Saturday, 15 November 2014

மங்கியதோர் நிலவினிலே




நன்செய் வயல்வெளியில் நாற்றுகள் அசைந்தாடும்
கொங்கு தமிழ்மண்ணின் குன்றங்கள் உயர்ந்திருக்கும்
குன்றம் மீதிருந்து குதித்துவரும் ஆற்றோரம்
மங்கிய நிலவொளியும் மண்மீதே கோலமிடும்.
தெங்கு மரங்களடர்த் தோப்பினிலே ஒரிரவில்
தஞ்சம் அடைந்திருந்தேன் தவிப்போடு காத்திருந்தேன்.

கொஞ்சும் தமிழ்மணமே கொள்ளையாய் கொண்டவளாய்
அஞ்சி நடைநடத்தல் அறவே துறந்தவளாய்
நெஞ்சு நிமிர்ந்திருக்க நேர்ப்பார்வை கொண்டவளாய்
வஞ்சியவள் வந்துநின்றாள் விண்ணுதிர்த்த தேவதையாய்!

`பஞ்சு முகில் மறைவில் பவனிவரும் நிலவோடு
வஞ்சியுனைச் சேர்த்துப் பாடிடவோ ஓர் பாட்டு!'
என்றவளை நான் கேட்க எழுந்து விலகி நின்றாள்.

`ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கவிஞர்களின்
பாயிரங்கள் ஆயிரத்தில் பட்டுக் கலைத்துவிட்ட
நிலவைநீ பாடுவதோ? வேண்டாம்' என்றாள்.

`எல்லையற்ற கவலைகளில் வதைபட்டு விடுதலைக்கு
தொல்லைதரும் போதையிலே புதைபட்ட மனிதர்போல்
நிஜத்தைப் பாடுகின்ற நெஞ்சுரம் இல்லாதோர்
நிலவைப் பாடட்டும் நீயில்லை' எனப் பகர்ந்தாள்.

`மலைமகளின் மடிமீது தவழ்ந்துவந்து மண்மீது
கலையாத ஓவியமாய் கவர்ந்தென்னைக் கவிபாடத்
தணியாத தவிப்பெனக்குத் தருகின்ற நதியோடு
கனியே உனை இணைத்துக் கவிதை பாடட்டுமா!'
என்றவளை நான் கேட்க இன்னும் விலகி நின்றாள்.

`நதியழகு மலையழகு நகர்ந்துவரும் நிலவழகு
ரதியழகு என்றெல்லலாம் பாடுவதோ நீயுமிங்கு!
விதிப்பயனே என்றெண்ணி வெம்பிக் கிடப்போரின்
கதிப்போக்கை மாற்றிடவே கவிதை நீயெழது!
குங்குமம் நிலைத்திருக்கக் குடிபுகுந்த வீட்டுக்கு
தங்கமும் நகையுமென்று தகப்பனைச் சுரண்டுகிற
மங்கையரின் மதிமாற்றும் மந்திரத்தை நீயெழது!

பொன்னைப் பொருள்வளத்தைப் போற்றிப் பூட்டிவைத்து
பொல்லாப் பகட்டென்றும் போதைக்கடிபணியும்
பெண்ணினத்தைச் சாடுகின்ற புதுக்கவிதை நீயெழுது!

கண்ணென்றும் மணியென்றும் கருத்தாய்க் காத்த மக்கள்
காதல்வயப் பட்டால் கடுந்தவறெண்ணும் - பழங்
காலத்துப் பெற்றோரைப் பரிகசித்து நீயெழுது!

மங்கையராய் பிறப்பெடுத்தல் மாதவம் என்றுரைத்த
மாகவியின் தேசத்தில் மங்கையரின் நிலையென்ன
மாட்டுக்கும் கீழ்தாமோ! மலிவான பொருளாமோ!
இன்னும் ஏராளம் இங்குண்டு நீயெழுத'

என்னும் மொழிகேட்டு வியப்புற்று நான் கேட்டேன்.
`பெண்ணே உன்சொல்லைப் பெரிதும் மதிக்கின்றேன்
கண்ணே இன்னேரம் காதல் நேரமன்றோ?'
என்றே நானுரைக்க எழுந்து நடக்கலுற்றாள்.

`வீரத்தை வெளிக்காட்ட நேரத்தைப் பார்ப்பாயா
எழுத்தைத் தொழிலாக ஏற்றிடுவாய் உன்கருத்தைப்
படித்துப் பலபேர்கள் பண்பட்டார் எனச்சேதி
என்செவியை எட்டட்டும் அதுவரைக்கும் உனக்காக
கோடி முத்தங்கள் கோத்து வைத்திருப்பேன்!'

கூறிச்சென்றவளின் திசைநோக்கிக் கும்பிட்டேன்.
கொல்லெனச் சிரிப்பொலியும் மேலிருந்து கேட்டிடவே
மெல்லத் தலைதூக்கி மேலே பார்க்கின்றேன்.

தங்கத் தகடெனவே தகதகத்த நிலவங்கே
`மானிடனே என்னழகைப் பாடிடுவாய்' எனக்கேட்க
`போ நிலவே நானினி மேல் நானிலத்து
மானிடரை மட்டும்தான் பாடிடுவேன்' என்றுரைக்க
ஓடி ஒளிந்ததையா ஒய்யார வெள்ளிநிலா!

அன்று பிறந்தததையா அச்சம் நிலவுக்கு
என்றெனைக் கண்டாலும் சென்று மறைந்துவிடும்
மங்கிய ஒளிக்கதிர்கள் மண்மீது கோலமிடும்.

(என்றோ ஒரு கவியரங்கில் வாசித்தது)

1 comment:

  1. கவிதையில் சரளமாக
    வந்து விழுந்த வார்த்தைகள்
    பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete