Wednesday, 12 March 2014

ஜோ டி குரூஸ் – பாராட்டு விழா

கொற்கை நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கச் செயலர் முகுந்தன், எழுத்தாளரின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். குரூஸ், மாலன் இருவருக்கும் சால்வை அணிவித்து பெருமைப் படுத்தியது தில்லித் தமிழ்ச் சங்கம்.



நூலை தான் இதுவரை வாசிக்கவில்லை என்று கூறிய புலவர் விசுவநாதன், சங்க இலக்கியத்தில் நெய்தல் நில வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது குறித்துப் பேசினார்.

தலைமை வகித்த எழுத்தாளர் மாலன், நூல் குறித்து விரிவாகவே பேசினார். ஆரம்ப காலத்திலிருந்தே சாகித்ய அகாதமி வழங்கும் விருதுகளைப் பார்க்கையில், படைப்புக்கு விருது என்பதைவிட படைப்பாளிக்கு விருது என்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தது என்பதை உதாரணங்களுடன் சுட்டினார். தான் உள்பட இளைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து அந்த நிலை மாறிவருவதைக் காண முடிகிறது என்றார்.



குரூஸ் எழுதிய முதல் நாவல் ஆழிசூழ் உலகு. அதற்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இரண்டாவது நாவல் கொற்கை சாகித்ய அகாதமி பரிசு பெற்றது. அதற்கு முன்னால் அவர் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அவற்றைக் கவிதை என்று அவரே இப்போது ஒப்புக்கொள்வாரா என்று சந்தேகம்தான் என்றார் மாலன்.

கொற்கை நாவல் நூறாண்டுகால வரலாற்றை களமாகக் கொண்டிருக்கிறது. இது பழங்காலக் கொற்கை அல்ல. தூத்துக்குடியைத்தான் கொற்கையாக சித்திரிக்கிறார். தெற்கின் முக்கியமான தொழில்நகரம் தூத்துக்குடி என்றுதான் கூற வேண்டும். மீன்பிடி தொழில் இருந்திருக்கிறது. உப்பளம் இருந்திருக்கிறது. விவசாயம் சார்ந்த தொழிலும் இருந்தது. நூற்பாலைகள் இருந்திருக்கின்றன. கடல்கடந்த வணிகத்துக்கான தலமாகவும் இருந்தது. இத்தகைய பழமையான மற்றும் முதலாவது தொழில் நகரின் கதை இது. இதில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. காலத்தைக் கதாநாயகன் என்றுகூடக் கூற முடியாது. மீனவ சமூகத்தைப் பற்றிய கதைகள் என்றால் வண்ணநிலவனின் கடல்புரத்தில், ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க் கரையில் ஆகிய இரண்டைத்தான் குறிப்பிட வேண்டும். ஆனால் இதுவரை கவனிக்கப்படாத வித்தியாசமான பரிமாணத்தை இந்த நாவல் முன்வைத்திருக்கிறது என்று பாராட்டினார்.



தில்லியில் இருப்பதால்தான் தில்லித் தமிழ்ச் சங்கம். அதனாலேயே சங்கத்திற்கு ஓர் சிறப்பும் உண்டு. விருது பெற வருகிற படைப்பாளிகள் அனைவரையும் முதலாவதாகப் பாராட்டும் வாய்ப்பு சங்கத்துக்குக் கிடைக்கிறது. இதில் சங்கம் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. எழுத்தாளர் பற்றிய சர்ச்சைகளோ, விருது குறித்த சர்ச்சைகளோ சங்கம் கவனத்தில் கொள்வதில்லை. மாலனும் இதுகுறித்து குறிப்பிட்டு சங்கத்தைப் பாராட்டினார்.

ஏற்புரை வழங்கிய குரூஸ், மிகச்சுருக்கமாக நன்றி தெரிவித்து விடைபெற்றார்.


பொருளாளர் அறிவழகன் நன்றியுரை வழங்கினார்.

2 comments:

  1. படைப்பாளிகள் குறித்இத சர்ச்சைகளையோ விருதுகுறித்தக் சர்ச்சைகளையோ சங்கம் கண்டுகொள்வதில்லை

    ReplyDelete
  2. மின்னஞ்சலில் தகவல் தெரிந்தாலும், வேலை நாள் என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

    உங்கள் பதிவின் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete