Monday, 24 November 2014

கறுப்புப்பண மர்மங்கள்

கறுப்புப் பணக் கூச்சல் அடங்கி விட்டது. சவடால்களுக்கு இனி தேவையில்லை. வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றிகள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், அடுத்து வர இருக்கும் ஒபாமா வருகை என விஷயம் திசை மாறிப்போகும்.

உண்மையில் கறுப்புப் பண விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை அலசுகிறது ஆம் ஆத்மி கட்சியின் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட இந்தப் பதிவு.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் பட்டியல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்திய அரசுக்குக் கிடைத்தது. முன்னர் ஆட்சி செய்த காங்கிரசும் அரசும் சரி, இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜக அரசும் சரி, பட்டியலில் உள்ள எல்லாப் பெயர்களையும் வெளியிட மறுத்து வருகின்றன.

அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் இருவரும் 2012 நவம்பர் 9ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கீழ்க்கண்ட பெயர்களும் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
முகேஷ் திருபாய் அம்பானி
அனில் திருபாய் அம்பானி
மோடெக் சாஃப்ட்வேர் பி. லிட் (ரிலையன்ஸ் குழும நிறுவனம்)
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிட்
சந்தீப் டாண்டன்
அனு டாண்டன்
கோகிலா திருபாய் அம்பானி
நரேஷ் குமார் கோயல்
பர்மன் (குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்)
யஷோவர்தன் பிர்லா

அண்மையில் பாஜக அரசின் நிதியமைச்சர் மூன்று பெயர்களை வெளியிட்டார் அல்லவா... அவற்றில் ஒன்று மேலே குறிப்பிட்ட பிரதீப் பர்மன். ஆக, ஆம் ஆத்மி கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பட்டியலில் இருந்த பெயர்தான் இது. எனவே, ஆப் கட்சி சொன்னது உண்மை என்பது உறுதியாகிறது. அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ள பெயர்களும் பட்டியலில் உண்டா இல்லையா என்று பாஜக அரசு கூறவே இல்லை.

இந்தப் பட்டியலில் உள்ள சிலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பர்மீந்தர் சிங் கால்ரா, விக்ரம் திரானி, பிரவீன் சஹானி ஆகிய மூன்று பேர் அளித்த வாக்குமூலத்தை 2012 நவம்பர் 9ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மூன்று பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். விந்தையிலும் விந்தை என்னவென்றால், நிதியமைச்சர் அண்மையில் அறிவித்த மூன்று பெயர்களில் இந்த மூன்று பெயர்களும் இல்லை. அது ஏன்?

பட்டியலில் உள்ள சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இதிலிருந்து தெரிய வந்துள்ளது. சிலர் மீது வீடுபுகுந்து அதிரடி சோதனை, விசாரணை என கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் செல்வாக்குள்ள வேறு சிலர் மீது எந்த நடவடிக்கையும் காணோம். மூன்றுபேரின் பெயர்களை மட்டும் மத்திய அரசு வெளியிட்டதன் மர்மம் என்ன? பட்டியலில் உள்ள மற்றவர்கள் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமானவர்களும் உண்டு என்பதாலா?


தவிர, மேற்கண்ட மூன்றுபேரும் அளித்த வாக்குமூலத்தில், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை உள்நாட்டிலேயே எப்படித் துவக்க முடியும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர். ஹவாலா மூலமாகத்தான் பரிமாற்றம் நடைபெற்றது என்பதையும், எச்எஸ்பிசி வங்கி எவ்வாறு இந்த வங்கிக் கணக்குகளை இயக்குகிறது என்பதையும் கூறினர். (இணைத்துள்ள படங்களைக் காணவும். ஒருவர் வெளிநாட்டுக்கே போகாமல் வங்கிக் கணக்கைத் துவக்கியதாகக் கூறியுள்ளார். மற்றொருவர், தொலைபேசி வழியாகச் சொன்னால் போதும், பணம் ஹவாலா வழியில் இங்கே வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.) ஆனால், இத்தனை பிரச்சினைக்குரிய எச்எஸ்பிசி வங்கிமீது அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஆக, கறுப்புப்பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. அனைவரின் மீதும் ஒரேமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, சிலர் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, உண்மையில் கறுப்புப்பண விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவர்மீதும் ஒரேமாதிரியான நடவடிக்கை எடுக்கப்படாது, அரசியல் காரணங்களுக்கு ஏற்பட நடவடிக்கைகள் மாறும், அருண் ஜெட்லி நாளுக்கொரு விதமாக பல்டி அடித்ததன் பின்னணி இதுதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


கறுப்புப்பண விவகாரத்தில் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட வங்கியின்மீதும் அதன் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுத்தால் பாஜகவுக்கு நெருக்கமாக உள்ளவர்களும் மாட்டிக் கொள்வார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும்.

சிறப்புப் புலனாய்வுக் குழு அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியில், உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமாக இயங்கினால்தான் உண்மைகள் வெளிவரும்.
*
கறுப்புப் பணம் என்றால் என்ன... அடுத்த பதிவு விரைவில்.

No comments:

Post a Comment