Sunday, 22 July 2018

புத்துலகம் படைப்போம்


அணுவின் துணைகொண்டு ஆயிரம் மனிதரை
அழித்ததைப் பார்த்தாச்சு - அட
அனுபவம் கண்ட பின்னரும் போரிடும்
ஆசைகள் போகலையே.

கோள்களின் துணையால் உலகம் மிகவும்
குறுகிப் போயாச்சு - அட
கொள்ளை அடித்திட எல்லைகள் தாண்டிடும்
குணங்கள் மாறலையே.

புத்தர் காந்தி எனப்பலர் அஹிம்சை
போதனை செய்தாச்சு - அட
யுத்தம் நிறவெறி இனப்படு கொலைகள்
இன்னமும் தீரலையே.

ஆலைகள் வைத்து காற்றையும் நீரையும்
அசுத்தம் செய்தாச்சு - அட
வளமாய் வாழ்ந்திட வனங்களை மரங்களை
வளர்த்திட மனமிலையே.

மதத்தின் பேரால் மக்களைப் பிரித்திடும்
மனிதரைப் பார்த்தாச்சு - அட
மதம்பிடித்தலையும் மனங்களை மாற்றிட
மார்க்கமும் தெரியலையே.

அன்பே துணையென அத்தனை மதங்களும்
அறிவுரை செய்தாச்சு - அட
அன்பின் இடத்தில் ஆத்திரம் குடிகொண்டு
ஆண்டுகள் ஆனதுவே.

எத்தனை காலம் பொய்களில் திளைத்து
மாயையில் வாழ்ந்திருப்போம்? - அட
இத்தரை மீதில் அறிவுடை உயிரினம்
மனிதரென மறவோம்.

கந்தன் காவடி கறுப்பு இருமுடி
காவிச் சடாமுடியும்
ஏசுவின் திருவடி பறந்திடும் பிறைக்கொடி
எல்லாம் ஒர் நிரையே

என்பது தெளிந்து அன்பினில் திளைத்து
பண்புற வாழ்ந்திடுவோம்
எல்லைகள் களைந்து வன்முறை மறந்து
புத்துலகம் படைப்போம்.

Saturday, 21 July 2018

ரஃபேல் ஊழல் விவகாரம்


நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன எதிர்க் கட்சிகள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும், அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டு வரப்பட்டது அல்ல அது. நாடாளுமன்றத்தில் தமக்கு வலிமை இல்லை என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா? அரசின் குறைகளை சுட்டிக்காட்ட நாடாளுமன்றம் என்கிற மேடையைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ராகுல் காந்தி மோடியை கிழித்துத் தொங்க விட்டு விட்டார். அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ராகுல் காந்தி பேசியதில் முக்கியமான விஷயம் ரபேல் விமான விவகாரம்தான். ராகுல் பேசியது என்ன?

“யுபிஏ காலத்தில் ஒரு விமானத்துக்கு விலை 520 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது என்ன நடந்தது, யாருடன் என்ன பேசப்பட்டதோ தெரியவில்லை. பிரதமர் பிரான்ஸ் போனார். யாருடன் சென்றார் என்பதை நாடே அறியும். மந்திரம் போட்டதுபோல விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டது.
“பாதுகாப்பு அமைச்சர் இங்கே இருக்கிறார். அவர் முதலில் சொன்னார் விமானத்தின் விலையை நான் நாட்டுக்குத் தெரிவிப்பேன். வெளிப்படையாகவே சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு, அதே பாதுகாப்பு அமைச்சர் சொன்னார் நான் இந்த விவரத்தை சொல்ல முடியாது. ஏனென்றால், பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது.
“நான் பிரான்ஸ் அதிபரை நேரடியாகவே சந்தித்தேன். அவரிடம் நானே இந்தக் கேள்வியைக் கேட்டேன் இப்படி ஏதாவது ஒப்பந்தம் பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இருக்கிறதா? பிரான்ஸ் அதிபர் சொன்னார் –“பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்கள் இந்திய நாடு முழுமைக்கும்கூடச் சொல்லலாம்.பிரதமரின் நிர்ப்பந்தம் காரணமாக நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவலை சொல்லியிருக்கிறார். (இதைச் சொன்னபோதுதான் பெரும் கூச்சல் எழுப்பினார் நிர்மலா சீதாராமன்) யாருக்காக இந்த சலுகைகளை செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? நிர்மலா அவர்களே, பிரதமர் அவர்களே, நீங்கள் நாட்டுக்குப் பதில் சொல்லுங்கள்
“பிரதமருக்கும் இரண்டு பெரிய வர்த்தக ஆட்களுக்கும் இடையே இருக்கும் உறவை எல்லாரும் அறிவார்கள். இந்தியப் பிரதமரின் பெயரை மார்க்கெட்டிங் செய்வதற்கு எவ்வளவு பணம் போகிறது என்பதையும் எல்லாரும் அறிவார்கள். அது எங்கிருந்து வருகிறது என்பதும் புரிந்தே இருக்கிறது. அவர்களில் ஒருவருக்கு ரபேல் கான்டிராக்ட் தரப்பட்டது. அவருக்கு பல்லாயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. அந்த ஒப்பந்தம் எச்.ஏ.எல். இடமிருந்து பறிக்கப்பட்டது. அந்த நபருக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த முடிவை எடுத்ததா என்பதை பிரதமர் இங்கே விளக்க வேண்டும்.
எச்ஏஎல்லிடமிருந்து இந்த ஒப்பந்தம் ஏன் பறிக்கப்பட்டது, ஏற்கெனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிற ஒருவருக்கு அதுவும் இதுவரை விமானத் துறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவருக்கு ஏன் இந்த ஒப்பந்தம் தரப்பட்டது என்பதையும் பிரதமர் விளக்க வேண்டும்.”

இதுதான் ராகுல் பேசியது.
இந்த விவகாரம் வெடித்தபோதே, இந்திய அரசிடமிருந்து பிரான்சுக்கு அழுத்தம் தரப்படும், மறுப்பு வெளியிடுமாறு தகவல் போகும் என்று எதிர்பார்த்தேன். அதேபோல, பிரான்ஸ் மறுப்பு வெளியிட்டுள்ளது. அந்த மறுப்பு என்ன?
security agreement signed between both countries in 2008 binds both the nation to protect the classified information provided by the partner which could impact both security and operational capabilities of the defence equipment of India or France
//இந்தியா அல்லது பிரான்சின் பாதுகாப்பு சாதனத்தின் (இந்த இடத்தில் விமானத்துக்கு) பாதுகாப்பு மற்றம் செயல்பாட்டில் தாக்கத்தை விளைவிக்கக்கூடிய தகவலை ரகசியமாக வைக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டின் ஒப்பந்தம் இரண்டு நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.//
நிர்மலா சீதாராமன் ராகுலுக்கு பதில் அளிக்கும்போது, யுபிஏ அரசின் அமைச்சர் ஆன்டனி கையொப்பம் இட்ட ஒப்பந்தம் என்று இதைத்தான் தெரிவித்தார்.

இப்போது கேள்விகள் என்னவென்றால்,
1. பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைத்தான் அதாவது, தொழில்நுட்பத் தகவல்களைத்தான் ரகசியமாக வைக்க வேண்டுமே தவிர, விலையை எதற்கு ரகசியமாக வைக்க வேண்டும்?
2. விலையை ரகசியமாக வைக்க வேண்டும் என்றால், 2008இல் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தம் என்றால், அப்போதைய விலையை காங்கிரஸ் அரசால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடிந்ததே, இப்போது ஏன் தெரிவிக்க முடியாது? எதற்காக இந்த மூடிமறைப்பு?
3. யுபிஏ கால ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டுத்தான் புதிய ஒப்பந்தமே போட்டார்கள். பின்னே அந்த ஒப்பந்தத்தைப் பற்றி இப்போது எதற்குப் பேச வேண்டும்? இவர்கள் யோக்கிய சிகாமணிகள் என்றால் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டியதுதானே?
4. எச்ஏஎல் என்ற அரசுத்துறை நிறுவனத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதுவும் போர் விமானத் துறையில் இதுவரை எந்தத் தொடர்பும் இல்லாத நிறுவனத்துக்கு தந்ததன் பின்னணி என்ன?
இவைதான் கேள்விகள்.
இவை பழைய கேள்விகள் ஆயிற்றே, ராகுல் புதிதாக ஏதும் கேட்கவில்லையே?
ஆமாம். பழைய கேள்விகள்தான். ஆனால் இதுவரை பிரதமர் தெளிவாக பதிலளிக்காத கேள்விகள்.
இப்போதும் அவர் பதிலளிக்கப் போவதில்லை. இப்போதும் வழக்கம்போல ஏதாவது நாடகமாடுவார். அழுது புலம்புவார். டீக்கடைக்காரன் பிரதமர் ஆனது பொறுக்கவில்லை என்பார். ஆனால் 500 கோடி ரூபாய் விமானம் 1600 கோடியாக ஆனது எப்படி என்பதை சொல்ல மாட்டார்.
*
ரபேல் டீல் ஆனபோது 2015 ஏப்ரலில் பேஸ்புக்கில் நான் எழுதிய பதிவு கீழே. அப்போதும் இதே கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவு செய்திருக்கிறார். இந்த விமானங்களைத் தயாரிப்பது தஸால்ட் நிறுவனம். அதுவும் ரெடி-டு-ஃபிளை பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியா வாங்குகிறது. இது மிகப்பெரிய சாதனை என ஊடகங்களில் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையில் பழைய விமானங்கள் காலாவதி ஆகும்போது புதியவை வாங்குவது அவசியம், தேவை என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் வேறு பல கேள்விகள் எழுகின்றன.

முந்தைய காங்கிரஸ் அரசு இதே ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. அது 126 விமானங்களுக்கான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப்படி 18 விமானங்கள் பறப்பதற்கு தயார் நிலையில் தரப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் சிறிய சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் தயாராகும் விமானத்துக்கும் தஸாஸ்ட் நிறுவனம் உத்தரவாதம் தர வேண்டும் என்று இந்தியா கேட்க, அது எப்படி சாத்தியம் என்று தஸால்ட் கேட்க, விவகாரம் மூன்று ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் இப்போது 36 விமானங்கள் வாங்க முடிவாகியுள்ளது. பழைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் குப்பையில் போடப்படுவதாக இப்போதைய அரசு கூறுகிறது. இனி நிறுவனங்களுடன் அல்ல, அரசுகளுக்கு இடையில்தான் பேரம் நடத்தப்படும் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்.

எல்லா பேரங்களும் அரசுகளுக்கு இடையில்தான் என்றால், அணுஉலைகள் உள்பட இனி எல்லா பேரங்களும் அரசுகளுடன்தான் நடத்தப்படுமா?

பறக்கும் நிலையில் 36 விமானங்களும் வாங்கப்படும்போது அவற்றின் பராமரிப்பை யார் செய்வார்கள்? அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்றால் பிரான்ஸ் அரசா பராமரிப்புச் செய்யப்போகிறது? தஸால்ட் தயாரித்த விமானங்களுக்கு அரசு எப்படி பராமரிப்புச் செய்யும்?

முந்தைய 126 விமானங்கள் விஷயத்தில் 18 மட்டுமே பறக்கும் நிலையிலும் 108 இந்தியாவில் தயாரிப்பதாகவும் இருந்தது. இவற்றின் உத்தரவாதம் குறித்த சிக்கல் தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனத்துக்கு அனுபவம், உற்பத்தி, எதிர்கால வளர்ச்சி என பலவற்றில் பெருமளவுக்கு நன்மை கிடைத்திருக்குமே?

இப்போது 36 விமானங்களும் பறக்கும் நிலையில்தான் வாங்கப்படுகின்றன. அப்படியானால் மேக் இன் இந்தியா என்னவாயிற்று?

அப்படியே பழைய ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக இருந்தாலும், தஸால்ட் நிறுவனத்துக்கு அடுத்ததாக இருந்த ஸ்வீடனின் கிரிபென் நிறுவனத்தின் விமானங்களை வாங்கியிருக்கலாமே. அந்த நிறுவனம் இந்தியாவிலேயே விமானங்களைத் தயாரித்துத் தருவதாக அப்போது சொன்னதே?

பொதுவாக ஒப்பந்தங்கள் காலாவதி ஆனால் புதிய டெண்டர்கள் கோரப்படும். விலைகளும் நிபந்தனைகளும் பேரம்பேசப்படும். அப்படி ஏதும் இல்லாமல் மொத்தமாக ஒப்பந்தம் போடுவது தவறான முன்னுதாரணம் ஆகாதா? இதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பது மட்டும்தான் காரணமா? அப்படியானால் ரஃபேல் விமானத்தையே வாங்க வேண்டிய அவசியம் என்ன?

2012இல் தஸால்டும் ரிலையன்சும் கூட்டுக்கான ஒப்பந்தம் ஒன்று போட்டிருந்தன. இப்போது வாங்கப்படும் 36 விமானங்களின் பராமரிப்பு ரஃபேல்-ரிலையன்ஸ் கூட்டு நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்பதுதான் காரணமா?

Sunday, 8 July 2018

மூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்


2013 ஜூன் மாதம் இந்திய அரசு நடத்திய பொருளாதாரக் கணக்கெடுப்புப் படிவத்தில், கணக்கெடுப்புக் கேள்வி ஒன்றில் ஆண் என்றால் 1, பெண் என்றால் 2, மூன்றாம் பாலினத்தவர் என்றால் 9 என்று எண்கள் தரப்பட்டிருந்தன. இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

மூன்றாம் பாலினத்தவரை தமிழ்நாட்டில் கேலியாக சுட்டும் வழக்கத்தை ஒட்டி 9 என்ற எண் தரப்படவில்லை. கணக்கெடுப்புகளில் குறிப்பாக வகைப்படுத்த இயலாதவற்றுக்கு – ஆங்கிலத்தில் others என்ற வகைக்கு 9, 99 என எண்கள் தருவது பொதுவான வழக்கம்தான். இதுவும் இப்படித்தான் தரப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய கணக்கெடுப்பில் ஆண் என்றால் 1, பெண் என்றால் 2, அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றால் 3 எனக் குறிப்பிடுமாறு சொல்லப்பட்டிருந்தது. 2013இல் 9 என்ற எண் தரப்பட்டது மட்டுமல்ல, ஈனுக் என்ற விளக்கமும் கையேட்டில் இருந்தது.

சமூக ஊடகங்களில் இந்த 9 விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக, அரசு திட்டமிட்டுச் செய்திருக்காது, இருந்தாலும் இதை கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்கலாம் என்று பதிவு எழுதினேன். சிலர் என்னை கண்டித்தார்கள், சிலர் பாராட்டினார்கள்.

இதுகுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட துறைக்கு நான் ஒரு அஞ்சலை அனுப்பினேன். நடந்தது நடந்து விட்டது, கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு சிக்கலான இந்த விஷயத்தைப் புரிய வைத்து, கேள்வி கேட்கும்போது எச்சரிக்கையாக இருக்கச் செய்யுங்கள் என்று அதில் விளக்கமாக எழுதினேன். கடிதத்தின் தமிழாக்கத்தையும் பேஸ்புக்கில் பதிவாகப் பகிர்ந்தேன். (சம்பந்தப்பட்ட அரசுத்துறை இந்தத் தவறுக்கு பிற்பாடு வருத்தம் தெரிவித்ததாக நினைவு.)

ஜூன் 30ஆம் தேதியுடன் இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அந்தக் கணக்கெடுப்பில், ஆண் பெண் தவிர மூன்றாம் பாலினத்தவரைக் கணக்கெடுக்க தனி குறியீட்டு எண் தரப்பட்டது எந்தளவுக்குப் பயன் தந்தது?

கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையைப் பார்த்தால்தான் விவரம் தெரியும் அல்லவா? எனவே, அதைத் தேடிப் பார்த்தேன். ‘அதர்ஸ்’ பிரிவில் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று சொன்னது அறிக்கை.
Information on proprietary establishments owned by ‘Others’ i.e. transgenders, being collected for the first time, was difficult to collect. In the past, such information was compiled under male category. Therefore, there is some possibility of its contamination with data, pertaining to males

சொந்தமாக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் திரட்டும்போது, பாலினக் குறியீட்டில் மற்றவர்கள்” – அதாவது மூன்றாம் பாலினத்தவர் குறித்த விவரம் முதல் முறையாகத் திரட்டப்பட்டது, ஆனால் அது மிகவும் சிரமமாக இருந்தது. கடந்த காலத்தில், இந்த்த் தகவல் ஆண் என்ற பிரிவில் திரட்டப்பட்டது. எனவே, ஆண்கள் என்ற பிரிவில் திரட்டப்பட்ட தரவுகளில் (மூன்றாம் பாலினத்தவரும் சேர்ந்து கொண்டதால்) பிழைகள் இருக்கலாம்”.

அதாவது, மூன்றாம் பாலினத்தவர் சொந்த நிறுவனங்களை நடத்தி வந்தாலும்கூட, அவர்கள் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

காரணம் என்னவாக இருக்கும்? கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.


மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புதிய சில நடவடிக்கைள் எடுக்கப்பட்ட பிறகும், சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் கஸ்தூரி போன்ற முட்டாள் ஜென்மங்கள் இப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தம்மை மூன்றாம் பாலினத்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா என்ன?

Thursday, 5 July 2018

ஸ்டூவர்ட்புரமும் சில சினிமாக்களும்


2016 ஜூன் மாதம் சென்னையிலிருந்து தில்லிக்குத் திரும்பி வரும்போது ஸ்டூவர்ட்புரம் ரயில் நிலையம் கண்ணில் பட்டது. இந்த ஊரைப் பற்றி ஏதோ எப்போதோ கேள்விப்பட்டதாக மனதுக்குள் மணியடித்தது. ஆனால் அது என்ன என்பது மட்டும் நினைவு வரவில்லை. எதற்கும் படம் பிடித்து வைத்துக்கொள்வோம், பிற்பாடு நினைவூட்ட உதவியாக இருக்கும் என்று செல்போனில் பதிந்து கொண்டேன். பிறகு இணையத்தில் துழாவினேன்.


ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன் என்ற தலைப்பில் தெலுங்கில் ஆக்‌ஷன் திரைப்படம் 1991இல் வந்திருக்கிறது. (யூடியூபில் பார்க்கலாம்) சிரஞ்சீவி, விஜயசாந்தி நடித்தது. ஸ்டூவர்ட்புரம் திருடர்களுக்காகப் புகழ் பெற்ற ஊர். தன் தந்தையும் ஒரு காலத்தில் திருடனாக இருந்த ஸ்டூவர்ட்புரத்துக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர் ராணா பிரதாப் (சிரஞ்சீவி). திருடர்களைத் திருத்துவதுதான் அவருடைய முக்கிய நோக்கம். மற்றொரு நோக்கம், செய்யாத திருட்டுக்காக தன் தந்தையின் மீது பழி விழுந்து பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ராணா பிரதாப் உண்மைக் குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார். அந்த வில்லன் சரத் குமார். டைரக்டர் எண்டமூரி வீரேந்திரநாத்! எனக்குத் திமிர்... சிரஞ்சீவியைப் போட்டாலே ஓடிடும்னு நினைச்சேன். ஓம்புரி இடத்துல சிரஞ்சீவி எல்லாம் ஈடுகொடுக்க முடியுமா? படம் ஊத்திக்கிச்சுஎன்று பேட்டி கொடுத்திருக்கிறார் அதே எண்டமூரி! (இந்தப் படம் அர்த் சத்யா இந்திப் படத்தின் ரீமேக் என்கின்றன வலைதளங்கள்.)

சரி அது கிடக்கட்டும். நமக்கும் சினிமாவுக்கும் வெகு தூரம். இலக்கியத்தையும் சினிமாவையும் ஒருசேர அலசும் சுரேஷ் கண்ணன், எண்டமூரி இயக்கிய இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருக்க வேண்டாமோ? கன்னடப் படங்களைப் பற்றி எல்லாம் எழுதும் கருந்தேள் ராஜேஷாவது எழுதியிருக்கலாம். போகட்டும்.

உண்மையாகவே இருக்கும் ஓர் ஊர் திருடர்களைக் கொண்டது, திருட்டுக்காகப் புகழ் பெற்றது என்று அந்த ஊரின் பெயரையே வைத்து திரைப்படம் எடுத்தால் அடிக்க வர மாட்டார்களா? இந்தப் படத்தின் விஷயத்தில் வரவில்லை. ஏனென்றால், உண்மையிலேயே ஸ்டூவர்ட்புரம் ஒரு காலத்தில் திருடர்களால் நிறைந்திருந்தது. அது எப்படி சாத்தியம் என்றால், வரலாற்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

குற்றப்பரம்பரை என்ற சொல் நினைவிருக்கிறதா? குற்றப் பரம்பரை திரைப்பட விஷயத்தில் பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் மோதல் என்ற செய்திகளை ஒதுக்கி விடுங்கள். நான் சொல்வது, அந்தச் சொல்லின் பின்னணியை, வரலாற்றை.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், 1871இல் குற்றப்பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இச்சட்டம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மொத்தமாக குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தும் - அவர்களில் பலர் குற்றமே செய்யாதவராக இருந்தாலும், பிறவியாலேயே குற்றவாளிகள் என்று சொன்னது அச்சட்டம். எந்த ஒரு சாதியையும் குற்றப்பரம்பரை என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. அவ்வாறு முத்திரை குத்தப்பட்ட சமூகத்தின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். கூப்பிட்ட நேரத்தில் காவல் நிலையத்துக்கு வர வேண்டும். இரவில் ஆண்கள் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும் விதி விலக்கு கிடையாது. பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் கள்ளர்கள் இந்தச்சட்டத்தின்கீழ் ஒடுக்கப்பட்டார்கள். மதுரை பகுதியையே மையமாகக் கொண்டவர்களாக இருந்தாலும் கள்ளர்களின் கைத்திறன் கோவை வரை விரிந்திருந்தது. மாடுகள் திருடுபோவதும், குறிப்பிட்ட ஆள் மூலமாக கப்பம் செலுத்தினால் திரும்பக் கிடைத்ததுமான சம்பவங்களை எங்கள் கிராமத்தில் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியையே குற்றப்பரம்பரை என்ற பெயரில் ஒடுக்குவதற்கு எதிராக பெரியார் உள்பட பல கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். கிரிமினல் டிரைப்ஸ் ஆக்டிலிருந்து கள்ளர்கள் விடுவிக்கப்பட்டு, சீர் மரபினர் - டீநோடிஃபைட் டிரைப்ஸ் என மாற்றப்பட்டனர். கள்ளர் சீர்திருத்த நடவடிக்கைகள் பலவும் எடுக்கப்பட்டன. இதைப்பற்றி மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் இணையத்தில் படித்து அறியலாம்.

வேட்டையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை குற்றப் பரம்பரை என்று முத்திரை குத்தி, அவர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தியது பிரிட்டிஷ் அரசு. அதுதான் ஸ்டூவர்ட்புரம். வாழ்வாதாரம் இல்லாமல் போன அவர்கள் குற்றச் செயல்களையே தமது தொழிலாக மாற்றிக்கொண்டனர். திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்பட எல்லா வழிகளிலும் புகழ் பெற்றதாக மாறியது ஸ்டூவர்ட்புரம். (2012இல் ஒரு செய்தியின்படி, போக்கிரி அருண்குமார் என்பவர் 1000 கோடிக்கு மேல்சொத்து சேர்த்திருப்பதாக ஒருவர் எழுதியிருக்கிறார்!) எங்கே குற்றம் நடந்தாலும், காவல்துறை இந்த ஊருக்கு வந்துவிடும்.

இப்படிப்பட்ட ஊரைத் திருத்த வருகிறார் ஒருவர். அவர் பெயர் ஹேமலதா. சாதியம், தீண்டாமை ஆகியவற்றை எதிர்த்த போராளி, சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நாத்திகர். அவருடைய கணவர் பெயர் லாவணம். ஹேமலதாவின் பரம்பரையே நாத்திகர்கள், சாதியக் கொடுமைக்கு எதிராக இயங்கியவர்கள். விஜயவாடாவில் நாத்திகர் மையம் நிறுவியவர் இவருடைய மாமனார் கோபராஜு ராமசந்திர ராவ்.

ஹேமலதா, ஆந்திரத்தில் ஸம்ஸ்கார் என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். சமூகநீதி, மனித உரிமைகள், மனிதாபிமான உதவி, சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்றுகிறார்.

சம்பல் கொள்ளைக்காரர்களைத் திருத்த வினோபா பாவே மேற்கொண்ட முயற்சியால் உந்தப்பட்டு, ஹேமலதா-லாவணம் தம்பதி ஸ்டூவர்ட்புரத்தின் திருடர்களைத் திருத்த முன்வருகின்றனர். பல்லாண்டுகால முயற்சிகளுக்குப் பிறகு அதில் வெற்றியும் பெற்றனர். குற்றப்பரம்பரை காலனிகள் என்பதை மாற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்து, அரசை கைவிடச் செய்கின்றனர். முதல்வர் என்.டி. ராமராவ் மூலமாக குற்றத் தொழிலில் இருந்தவர்களுக்கு மாற்றுத் தொழில்களுக்கு வழி செய்கின்றனர். ஆந்திரத்தில் தேவதாசி (ஜோகினி / யோகினி) முறைக்கு முடிவு கொண்டு வந்தவரும் இவர்தான். இவருடைய முயற்சிகளுக்கு ஆந்திர மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்கியது என்பது சிறப்பு. (இவர்களுடைய சேவையைப் பற்றிய  வீடியோவை இந்த இணைப்பில் கிளிக் செய்து பார்க்கலாம்)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹேமலதா, 2008இல் மறைகிறார். ஸ்டூவர்ட்புரமே சோகத்தில் ஆழ்ந்தது என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி.

*
உண்மையில் ஸ்டூவர்ட்புரத்தின் பெயர் பெத்தபுடி. இந்தப் பகுதியின் எருகுல சமூக பழங்குடி மக்கள் உப்பு, தானியங்கள் போன்ற பொருட்களை கழுதையின்மீது ஏற்றிக்கொண்டு, சென்னை மாகாணத்தில் ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து வந்தார்கள். பிரிட்டிஷார் 1850களில் ரயில் பாதைகளைப் போட்ட பிறகு இவர்களுடைய தொழில் முடங்கிப் போனது.

இதைத் தவிர, வனங்களில் சேகரித்த பொருட்களைக் கொண்டு கூடைகள், பாய்கள் போன்ற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் காடுகள்-மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை பழங்குடிகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது. இரண்டு வழிகளிலும் வாழ்வாதாரம் சிதைந்து விட்டதால் அவ்வப்போது திருட்டுத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

ஊர் ஊராகச் சென்று தொழில் செய்யும் நாடோடிகள் மீது பொதுவாகவே மக்களுக்கு இருக்கும் சந்தேகமும் முன்முடிபுகளும் சேர்ந்து மொத்த சமூகத்தையும் திருட்டு சமூகம் என முத்திரை குத்தி விட்டது.

சால்வேஷன் ஆர்மி என்பது ஆங்கிலேயர்களின் ஒரு கருவியாக செயல்பட்டு வந்த கிறித்துவ அமைப்பு. புரொட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த கட்டுப்பாடு மிக்க தன்னார்வ நிறுவனமாக இப்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பிரடெரிக் பூத் டுக்கர் என்பவர் Criminocurology; or The Indian Criminal என்ற நூலை எழுதினார். இதில் இவர்களை எப்படித் திருத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படி முன்வைக்கப்பட்ட முத்திரை 21ஆம் நூற்றாண்டின் இன்றுவரையிலும் எருகுல சமூகத்தினரை வாட்டி வருகிறது.

குற்றப் பரம்பரையைத் திருத்த, அங்கங்கே குடியிருப்புகளை அமைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த்து. திருத்தக் காலனிகளை அமைக்கும் பொறுப்பை சால்வேஷன் ஆர்மிக்கு அளித்தது. முதல் காலனி விஜயவாடா அருகே அமைக்கப்பட்டது. இரண்டாவது காலனி குன்டூர் அருகே அமைந்தது. அப்போதைய சென்னை மாகாண அமைச்சராக இருந்த ஹெரால்ட் ஸ்டூவர்ட் என்பவர் இதற்கான ஆணையிட்டதால், அவர் பெயரால் அமைக்கப்பட்டது ஸ்டூவர்ட்புரம். (எம்ஜிஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படம் நினைவு வரக்கூடும்.)

சுதந்திர மனிதர்களாக தொழில் செய்து வந்தவர்கள், அந்தப் பகுதியின் வயல்கள்-தோட்டங்களில் கூலிகளாக மாறினார்கள். குறைந்த கூலியில் ஆட்கள் கிடைப்பது அந்தப் பகுதியின் நிலச்சுவான்தார்களுக்கும் வசதியாகப்போனது. மக்கள் தொகை பெருகப்பெருக, பக்கத்துத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களாகவும் மாறினார்கள். இப்போதைய எருகுல சமூகத்தினருக்கு தமது பழங்குடிப் பாரம்பரியமே மறந்து போயிருக்கும்.
 *

ஸ்டூவர்ட்புரத்தின் திருடர்களில் பிரபலமானவர் டைகர் நாகேஸ்வர ராவ். போலீசுக்கு டிமிக்கி கொடுப்பதில் வல்லவர் என்பதால், சென்னை சிறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரால் டைகர் பட்டம் பெற்றார். டைகரின் தம்பி பிரபாகர ராவ் பங்கனப்பள்ளி வங்கி கொள்ளையில் புகழ் பெற்றவர். ஒரு காவல் நிலையத்துக்கு எதிரிலேயே இருந்த ஒரு வங்கியிலிருந்து இரவில் கொள்ளையடித்து 15 கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றவர்கள் இவருடைய குழுவினர். பிறகு, லாவணம் குழுவின் மூலம் போலீசிடம் சரணடைந்தனர். டைகர், 1987இல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர். 27 வயதில் சுட்டுக்கொல்லப்பட்ட அவரது இறுதிச் சடங்குக்கு அந்தக் காலத்திலேயே 20,000 பேர் திரண்டார்களாம். டைகர் நாகேஸ்வர ராவ் வாழ்க்கையும் திரைப்படம் ஆகிறது. வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது திரைப்படம்.