இரண்டு ஆண்டுகளுக்கு முன்
எஸ். ராமகிருஷ்ணன் தில்லி வந்தபோது அறிமுகம் கிடைத்தது. அதன் பின் அவருடைய
வலைப்பக்கத்துக்கு அடிக்கடி போவதுண்டு. அதில் ஒரு பதிவின்மூலம்தான் சேலத்தில் இருக்கும்
தனிச்சிறப்பான இரண்டு பெண்கள் குறித்து தெரிய வந்தது. இருவருமே தீவிர வாசகர்கள்
என்றும் அறிமுகம் செய்திருந்தார் எஸ்.ரா.
அதற்குப் பிறகு அவ்வப்போது
இணையத்தில் அவர்களைப் பற்றிய செய்திகளை அங்கங்கே பார்ப்பதுண்டு, வியப்பதும் உண்டு,
நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. ஆனால், மாறி மாறி ஏதேனும்
வேண்டுகோள்கள் வந்து கொண்டே இருந்ததால், இந்த விஷயம் பின்தங்கிப்போனது. கடந்த
மாதம் பேஸ்புக் நண்பர் ஒருவர் இன்பாக்சில் வந்து இவர்களைப் பற்றி ஒரு பதிவு
எழுதுமாறு கேட்டார். பதிவுக்காக சற்றே விரிவாக அலசினேன்.
வானவன் மாதேவி, இயல் இசை
வல்லபி – இவர்கள்தான் அந்த இரண்டு பேர். மஸ்குலர் டிஸ்டிராஃபி (muscular dystrophy) என்கிற தசைச் சிதைவு
நோய்க்கு ஆளானவர்கள். அதிகம் அறியப்படாத நோய் என்பதால், இணையத்தில் விவரங்களைத்
தேடினேன்.
தசைவளக் கேட்டினால்
எலும்புகளும் சிதையும் நோய் இது. எலும்புகளை ஒட்டியிருக்கிற தசைகள் பலவீனம் அடைவதும், தசைகளின் புரோட்டீன்கள் சிதைவதும், அதன் தொடர்ச்சியாக
தசை அணுக்கள், திசுக்கள்
உயிரிழப்பதும் நிகழ்கிறது.
ஆரோக்கியமான உடலில் எப்போதும் திசுக்கள் இறப்பதும் பிறப்பதுமாக இருப்பதுபோலன்றி, இவர்களுக்கு புதிய திசுக்கள் உருவாவதில்லை. இதன் விளைவாக எலும்புகளும்
சிதைவுறும். நடமாட முடியாதபடி செய்துவிடும். தொடர்ந்து நடமாடுவதும் முடியாது, தொடர்ந்து படுத்திருப்பதும் கூடாது. நோயை குணப்படுத்த சிகிச்சை கிடையாது. நோயின்
விளைவுகளையும் பாதிப்புகளையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது
மட்டுமே சாத்தியம். பெரும்பாலும் ஆண்
குழந்தைகள்தான் இந்நோய்க்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. நோய்க்கான காரணங்களில் மரபணுவும் ஒன்று.
வானவன் மாதேவிக்குத்தான்
இந்த நோய் முதலில் தாக்கியிருக்கிறது. அவர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களைப்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய தங்கை இயல் இசை வல்லபிக்கும் புரிகிறது
தனக்கும் இதே நோய் வந்து கொண்டிருக்கிறது என்று.
ஆக, நோயிலிருந்து மீள
முடியாது, சிகிச்சையும் கிடையாது என்கிறபோது எல்லாரும் செய்வது அல்லது நினைப்பது
ஒன்றே ஒன்றுதான். இருக்கிற வரையில் மருத்துவமனை, மருந்து, சிகிச்சை என்று அலையாமல்
அமைதியாக நிம்மதியாக வீட்டில் இருந்து கொள்வது. ஆனால் இந்த சகோதரிகள் விதிவிலக்கு.
ஆதவ் டிரஸ்ட் என்று ஓர்
அறக்கட்டளை நிறுவி, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபி, யோகா,
மாற்று மருத்துவம் போன்ற முறைகளால் சிகிச்சை தர முன்வந்தார்கள். இதற்காக நிலம்
வாங்கத் திட்டமிட்டு நன்கொடை திரட்டினார்கள். (நான் எழுதிய பதிவின் வாயிலாகவும் பேஸ்புக் நண்பர்கள் சுமார்
35 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.)
இந்த அரிய சகோதரிகளைப் பற்றி
குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார் பேஸ்புக் தோழி கீதா இளங்கோவன். மாதவிடாய்
குறும்படத்தின் மூலம் புகழ் பெற்ற கீதாவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்று – 22-11-2014 காலை 10 மணிக்கு இக்குறும்படம்
பேஸ்புக் வாயிலாக வெளியிடப்பட்டது.
இந்த சகோதரிகளின் மன உறுதி
போற்றத்தக்கது. அதைவிட முக்கியமானது, இவர்கள் நோய் குறித்து அறிந்து வைத்திருக்கிற
செய்திகள். இயற்கைச் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கிற கார்ப்பரேட்களிடம் நன்கொடை
வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை இந்தக் குறும்படத்தின்
மூலம் அறிந்தபோது இன்னும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இவர்கள் எதிர்கொண்டிருக்கும்
பிரச்சினைகளை யாரும் உணர்வது சிரமம். நடக்கவே இயலாது, யாரேனும் தூக்கிச் செல்ல
வேண்டும். தூக்கிச் செல்பவர்களும் இவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து, தசைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனமாகத் தூக்க வேண்டும். வெளி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது கழிப்பறைக்குப் போக வேண்டும்
என்றாலும் சோதனைதான். அதற்காகவே வெளியே போகும்போது தண்ணீர் குடிக்காமல்
கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற பிரச்சினைகளை இந்தக் குறும்படத்தில்
கேட்கும்போதே மனம் கலங்குகிறது.
நான் பதிவு எழுதியதைத்
தொடர்ந்து இருவரும் பேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இணைந்தார்கள். இப்போதுதான்
இவர்களின் குரல்களை நேரில் கேட்டேன், வாழ்க்கையின் சிக்கலை காட்சியில் கண்டேன். “நாங்களெல்லாம்
காகிதப்புலிகள், நீங்க செயல் வீர்ர்கள். கண்ணுகளா... உங்க திட்டம் எல்லாம்
நிறைவேறணும்” என்று கண்கள் கசிய
மனதுக்குள் வாழ்த்தினேன்.
“நாங்க
நினைச்சிருந்தா ஒரே இடத்துல முடங்கிப் போயிருக்க முடியும், ஆனா நாங்க அப்படி
நினைக்கலே, நினைக்க விரும்பலே. இங்கே வாழ நமக்குக் கிடைச்ச பிறவியை எவ்வளவுக்கு
முடியுமோ அவ்வளவுக்கு நல்லது செய்யணும்” என்று கூறும் இந்த சகோதரிகள் குறித்த ‘நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படத்தை
நீங்களும் பாருங்கள், பகிருங்கள், பரப்புங்கள்.
*
குறும்படத்தைப் பற்றி சில ஆலோசனைகள் –
1. படத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ குறைகிறதே என்று யோசித்தேன். அப்புறம்தான்
புரிந்தது சப்டைட்டில் இல்லாதது. ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டியது அவசியம்.
ஆங்கிலத்தில் தலைப்பு என்னவாக இருக்கலாம் என்று யோசித்தேன். Two Souls with Full of Hopes.
2. 15 நிமிடங்கள் என்பது மிகக்குறைவு.
நோய் குறித்து மருத்துவத் துறை வல்லுநர்களின் கருத்தையும் பதிவு செய்திருக்கலாம். இப்போது
ஆதவ் டிரஸ்டில் தங்கியிருக்கும் 5 நோயாளிகளின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின்
கருத்தையும் பதிவு செய்யலாம். கீதா இளங்கோவனுக்கு இது பெரிய விஷயமில்லை.
*
ஆதவ் டிரஸ்ட்டுக்காக நிலம் வாங்கியாகி
விட்டது. 50 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வகையில் மருத்துவமனை கட்டுவது
இவர்களது அடுத்த இலக்கு. இந்த இலக்கை அடைய உங்களால் இயன்ற உதவிகளையும்
செய்யுங்கள்.
Aadhav Trust, 489-B, Bank Staff Colony, Hasthampatty, Salem
– 636007, Tamil Nadu, INDIA
வங்கி விவரம்
A/c Name : AADHAV TRUST
SB Ac No.: 1219101036462
Bank : CANARA BANK
Branch: Suramangalam
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005
போகும் வழியெலாம் அன்பை
விதைப்போம்
எவரேனும் என்றேனும் அறுவடை
செய்யட்டும்.
ReplyDeleteஅபூர்வ சகோதரிகளைப்பற்றிய உங்கள் பதிவைச் சற்றுமுன் வாசித்தேன். எஸ்.ரா இவர்களைப்பற்றி எழுதியிருந்ததை முன்பு நான் வாசித்திருந்தது நினைவுக்கு வந்தது. உங்கள் பதிவின்மூலம் ஆதவ் ட்ரஸ்ட், முகநூல் நண்பர் உதவி, குறும்படம் எனப் பல விஷயங்கள் தெரியக்கிடைத்தன. பதிவிற்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டதுபோல் மருத்தவர்களின் வார்த்தைகளும் குறும்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆங்கில சப்-டைட்டில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் பலரிடம் விஷயம் போய்ச்சேர – இதில் எப்படிக் கோட்டைவிட்டார்கள் எனப் புரியவில்லை. ஆங்கிலத் தலைப்பாகக் குறும்படத்திற்கு ‘Twin Rays of Hope’ எனத் தலைப்பு வைத்தால் நன்றாய் இருக்குமா?
அக்டோபரில் நாம் உங்கள் இல்லத்தில் சந்திக்கையில் காங்கோவில் பிழைப்பு தேடிவந்த அப்பாவி இந்தியர் கடத்தப்பட்டதும், மீண்டுவந்தது குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். மீரான் மைதீனின் ‘அஜ்னபி’ பற்றி உங்கள் பதிவைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.
-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com