Sunday, 16 November 2014

படித்ததில் பிடித்தவை - அக்டோபர் 2014


அந்நியன்


வளைகுடா நாடுகளுக்கு வேலைதேடிச் செல்வோர் குறித்து நான் அறிந்த செவிவழிச் செய்திகள் மிகக்குறைவு. கோவை பகுதியிலிருந்து அங்கே செல்பவர்கள் குறைவு என்பது காரணமாக இருக்கலாம். என் நெருங்கிய உறவினர்கள் சிலர் சென்று வந்திருக்கிறார்கள், இப்போதும் சிலர் அங்கே இருக்கிறார்கள் என்றாலும் அவர்களால் கிடைத்த சித்திரம் வேறு.

ரியாலும் தினாரும் அள்ளலாம் என்ற ஆசையில் போய், கொளுத்தும் வெயிலில் கட்டுமானப் பணிகளிலும் வீட்டு வேலைகளிலும் சிக்கி உழலும் சில கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பாலைவனத்தில் ஆடுமேய்ப்பவனின் அவலக் கதையை முதலில் அறிந்தது பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலின் மூலம்தான். பல நாட்களுக்கு உறக்கத்தைத் தொலைக்கச் செய்த நாவல் அது.

பேஸ்புக் வந்தபிறகுதான் வளைகுடா நாடுகளின் நண்பர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. இத்தனைபேர் இருக்கிறார்களா என்று மலைப்பும் ஏற்பட்டது. இவர்கள் அறிமுகம் செய்த ஆபிதீன் பக்கங்கள் ஓரளவுக்கு புதிய சித்திரத்தை கண்முன் விரித்தது. இருந்தாலும், இவர்களின் எழுத்துகளில் கிடைத்த சித்திரங்களில் எல்லாம் கிடைக்காத வித்தியாசமான புதியதொரு அவலச் சித்திரத்தை முன்வைக்கிறது அஜ்னபி. மீரான மைதீன் எழுதிய நாவல். அஜ்னபி - அந்நியன்.

நாவலை வாசிக்க வாசிக்க அதில் வருகிற கதாபாத்திரங்களில் எனக்குத் தெரிந்த நண்பர்களை ஒட்டவைத்துப் பார்க்கிறேன். இக்பால் யாராக இருக்கும்... மம்மலி யாராக இருக்கும்... ஃபைசல் யாராக இருக்கும்.... அஜ்னபி ஒரு நாவல் என்றாலும் ஒரு நாவல் மட்டுமல்ல. கதைக்குள் கதையாக பல கதைகளைக் கொண்ட நாவல். பல அஜ்னபிகளின் கதை இது. வளைகுடா நாடுவாழ் தமிழர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் ஒரே நாவல் இதுவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் கையில் எடுத்து, முதல் சில பக்கங்களைப் படித்து, அறிமுகமற்ற மொழிநடையால் தளர்ந்து ஒதுக்கி விட்டேன். முகம்மது அலி என்ற பெயரை மம்மலியாக்கியதை எல்லாம் ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியவில்லை. அதை நினைத்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது.

மனமார்ந்த பாராட்டுகள் மீரான் மைதீன். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க படைப்பு இது என்று உறுதியாகக் கூறலாம்.
அஜ்னபி, மீரான் மைதீன், காலச்சுவடு பதிப்பகம்,
ISBN 978-93-82033028, 275 ரூபாய்.

*

கலங்கிய நதி


இரவு எட்டு மணி வாக்கில் கையில் எடுத்த நாவலை இரவு மூன்று வரை தொடர்ந்து வாசித்து முடிக்கச் செய்தது, காலையில் எழுந்ததும் இதை பதிவாக எழுதச் செய்தது எது என்று யோசிக்கிறேன்.
நாவலை எழுதிய பி.ஏ. கிருஷ்ணன் தில்லியில் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதாலா?
இந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரம் சொல்வது போல, காந்தியும் ஆசான், மார்க்சும் ஆசான் என்று எனக்கும் தோன்றுவதாலா?
நாவலில் அடிக்கடி வரும் வரலாற்றுக் குறிப்புகள் பெரும்பாலும் எனக்கும் அறிமுகம் என்பதாலா?
எனக்கு நன்கு அறிமுகமான தில்லி நகரின் பகுதிகள் நாவலில் நிறையவே இடம்பெறுவதாலா?
நாவலில் வரும் அரசு அதிகாரிகள், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகள் எனக்கும் அறிமுகம் என்பதாலா?
நாவலின் பிரதானக் களமாக இருக்கும் அஸாம் மற்றும் வடகிழக்குச் சிக்கல் குறித்து வாசித்து அறிந்தவன் என்பதாலா?
நாவலில் வரும் சில அரசியல்வாதிகள் இன்றைய காலகட்டத்தில் யார் என்று எளிதாகப் புரிவதாலா?
நாவலின் முக்கிய கதாபாத்திரங்களான ரமேஷ்-சுகன்யா போலவே ஒரு ஜோடி எனக்கும் இப்போதும் நண்பர்கள் என்பதாலா?

இவை ஒவ்வொன்றும்தான், எல்லாமும்தான்.

அரசில் நடுமட்ட அதிகாரியாக இருக்கும் ரமேஷ் சந்திரன் எழுதுகிற நாவலை, நான்கு நான்கு அத்தியாயங்களாக, அவனுடைய இரண்டு சிநேகிதர்களுக்கு அவ்வப்போது அஞ்சலில் அனுப்புகிறாள் ரமேஷின் மனைவி சுகன்யா. அப்படி அனுப்பும்போது இணைப்புக் கடிதத்தில் தன் நிலைமையையும் எழுதுகிறாள். இரு நண்பர்களும் எழுதும் பதில் கடிதங்களும் இடம்பெறுகின்றன. மீண்டும் அடுத்த நான்கு அத்தியாயங்கள், சுகன்யாவின் கடிதம், நண்பர்களின் பதில்.... என தமிழுக்கு இது புதிய பாணியாக நன்றாகவே இருக்கிறது. பதில் கடிதங்களில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயங்களில் விடைகள் இருக்கும் என்று எளிதாகவே யூகிக்க முடிகிறது.

கதையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் என்ஜினியர் கோஷ் என்பவரை வடகிழக்குத் தீவிரவாதிகள் கடத்திச் செல்கிறார்கள், பிணைத்தொகை கேட்கிறார்கள், நாயகன் அவரை விடுவிக்கிறான்.

நாவலுக்கு முடிவு ஒன்றுதான் இருக்க முடியும். ஆனால் எனக்கு இதில் தெரிபவை மூன்று முடிவுகள். ஒன்று, ரமேஷ் எழுதிய கடைசி அத்தியாயத்துடன் முடிகிறது. சுகன்யா இறந்து போவதும், காந்தி கொல்லப்பட்ட இடத்தில் ரமேஷ் சுடப்பட்டு இறந்துபோவதுமான முடிவு. என்ன அபத்தமான முடிவு என்று எனக்குத் தோன்றியதை, அந்த அத்தியாயங்களைப் படித்து கடிதத்தில் கருத்தை எழுதும் நண்பரும் எழுதுகிறார். (ரமேஷ் ஒரு கழுதை. உச்சிக்கு ஒழுங்காக ஏறிக்கொண்டிருந்த நாவல் கடைசி அத்தியாயத்தில் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறது. - சுபிர்)

இரண்டாவது முடிவு, அந்த நண்பரின் கடிதத்துக்குப் பிறகு சுகன்யா எழுதும் கடிதமும், அதற்கு நண்பர் அனுப்பும் பதிலும். அந்த முடிவின்படி ரமேஷ், சுகன்யா இருவருமே உண்மையில் இறக்கவில்லை.

மூன்றாவது முடிவு, கடைசிப் பக்கத்தில் இடம்பெறும் பத்திரிகைச் செய்தி. கௌஹாத்தியில் காந்திய வழியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் ரமேஷும் சுகன்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.

இரண்டாவது முடிவுடன் கதையை நிறுத்தியிருக்கலாம். முதல் முடிவை நாவலாசிரியர் திட்டமிட்டே எழுதியிருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது. ஆனால், அதே அளவு அபத்தமாகத் தோன்றுகிறது கடைசிப் பக்கச் செய்தியில் நாவலின் முடிவு. நியாயத்துக்காகப் போராடும் நாயகன் என்றால் அவன் எப்படியும் சாக வேண்டும் அல்லது ஒரு நாவலின் பாணியில் படுகாயமடைந்து அடுத்து என்ன ஆகப்போகிறதோ என்ற பதைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற முடிவை பி.ஏ.கே. ஏன் எடுத்தார் என்று புரியவில்லை. நாவல் சுபம் என்று முடிய வேண்டும் என்ற சராசரி வாசகனின் ஆவலில் இதைச் சொல்லவில்லை. வடகிழக்கில் வன்முறையும் குண்டுவெடிப்பும் தொடர்கதை என்று காட்டுவதுதான் ஆசிரியரின் நோக்கம் என்றால், அதற்கு நிறையவே நிஜமான பத்திரிகைச் செய்திகள் கிடைக்கும். நாயகனையும் நாயகியையும் அங்கே கொண்டு சென்று தள்ளத் தேவையில்லை.

துப்பறியும் நாவலின் பாணியில் விறுவிறுப்பாகச் செல்லும் கதை. அரசு என்னும் இயந்திரத்தின் பல பல்சக்கரங்களில் நாயகனும் ஒரு சக்கரம். அத்தனையையும் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குகிறது ஊழல், அதிகாரம், அதிகார வர்க்கம். மைய அரசு, அதிகாரிகளாக இருக்கும் மனிதர்களை சித்திரிப்பதில் முதல் ஆளாக இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. ஆனால் அவருடைய நாவல்களில் ஒருவிதமான சினிகல் அணுகுமுறை இருக்கும், பாத்திரங்கள் எல்லாமே அதிஅறிவுஜீவிகளாகப் பேசுவார்கள். இந்த நாவலை வாசிக்கும்போது ஓரிரு இடங்களில் இ.பா. நினைவு வந்தது.

இ.பா.வுக்கு அடுத்து இரண்டாவது ஆளாக இருந்தவர் ஆதவன். இவருடைய பாத்திரங்கள் இயல்பாக இருக்கும், யாரும் நல்லவரும் இல்லை, யாரும் கெட்டவரும் இல்லை என்பதாக, அவரவர் கோணத்திலிருந்தே எழுதப்படாமலே அவர்கள்பால் இரக்கம் கொள்ளச் செய்வதுபோல இருக்கும். இந்த நாவலிலும் ஆதவன் பாணி சில இடங்களில் இருக்கிறது. இ.பா. நாவல்களில் பெரும்பாலும் செயற்கைப் பாத்திரங்கள். ஆனால் இதில் இயல்பான பாத்திரங்கள். நாவலாசிரியர் எனக்கு அறிமுகமானவர் என்பதால், ரமேஷில் அவரும் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இடையிடேயே கொஞ்சம் காதல், காமம், களவு, குடும்பம், பாசம், இழப்பு, நகைச்சுவை, கவிதைகள், காந்தியின் சிந்தனைகள் எல்லாம் கதையின் அங்கமாக தூவப்பட்டுள்ள விதம் அருமை. தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. வாசிக்கத் தவறி விடாதீர்கள்.

கதையின் நாயகனை நாவலில் இடம்பெறும் காந்தியின் கூற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். காந்தி கூறுகிறார் -
நான் ஒரு தாயத்து தருகிறேன். எப்போது உனக்கு சந்தேகம் எழுந்தாலும், எப்போது அகங்காரம் உன் மூச்சைப் பிடித்தாலும் இந்தச் சோதனையைச் செய். நீ பார்த்ததிலேயே ஏழ்மையான, வலிமையற்ற மனிதனை நினைவுகொள். உன்னை நீயே கேட்டுக்கொள் - நீ எடுக்க நினைக்கும் முடிவு அவனுக்கு உதவியாக இருக்குமா? அதனால் அவன் பயன் பெறுவானா? அது அவனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அவனுடைய சொந்தக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருமா? இன்னொரு விதமாகச் சொன்னால், உணவில்லாமலும் ஆன்மீக வறுமையுடனும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அது விடுதலை தருமா? உன் சந்தேகங்களும் அகங்காரமும் கரைந்து மறைவதை நீ காண்பாய்.

பி.ஏ. கிருஷ்ணனின் இந்த நாவல் முதலில் ஆங்கிலத்தில் The Muddy River என்ற பெயரில் வெளியானது. பிறகு அவரே தமிழில் மீண்டும் எழுதியிருக்கிறார்.
காலச்சுவடு வெளியீடு. ரூ. 250. ஐஎஸ்பிஎன் - 978-93-80240-97-8

1 comment: