கத்தியும் கத்தாமலும்...
- ஏங்க நீங்க கத்தி
பாத்தீங்களா...?
- இல்லியே. நான்
கத்தலையே...?
- நான் அதைக்கேக்கலே.
கத்தி பாத்தீங்களான்னு கேட்டேன்.
- நான் ஏன் கத்திப்
பாக்கணும். எனக்கு தொண்டை நல்லாத்தானே இருக்கு...?
- அய்யோ... நான்
கேட்டது கத்தி பாத்தீங்களா...?
- கத்தியா.... ஆமா.
பார்த்தேனே!
- எங்கே பாத்தீங்க...?
- கிச்சன்லதான்
இருந்துச்சு... ஸ்ட்வ் பக்கத்துல!
- அய்யோ... நான்
கேட்டது விஜயோட கத்தி பாத்தீங்களா...?
- நம்ம வீட்டுலயே
கத்தி இருக்கும்போது விஜயோட கத்தியை நான் எதுக்கு பாக்கணும்...?
- அய்யோ... நான்
கேட்டது கத்தி சினிமா பாத்தீங்களா...?
- சினிமா பார்க்க
எதுக்கு கத்தோணும்...?
- ஆஆஆஆஆஆஆ.... என்கையில
மட்டும் கத்தி கிடைச்சுது...
*
ஓடும் வரை ஓட்டம்
சில நாட்களுக்கு முன் ஹிண்டு
நாளிதழில் ஹோம் டெலிவரி செய்பவர்களைப்பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. பல
நாட்களாகவே நானும் யோசித்துக் கொண்டிருந்த விஷயம் இது. (நான்கு நாட்கள் முன்பு
யாரோ ஒரு நண்பர்கூட இதுகுறித்து எழுதினார்.) அப்போதிருந்து பதிவு எழுத
நினைத்திருந்தேன். நாளுக்கு நான்கைந்து பேரையாவது இப்படிப் பார்க்கிறேன் என்றாலும், கேமரா கையில் இருப்பதில்லை அல்லது செல்போனில்
கேமராவை இயக்குவதற்குள் பறந்து விடுகிறார்கள்.
பக்கத்திலிருக்கும்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டத்திற்குச் செல்லும் வழியில், 5 நிமிடங்களுக்குள் ஆறு பேரைப் பார்த்தேன்.
பின்னிருக்கை கொள்ளாத அளவில் பெரிய பைகள்.
இணையவழி பொருட்களை வாங்கும்
நமக்கு உட்கார்ந்த இடத்தில் 5 நிமிட வேலை.
இவர்களோ, 30-40 கிலோ சுமையை
முதுகில் ஏற்றிக்கொண்டு மைல் கணக்கில் பைக்கில் சுற்றி நம் வீடு சேர்க்கிறார்கள்.
எந்தவிதமான சோஷியல் செக்யூரிட்டியும் கிடையாது. ஓடும் வரை ஓட்டம்....
அடுத்தமுறை நீங்களும் ஏதேனும்
ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டுக்கு டெலிவரி செய்ய யாரேனும் வந்தால், கொஞ்சம் புன்னகை தெளித்து அனுப்புங்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம். ஆன்லைனில்
எல்லாமே மலிவு என்று நினைத்து விடாதீர்கள். கொஞ்சம் சந்தையிலும் விசாரிக்கலாம்.
நான்கு நாட்களுக்கு முன் மகள் வீட்டிற்காக கெய்சர் வாங்க ஆன்லைனில் தேடி, மாடலையும் முடிவு செய்து விட்டோம். பேமென்ட் வரை
போன பிறகு, எதற்கும்
சந்தையிலும் போய்ப் பார்ப்போம் என்று அழைத்துப் போனேன். அடுத்த தெருவில் உஷா 25 லிட்டர் கெய்சர் 7000 ரூபாய்க்குக் கிடைத்தது. வந்த பிறகு ஆன்லைனில் மறுபடி பார்த்தேன். இதே மாடல்
தள்ளுபடி போக விலை --- சுலேகா தளத்தில் 9990. பிரைஸ்தேகோ தளத்தில் 7590. ஸ்நேப்டீலில் 6992
ஆன்லைனில் ஆர்டர் செய்யாமல்
கடையிலேயே வாங்கியதற்கு டெலிவரி பையன்கள் பற்றி மேலே சொன்னதும் ஒரு காரணம்.
*
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
நம் குழந்தைகளின்
பிறந்தநாளின்போது கேக் வெட்டுகிறோம், வீட்டை அலங்காரம்
செய்கிறோம், கோமாளித் தொப்பிகள்
வாங்கி மாட்டுகிறோம், பலூன்களை
உடைக்கிறோம், ஷூட்டர் கொண்டு
வண்ணத்துகள்களை சொரியச் செய்கிறோம், ரிடர்ன் கிஃப்ட்
என்ற பெயரில் வாழ்த்துக்கூற வந்தவர்களுக்கும் பரிசளிக்கிறோம்.
சிலர் விரும்பிச்
செய்கிறார்கள், சிலர் சுற்றிலும்
உள்ளவர்கள் செய்கிறார்களே என்பதற்காகச் செய்கிறார்கள், சிலர் விருப்பம் இல்லாவிட்டாலும் குழந்தையின் மனது
நோகக்கூடாது என்பதற்காகச் செய்கிறார்கள். இப்படிச் செய்யலாம், செய்யக்கூடாது என்று நான் கூற வரவில்லை. எல்லாமே
சுற்றியிருக்கும் சமூகத்தைப் பொறுத்தது அல்லவா... கூடவே இன்னொன்றும் செய்யுங்கள்.
பிறந்தநாளின்போது குழந்தையை
அழைத்துச்சென்று ஏழைகளுக்கு, ஆதரவற்றோர்
இல்லங்களுக்கு இயன்ற உதவியையும் செய்யுங்கள். 100 ரூபாயாகவும்
இருக்கலாம், ஆயிரமாகவும்
இருக்கலாம். எவ்வளவு என்பது முக்கியமல்ல. சற்றே வளர்ந்த குழந்தை என்றால், ஏன் இதைச் செய்ய வேண்டும் என்பதையும் புரிய
வையுங்கள். மனதில் ஈரத்தை இளவயதிலேயே புகட்டுங்கள். இல்லாமையின் கொடுமை என்ன
என்பதைப் புரிந்தவர்களாக வளர இது உதவும். (குழந்தையின் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, நம்முடைய பிறந்தநாளுக்கும் இதைச்செய்யலாம்.)
போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்
எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.
போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்
எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.
பிறந்த நாளின்போது,குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று அன்பை, ஈரத்தை விதைப்போம்
ReplyDeleteநன்றி நண்பரே