Saturday, 12 March 2016

வாழ்கலை மல்லர்களும் வாழ்வதற்கு இல்லாரும்


மல்லையா மட்டும் 9000 கோடி ரூபாய் கட்டாம போயிட்டாரு. நான் ஏன் கட்டணும்னு கேட்டு பதிவு போடறாங்களே... இது ரொம்ப தப்பில்லையா?” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள்.

எல்லாருக்கும் அவரவர் வங்கிக் கடன் அனுபவங்கள் நினைவு வருகின்றன. நான் எஸ்எஸ்எல்சி முடித்து பியுசி சேர நினைத்தபோது, கல்விக்கடன் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில், எங்கள் சிற்றூரில் இருந்த கனரா வங்கியின் மேலாளர் என் பெயரில் கணக்கு துவங்கி 300 ரூபாய் கடனை தானாகவே அளித்தார். (நான் படித்துத் தேறவில்லை என்பது வேறு விஷயம்.) இருபது மாத தவணையில் கடன் தீர்க்கப்பட்டது. தில்லி வந்தபிறகு, அக்கா மகள் திருமணத்துக்கு என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை வந்தபோது, அறிமுகமான அலுவலர்கள் மூலம் சிண்டிகேட் வங்கியில் 30 ஆயிரம் பர்சனல் லோன் வாங்கினேன். ஒருமாதமும் தவறாமல் கணக்கிலிருந்து திருப்பிச் செலுத்தினேன், அல்லது அவர்களே கச்சிதமாகப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பிறகு, ஊரில் ஒரு வீட்டு மனை வாங்குவதற்காக அதே அதிகாரியின் உதவியால், 60 ஆயிரம் பர்சனல் லோன் கிடைத்தது. அதுவும் ஒரு மாதம்கூட தேதி தவறாமல் கச்சிதமாக திருப்பிச் செலுத்தப்பட்டது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அறிமுகம் ஆனவர் இருந்தால் சில வேலைகளைச் செய்து கொள்ள முடியும். மற்றபடி நம்மைப்போன்ற சாமானியர்கள் வங்கியில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதில்லை. அறிமுகம் ஆனவர் இருந்தும்கூட வாங்க முடியாமல் போன சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது நினைவு வருகிறது.

மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது. ஏழு அல்லது எட்டு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. ஒரு அரசு நிறுவனத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய், மற்றொன்றிலிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் வர வேண்டும். இரண்டு லட்சம் ரூபாய் இரண்டாண்டுகளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த தொகை. வருமா என்பது நிச்சயமில்லை. மூன்று லட்சம் ரூபாய், மார்ச்சில் ஆண்டிறுதிக் கணக்கு முடிந்து மே அல்லது ஜூன் மாதத்தில்தான் வரும். ஆக, மார்ச் மாதத்துக்குள் வராது என்பது நிச்சயம். என்ன செய்யலாம்?

நான் ஏழு ஆண்டுகளாக கரன்ட் அகவுன்ட் வைத்திருக்கிற ஒரு வங்கிக் கிளையில் ஆண்டுக்கு சுமார் 7-8 லட்சம் ரூபாய் புழங்குகிறேன். அந்தக் கிளையின் மேலாளர் ஒரு பெண்மணி. ஏனோ தெரியவில்லை, அந்த அம்மையார் எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பார். வங்கியிலோ வழியிலோ சந்தித்தால் அவராகவே வணக்கம், எப்படி இருக்கீங்க என்று கேட்கும் அளவுக்கு மரியாதை கொடுப்பவர். மகள் திருமணத்துக்காக எனக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் கிடைக்குமாஎன்று அவரிடம் கேட்டேன். என்ன இப்படி கேட்டுட்டீங்க... நான் எதுக்கு இருக்கேன்.... உங்களுக்குக் குடுக்காம யாருக்குக் கொடுக்கப் போறோம்...என்றார். ஐடி ரிடர்ன், பான் கார்டு எல்லாம் வைத்து விண்ணப்பம் கொடுத்தாயிற்று. ஓரிரு நாட்களில் போன் செய்து வரச் சொன்னார். பான் கார்டு என் பெயரில் இருப்பதும், கரன்ட் அகவுன்ட் நிறுவனத்தின் பெயரில் இருப்பதும் ஒரு சிக்கலானது. கரன்ட் அகவுன்ட் வைத்திருப்பவருக்கு பர்சனல் லோன் தர முடியாது என்கிறார்கள் மேலிடத்தில் இருப்பவர்கள், நான் ரொம்பவும் சண்டை போட்டுப் பார்த்து விட்டேன்... ரொம்ப சாரி. என்னுடைய அதிகாரத்தில் ஒரு லட்சம் தர முடியும், தரட்டுமா?” என்று கேட்டார்.

திருமணத்துக்காக தமிழகம் புறப்பட பதினைந்து இருபது நாட்களே இருந்த நிலையில் இந்த பதில் எப்படிப்பட்ட இடியாக இருந்தது என்பதை விளக்கவே முடியாது. வாழ்க்கையே வெறுத்துப்போனது போல... பெருத்த மன உளைச்சலுடன் அங்கிருந்து நடந்தே புறப்பட்டது இப்போதும் நினைவிருக்கிறது. (அதன் பிறகு, நான் கேட்டும் கேட்காமலும் ஆறு நண்பர்கள் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்து, திருமணம் இனிதே நிறைவேறி, நண்பர்கள் பலருக்கும் திருப்பித் தந்து விட்டது தனிக்கதை)

என்னிடம் பணியாற்றிய மைதிலியின் மகளுக்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. கட்டணம் செலுத்த பணம் இல்லை. வங்கிக் கடன் தர மறுத்து விட்டார்கள். ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்த நல்ல நண்பர் ஒருவரிடம் பேசினேன். குறிப்பிட்ட ஒரு கிளைக்குப் போகச் சொன்னார். போனோம், விண்ணப்பம் கொடுத்தோம். என்னை ஜாமீன் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். 4 லட்சத்துக்கும் குறைவான கல்விக் கடனுக்கு ஜாமீன் தேவையில்லையே என்றெல்லாம் நான் கேட்கவில்லை. கையெழுத்துப் போட்டேன். கடன் கிடைத்தது. அவள் படிப்பை முடித்து, வேலை கிடைப்பதற்குள் நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதிர்ஷ்டவசமாக அவளுக்கு வேலை கிடைத்து, முழு கடனையும் அடைத்து விட்டாள். கடன் முடியும் வரை அவளுடைய நிலுவைத் தொகை என் வங்கிக் கணக்கில் நிலுவையாகக் காட்டிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், உரிய தேதிக்கு முன்னதாகவே அவள் முழு கடனையும் வட்டியுடன் சேர்த்து மொத்தமாகக் கட்டி விட்டாள். அதே நேரத்தில்தான் ப. சிதம்பரம் கல்விக்கடனுக்கு வட்டி தள்ளுபடி அறிவித்தார். ஆனால் அவள் செலுத்திய வட்டி திருப்பித்தரப்படவில்லை.

ஒரு காலத்தில் மாட்டு லோன் (கறவை மாடு வாங்கி பால் வியாபாரம் செய்ய) கொடுத்தார்கள். அப்போது, கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் என்றாலும்கூட, ரொம்பவும் வற்புறுத்த வேண்டாம் என்று வாய்மொழியாக வங்கி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக வங்கி ஊழியர்கள் மூலமாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஏன் தெரியுமா? கறவை மாடு வாங்குகிறவர்கள் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டாலும் நாட்டுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது. அதன் மூலம் அவர்களுடைய வருவாய் அதிகரிக்கிறது, வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது, நுகர்வு அதிகரிக்கிறது, பணப் புழக்கமும் அதிகரிக்கிறது. ஆக, அவர்களுக்குக் கிடைக்கும் வருவாய் சுற்றிச்சுற்றி வேறேதோ வழிகளில் அரசுக்கும் போய்ச் சேருகிறது. நான் சொன்னது பழைய கதை, இப்போது நிலைமை என்னவென்று தெரியாது. திருப்பிச் செலுத்தாதவர்களின் மாடுகளை அல்லது எருமைகளை ஓட்டிச் செல்வதாக மிரட்டி திருப்பிச் செலுத்த வைத்த நிகழ்வுகளும் உண்டு.

காலையில் ஒரு நண்பர் எழுதிய பதிவைப் பார்த்தேன். கல்விக்கடனில் எண்பது சதவிகிதம் திருப்பிச் செலுத்தப்படுவதில்லை என்று எழுதியிருந்தார். எண்பது சதவிகிதம்என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டேன். பதில் கிடைக்கவில்லை. கல்விக்கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இருக்கலாம் என்பது என் வாதம் அல்ல. ஆனால், எந்த ஆதாரமும் இன்றி எண்பது சதவிகிதம் கல்விக்கடன் திருப்பித் தரப்படுவதில்லை என்று பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதுதான் சலிப்பு ஏற்படுத்துகிறது. நானும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். 2013 விவரங்களின்படி, சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் நிலுவையில் இருக்கிறது என்று தெரிகிறது. (இப்போதைய நிலைமை குறித்து யாரேனும் விவரம் தரலாம்.) நமது ஆட்சியாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்களை வாராக்கடன்களாக தள்ளுபடி செய்யும் கடன்களை வாங்கியவர்கள் நம்மைப் போன்ற எளியவர்கள் அல்ல. பெரும் பெரும் மலைமுழுங்கிகள்தான்.

நான் பேஸ்புக் மூலமாக நிதி திரட்டி கல்வி நிதியுதவி செய்வது பலருக்கும் தெரிந்திருக்கும். கல்வி நிதியுதவி செய்யத் துவங்கிய பிறகுதான் தெரிந்தது கல்லூரிக் கட்டணம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்கூட செலுத்த முடியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு, எட்டாயிரம் ரூபாய் செலுத்த முடியாமல் கல்லூரிப் படிப்பைக் கைவிட இருந்த மாணவியை எனக்கு நேரடியாகவே தெரியும். செலுத்த வேண்டிய செமஸ்டர் கட்டணம் 55 ஆயிரம் ரூபாயில் 43 ஆயிரம் மட்டுமே கல்விக் கடன் கிடைத்து, 12 ஆயிரம் ரூபாய்க்கு வழியில்லாமல் தவித்த மாணவனுக்கு கடந்த மாதம் நாம்தான் உதவினோம். பேஸ்புக் மூலமாக நாம் உதவுகிற மாணவர்கள் எல்லாரும் கல்விக்கடன் பெறவும் வழியில்லாதவர்கள்தான்.

ஆக, கல்விக்கடன் யார் வாங்குகிறார்கள்? சொந்தமாகப் பணம் புரட்ட முடியாத, வேறு வழியே இல்லாதவர்கள்தான். மலைமுழுங்கி மகாதேவன்களின் பலநூறு கோடி ரூபாய் கடன்களுடன் கல்விக்கடன்களை ஒப்பிட்டு எழுதாதீர்கள் நண்பர்களே.

அப்புறம்... கார் வாங்குவதற்கான கடனுக்கு 5 முதல் 9 சதவிகித வட்டியும், கல்விக்கடனுக்கு 12 முதல் 16 சதவிகித வட்டியும் விதிக்கிற விந்தையான தேசம் நம்முடையது என்பதையும் சொல்லத்தானே வேண்டும்?!

யமுனைக் கரையோரம் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மெகா விழா நடத்தும் ஸ்ரீஸ்ரீ நிறுவனத்தின்மீது ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். ஜெயிலுக்குப் போனாலும் போவேனே தவிர, அபராதத்தை செலுத்த முடியாது என்று அகங்காரமாகப் பேசுகிறார் ஸ்ரீஸ்ரீ. ஏனென்றால், தான் ஜெயிலுக்குப் போகப்போவதில்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த அரசு அவருக்கு சலாம் போடுகிற அரசு. அவர் பேசலாம். ஐம்பது ரூபாயோ ஐநூறு ரூபாயோ அபராதம் செலுத்த முடியாது என்று நீங்களோ நானோ சொல்லிவிட முடியுமா என்ன...?

இதுதான் நம்மைப்போன்ற சாமானியர்களின் எதார்த்த நிலை. கடன் வாங்குவதும் எளிதல்ல, வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பதும் எளிதல்ல. கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் படங்களை வெளியிட்டு பேனர் வைத்த கதையெல்லாம் நமக்கும் தெரியும்தானே? அவ்வளவு ஏன், நேற்று பரவிக்கொண்டிருந்த வீடியோவில், டிராக்டர் கடன் வாங்கியவரை அடித்து உதைத்து இழுத்துச் சென்றவர்கள் கூறியது என்ன? – “அவ்வளவு பெரிய ஆளா நீ?”. ஆமாம், பெரிய ஆளாக இருந்தால் கடன் வாங்கியும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கலாம். அந்த டிராக்டர் கடன் வாங்கியவரும், நீங்களும், நானும் திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியாது. செலுத்தாமல் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, செலுத்தாமல் இருக்கவும் மாட்டோம், அதிகபட்சம் கொஞ்சம் தாமதம் ஆகக்கூடும். அதற்கு வட்டியும் சேர்த்துத்தான் செலுத்தப் போகிறோம். அல்லது வங்கியில் வாங்க முடியாமல் தனியாரிடம் வாங்கி, வட்டி குட்டி போட்டு, வட்டியும் குட்டியும் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வோம்.

ஆக, முதல் பத்தியில் குறிப்பிட்ட கேள்விகள் கேட்கும் நண்பர்கள், மக்களிடையே நேர்மை குறைந்து போய்விட்டதோ என்று கவலைப்பட வேண்டாம். இங்கே கேள்வி கேட்பவர்கள் தமது ஆதங்கத்தைத்தான் பதிவு செய்கிறார்களே தவிர, கடனை திருப்பிச் செலுத்த மாட்டோம் என்று கூறுவது அதன் நோக்கமல்ல. நீங்கள் கவலைப்பட வேண்டியதெல்லாம், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வளங்களில் பெரும்பகுதி சில தனிநபர்களின் கொழுத்த லாபத்துக்காகவே பெரும்பாலும் திருப்பிவிடப்படுகிறதே என்பது குறித்துத்தான். சர்வதேச வங்கிகள் எல்லாம் கடன் கொடுக்க மறுத்தபிறகும் ஆஸ்திரேலியாவில் அதானிக்கு ஸ்டேட் பாங்க் 6000 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததும் இதே வகையைச் சேர்ந்ததுதான். இதில் காங்கிரஸ் பாஜக என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

கடைசியாக, மல்லையாவுக்குக் கடன் கொடுத்த போதுது காங்கிரஸ் அரசுதான், பாஜக அரசல்ல என்று பதிவுகளைப் பார்க்கிறேன். 2014 டிசம்பரில் இதேபோல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 600 கோடி ரூபாய் கடன் கொடுக்கச்சொன்னதும், அட்வான்ஸ் டிக்கெட்களை விற்பனை செய்யலாம் என்று சலுகை தந்ததும் எந்த அரசு? கச்சா எண்ணெய் விலை குறைந்து, மக்களுக்கான பெட்ரோல் விலையைவிட விமான எரிபொருள் விலையை அதிகம் குறைத்ததால் ஸ்பைஸ்ஜெட் தப்பிப் பிழைத்திருக்கிறது. இன்றைய தேதியிலும் பல்வேறு நிறுவனங்கள் விமான நிலைய ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய தொகை 3300 கோடி ரூபாய். அது இருக்கட்டும், மல்லையாவுக்கு கடன் கொடுத்தபோது இருந்தது காங்கிரஸ் அரசுதான். ஆனால் காங்கிரஸ் அரசு போய் இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டதே. இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? எப்படி மல்லையாவை தப்பிப்போக அனுமதித்தது?
மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் தடுத்திருக்க முடியாதா? தடுப்பதற்காகத்தான் வழக்குத் தொடுத்தார்கள் என்றால், அவர் 2ஆம் தேதி போன பிறகு வழக்குத் தொடுத்தது ஏன்? வழக்கு இல்லாமல் அவரைத் தடுத்திருக்க முடியாதா? வழக்கு இல்லாமல் மல்லையாவைத் தடுக்க முடியாது என்றால், கிரீன் பீஸ் இயக்கத்தைச் சேர்ந்த ப்ரியா பிள்ளை லண்டன் செல்ல விடாமல் இதே பாஜக அரசு தடுத்தது எப்படி?

என்று கேட்டால் நான் தேச துரோகி ஆவேன் இல்லையோ?!

1 comment:

  1. மிக நல்ல பகிர்வு...
    விவரமான அலசல்...

    ReplyDelete