Friday, 18 March 2016

மாற்றம்

மனுசனுக்கு அம்பது வயசானா, கண்ணுக்கு எதிர நடக்கிற விஷயமெல்லாம் மனசுல நிக்காது. முன்னாடி நடந்த விசயமெல்லாம் போகப்போக இன்னும் தெளிவா ஞாபகத்துக்கு வரும்.

வாசிக்கும்போது, ஏதோ எனக்காகவே எழுதப்பட்டது போல இருக்கிறது இது. இப்போது அறுபதில் இன்னும் பல பழைய நினைவுகள் கண்முன்னே தெளிவாகத் தெரிகின்றன. எழுதியவர் சீன எழுத்தாளர். இடம் பெற்றிருப்பது மாற்றம் என்னும் நாவலில். தில்லியில் நூல் வெளியீட்டு விழாவின்போது கையில் கிடைத்து, திரும்பி வரும்போதே பஸ்சில் வாசிக்கத் துவங்கி, பாதியில் நின்றுபோய், இடையில் வேறு ஏதேதோ நூல்களைப் படித்து, இதை நேற்றுதான் வாசித்து முடித்தேன்.

சீனம் இரும்புத்திரை நாடு. தியானென்மன் சதுக்கத்தில் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கிய நாடு. பேச்சுரிமை எழுத்துரிமை என்பதெல்லாம் செல்லாது. எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள்தான். அரசை விமர்சித்து எவரும் எழுதிவிட முடியாது. அது படைப்பிலக்கியமாக இருந்தாலும் சரி. நமக்குத் தெரிந்த சித்திரம் இதுதான். நமக்குத் தெரிந்ததெல்லாம் சில பெயர்கள், கொஞ்சம் வரலாறு, இந்திய-சீனப் போர், பத்திரிகைகளின் மூலமாகக் கிடைக்கும் சில செய்திகள். அவ்வளவுதான்.

இந்தியா-சீனா மொழியாக்கத் திட்டம் என்றொரு திட்டம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்திய இலக்கியங்களை சீனத்துக்கும், சீன இலக்கியங்களை இந்திய மொழிகளுக்கும் (இப்போதைக்கு இந்தி மட்டும்) மொழியாக்கம் செய்வது. இதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதைப்பற்றிய அறிக்கையில், கன்பூசியஸ் முதல் மோ யான் வரை பல நூலாசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, இவை இந்திய மொழிகளில் இதுவரை வந்ததில்லை, இவற்றை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று முக்கியமான அதிகாரி ஒருவர் பேசியிருந்தார். கன்பூசியஸ் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் தமிழில் படித்திருக்கிறேன். இவற்றையெல்லாம் இந்திய மொழிகளில் இன்னும் கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது என்று சற்றே திருத்தம் செய்ததுதான் அந்த அறிக்கையில் என்னால் முடிந்தது.

சீன இலக்கியத்தை அறியாதவர்கள் நாம். ஏனென்றால், சீன இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லை. ஆங்கிலத்தில் வாசிக்கும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு அறிமுகம் இருக்கலாம். எனக்கு நிச்சயமாக இல்லை, இதை வாசிக்கும் பெரும்பாலோருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால், மேலே காட்டிய சித்திரத்தை அப்படியே உடைத்துப் போடுகிறது என்று சொல்ல இயலாவிட்டாலும், வேறொரு சித்திரத்தை விரிக்கிறது மோ-யான் எழுதிய மாற்றம்”.

ஆரம்பத்தில் கதைசொல்லியின் விவரணையில் துவங்கும் கதை, பிறகு நாவலா, சுயசரிதையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை என்று தோன்றச்செய்து, சட்டென முடிந்து போகிறது. (இப்படியா சட்டுனு முடிக்கிறது...?) கதைசொல்லியின் விவரணைகளில் விரிகிறது சீனத்தின் அன்றைய நிலை, கலாச்சாரப் புரட்சிக்குப் பிந்தைய நிலை, அதன் குளறுபடிகள் அல்லது அதில் இருந்த ஓட்டைகள், கூட்டுப்பண்ணை, ராணுவம், வரலாறு, போர்கள், மக்களின் வாழ்க்கை-பொருளாதார நிலை மாற்றங்கள், கட்சிக்காரர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள். குறிப்பாகச் சொல்ல வேண்டியது இதில் எதுவும் சொல்ல வேண்டும் என்பதான தொனியில் சொல்லப்படவில்லை என்பதே.

நூலைப் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் இடைவேளைகளில் வேறொரு வேலையும் செய்து கொண்டிருந்தேன். அது இந்தி நூல். ஜீவனி, ஆத்மகதா (வாழ்க்கை வரலாறு, சுயசரிதை) என்பது குறித்த விளக்கம் அதில் இருந்தது. வாழ்க்கை வரலாறு என்பது ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் வர்ணணை அல்ல, மாறாக, அதன் உண்மையான சித்திரிப்பு. ஒரு நபரின் அக-புறத் தோற்றத்தை கலாபூர்வமாக வெளிப்படுத்தும். ஒரு நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவனுடைய வெற்றி அல்லது தோல்விகளின் சித்திரம். அவன் ஆசைப்பட்ட அல்லது நிராசைப்பட்ட கணங்களில் ஏற்பட்ட மனநிலை, அவனது குறிக்கோள்களுக்கான போராட்டங்களின் சித்திரம். வாழ்க்கை வரலாறு மற்றொருவரால் எழுதப்படுவது, சுயசரிதை அவராலேயே எழுதப்படுவது என்பது தவிர வாழ்க்கை வரலாற்றுக்கும் சுயசரிதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இதையும் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, மாற்றம் ஒரு வாழ்க்கை வரலாறு, ஒரு சுயசரிதை, ஒரு நாவல். இதில் வருகிறது ஒரு டிரக் காஸ்-51 டிரக். கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க எதிர்ப்புப் போரின்போது ரஷ்யாவிலிருந்து வந்த டிரக். ஸ்டர்டி என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே - வலுவான அல்லது தகர்க்க முடியாத என்று பொருள்படும் வகையில் அமைந்தவை ரஷ்ய இயந்திரங்கள். இந்தக்காலத்து ரஷ்ய இயந்திரங்கள் பற்றித் தெரியாது எனக்கு. ஆனால் அந்தக்காலத்து இயந்திரங்கள் அப்படிப்பட்டவைதான். நான் பல ஆண்டுகள் நேரில் கண்ட ரஷ்ய அச்சு இயந்திரம் ஆகட்டும், இப்போதும் கைவசம் பயனற்றதாய் இருக்கிற ஜெனித் ஃபிலிம் கேமரா ஆகட்டும் - எல்லாமே ஸ்டர்டிதான். புரட்சியில் பிறந்து, தாக்குப்பிடிக்க வேண்டிய நிலையில் இருந்த ரஷ்யாவின் நிலைமையில் அதன் தயாரிப்புகள் வேறெப்படியும் இருந்திருக்க முடியாது. நாவலின் நாயகன் முதல், அவனுடைய தோழனாக இருந்த ஹெ-ட்சிர்-வு வரை எல்லாருக்கும் இருந்தது போலவே காஸ்-51 டிரக் மீது எனக்கும் காதல் வந்து விட்டது. இதையும் ஒரு பாத்திரமாகவே நான் பார்க்கிறேன். நூலின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கதையை இணைக்கும் இழையாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த டிரக்.

நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்கும் கதை, சக மாணவி லு-வென்-லீ, சக மாணவன் ஹெ-ட்சிர்-வு இருவரையும் அவ்வப்போது தொட்டுக்கொண்டே இருக்கிறது. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலனாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து லு-வென்-லீ-யை சந்திப்பதுடன் கதை முடிகிறது. முதல் பகுதியில் பள்ளியில் நடக்கும் ஒரு சம்பவத்தில், ஆசிரியர் லியு-வுடன் டேபிள் டென்னிஸ் ஆடுகிறாள் லு-வென்-லீ. டேபிள் டென்னிஸில் இப்போது சீனா முன்னிலையில் இருக்கிறது. இதை வாசிக்கும்போது, பள்ளி நிலையில் இருந்தே விளையாட்டுத் திறமைகள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுவது குறித்து வானொலிக்கான ஆட்டக்களம் நிகழ்ச்சியில் நான் சில விவரங்களை வழங்கியது நினைவு வருகிறது. லு-வென்-லீ அந்த ஆசிரியரையே திருமணம் செய்வது வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று. நம் அன்றாட வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்களைக் காணக்கூடும்.

பள்ளியில் ஒரு கட்டுரைப்போட்டி வைக்கிறார் ஆசிரியர். என் லட்சியம்என்பது தலைப்பு. ஹெ-ட்சிர்-வு எழுதுகிறான் — “எனக்கு ஒரே இலட்சியம்தான். என் லட்சியம் லு-வென்-லீயின் அப்பாவாக ஆவது.இதை குதர்க்கமாக யாரும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். லு-வென்-லீயின் அப்பாதான் காஸ்-51 டிரக் ஓட்டுபவர். அந்த டிரக் ஓட்டுபவனாக ஆக வேண்டும் என்பதைத்தான் அவன் அப்படி எழுதியிருக்கிறான். ஆனால் ஆசிரியர் சும்மா விடுவாரா? ஆசிரியர் அல்லவா? நீ எங்கேயாவது உருண்டு போய்த் தொலை என்கிறார். அவனும் தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கீழே படுத்து உருண்டு கொண்டே வெளியேறுகிறான். அத்தோடு அவன் பள்ளி வாழ்க்கை முடிகிறது. வாழ்க்கை அவனை உருட்டிக்கொண்டே போகிறது. அவனும் உருண்டு திரண்டு விடுகிறான். கடைசியில் அவன் இலட்சியத்தை அடைகிறானா? அதை நான் சொல்லப்போவதில்லை.

நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிற போக்கில் இரைந்து கிடக்கின்றன. சீனப் பழமொழிகளும்தான் எவ்வளவு சுவையாக இருக்கின்றன? அதுவும், முழு நூலுமே வழக்கு மொழியில் இருக்கும்போது, சீனப் பெயர்களின் அறிமுகம் இல்லை என்கிற சிறு தடங்கலைத் தவிர, மற்றபடி வழுக்கிக்கொண்டு போகும் வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக இருக்கிறது. மாதிரிக்கு சில பழமொழிகள் அல்லது சொற்றொடர்கள் நீ பன்னியை கறுப்புன்னு கிண்டலடிக்கிற காக்கா. கோழி உடம்புலர்ந்து எடுத்த ஒரு இறகுக்கு சமானம். மொச்சக்கொட்டை மொளை மாதிரி இருந்துகிட்டு நீட்டுவால் புழு மாதிரி நடிக்காதே. கொழுத்த பன்னி கதவு தாண்டி வரப்பாக்கும்போது நாய் பிராண்டுதுன்னு நெனச்சிக்காதே. ஆடறது என்னவோ பட்டாக்கத்தி நாட்டியம், அறுக்க நினைக்கிறதோ ராஜாவோட தலையை.

தன்னையே, தன் கதை திரைப்படம் ஆனதையே கேலி செய்யவும் முடிகிறது மோ-யானுக்கு. 1987 இலையுதிர் காலத்தில் சிவப்புச் சோளம் கதையை திரைப்படமாக எடுக்க வருகிறார்கள் டைரக்டர் ட்சாங்-யீ-மோவ், நடிகை கொங்-லீ, நடிகர் சியாங்-வென் மற்றும் சிலர். கதையின்படி, ட்ச்சிங்-ஷா-க்கோவ் என்னும் இடத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தை முன்வைத்து, திரைப்படத்துக்கு ட்ச்சிங்-ஷா-க்கோவ், செப்டம்பர் 9” எனப் பெயரிடப்பட்டது. நூலாசிரியர் கேட்கிறார் ஏன் அப்போ சிகப்புச் சோளம்னு கூப்பிடலே? ஏன் படம் எடுத்து முடிஞ்சதுக்கு அப்புறம் சிகப்புச்சோளம்னு கூப்பிட்டாங்க? நான் கேக்கலே, அவங்களும் சொல்லலே.

எழுத்தாளராகி பிரபலமான பிறகு கிராமத்துக்கு ஒருநாள் வருகிறார். டிபிகல் கிராமத்தான் வான் அவரைப் பார்க்கிறார். நீ பணக்காரனாயிட்டேன்னு கேள்விப்பட்டேன். ஒரே நாவலைப் பத்து லட்சத்துக்கு வித்துட்டியாமேஎன்று கேட்கிறார். அப்படியெல்லாம் இல்லை என்று இவர் பதில் சொல்வதற்கு முன்பே வான் சொல்கிறார் - பயப்படாதப்பா. நான் உங்கிட்ட கடன் கேக்க மாட்டேன். என் மவன் பரிட்சை எழுதி அமெரிக்காவுக்குப் படிக்கப் போயிட்டான்.இன்னும் கொஞ்ச வருசத்துல டாலர் கொட்டிக் கெடக்கும்.இது நம் கிராமங்களிலும் கேட்கக் கிடைக்கிற, கதைக்காக எழுதப்பட்ட உரையாடல் மட்டுமல்ல. நாவலின் மையமும் இதுதான் என்றும் சொல்லலாம்.

மோ யான் என்னும் புனைபெயரில் எழுதும் குயான் மோயே, 2012இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இவருடைய முதல் நாவல் Red Sorghum 1986இல் தொடராகவும் பிறகு நூலாகவும் வெளிவந்தது. 1987இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. 11 நாவல்களும் ஏராளமான சிறுகதைகளும் குறுநாவல்களும் எழுதியிருக்கிறார். 1960களில் துவங்கி 2010இல் முடிகிற இந்தக் குறுநாவல், சீனத்தின் மாற்றங்களை சொல்லாமல் சொல்கிறது.

இந்த நூல், பயணி என்னும் புனைபெயரில் எழுதும் நண்பர் ஸ்ரீதரன் மதுசூதனன் தமிழாக்கத்தில் சீனத்திலிருந்து நேரடியாக தமிழுக்கு வந்துள்ளது. அதனாலேயே நூல் அருமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. முன்னுரையாக சீனத்திலிருந்து தமிழுக்குத் தருவதில் உள்ள சிக்கல்களை, தனித்தன்மைகளை விளக்கியிருப்பது நமக்கு கூடுதல் புரிதலைத் தருகிறது. உதாரணத்துக்கு, மாவோ-வை மாசே துங் என்றுதான் அறிவோம். உண்மையில் அவர் பெயர் மாவ்-ட்ஸ-தொங். ஸ்ரீதரன், சீனத்திலிருந்து தமிழாக்கம் செய்த இன்னொரு நூல் - வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, காலச்சுவடு வெளியீடு.


மாற்றம், மோ-யான், தமிழாக்கம் - பயணி, காலச்சுவடு வெளியீடு, ஐஎஸ்பிஎன் - 978-93-84641-27-6, ரூ. 80

1 comment:

  1. அருமையானதொரு நூல் விமர்சனம் சார்.

    ReplyDelete