Thursday, 26 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 7

பேசும் படங்கள்

இப்போ என்ன சொல்லிட்டேன்னு மூணு பேரும் இப்படி முறைக்கிறாங்க... என்ன ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்கன்னு கேட்டா தப்பா...?
இருக்கு ஆனா இல்லே... அது மாதிரி இது புத்தகம்தான், ஆனா புத்தகம் இல்லே.

ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து அமேசானும் தொப்பி போடுது.

ஏய்... அது என்னுதுப்பா. போடி... அது நான் எடுத்தது... சண்டை நல்லது.
அய்யோ... இம்புட்டுக் கூட்டத்துல எப்படிப் போறது...
ஊஹும்... இந்த கவர்மென்ட்டை எல்லாம் நம்ப முடியாது. நாமதான் சாக்கிரதையா இருக்கோணும் - முன்ஜாக்கிரதை முத்தண்ணா.

Wednesday, 25 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 6

பேசும் படங்கள்
  
திருவிழா நடைபெற்ற பிரகதி மைதானம். மக்கள் உள்ளே அனுமதிக்கப்படும் 11 மணிக்கு முந்தைய காட்சி
ஓர் அரங்கின் உள்ளே...

என்னம்மா... இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா....
இந்த மாதிரி போஸ் குடுக்க யார்கிட்டே கத்துகிட்டிருப்பான்... மோடிகிட்டேயோ...?!
சீக்கிரமா வாங்க.. உங்களைத்தான் கூப்பிடறாங்க.
புக் ஃபேருக்கும் மேட்சிங் மேட்சிங்காத்தான் போகோணும்.

Tuesday, 24 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 5

புத்தகத் திருவிழா மைதானத்தில், சாலைகளில் இப்படி நிற்கிறார்கள் இளைஞர்கள். ஐஐடி-யில் படிப்பதைவிடக் குறைந்த செலவில் அமெரிக்காவில் படிக்கலாம் என்ற விளம்பரப் பலகையைப் பிடித்தபடி நின்று கொண்டே இருப்பது இந்த இளைஞனின் பணி.


குளிர் குறைந்து கொண்டிருக்கிறது. இதமானதே என்றாலும் வெயிலில் மணிக்கணக்கில் நிற்பது சாதாரண வேலையல்ல. இவனைப் பார்த்ததுமே மாணவன் என்று புரிந்தது.
முகத்தில் நேராக அடிக்கும் வெயிலுக்கு முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறானோ அல்லது தன் சகாக்கள் யாரேனும் பார்த்துவிடக்கூடும் என்ற கூச்சத்தில் முகத்தை மறைக்கிறானோ என்று தெரியவில்லை.
9 நாள் திருவிழாவில் குறைந்தது ஆறாயிரம், அதிகபட்சம் 10 ஆயிரம் சம்பாதித்து விட முடியும் என்ற மகிழ்ச்சி அவனுக்குள்ளும் இருக்கலாம்.


பல்வேறு பதிப்பகங்களின் விளம்பரத் துண்டறிக்கைகளை, புக் மார்க் அட்டைகளை வருகிறவர்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தே இருந்தார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும். இவர்களைத் தவிர பதிப்பகப் பெயர் எழுதப்பட்ட பேனரை முதுகிலும் மார்பிலும் தொங்க விட்டவர்கள் சிலர். பொம்மை வேடம் போட்டவர்கள் சிலர். சோட்டா பீம்வேடம் போட்டுக்கொண்டு திரிந்து கொண்டிருந்தவருடன் படம் எடுத்துக்கொள்ள விரும்பியவர்கள் சிறு குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான்.
 * * *

தனிமனிதத் துதியை நான் ஒருபோதும் ரசிப்பதில்லை. இருந்தாலும், எந்தக் கவர்ச்சியுமற்ற ஓர் இளைஞனின் பின்னால் இப்படி மக்கள் திரள்கிறார்கள் என்றால், அவனிடம் ஏதோ இருக்கிறது.


ஆம் ஆத்மி கட்சி குமார் விஸ்வாஸ் இன்று புத்தகத் திருவிழாவுக்கு வந்தபோது நெருக்கிய இளைஞர் கூட்டம். அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

Saturday, 21 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 4



நாளும் ஓர் அனுபவம்

24 ஆண்டுகளாக தவறாமல் உலகப் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு வருகிறேன். சுமார் இலட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கியிருப்பேன். புதிது புதிதாக வரும் புத்தகக் கடைகளைப் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லாப் பெயர்களுமே மனப்பாடம். ஆண்டுதோறும் தவறாமல் வருகிற அரிய புத்தகக் கடைக்காரரையும் - Rare books - பார்க்கிறேன். அவரிடம் பார்ப்பதோடு சரி, எதுவும் நான் வாங்குகிற விலையில் இருக்காது. படம் எடுத்துக்கொள்வதோடு சரி.

நேற்றுதான் புதிதாக ஒரு கடையைப் பார்த்தேன். இரண்டாம்கை புத்தகங்கள் விற்கும் கடையும் இங்கே வருகிறது என்று தெரிந்தது. (செகண்ட் ஹேண்டுக்கு யாராவது நல்ல தமிழ்ப்பதம் சொல்லுங்கள்.) அந்தக் கடையில் வாங்கியவை -
Between the Assassinations, Aravind Adiga
An Ordinary Person's Guide to Empire, Arundati Roy
In Custody, Anita Desai
The Man-eater of Malgudi, R.K. Narayan
The Bachelor of Arts, R.K. Narayan
Swami and Friends, R.K. Narayan
The Guide, R.K. Narayan
அத்தனையும் சேர்த்து வெறும் 600 ரூபாய்.

நாளை அந்தக் கடைக்கு இன்னொரு ரவுண்டு போக வேண்டும். சுவர்போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாயில் வந்த விலை சொல்வார். விசிட்டிங் கார்ட் கொடுத்து, தேவைப்படும் புத்தகத்தை போனில் சொல்லுங்கள், கூரியரில் அனுப்புகிறன் என்றும் சொல்லியிருக்கிறார். வாழ்க. (கடைக்காரர் பெயர் Sandeep Madan - தொலைபேசி - 9810819130 நீங்களும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.)

அந்தப் புத்தகங்களில் பிடித்த விஷயம் - யார் யார் பெயரோ எழுதியிருப்பது, சிலர் வாங்கிய ஆண்டையும் குறித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் யார், எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்வதும் ஒரு சுகம்.

 * * *

காசு, பணம், துட்டு, மனி மனி...

புத்தகத் திருவிழா குறித்துச் சொல்ல எனக்கு நிறைய்ய்ய்ய இருக்கிறது. மிகச்சிலதை மட்டுமே பகிர்கிறேன்.

பத்திரிகைகளுக்கு அரசியல் சார்பு உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். பதிப்பகங்களுக்கும் அரசியல் சார்பு உண்டு. கூடவே, ஒரு பதிப்பகம் தெளிவான வியாபாரியாக இருந்தால் அரசியலைவிட வியாபாரத்துக்குத்தான் முக்கியத்துவம் தரும். அப்படியொரு நிகழ்வு ....

புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் சுமார் 100-150 புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், உரையாடல்கள், பட்டறைகள், கலைநிகழ்ச்சிகள், ........... நடக்கின்றன. இவற்றுக்கு முன்பதிவு செய்தால்தான் அந்தந்த நிகழ்ச்சிக்கான அரங்கம் கிடைக்கும்.

ஒரு பெரிய பதிப்பகம் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்து வைத்தது. 14ஆம் தேதி திருவிழா துவங்குகிறது. நிகழ்ச்சிகளின் விவரம் அடங்கிய புத்தகம் 10ஆம் தேதி கிட்டத்தட்ட இறுதியாகி விட்டது. அச்சுக்கு அனுப்ப வேண்டிய நிலை.

10ஆம் தேதி 11 மணிவாக்கில் இரண்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக பதிப்பகம் தெரிவித்தது. ஏன் ரத்து செய்தது தெரியுமோ...? ஒரு நிகழ்ச்சிக்கு கிரண் பேடி - சூப்பர் காப் என்று தலைப்பு. மற்றொரு நிகழ்ச்சிக்கு மோடி மேனேஜ்மென்ட் குரு என்று தலைப்பு. 10ஆம் தேதி என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்தானே...? ஆப் கட்சி ஆப்பு அடித்து விட்டது.

தெளிவான வியாபாரப் பதிப்பகம் அரங்கத்துக்கான காசை மிச்சப்படுத்திக் கொண்டது.

Friday, 20 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 3



சோக்ரி குயில்கள்

தெத்சியோ சகோதரிகள் நான்கு பேர். நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள். நாட்டுப்புற நிகழ்வுகளில் பாடப்படும் மக்களின் பாடல்களைப் பாடுகிறவர்கள். சோக்ரி இவர்கள் மொழி. 1991 கணக்கெடுப்பின்படி சோக்ரி மொழி பேசுவோர் 20,000 பேர். (இந்தியில் சொக்ரி என்றால் சிறுமி என்று பொருள். ஏ குட்டீ... என்பது போல.) இசைப்பதற்குத் துணையாக டாடி அல்லது ஹேகா லிபு என்னும் தந்தி வாத்தியங்களைப் பயன்படுத்துவார்கள். நமது கிராமப்புறங்களில் இருப்பது போலவே அறுவடைக்காலப் பாடல்கள், விதைப்புக்காலப் பாடல்கள் என பலவகையான பாடல்களை இவர்கள் நாடெங்கும் பாடி, தமது கலைகளைப் பரப்புகிறார்கள்.

நேற்று புத்தகத் திருவிழாவில் இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரம் தமது பாடல்களாலும் நடனங்களாலும் மகிழ்வித்திருக்கிறார்கள். மாதிரிக்கு
சிறுவயது மிகக்குறுகியது
இளமை விரைந்தோடுவது
முதுமை நீண்டுநெடிவது
அச்சம் தரக்கூடியது
எல்லாம் கொண்ட வாழ்க்கை
மிகவும் நுட்பமானது.

கேட்டவங்க பாத்தவங்க எல்லாம் கெறங்கிப் போயிட்டாகளாம். இருக்கும்தானே...

* * *

A Tribute to R.K. Laxman



Rich tributes were paid to R.K. Laxman, India’s great cartoonist whose ‘Common Man’ ruled the cartoonspace for about five decades. The event was held at the Children’s Pavilion of the World Book Fair on 17 February.




Noted artist and cartoonist Aabid Surti shared the memories of his days in Mumbai. Surti’s first cartoon was published in Times of India alongwith that of R.K. Laxman, he said. “Laxman was a very reserved person and no editor had the courage to make changes to his cartoons or his words. He reached the heights that no other cartoonist of India can reach,” Surti recalled.



Sharing his thoughts about cartoons, Tanmaya Tyagi, Chief Cartoonist with Tehelka, gave some tips to the would-be-cartoonists. “A cartoonist never offends anyone. He should read a lot. Note the ideas as and when they appear. Drawing skills and indepth reading alone makes a good cartoonist. In fact, he is an editor who draws,” said Tyagi.



Later, both the artists paid homage through their sketches to Laxman and Rajinder Puri, the cartoonist of The Statesman, who passed away on 17 Feb. 2015.

Thursday, 19 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 2



பன்முகப் பண்பாட்டு சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்

சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம் விடுதலைக்கு முந்தைய சிங்கப்பூர் கதை, விடுதலைக்குப் பிந்தைய சிங்கப்பூர் தமிழரின் கதை என்றார் ராம கண்ணபிரான். சிங்கப்பூரின் இலக்கியவட்டத்தில் பிரபலமான எழுத்தாளர், பல நூல்களை எழுதியிருப்பவர், விருதுகளைப் பெற்றிருப்பவர். உலகப் புத்தகத் திருவிழாவின் சிங்கப்பூர் அரங்கில் ‘பன்முகப் பண்பாட்டு சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.


சிங்கப்பூரின் வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிக்கொள்கை, பள்ளிகளில் சீனம், மலேயமொழி, தமிழ் மூன்றும் இரண்டாம் மொழிகளாக உள்ளமை என விரிவாகப் பேசினார். சிங்கப்பூரில் 1888இல் முதல் தமிழ் சிறுகதை எழுதியவர் மகதூன் சாயபு என்றும், அவருடைய கதை உரையாடல் வடிவில் அமைந்த்து என்றும் கூறியவர், தமிழ் நடையின் வளர்ச்சி குறித்தும் பேசினார். உதாரணமாக, ஜெயந்தியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் சிங்கிலீஷ் பேசும், பழனிவேலு கதைகளில் சீனமும் மலாய் மொழியும் இருக்கும். இவருடைய கதைகள் தற்கூற்று முறையில் அமைந்திருக்கும். இளங்கண்ணனின் வைகறைப்பூக்கள், இந்திய தேசிய ராணுவத்தினைப் பின்னணியாக்க் கொண்டது, என பல எழுத்தாளர்களை வரிசைப்படுத்தினார். பொதுவாக, சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்புகளில் நான்கு மொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பது அவரது கருத்து.

தமிழ் கவிஞரும் எழுத்தாளரும் தமிழ் முரசு ஆசிரியருமான கனகலதா தற்கால எழுத்துகள் குறித்துப் பேசினார். சிங்கப்பூரின் ஆரம்பகால எழுத்துகள் தமிழ்நாட்டின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. இப்போது தமக்கான அடையாளத்தைக் கொண்டவையாக மாறியிருக்கின்றன என்றார். தமிழ்ப் படைப்புகள் மற்ற மொழியினராலும், மற்ற மொழிப் படைப்புகள் தமிழர்களாலும் எவ்வாறு வரவேற்கப்படுகின்றன என்று கேட்டேன். மொழியாக்கமும், பதிப்புக்கு நிதியுதவி செய்யும் நிறுவனங்களும் இதில் பெரிதும் பங்களிக்கின்றன என்றார். உதாரணமாக, பாடநூல்களில் இடம்பெறும் கவிதைகளில் மூன்று மொழிக் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இடம்பெறுகின்றன என்றார். தவிர, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்கப்பூர் இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன.

கிரிம்சன் எர்த் என்னும் பதிப்பகத்தின் விற்பனைத்துறை மேலாளர் விஜய் தாமோதரனும் பேசினார். நேஷனல் ஆர்ட்ஸ் கவுன்சில் போன்ற அரசு அமைப்புகளின் ஆதரவு எழுத்தாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
நிகழ்ச்சியின்போது, ராம கண்ணபிரான் எழுதிய வாழ்வு என்னும் சிறுகதைகளின் தொகுப்புநூலும் வெளியிடப்பட்டது. இந்நூலின் நாயகி பூங்கோதை ஓர் ஆசிரியர். தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற வருத்தமே இந்தக் கதையின் மையக்கரு. இது சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, தில்லிக்கும் பொருந்தும். புலம்பெயர் சமூகங்கள் போகும் இடங்களிலெல்லாம், அவர்களுடைய குழந்தைகள் உள்ளூர் மொழியைக் கற்பதில் காட்டும் ஆர்வம் தாய்மொழியில் இருப்பதில்லை. சுற்றுச் சூழல் இதன் பிரதான காரணமாக இருக்கிறது.

இந்தியாவைப் போன்றே சிங்கப்பூரும் பன்முகப் பண்பாடும், பல இனங்களும் பல மொழிகளும் கொண்ட நாடு என்பதால் இந்தியாவும் சிங்கப்பூரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள நிறையவே உண்டு.