1991 ஜனவரி 5ஆம் தேதி நான் தில்லிக்குக் குடிபெயர்ந்தேன். ஜனவரி 13ஆம் தேதி
முதல்முறையாக தமிழ்ச் சங்கத்திற்குச்
சென்றேன். அன்று அறிமுகமான சிலரில் முதன்மையானவர் சீனிவாசன்.
இன்றுவரை எங்கள் குடும்ப நட்பு தொடர்கிறது. தில்லித் தமிழர்கள் நடத்தி வந்த உதயம் என்ற கையெழுத்து இதழை தொடர்ந்து
வெளிக்கொணர்வதில் இவருடைய பங்கே அதிகம் என்பதால் அவருடைய
பெயருடன் உதயம் ஒட்டிக் கொண்டது. எங்கள்
உறவைப்பற்றி பெரிய கதையே எழுதலாம்.
மைய நீர்வளத்
துறையில் பொறியாளராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு
பெற்றார். தமிழகத்தை ஒட்டியிருக்கிற கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு
கன்னடமும் தெரியும்.
சில ஆண்டுகளுக்கு
முன்பு திருக்குறளை கன்னடத்தில் மொழிபெயர்க்கத் துவங்கினார்.
வழக்கம்போல என்னிடம் ஆலோசனை கேட்டார். ஏற்கெனவே இந்தி, ஆங்கிலம், தமிழ் என பல
மொழிகளில் குறள்களை நான் நூலாக வடிவமைத்திருக்கிறேன். எனவே, இதிலும் தமிழ் குறள்,
கன்னட ஒலியாக்கம், கன்னட மொழியாக்கம் என நூல் வடிவமைத்தோம். பதிப்பாளரைத்
தேடிக் கொண்டிருக்கையில், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைத்
தொடர்பு கொள்ளுங்கள் என்று முகவரியை எடுத்துக் கொடுத்தேன்.
கடிதமும் வரைந்து கொடுத்தேன். செம்மொழித்
தமிழாய்வு நிறுவனம் நூலை வெளியிடுவதாக ஏற்றுக்கொண்டது.
இந்த வேலை துவங்கி
ஐந்தாறு ஆண்டுகள் கடந்து விட்டன. வடிவமைத்த நூலின் கோப்பு சென்னைக்குப் போவதும் திருத்தங்களுடன் திரும்பி வருவதுமாக
இழுத்துக் கொண்டே இருந்தது. நூல் வெளிவரும் என்ற
நம்பிக்கையே எனக்கு அற்றுப்போய்விட்டது.
அண்மையில்
சென்னைக்குச் சென்றிருக்கிற சீனிவாசன், பதினைந்து நாட்களுக்கு முன், கன்னட நூல் வெளிவரப்போகிறது என்று தகவல் கிடைத்ததாக
தொலைபேசினார். திருப்தியாக இருந்தது.
நவம்பர் 13ஆம்
தேதி தமிழக ஆளுநர் நூலை வெளியிடுகிறார் என்ற தகவல் கிடைத்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் மகிழ்ச்சியுடன் செய்தியைத் தேடிப் பார்த்தேன்.
http://timesofindia.indiatimes.com/city/chennai/Telugu-Kannada-versions-of-kural-to-be-launched-today/articleshow/45129077.cms
குடுத்த காசுக்கு
மேலே கூவுறாண்டா என்று இப்போதெல்லாம் ஒரு வசனம் பிரபலமாக இருக்கிறது. அதையெல்லாம்
மீறிவிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா. நூல் வெளியீடு குறித்து
வந்திருக்கிற செய்தியில் மொழிபெயர்ப்பாளர் பெயரோ எந்தவிதத் தகவலோ இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் தருண் விஜய் குறித்து நீட்டி
முழக்கிப் புகழ் பாடியுள்ளது. சந்தில் சிந்து பாடியிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. இந்திய மொழிகளில் திருக்குறள் வெளியானதற்கு ஏதோ இவர்தான் காரணம் என்பது போலவும், இனி
தமிழைப் பரப்பப் போகிறவே இவர்தான் என்பது போல ஒரு பில்ட்-அப்...!!! நல்லா வருவீங்க....
13ஆம் தேதி கன்னட திருக்குறள்,
தெலுங்கு திருக்குறள், மற்றும் சில நூல்கள் வெளியாகி விட்டன.
ஆளுநர் வலைதளத்தில்
போய்ப் பார்த்தேன். ஆளுநர் உரை இருக்கிறது. அதிலும் மொழிபெயர்ப்பாளர் குறித்து ஒரு
சொல்கூட இல்லை. ரோசய்யாவுக்கு கன்னடமோ தெலுங்கோ தெரியாது என்றே வைத்துக்கொள்வோம். நூல் வெளியிட்டு, மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்தாரே, அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட வேண்டும் என்றுகூடத் தெரியாத அளவுக்கா தெரியாமல் போனது...!?
நூல் வெளியீடு
குறித்து 14ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். ஆளுநர்
உரையின் சில பத்திகள் உண்டே தவிர, மொழிபெயர்த்தவர்கள், இதர நூல்களை எழுதியவர்கள்
என்று எவர் பெயரும் இல்லை.
சரி, நூலை
வெளியிட்ட செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வலைதளத்தில் பார்ப்போமே என்று
தேடினேன். அதிலும் மொழிபெயர்த்தவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆளுநர் உரையை
அப்படியே நகலெடுத்துப் போட்டிருக்கிறது
தமிழாய்வு நிறுவனம்.
செம்மொழித் தமிழாய்வு
நிறுவனத்தின் பொறுப்பாளர்களே... உங்களைப் போல சம்பளத்துக்காக உழைக்காமல் தமிழ் ஆர்வத்தோடு சுய முயற்சியில் இறங்கி தமிழின் பெருமையை பிற மொழிகளுக்கு எடுத்துச்செல்ல முனையும் பெரியோர்களின் பெயர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு, உங்கள் பெயர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்ளும் திறமை என்னை மலைக்க
வைக்கின்றது. நல்லா வருவீங்க....
மனதிற்கு இனிய செய்தி
ReplyDeleteமகிழ்ந்தேன்
நன்றி
திருமிகு சீனிவாசன் அவர்களைப் போற்றுவோம்
ReplyDelete//மொழிபெயர்ப்பாளர் குறித்து ஒரு சொல்கூட இல்லை.// நாரதன் பார்வதிக்கு சொன்னான், பார்வதி சிவனுக்கு சொன்னாள், சிவன் என் கனவில் சொல்ல நூல் எழுதப்பட வேண்டுமானால, இப்படி உண்மையாக உழைத்தவர்களை இருட்டடிப்பு செய்வதுதானே வசதி.
ReplyDeleteதிரு. சீனிவாசன் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அவரது ஆக்கம் கன்னட தமிழ் உறவை மேம்படுத்தும்.
புதிய தலைமுறை செய்தி பிரிவிலிருந்து நேர்காணல் எடுத்துச் சென்றதாக தகவல் (என் மனைவி மூலம்). எந்த இதழில் வரும் என்று தெரியவில்லை.
ReplyDeleteஇது போன்ற முயற்சிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
நன்றிகள்.