Saturday 21 February 2015

உலகப் புத்தகத் திருவிழா 2015 - 4



நாளும் ஓர் அனுபவம்

24 ஆண்டுகளாக தவறாமல் உலகப் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு வருகிறேன். சுமார் இலட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கியிருப்பேன். புதிது புதிதாக வரும் புத்தகக் கடைகளைப் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட எல்லாப் பெயர்களுமே மனப்பாடம். ஆண்டுதோறும் தவறாமல் வருகிற அரிய புத்தகக் கடைக்காரரையும் - Rare books - பார்க்கிறேன். அவரிடம் பார்ப்பதோடு சரி, எதுவும் நான் வாங்குகிற விலையில் இருக்காது. படம் எடுத்துக்கொள்வதோடு சரி.

நேற்றுதான் புதிதாக ஒரு கடையைப் பார்த்தேன். இரண்டாம்கை புத்தகங்கள் விற்கும் கடையும் இங்கே வருகிறது என்று தெரிந்தது. (செகண்ட் ஹேண்டுக்கு யாராவது நல்ல தமிழ்ப்பதம் சொல்லுங்கள்.) அந்தக் கடையில் வாங்கியவை -
Between the Assassinations, Aravind Adiga
An Ordinary Person's Guide to Empire, Arundati Roy
In Custody, Anita Desai
The Man-eater of Malgudi, R.K. Narayan
The Bachelor of Arts, R.K. Narayan
Swami and Friends, R.K. Narayan
The Guide, R.K. Narayan
அத்தனையும் சேர்த்து வெறும் 600 ரூபாய்.

நாளை அந்தக் கடைக்கு இன்னொரு ரவுண்டு போக வேண்டும். சுவர்போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். வாயில் வந்த விலை சொல்வார். விசிட்டிங் கார்ட் கொடுத்து, தேவைப்படும் புத்தகத்தை போனில் சொல்லுங்கள், கூரியரில் அனுப்புகிறன் என்றும் சொல்லியிருக்கிறார். வாழ்க. (கடைக்காரர் பெயர் Sandeep Madan - தொலைபேசி - 9810819130 நீங்களும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.)

அந்தப் புத்தகங்களில் பிடித்த விஷயம் - யார் யார் பெயரோ எழுதியிருப்பது, சிலர் வாங்கிய ஆண்டையும் குறித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் யார், எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்வதும் ஒரு சுகம்.

 * * *

காசு, பணம், துட்டு, மனி மனி...

புத்தகத் திருவிழா குறித்துச் சொல்ல எனக்கு நிறைய்ய்ய்ய இருக்கிறது. மிகச்சிலதை மட்டுமே பகிர்கிறேன்.

பத்திரிகைகளுக்கு அரசியல் சார்பு உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். பதிப்பகங்களுக்கும் அரசியல் சார்பு உண்டு. கூடவே, ஒரு பதிப்பகம் தெளிவான வியாபாரியாக இருந்தால் அரசியலைவிட வியாபாரத்துக்குத்தான் முக்கியத்துவம் தரும். அப்படியொரு நிகழ்வு ....

புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் சுமார் 100-150 புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், உரையாடல்கள், பட்டறைகள், கலைநிகழ்ச்சிகள், ........... நடக்கின்றன. இவற்றுக்கு முன்பதிவு செய்தால்தான் அந்தந்த நிகழ்ச்சிக்கான அரங்கம் கிடைக்கும்.

ஒரு பெரிய பதிப்பகம் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்து வைத்தது. 14ஆம் தேதி திருவிழா துவங்குகிறது. நிகழ்ச்சிகளின் விவரம் அடங்கிய புத்தகம் 10ஆம் தேதி கிட்டத்தட்ட இறுதியாகி விட்டது. அச்சுக்கு அனுப்ப வேண்டிய நிலை.

10ஆம் தேதி 11 மணிவாக்கில் இரண்டு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக பதிப்பகம் தெரிவித்தது. ஏன் ரத்து செய்தது தெரியுமோ...? ஒரு நிகழ்ச்சிக்கு கிரண் பேடி - சூப்பர் காப் என்று தலைப்பு. மற்றொரு நிகழ்ச்சிக்கு மோடி மேனேஜ்மென்ட் குரு என்று தலைப்பு. 10ஆம் தேதி என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்தானே...? ஆப் கட்சி ஆப்பு அடித்து விட்டது.

தெளிவான வியாபாரப் பதிப்பகம் அரங்கத்துக்கான காசை மிச்சப்படுத்திக் கொண்டது.

1 comment:

  1. அரிய புத்தகங்கள் விற்கும் நபர் பற்றிய தகவலுக்கு நன்றி ஷாஜஹான் ஜி!

    ReplyDelete