகவே இருக்க முடியும். அதனை அவையோர் பொறுத்தருள வேண்டுகிறேன்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பைப் பார்த்ததுமே நினைவுக்கு வருவது ஔவையின் வாக்குதான். இலக்கியத்தில் அறிவியல் குறித்துப் பேசத் துவங்கும் எந்தவொரு ஆராய்ச்சியாளருக்கும் முதலில் கண்ணில்படுவது இதுவே.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று கூறும்போதே அவ்வையுடன் வள்ளுவரும் நினைவில் வந்து விடுகிறார். அவ்வையின் வாக்கு குறித்து அதிக விளக்கம் கூறத்தேவையில்லை. மிகச்சிறிய அலகாகக் கருதப்படும் அணுவையே துளைத்தல் குறித்த சிந்தனை இலக்கியத்தில் எப்படி வந்தது என்பது மிகப்பெரிய வியப்புதான்.

தொடர்ச்சியாக நினைவில் வருவது வள்ளுவர் பெயர். உலக வாழ்க்கைக்கே அடிப்படையாக இருப்பது நீர்தான். ஆங்கிலத்தில் Water is the matrix of life என்று சொல்வார்கள். இதையே வள்ளுவர் -
நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன் றமையாது ஒழுகு.
என்கிறார். எவ்வகையில் உயர்ந்தவராக இருந்தாலும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலவே மழை பெய்யவில்லை என்றால் வாழ்க்கையின் ஆதாரமான நீரும் இல்லை. இது ஒரு சுழற்சிச் சக்கரம் போன்றது. இரண்டு வரிகளுக்குள் அடங்கும் இந்த அரிய கருத்துக்கு நிகரான ஆங்கில Water is the matrix of life என்ற கருத்து நிச்சயமாக வள்ளுவருக்கு முன்னால் தோன்றியிருக்க முடியாது. ஆனால் தமிழில் இந்தக் கருத்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பதியப்பட்டிருக்கிறது என்றால், பெருமைப்படுவது ஒருபுறம் இருக்க, அறிவியல் நோக்குப் பார்வையில் வியப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்வோம். தொல்காப்பியம் என்றாலே இலக்கண நூல் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் இன்று மொழி அறிவியல் என்றொரு வகை இருக்கிறது. லிங்க்விஸ்டிக்ஸ் என்னும் மொழியியல் கோணத்தில் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் முந்தைய தொல்காப்பியத்தில் மொழிக்கு இலக்கணம் மட்டுமல்ல, ஒலி அமைப்பும் உச்சரிப்பும்கூட தெள்ளத்தெளிவாக, இன்றும் திருத்தம் தேவைப்படாத. திருத்த முடியாத செம்மையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரிகிறது.

தொல்காப்பியம் வரையறுக்கிற ஒலிகளும் மாத்திரைகளும், மயக்கங்களும் திரிபுகளும் வியக்க வைக்கின்றன. பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் அதனை உணர்ந்து படிக்கவில்லை. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களுக்காக மட்டும்தான் படித்திருக்கிறோம்.

சுருக்கமாக சிலவற்றைப் பார்ப்போம்.
அகரமுத னகர விறுவாய் முப்பதென்ப.
உயிர் 12, மெய் 18 ஆக மொத்தம் முப்பது.
அப்புறம் சார்பெழுத்துகள்
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

அதைத் தொடர்ந்து உயிர்க் குற்றெழுத்துகள், நெட்டெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று விளக்கும் தொல்காப்பியர், சட்டென ஒரே வரியில் சொல்கிறார்
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

அதாவது, உயிரெழுத்து மெய்யோடு இயைந்து உயிர்மெய் எழுத்தாக ஆனாலும், அந்த உயிரின் இயல்பு மாறாது. இதுல என்ன பெரிய அதிசயம் இருக்கு.... என்று தோன்றக்கூடும்.
க் += கி, ப் += பூ, ம் += மா.

தமிழில் உயிரெழுத்துகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் இருக்கிற A E I O U என்னும் vowels எடுத்துக்கொள்வோம். இதர ஆங்கில எழுத்துகள் கான்சனன்ட்ஸ்.
இப்போது பார்ப்போம். B I K E – bike. K I T E – kite இங்கே, ஐ என்பது சரியாக அதன் இயல்பு திரியாமல் ஒலிக்கிறது.

இன்னொன்றையும் பார்ப்போம் B I T – bit, S I T – sit, W I T – wit. இங்கே ஐ என்ற உயிரெழுத்தின் இயல்பு திரிந்து விட்டது. இதே போல
S U N – sun, SON – son,  A D D – add, A L L – all

ஆங்கில உயிர் எழுத்துகளின் இயல்பு திரிவது பற்றி இதுபோல ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். ஆனால் தமிழில் எந்த உயிரெழுத்தும் மெய்யெழுத்தோடு சேரும்போது அதன் இயல்பு திரியாது. எஸ் யு என் சன் என்று கூறுவது போல MUTHU - முத்துவை மத்து என்று உச்சரிக்க முடியாது. உச்சரிக்க மாட்டோம்.

அதே போல, எந்தெந்த எழுத்துகள் முதலெழுத்தாக வரலாம், எந்தெந்த எழுத்துகள் அல்லது உயிர்மெய்கள் மொழிக்கு முதலாக வராது, மெய்யெழுத்தை அடுத்துவரும் உயிர்மெய் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும், எந்த உயிர்மெய்கள் திரியும், அல்லது மயங்கும், என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது தொல்காப்பியம்.

1.     பன்னீர் உயிரும் மொழிமுத லாகும்.
2.     உயிர்மெய் அல்லன மொழி முதலாகா.
3.     கதந பம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
4.     சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஔ எனும் மூன்றலங் கடையே
.5.    உஊ ஒஓ என்னும் நான்குயிர்
      வ என் எழுத்தொடு வருதலில்லை.
6.     ஆ எ ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய.
7.     ஆவோ டல்லது யகர முதலாவது.

இந்த எழுத்துகள் மட்டும்தான் முதலெழுத்துகளாக வரும். விளக்கிச் சொன்னால்,
1.     பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் முதலெழுத்துகளாக வரலாம்.
2.     உயிர்மெய் அல்லாத மெய்யெழுத்து எதுவும் முதலெழுத்தாக வராது.
3.     க த ந ப ம ஆகிய ஐந்து உயிர்மெய்களும், இந்த ஐந்துடன் பன்னிரண்டு உயிர்களோடு சேர்ந்த உயிர்மெய்களும் முதலெழுத்துகளாக வரலாம்.
4.     ச எனும் எழுத்துடன் அ, ஐ, ஒள ஆகிய மூன்று தவிர்த்து இதர உயிரெழுத்துகளுடன் இணைந்து முதலெழுத்தாக வரலாம்.
5.     அ ஐ ஔ தவிர்த்து இதர உயிர்களுடன் சேர்ந்து மட்டுமே ச முதலெழுத்தாக வரும்.
6.     ஞகரம், ஆ எ ஓ என்னும் மூன்று உயிர்களுடன் மட்டுமே முதலில் வரும்.
7.     யகரம் ஆ என்னும் உயிர் தவிர்த்து முதலெழுத்தாக வராது.

இதைத்தவிர பிற உயிர்மெய்கள் ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகியவை முதலெழுத்துகளாக வரவே வராது. சில விதிவிலக்குகள் தவிர.

உச்சரிப்பைப் பார்த்தால்,
ம் க்கு அப்புறம் ப வந்தால் BA என்றுதான் உச்சரிக்கப்படும். கம்பம், செம்பு, ப என்னும் எழுத்து முதலெழுத்தாக வந்தால் PA என்றுதான் உச்சரிக்கப்படும். பன்னீர், பல், பல்லி, பனை, பசி, பசு, பட்டினி... ங் க்கு அடுத்து க வந்தால் GA என்றுதான் உச்சரிக்கப்படும். இன்னும் இதுபோல விளக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு தெளிவான மொழியியல் விளக்கங்கள் எப்போது எழுதப்பட்டன... இப்போது இல்லை. வெள்ளைவாரணார் கருத்துப்படி கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்று கருதாவிட்டாலும், குறைந்தபட்சம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியியல் விதிகள் வரையறுக்கப்பட்டு விட்டன.

மொழியியல் குறித்து இதற்கு மேலும் விளக்கிக் கொண்டே போனால் இலக்கண வகுப்பு நடத்துவது போல உங்களுக்குத் தோன்றக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.

மதிப்புக்குரிய நண்பரும் சாகித்ய அகாதமி மொழியாக்க விருது பெற்றவருமான டாக்டர் எச். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியத்தை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அவருடைய மொழியாக்கத்தை தட்டச்சு செய்து, தமிழுடன் தொகுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அப்போது வாசிக்கக் கிடைத்த வரிகளைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. இலக்கண நூல் என நாம் கருதும் தொல்காப்பியம் தொடாத விஷயமே இல்லை.

திருக்குறளில் அறம், பொருள், இன்பம் போல, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. முன்னர் மொழியியல் குறித்து நான் எடுத்துக்கூறிய பகுதிகள் எழுத்ததிகாரத்தில் உள்ளவை. உலகத் தோற்றம், உயிர்களின் வகைப்பாடு, கருப்பொருள்களைக் கொண்ட சூழல், ஆகியவற்றை எல்லாம் விவரிக்கிறது பொருளதிகாரம்.

நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இந்த உலகம் என்று கூறும்போது, கலந்த மயக்கம் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஒன்றொடு ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும், கலந்தும் கரைந்தும் இருப்பது உலகம் என்கிறார் தொல்காப்பியர்.

அடுத்து, உயிரினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம். உயர்திணை, அஃறிணை.
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
அதாவது, மனிதர்கள் என்போர் உயர்திணை
அஃறிணை என்றால் என்ன அல் திணை அதாவது திணை அல்லாதது. ஆக, திணை என்பதை மக்களுக்கும் திணை அல்லாத அனைத்தையும் அஃறிணை என்றும் வகுக்கிறது தொல்காப்பியம். இது வேறு எந்த மொழிகளிலும் இல்லாத ஒரு கருத்தாகும்.

இதைத்தொடர்ந்து, உயிர்களை பாலினங்களாக வகுக்கிறது.
தொல்காப்பியத்தை மட்டுமே தனித்தலைப்பாக எடுத்தாலே மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அறிவியல் கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. மாதிரிக்கு இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகிறேன்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

சுருக்கமாக விளக்குகிறேன் ஓரறிவு உயிரானது உடம்பினாலறிவது. ஈரறிவு உயிர் என்பது வாயும் கொண்டது. மூவறிவு உடையது மூக்கையும் கொண்டது. நான்கறிவு உடையது கண்ணையும் கொண்டது. ஐந்தறிவு உள்ளது செவித்திறனும் உடையது. ஆறறிவு என்பது சிந்திக்கும் மனமும் கொண்டது.
தொல்காப்பியத்தின் மரபியலில் வரும் இப்பாடலைத் தொடர்ந்து, ஓரறிவு உயிர்கள் எவை, ஈரறிவு கொண்ட உயிர்கள் எவை என்ற பட்டியலும் தரப்படுகிறது.
புல்லும் மரனும் ஓரறிவினவே
நந்தும் முரளும் ஈரறிவினவே
சிதலும் எறும்பும் மூவறிவினவே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே
மாவும் புள்ளும் ஐந்தறிவினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே....
புல்லும் மரமும் ஓரறிவு கொண்டவை.
சங்கு, நத்தை கிளிஞ்சல் போன்றவை ஈரறிவு கொண்டவை
அட்டை, எறும்பு போன்றவை மூவறிவு உடையவை.
நணடு, தும்பி போன்றவை நான்கறிவு உடையவை.
நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐந்தறிவுடையவை.

இதைத்தொடர்ந்து உயிரினங்களைப் பற்றிய விளக்கமும் தொடர்கிறது. அதையும் விளக்க இங்கே நேரம் போதாது. ஆனால் சிந்தனை ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ் இலக்கியத்தின் செழுமையை வியக்காமல் இருக்க முடிவதில்லை.

தொல்காப்பியரின் அதே கருத்தை -
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாகிப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.....
என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். சைவசிந்தாந்தக் கருத்தின்படி முனிவராய் தேவராய் எனவும் மறுபிறப்பு பற்றியும் பாடுவதை தனியாக ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், தொல்காப்பியர் சொன்ன அதே புல், பூண்டு, புழு, மரம், விருகம், பறவை, மனிதர் என உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழின் பக்தி இலக்கியமும் பாடுவதை நாம் அறிய முடிகிறது.

அண்மையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் அறிமுகம் கிடைத்த பிறகு ஏராளமான புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் எனக்குப் பிடித்த, தமிழின் சிறப்பை உணர்த்துகிற தகவல்களை சேகரித்து வருகிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நாம் பல விதமான அளவை முறைகளைப் பயன்படுத்துகிறோம். நீட்டல் அளவை, முகத்தல் அளவை, எடை அளவை, கால அளவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் தமிழில் பண்டைக் காலத்திலேயே பல்வேறு அளவைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

தொல்காப்பியத்திலேயே பல அளவைப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அளவுப்பெயர், நிறைப்பெயர், எண்ணுப்பெயர் என மூன்றாகப் பகுத்துக்கொள்கிறது தொல்காப்பியம்.

அளவைகள் பற்றி மேலும் அறிய விக்கிபீடியா பார்க்கவும்.
நில அளவையில் காணி என்பது நாம் அனைவரும் அறிந்தது. காணிநிலம் வேண்டும் என்று பாரதி பாடியதால், காணி நிலமாவது வேண்டும் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். உண்மையில் காணி என்பது சுமார் 92 சென்ட், 40000 சதுர அடி.

சரி, இப்படி வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு எல்லாவகை அளவைகளும் தமிழில் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை முற்ற முழுக்க மறந்து விட்டோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் சரிதான். ஆனால் பழையவை என்று நமது பொக்கிஷங்களை கழித்துவிட முடியுமா... ஆனால் நாம் கழித்துக்கட்டி விட்டோம் என்பதுதான் உண்மை.

குறவஞ்சியில் மட்டும் காணக்கிடைத்த பறவைகளின் பெயர்களை அண்மையில் பார்த்தேன்.
அகத்தாரா, அன்றில், அன்னம், ஆந்தை, ஆரா, ஆலா, ஆனைக்கால் உள்ளான், இராசாளி, உள்ளகன்,  கபிஞ்சலம், கம்புள், கருநாரை, கரும்புறா, கருவாலி, கவுதாரி, கருப்புக் கிளி, காட்டுக்கோழி, காடை, காணாக்கோழி, கிளிப்பிள்ளை, குயில், குருகு, கூழைக்கடா, கேகை, கொக்கு, கொண்டைகுலாத்தி, கோரை, சக்கரவாகம், சகோரன், சம்பங்கோழி, சம்பரன், சாதகம், சாரா, சிகுனு, சிச்சிலி, சிட்டு, சிட்டுல்லி, செந்நாரை, செம்போத்து, சேவரியான், தண்ணிப் புறா, தாரா, தீவகக் குருவி, தூக்கணம், நத்தைகொத்தி,  நாரை, நாங்கண வாச்சி, நாகை, நீர்க் காக்கை, நீர்த் தாரா, பகண்டை, பச்சைப்புறா, பஞ்சவர்ணக்கிளி, பஞ்சிலை, பணி, பருந்து, பாரத்துவாசம், பிருகு, மஞ்சணத்தி, மணித்தாரா, மயில், மாட்டுக்குருகு, மாடப்புறா, மீன்கொத்தி, லாத்தி, வட்டத்தாரா, வட்டா, வரிக்குயில், வரிசாளி, வல்லூறு, வலியான், வாலாட்டிக் குருவி, வாலான், வானம்பாடி, வெட்டுக்கிளி, வெண்கிளி, வெண்ணாரை, வெண்புறா, வெள்ளைப்புள், வெள்ளைப்புறா, வேதாளி

அண்மையில் ஒரு சிறுவர் நூலை தமிழாக்கம் செய்யும்போது ஹார்ன்பில் என்ற பறவைக்குத் தமிழ்ப் பெயர் கிடைக்காமல் தியடோர் பாஸ்கரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இருவாட்சி என்ற பெயரைக் கேட்டறிந்தேன். இதுதான் இன்றைய நிலை.

மற்றொரு பக்கம், எப்போது எதைப்பேசினாலும் மிகையாக பெருமை பாராட்டுவதும் நம்மிடம் ஒரு குறையாக இருக்கிறது. எதைச் சொன்னாலும் அது தமிழில் இருந்திருக்கிறது என்பார்கள். சிலப்பதிகாரத்தை உதாரணம் காட்டி, விமானங்கள் இருந்தது என்பார்கள். கண்ணப்பநாயனார் கண்ணை ஈந்தது, பொற்கைப் பாண்டியன் பொற்கரத்தைப் பொறுத்திக் கொண்டதாகவும் உள்ள பாடல்களை வைத்து, அன்றே மாற்று உறுப்பு அறிவியலில் தமிழர்கள் சிறந்து விளங்கியது போன்ற மிகைப்படுத்தல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது இப்படியொரு குறிப்பை படிக்க நேர்ந்தது.
மாதா உதிரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  
என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடலைக் கேட்கும்போது தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. உதிரத்தில் மலம் மிகுதல் என்பது என்ன பொருளில் கூறப்பட்டிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை.

அறிவியல் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பது. காப்பியங்களைப் படைத்தவர்களின் கற்பனையின் வளத்தை மட்டும் வைத்து முடிவு செய்வதல்ல என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம்.

பாரதியின் "வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்... சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.... போன்ற வரிகளும் நினைவில் வருகின்றன. இந்தக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருக்கும் ஜூலை 21ஆம் நாளுக்கு முதல்நாள்தான் 1969 ஜூலை 20ஆம் நாள் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் கால் பதித்தார். சந்திர மண்டலத்தை இந்தியாவும் கண்டு, நீர் இருக்கிறது என்று அண்மையில் தெளிந்திருக்கிறோம் என்பதை எண்ணும்போது பாரதியின் தீர்க்கதரிசனத்தை வியக்கிறோம். ஆனால் பாரதியின் பாடல்களை மிகைகள் ஏதும் இருக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.

இத்தனை செழுமை கொண்டிருக்கும் தமிழின் அறிவியல் நூல்கள் இல்லாததும், அறிவியலை தமிழில் படிக்க முடியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்று ஆராய வேண்டியிருக்கிறது.

தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாக அமைய முடியாது என்பார் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.

எனவே, நம் முன்னே இருப்பது மிகப்பெரிய பணி. தமிழ் மொழியே பின்னுக்குத்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.

பல்வேறு அகராதிப் பணிகளை மேற்கொண்ட அனுபவத்தில் நான் இந்த இடத்தில் மற்றொன்றையும் சுட்ட விரும்புகிறேன். இந்தியில் கலைச்சொல்லாக்கத் துறை சங்கத்துக்கு நேர் எதிரே இருக்கிற கட்டிடத்தில்தான் இருக்கிறது. இந்தியில் கலைச்சொல் உருவாக்க முடியாத சொற்களுக்கு அவர்கள் மூலச்சொல்லையே பயன்படுத்தத் தயங்குவதில்லை. ஆனால் தமிழர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை. எந்தவகையான சொற்களுக்கு மூலச்சொற்களை அப்படியே ஏற்கலாம், எவற்றை தமிழ்ப்படுத்தலாம் என்பதெல்லாம் காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பெரிய முன்னேற்றமோ ஒத்திசைவான கருத்தோ ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறிவியல் தமிழ் முயற்சி இந்தத் திசையில் உறுதியான பயணம் மேற்கொண்டால் அது தமிழுக்கும் பெருமை சேர்க்கும், தமிழ்ச் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும்.