Monday, 24 March 2014

சாலை விபத்துகள் - ஓர் அலசல்

கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, ஜெயக்குமார் என்ற இளைஞன் திருநெல்வேலி அருகே சாலை விபத்தில் மறைந்தான். பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது டாடா சுமோ பின்னாலிருந்து மோதியதில் உயிரிழந்து விட்டானாம்.

இவன் தில்லியில் எங்கள் வீட்டுப் பையன் போல இருந்தவன். சொந்த ஊர் வீரசிகாமணி. எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேஷனில் டிப்ளமா படித்தான். ஆங்கிலத்தில் அவ்வளவாக தேர்ச்சி இல்லாததால் சரியாக வேலை அமையாமல் ஒரு கட்டத்தில் என்னிடத்தில் வந்து சேர்ந்தவன்.

இதுவும் கடந்து போகும்தான், சந்தேகமே இல்லை. எங்கள் வீட்டுப் பையன்களாக இருந்தவர்கள் எத்தனை பேர் என்று எனக்கே தெரியாது. ஆனால் அத்தனை பேரிலிருந்தும் அவன் மட்டும் எப்படி எங்களுக்கு வித்தியாசமானவனாக இருந்தான் என்பது என்னை நேரில் அறிந்த மிகச்சிலருக்கு மட்டுமே தெரியும். 

குடியில்லை, சிகரெட் இல்லை, ஆடம்பரப் பழக்கம் ஏதும் இல்லை. சிக்கனமாக இருப்பான். உழைத்துச் சேர்த்த பணத்தில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தான். என் மகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தான். டேடா என்ட்ரி செய்தான். அவன் கைபடாத வீ்ட்டு சாதனங்களே எங்களிடம் இல்லை. கடைசியாக 2011 டிசம்பர் 28ஆம் தேதி உடுமலையில் எங்கள் இல்லத் திறப்புவிழாவுக்காகவே நெல்லையிலிருந்து வந்தான். வழக்கம்போலவே எங்கள் வேலைகளில் துணையாய் இருந்தான். 


இவன் நினைப்பிலிருந்து மீள சிரமமாக இருக்கிறது. கண்ணீரைக் கட்டுப்படுத்துவது இப்போதும் சிரமமாக இருக்கிறது. அவனுடைய விபத்துக்கு அவன் காரணமல்ல என்று தெரிய வந்தது. இருந்தாலும் சாலை விபத்துகளில் உயிரிழந்த நண்பர்களின் முகங்கள் நினைவில் நிழலாடுகின்றன. சாலை விபத்துகள் குறித்து நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்ததை இந்தச் சம்பவம் எழுத வைத்தது. இது ஜெயக்குமாருக்கு அஞ்சலி. இளைஞர்கள் இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். 

* * *

•  உலக மக்கள் தொகையில் 17.5% மக்கள் வசிக்கும் இந்தியாவில், சாலைவிபத்துகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் 0.7 சதவிகிதம்தான் உள்ளன. 
•       உலகெங்கும் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். 20 முதல் 50 லட்சம் பேர் படுகாயமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஊனமடைகின்றனர். 2020இல் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 20 லட்சமாக இருக்கும் என மதிக்கப்படுகிறது.
•    15-29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது சாலைவிபத்துகளே. இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 3 சதவிகிதம் வரை இழப்பு ஏற்படுகிறது.
•     உலக நாடுகளின் மொத்த வாகனங்களில் 50 சதவிகிதம்தான் குறைந்த அல்லது நடுத்தர வருவாய் நாடுகளில் உள்ளன. ஆனால் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 91% பேர் இந்த வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.
•      சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களில் பாதிப்பேர் நடந்து செல்பவர்கள், சைக்கிள்காரர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள்தான். 

* * *

இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்க வேகத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரிப்பு வேகம் மிக அதிகமாக இருக்கிறது. 

இந்தியாவின் மொத்த உயிரிழப்புகளுக்கான காரணங்களில் ஆறாவது முக்கியக் காரணமாக இருப்பது சாலை விபத்து. உயிரிழப்பவர்களில் பெரும்பாலோர் இளையவர்கள் மற்றும் நடுத்தர வயதினர்.

2001 முதல் 2011 வரையான பத்தாண்டுகளில் இந்தியாவில் சாலை வசதி மேம்பாட்டு விகிதம் 3.4%. மக்கள் தொகைப் பெருக்க விகிதம் 1.6%. ஆனால் வாகனப் பெருக்கம் 9.9%. இதே காலகட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை 2.1% அதிகரித்தது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.8%, காயமுற்றோர் எண்ணிக்கை 2.4% அதிகரித்தது.

1970உடன் ஒப்பிட்டால் 2011இல் வாகனங்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 9.8%, காயமுற்றோர் எண்ணிக்கை 7.3 சதவிகிதமும்தான் அதிகரித்துள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டியதுதான்.

இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து வரும் உயிரிழப்பு விகிதம் கவலை தருகிறது. 2002இல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழப்பு விகிதம் 18.1%. ஆனால் 2011இல் இது 24.4%. 

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சாலைவிபத்துகள் குறித்த ஆய்வில் மூன்று விஷயங்கள் கணிக்கப்படும். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, ஒவ்வொரு பத்தாயிரம் வாகனத்துக்கும், ஒரு ஆயிரம் கிலோமீட்டர் சாலைக்கும் இடையிலான விபத்து விகிதம் கணக்கிடப்படுகிறது.

2002-2011 இடைப்பட்ட காலத்தில் சாலைவிபத்துகள் விவரம்

•        1970இல் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 13 பேர் காயமுற்றனர், 2.7 பேர் உயிரிழந்தனர். ஆனால் 2011இல் காயமுற்றோர் 42.3, உயிரிழந்தோர் 11.8. இது அபாயகரமான விகிதமாகும். 

•        இதுவே பத்தாயிரம் வாகனத்தின் அடிப்படையில் பார்த்தால், 1970இல் 500 விபத்துகள் என்றால், 2011இல் 36தான். அதேபோல, 1970இல் உயிரிழந்தோர் 104 என்றால், 2011இல் 10தான். இது குறைவாகத் தெரிவதற்கு, வாகனங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படுவதும் காரணமாகும். 

* * *

வாகன விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என்பது கவலைதரும் விஷயம். அதாவது, வாகன எண்ணிக்கை, காயமுற்றோர் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை என்ற விகிதத்தில் தமிழகம்தான் நாட்டிலேயே முதலிடம் பெறுகிறது. 

நாட்டின் மொத்த வாகனங்களில் 13.8 சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. விபத்துகளில் உயிரிழந்தோரில் 10.8 சதவிகிதம், காயமுற்றோரில் 14.5 சதவிகிதம் தமிழகத்தில்தான். அதாவது, 2012இல் நாட்டிலேயே அதிக வாகனங்கள் உள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன - 15.4%. 

2011இல் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன - நகர்ப்புறத்தில் 46.5%. கிராமப்புறத்தில் 53.5%. உயிரிழப்புகளில் இந்த வித்தியாசம் இன்னும் அதிகம். நகர்ப்புறங்களில் 36.6%, கிராமப்புறங்களில் 63.4%. அதாவது, உரிய நேரத்தில் உரிய மருத்து வசதி கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
உயிர்களைப் பறித்த வாகனங்களின் விகிதம்
எந்த வயதுப் பிரிவினர் விபத்துக்கு ஆளாகின்றனர் என்று பார்ப்பதும் அவசியமாகிறது. 2012ஆம் ஆண்டில் 25 முதல் 65 வயது வரையானவர்கள் 51.9%. 15 முதல் 24 வயது வரையானோர் 30.3%. விபத்துகளில் உயிரிழப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் சம்பாதிக்கும் வயதில் இருப்பவர்கள். விபத்துக்குள்ளான பெண்கள் 15% மட்டுமே என்பது முக்கியமான செய்தி. மொத்த விபத்துகளில் 23% இருசக்கர வாகன ஓட்டிகள் அல்லது அதில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள்.

மேற்குறிப்பிட்ட பத்தியையும் படத்தையும் ஒப்பிடும்போதும், வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது 18 என்பதையும் கணக்கில் கொண்டால், இளவயதினர் - குறிப்பாக ஆண்கள் விபத்துக்கு ஆளாகும் விகிதம் அதிகம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

நாளின் எந்த நேரத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன? 2012இல், மதியம் 3 முதல் 5 மணி வரை 16.7%.  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 16.6%. நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் இரவு 3 மணி வரை 6.3%.

விபத்துக்கான முக்கியக் காரணங்கள் - குடிபோதையில் ஓட்டுதல், கவனம் திசைதிரும்புதல், களைப்பு, முடிவெடுக்க முடியாத குழப்பம். விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் அனுபவமற்றவர்களாக, துடிப்பானவர்களாக, ஆத்திரக்காரர்களாக, சாகசம் புரிபவர்களாக, ரிஸ்க் எடுப்பவர்களாக, சாலைவிதிகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 2011இல் ஏற்பட்ட விபத்துகளில் 77.5 சதவிகிதம் ஓட்டுநர் தவறின் காரணமாகவே ஏற்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது.

எல்லா விபத்துகள் குறித்த தரவுகளும் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். விபத்துகளில் சராசரியாக 5 சதவிகித அண்டர்ரிப்போர்டிங் உள்ளது எனக் கருதப்படுகிறது.

ஆக, உலகின் 18 சதவிகித மக்கள் வசிக்கும் இந்தியாவில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலோர் ஆக்கசக்தி கொண்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். உயிரிழப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் இருசக்கர வாகனத்தினர். அதிலும் குறிப்பாக இளைய வயதினர். 

கவனத்தில் வைத்திருங்கள் இளைய நண்பர்களே.....

கட்டுரைக்கு ஆதாரங்கள் –
National Statistics of Road Accidents in India

Journal of Orthopaedics, Traumatology and Rehabilitation

1 comment:

  1. வருத்தம் தந்த செய்தி. தில்லி போன்ற பெருநகரங்களில் தினம் தினம் வாகன விபத்துகள் அதனால் போகும் உயிர்கள்..... ஆனால் சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் கூட வாகன எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கூடவே விபத்துகளும் உயிரிழப்புகளும். வேகம் விவேகமல்ல என்று தெரிந்தும் வேகத்தினைக் காதலிக்கிறோம்.

    மறைந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....

    ReplyDelete