Thursday, 6 March 2014

நிறம் மாறினால் குணம் மாறுமா ?!

கடந்த 22ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, உலகப் புத்தகத் திருவிழா பத்திரிகை வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கூட வந்த நண்பர் காரிலேயே தூங்கி விட்டார். எனக்குத் தூக்கம் வராது. போக்குவரத்து குறைவாக இருந்த சாலைகளை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவது வழக்கம். ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயன்ஸ் என்ற மிகப்பெரிய மருத்துவமனையின் பிரதான வாயில் அருகே ஒரு புளூ லைன் பஸ்  கண்ணில் பட்டது. இது எப்படி... இந்நேரத்துக்கு இங்கே எங்கே வந்தது புளூ லைன் பஸ்? எனக்கு குழப்பமாக இருந்தது.



வீடு திரும்பி படுக்கப்போகும் வரையும் கேள்வி அரித்தது. தில்லி பஸ்களின் வரலாறு கண்முன் விரிந்தது.

* * *

1991இல் ஜனவரி குளிரில் நான் தில்லி வந்துசேர்ந்தபோது தில்லிப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் மட்டுமே இருந்தன. கேரளத்தின் தடதடா பேருந்துகளை விட மோசமாக ஒலியெழுப்பும். முந்தைய ஆண்டில் மண்டல் போராட்டத்தின்போது உடைபட்ட கண்ணாடிகள் மாட்டப்படாமல் சன்னல்கள் வழி சில்லென்ற காற்று முகத்தைத் தாக்கும். எப்போது எந்த நேரத்தில் பிரேக் டவுன் ஆகும் என்று தெரியாது. ஆனாலும் இப்போது இருக்கிற அளவுக்கு அப்போது பஸ்களில் கூட்டம் இருக்கவில்லை. எந்த இடத்துக்கும் பஸ்கள் இருந்தன. இவை தவிர எம்14 போன்ற மிகச்சில தனியார் பேருந்துகளும் - வேன்கள் போன்ற சைசில் - மிகச்சில வழித்தடங்களில் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் 'முன்னாள் ராணுவத்தினரால் இயக்கப்படுகிறது' என்று எழுதப்பட்டிருக்கும். ஓட்டுனரோ நடத்துனரோ அதில் யாருமே முன்னாள் ராணுவத்தினராகத் தோன்றியதே இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் சார்ட்டர்டு பஸ் என்றொரு முறையும் இருப்பது தெரிய வந்தது. (நிர்பயா சம்பவம் இத்தகைய சார்ட்டர்டு பஸ்சில்தான் நடந்தது.)

சுமார் ஓராண்டுக்குப் பிறகு, தில்லிப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். உடனே அரசு வழக்கமான அதிரடி நடவடிக்கை எடுத்தது. பேருந்துகளை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுத்தது. விரைவிலேயே தில்லியில் சுமார் 4000 தனியார் பேருந்துகள் ஓடத்துவங்கின. அவற்றுக்கு சிவப்பு வண்ணம் ஒதுக்கப்பட்டது, அது ரெட் லைன் பஸ் என அறியப்பட்டது. பயணிகளுக்கு பெருமளவு நிம்மதி ஏற்பட்டது. ஆனால கொஞ்ச காலத்துக்கே இந்த நிம்மதி நீடித்தது. தனியார் பேருந்துகள் பயிற்சியில்லாத ஓட்டுனர்களாலும், முரட்டுத்தனமான நபர்களாலும் இயக்கப்பட்டன. விபத்துகள் அதிகரித்தன. சில நாட்களில் ஒரு நாளில் 8-10 பேர் ரெட் லைன் பஸ்சினால் உயிரிழப்பதும் நேர்ந்தது. சாலையில் செல்பவர்கள் மட்டுமல்ல, பஸ்சில் பயணிப்பவர்களுக்கும்கூட பாதுகாப்பு இல்லாத நிலை வந்தது. 

பத்திரிகைகள் கிழி கிழி என்று கிழித்தன. உடனே அரசு விரைவாக முடிவெடுத்தது. சிவப்பு வண்ணத்தை நீல வண்ணமாக மாற்ற உத்தரவிட்டது! அந்தப் பேருந்துகள் புளூ லைன் என அழைக்கப்பட்டன. நிறம் மாறினால் குணம் மாறுமா? போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓட்டியதால் விபத்துகள் தொடர்ந்தன. சில மாதங்களில் புதியதொரு திட்டம் வந்தது. பல வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை தில்லிப் போக்குவரத்துக் கழகமே வாடகைக்கு எடுத்து இயக்கியது. டிரைவர் தனியார் ஆளாக இருப்பார், கண்டக்டர் கழகத்தவராக இருப்பார். இது கிலோ மீட்டர் ஸ்கீம் என அறியப்பட்டது. 

இது சில ஆண்டுகள் தொடர்ந்தது. இதற்கிடையே தில்லியின் காற்று மாசு காரணமாக அனைத்துப் பேருந்துகளும் இயற்கை எரிவாயுவால்தான் - சிஎன்ஜி - இயக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கிலோமீட்டர் ஸ்கீம் காணாமல் போனது. மீண்டும் புளூலைன் பஸ்கள் வந்தன. இதே காலத்தில் வேறொரு வழக்கில் தில்லியின் தனியார் பேருந்துகளை ரத்து செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். புதிய தாழ்தளப் பேருந்துகள் வந்தன. காமன்வெல்த் விளையாட்டும் வர, தில்லி எங்கும் தனியார் புளூ லைன் பேருந்துகள் ஒழிந்தன. அண்மையில் ஆரஞ்சு வண்ண தனியார் கிளஸ்டர் பேருந்துகள் வந்திருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் ஒரே நிறுவனத்துக்கு மட்டுமே பர்மிட் தருவதால் இந்த ஆரஞ்சு பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக ஓட்டுவதில்லை. இது தற்போதைய நிலைமை. போகப்போக என்ன ஆகும் என்று இப்போது கூற இயலாது. ஆக, புளூ லைன் பஸ்களின் ஆயுள் 2012 ஜூன் 28உடன் முடிவுக்கு வந்தது.

* * *

அப்படியானால் மருத்துவமனையின் முன் நின்றிருந்த புளூ லைன் பஸ் எங்கிருந்து வந்தது .... வீட்டுக்குள் நுழைந்து படுக்கப் போகும்போதும் இந்தக் கேள்வி என்னை அரித்தது. குளிருக்கு இதமாக ரஜாய் எனப்படும் பஞ்சுப்பொதிப் போர்வையைப் போர்த்திக் கொள்ளும்போது மனதுக்குள் விடை கிடைத்தது!

டிசம்பர்-ஜனவரி மாதங்களில், சாலையோரம் உறங்கும் வீடற்ற மக்களுக்கு கம்பளி விநியோகம் செய்தது குறித்து நான் பேஸ்புக்கில் பதிவுகள் எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கும். இதற்காக பேஸ்புக் நண்பர்கள் 50000 ரூபாய்க்கும் மேல் அனுப்பி வைத்தார்கள். பல நாட்களில் இரவுகளில் சென்று கம்பளி விநியோகம் செய்தேன்.

நான் கம்பளி விநியோகம் செய்து கொண்டிருந்த அதே குளிர் காலத்தில்தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. சாலைகளில் தூங்கும் மக்களுக்காக இரவுநேர புகலிடங்களை ஏற்பாடு செய்ததோடு புதிய திட்டத்தையும் அறிவித்தது. "தில்லியின் கைவிடப்பட்ட பேருந்துகள் இரவுநேரப் புகலிடங்களாக மாற்றப்பட்டு முக்கிய இடங்களில் நிறுத்தப்படும். கம்பளிகள் உள்பட முக்கிய வசதிகள் செய்துதரப்படும்," என்று அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி. 

நான் பார்த்தது அப்படிப்பட்ட ஒரு பஸ்ஸாகத்தான் இருக்க வேண்டும்! அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினேன்.

மறுநாள், புத்தகத் திருவிழாவில் பத்திரிகை வேலை செய்யும் கடைசி நாள், சனிக்கிழமை இரவு வீடு திரும்பும்போது காரை நிறுத்தச்சொல்லி விட்டுப் பார்த்தேன். ஒன்றல்ல, இரண்டு பஸ்கள் இரவுப் புகலிடங்களாக நின்று கொண்டிருந்தன. அவற்றைப் படம் பிடித்துக்கொண்டேன்.



அர்விந்த் கேஜ்ரிவால்! நீங்கள் முதல்வராக இல்லாதிருக்கலாம். ஆனால் நீங்கள் முன்வைத்த புதிய திட்டம் இன்றும் தொடர்கிறது. பாராட்டுகள்!

5 comments:

  1. புதிய திட்டமாவது தொடர்வது சந்தோசம்...!

    ReplyDelete
  2. இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    5. g+ Profile-யை நீக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி...

    ReplyDelete
  3. இப்படி ஒரு திட்டம் கெஜ்ரிவால் கொண்டு வந்தாரா? இந்த ஒன்றுக்காகவே அவரை பிரதமர் ஆக்கலாம் !

    ReplyDelete
  4. சிறப்பானதோர் திட்டம்.....

    இப்போதும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது....

    ReplyDelete
  5. நல்லப் பதிவு. திரு. கேஜ்ரிவால் அவர்களின் ஒரு திட்டத்தை ஆதரித்து எழுதி இருப்பதில் மகிழ்ச்சி..!!

    ReplyDelete