Saturday, 29 November 2014

மகளிர் நலனுக்காக 10 திட்டங்கள்



விடுதலைக்குப் பிந்தைய அறுபது ஆண்டுகளில் எத்தனையோ நலத்திட்டங்கள் வந்து விட்டன. மேலை நாகரிகம் அமோகமாகப் பரவியாயிற்று. சுகாதாரம், சுற்றுச்சூழல் என்று எத்தனையோ புதிய புதிய விஷயங்கள் அறிமுகமாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பொது இடங்களில் மகளிருக்கு பொதுக் கழிப்பறைகள் இல்லாத நிலைமையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. ஆண்களுக்கும் சில நேரங்களில் பிரச்சினை இருக்கிறது என்றாலும் அவர்கள் சாலையோரம் எங்கு வேண்டுமானாலும் தம் அவஸ்தையைத் தீர்த்துக்கொள்ள முடிகிறது. பெண்கள் நிலைதான் பரிதாபம். 
 
Photo courtesy: Live Mint
கழிப்பறைகள் இல்லாததே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கும்கூடக் காரணமாக இருக்கிறது. தில்லியில் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு கணக்கே கிடையாது. செய்தித்தாள்களில் தினமும் குறைந்தது மூன்று சம்பவங்களாவது இடம் பெறுகின்றன. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் புதிய திட்டம் பற்றி அறிய நேர்ந்த்து. அக்கட்சியின் வலைதளத்தில் இருந்த பதிவின் மொழியாக்கம் இது.

*

ஆம் ஆத்மி கட்சி துவக்கிய டெல்லி டயலாக் திட்டத்தின்படி ஏற்கெனவே இளைஞர்களுக்கான திட்டங்கள் குறித்து மக்களுடன் உரையாடல் நடைபெற்றது. அடுத்ததாக, மகளிர் பிரச்சினைகள் குறித்து உரையாடும் மக்கள் சந்திப்பு 26 நவம்பர் அன்று - ஆம் ஆத்மி கட்சி நிறுவப்பட்ட நாள் - அன்று நடைபெற்றது.

தல்கதோரா திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற கூட்டம், மகளிர் பாதுகாப்பு, மகளிர் உரிமைகள், மகளிருக்கு அதிகாரம், மகளிர் கண்ணியம் காத்தல் ஆகியவற்றுக்கான அறைகூவலுடன் முடிவடைந்த்து.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும் மகளிர் நலனுக்காக கீழ்க்கண்ட 10 திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கட்சித் தலைவரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்:
1. தில்லியில் இருளடைந்த பகுதிகள் இருக்காது. நகரின் எல்லாத் தெருக்களிலும் நடைபாதைகளிலும் விளக்குகள் பொருத்தப்படும்.
2. பேருந்துகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளில் குற்றச் செயல்கள் தடுக்கப்படும்.
3. ஒவ்வொரு பேருந்திலும் சிறப்புக் காவலர்கள் இருப்பார்கள். பெண்களை சீண்டுதல், கிண்டலடித்தல், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கப்படும்.
4. கிராமீன் சேவா மினி வேன்கள், பகிர் ஆட்டோக்கள், மின் ரிக்‌ஷாக்கள் போன்ற சிறுரக வாகனங்கள் வாயிலாக நகரின் எந்த மூலைக்கும் போக்குவரத்து வசதி அளிக்கப்படும். குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே அவை இயங்குமாறு செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.
5. மகளிர் கழிப்பறை இல்லாதது மகளிர் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, மகளிருக்காக இரண்டு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்படும். இவற்றில் 50,000 கழிப்பறைகள் பொதுமக்கள் புழங்கும் பகுதிகளிலும், ஒன்றரை லட்சம் கழிப்பறைகள் சேரிப்பகுதிகளிலும் அமைக்கப்படும்.
6. மகளிருக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 47 விரைவு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்.
7. புதுதில்லி ஹோம் கார்டு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி, 12,000 பேரைக் கொண்ட மகளிர் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும்.
8. மொபைல் தொலைபேசிகள் அனைத்துக்கும் பாதுகாப்புப் பொத்தான் வசதி வழங்கப்படும். அவசர காலத்தில் எவரும் எங்கிருந்தும் வை-ஃபை வாயிலாக தில்லி போலீஸைத் தொடர்பு கொள்ள இயலும்.
9. சேரிப்பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமையும் விஷயத்தில் மகளிர் கருத்துக் கூறும் உரிமை தரப்படும்.
10. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், அன்றாடக் கூலிகள் போன்றவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்க கவனம் செலுத்தப்படும். தில்லியின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுகாதாரம், உடல் நலம், கல்வி வசதிகள் மேம்படுத்தப்படும்.
 
Photo Courtesy: The Hindu
கேஜ்ரிவால் இந்தத் திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் பெண் டிஜிபி-யும், ஹரித்வார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவருமான திருமதி கன்ச்சன் சௌத்ரி உணர்ச்சி மிகு உரையாற்றினார். ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் துணைத்தலைவர் மனிஷா லாத் குப்தா, கிரீன்பீஸ் இயக்கத்தின் தலைவர் லலிதா ராமதாஸ், ஆகியோரும் உரையாற்றினர். ஆப் கட்சித் தலைவரும், நடிகையுமான குல் பனாக், கட்சியின் பேச்சாளர் அதிஷி மர்லேனா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

ஸ்காட்லாந்தின் ராயல் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரியும், தென் மும்பை தொகுயில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும் இருந்த மீரா சன்யால், கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி பந்தனா குமாரி ஆகியோர் கட்சியில் மகளிர் பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினர். பிரசாந்த் பூஷண், மனீஷ் சிஸோடியா, சஞ்சய் சிங் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் பிரிவின் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

டெல்லி டயலாக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆஷிஷ் கைதான், ஆதர்ஷ் சாஸ்திரி இருவரும் இத்திட்டத்துக்கான கருத்துகள் பற்றிய கலந்துரையாடல்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்று விளக்கினர். இதற்காக தில்லி முழுவதும் பல்வேறு வார்டுகளில் 300க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன என்றும் விளக்கினர்.

டெல்லி டயலாக்கின் அடுத்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

*

இந்தப் பிரச்சினைகள் குறித்து இதுவரை வேறெந்தக் கட்சியும் இப்படிப்பட்ட சிந்தனைகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை. பங்கேற்றவர்களும் பாருங்களேன் - சர்வதேச அளவில் பெரிய பதவிகளை வகித்தவர்கள். வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கியிருக்கிறார்கள்.

நமக்குத்தான் வாய்ச்சவடால் வீரர்களைப் போற்றியே பழகிப் போய்விட்டதே. அதிலிருந்து வெளிவர முடியாததால்தான் ஏதேதோ விமர்சனம் செய்து, இருக்கிற நல்ல கட்சிகளையும் அழிக்க முனைந்து கொண்டிருக்கிறோம்.

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது மட்டுமே பாரதிய ஜனதா அரசின் மோசமான போக்குக்கு முட்டுக்கட்டையாக இருக்க முடியும்.

Tuesday, 25 November 2014

‘கறுப்புப் பணம்’ என்றால் என்ன?



சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தைக் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மோடி அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
 
பேராசிரியர் அருண் குமார்
வெளிநாடுகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன, குறிப்பாக தேர்தல் நேரங்களில் நிறையவே ஊகங்கள் பரவும். ‘கறுப்புப் பணம் என்றால் என்ன? அதை எவ்வாறு திரும்பப் பெறுவது? தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அருண் குமார் கறுப்புப் பொருளாதாரத் துறை வல்லுநர். அவருடன் உரையாடுகிறார் சுபோத் வர்மா.

கறுப்புப் பணம் என்பதை எப்படி வரையறை செய்யலாம்?
சரியாகச் சொல்வதானால், கறுப்புப் பொருளாதாரம் எனும் பிரம்மாண்டத்தின் சிறியதோர் அங்கம்தான் கறுப்புப் பணம். சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பெறப்பட்ட, கணக்கில் காட்டப்படாத வருமானங்களும், அந்த வருமானத்தை நுகர்வுக்காக அல்லது முதலீட்டுக்காகப் பயன்படுத்துவதும் கறுப்புப் பொருளாதாரம் ஆகும். இந்தப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி பணம் என்ற வடிவில் இருக்கும்போது அது கறுப்புப் பணம் என அழைக்கப்படுகிறது. 

லஞ்சம் ஊழல் போன்ற சட்டவிரோத வழிகளில் திரட்டப்பட்டதுதான் கறுப்புப் பணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், இது கறுப்புப் பணத்தின் ஒரு சிறிய பகுதிதான். ஒரு தனிப்பயிற்சி ஆசிரியரோ, ஒரு மருத்துவரோ பணம் சம்பாதித்தால் அது சட்டவிரோதம் அல்ல. ஆனால், அந்தப் பணத்தை தன் வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என்றால் அது கறுப்புப் பணம் ஆகிறது. இது பொதுச் சமூக அளவில் காணப்படும் முறையாகும். ஒரு சர்க்கரை ஆலை முதலாளி, வாங்குகிற கரும்பு, அல்லது சாறு, அல்லது சர்க்கரையின் கணக்கை எடை குறைத்துக் காட்டுகிறார், குறைந்த உற்பத்தி செய்ததாகக் காட்டுவதற்காக எக்சைஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் கொள்முதல், உற்பத்தி மற்றும் விற்பனை என ஒவ்வொரு கட்டத்திலும் கணக்கில் வராத வருமானம் அவருக்குக் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பொருளாதாரத்தின் அளவு என்ன, அதில் எவ்வளவு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது?
இந்தியப் பொருளாதாரத்தில் 50%க்கும் அதிகம் கறுப்புப் பொருளாதாரம் என்பது என் மதிப்பீடு. இதில் பாதி நுகர்வில் செல்கிறது, மீதிப் பாதி சேமிப்பில் இருக்கிறது. இந்தச் சேமிப்பில் சுமார் 20% நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. அதாவது, மொத்த கறுப்புப் பொருளாதாரத்தில் 10% வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று கூறலாம். இதில் ஒரு பகுதி அங்கேயே (ஆடம்பரப் படகுவீடுகள், பங்களாக்கள் அல்லது சுற்றுலா செல்வது போன்றவற்றில்) செலவும் செய்யப்படுகிறது. இன்னொரு பகுதி இந்தியாவுக்கே திரும்பிக் கொண்டுவரப்படுகிறது – அது ஹவாலா மூலமாகவோ, மொரீஷியஸ் போன்ற சிறிய நாடுகளின் வழியாகவோ இருக்கலாம். இவ்வாறு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பணம் முழுவதும் மீண்டும் இந்தியாவில் திரும்ப முதலீடு செய்யப்படுமானால், அதன் தொகை சுமார் $2 டிரில்லியன் (சுமார் 120 லட்சம் கோடி ரூபாய்) இருக்கலாம். அவ்வளவும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது.  

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எப்படி மீட்பது?
முதலாவதாக, கறுப்புப்பணம் வெளிநாட்டில் உள்ளது, அதை மீட்க வேண்டும் என்பதே ஒரு திசைதிருப்பல்தான். கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி இங்கே, இந்தியாவிலேயே, உள்நாட்டிலேயே இருக்கிறது!  வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர் அடிமுட்டாளாக இருந்தாலொழிய, அங்கிருந்து கொண்டு வருவது அசாத்தியம். இன்னொன்றும் சொல்ல வேண்டும் – வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எல்லாரும் கிரிமினல்கள் அல்ல. கணக்குக் காட்டாத, வரி செலுத்தப்படாத பணமாக இருந்தால் அதைக் கண்டுபிடிப்பதும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம்தான். ஆனால், இரண்டு நாடுகளுக்கு இடையே இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் எந்த ஒப்பந்தம் போட்டாலும் சரி, கணக்கு வைத்திருப்பவர்களின் உண்மை விவரங்கள் கிடைத்து விடாது. கறுப்புப் பணம், போலி நிறுவனங்கள் வாயிலாக பல படிநிலைகளைத் தாண்டித்தான் ஏமாற்று வழியில் வெளியே கொண்டு செல்லப்படுகிறது. ஸ்விஸ் வங்கியிடம் கேட்டால், தம்மிடம் உள்ள சில பெயர்களை அவர்கள் தரக்கூடும், ஆனால் இவர்கள் மட்டுமே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்று ஆகாது. உண்மையில் பதுக்கி வைத்திருப்பவர்களைப் பிடிக்க இங்கே செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு. ஸ்விட்சர்லாந்தில் யுபிஎஸ்-இல் பணம் பதுக்கி வைத்த தனது குடிமக்கள் விவகாரத்தில் அமெரிக்கா அதைத்தான் செய்தது. அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடுக்கப்பட்டது, அதை ஸ்விஸ் அரசுக்குக் கொடுத்தது. இந்தியாவும் அதேபோலச் செய்தாக வேண்டும். 

அல்லது, லிக்டென்ஸ்டெயின் வங்கியில் யாரோ கணக்கு விவரங்களைத் திருடி வெளியிட்டதுபோல யாராவது திருடி வெளியிடமாட்டார்களா என்று காத்திருக்க வேண்டியதுதான்!

கறுப்புப் பணத்தைத் துரத்துவதில் தற்போதைய அரசு முனைப்பாக இருப்பது போலத் தெரிகிறது. இது பலன் தருமா?
1948 முதல் இன்று வரை சுமார் 40 கமிட்டிகளும் கமிஷன்களும் இதற்காக அமைக்கப்பட்டு விட்டன. ரெய்டுகள் நடத்தப்பட்டன, பொதுமன்னிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பயன் என்னவோ பூஜ்யம்தான். உச்சநீதிமன்றத்தின் நிர்ப்பந்தத்தால் அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகம் பயன் தராது என்பதே என் கருத்து. ஏனென்றால், நடப்பில் உள்ள வழக்குகளை, தன்னிடம் தரப்பட்ட விவரங்களை மட்டுமே அது பரிசீலிக்கப்போகிறது.

இந்த நாட்டை பல்வேறு சுயநல சக்திகள்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன – வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசின் அதிகார வர்க்கம் ஆகியவை அவை. இந்த மூன்றுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை ராடியா டேப் விவகாரம் அப்பட்டமாகக் காட்டி விட்டது. இந்தக் கூட்டணிதான் கறுப்புப் பணத்தின் உண்மைப் பயனாளி. எனவே, கறுப்புப் பணப் பிரச்சினையைத் தீர்க்க இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும் அரசியல் உறுதி இருக்கவில்லை, இப்போதைய அரசுக்கும் அந்த அரசியல் உறுதி இருக்கும் என்று நான் எண்ணவில்லை. அப்படிச் செய்ய வேண்டுமானால், ஹவாலா ஆபரேட்டர்கள் மீதும், சட்டவிரோதமான பணப் புழக்கத்தில் ஈடுபட்டிருப்போர் மீதும் மோடி ரெய்டு நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! தீவிரமான மக்கள் இயக்கம் மட்டுமே கறுப்புப் பொருளாதாரத்தின்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியாளர்கள் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். 

வரிகள் குறைக்கப்பட்டால் கறுப்புப் பொருளாதாரம் குறையுமா?
நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா...? சிவப்பு விளக்கு இல்லை என்றால், சிவப்பு விளக்கை மீறிய குற்றத்துக்காக தண்டனை இருக்காது அல்லவா என்று கேட்பது போல இருக்கிறது! ஒருவிஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். ஜிடிபி-நேரடி வரி இந்த இரண்டுக்குமான விகிதத்தில் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவான வரிவிகிதம் இருக்கிறது. நமது வரி-ஜிடிபி விகிதம் உயர்ந்து விட்டது என்று ப. சிதம்பரம் கூறுவதுண்டு. கார்ப்பரேட் லாபங்கள் படுபயங்கரமாக அதிகரித்ததன் விளைவுதான் அது. இந்திய மக்களில் உச்சத்தில் இருக்கும் 0.1% பேரின் வருமானம், கீழே இருக்கும் 55% மக்களின் மொத்த வருமானத்தைவிட அதிகம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எளிமையாகச் சொன்னால், பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 12 லட்சம் பேரின் மொத்த வருவாய், ஏழைகளாக இருக்கும் 66 கோடி மக்களின் வருவாயைவிட அதிகம் ! வர்த்தகக் கட்டுப்பாடுகள் நீக்கமும் வரிகளில் சலுகையும்தான் இதன் காரணம். ஆனாலும் கறுப்புப் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

Monday, 24 November 2014

கறுப்புப்பண மர்மங்கள்

கறுப்புப் பணக் கூச்சல் அடங்கி விட்டது. சவடால்களுக்கு இனி தேவையில்லை. வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றிகள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், அடுத்து வர இருக்கும் ஒபாமா வருகை என விஷயம் திசை மாறிப்போகும்.

உண்மையில் கறுப்புப் பண விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை அலசுகிறது ஆம் ஆத்மி கட்சியின் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட இந்தப் பதிவு.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் பட்டியல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இந்திய அரசுக்குக் கிடைத்தது. முன்னர் ஆட்சி செய்த காங்கிரசும் அரசும் சரி, இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜக அரசும் சரி, பட்டியலில் உள்ள எல்லாப் பெயர்களையும் வெளியிட மறுத்து வருகின்றன.

அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் இருவரும் 2012 நவம்பர் 9ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கீழ்க்கண்ட பெயர்களும் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
முகேஷ் திருபாய் அம்பானி
அனில் திருபாய் அம்பானி
மோடெக் சாஃப்ட்வேர் பி. லிட் (ரிலையன்ஸ் குழும நிறுவனம்)
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிட்
சந்தீப் டாண்டன்
அனு டாண்டன்
கோகிலா திருபாய் அம்பானி
நரேஷ் குமார் கோயல்
பர்மன் (குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்)
யஷோவர்தன் பிர்லா

அண்மையில் பாஜக அரசின் நிதியமைச்சர் மூன்று பெயர்களை வெளியிட்டார் அல்லவா... அவற்றில் ஒன்று மேலே குறிப்பிட்ட பிரதீப் பர்மன். ஆக, ஆம் ஆத்மி கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பட்டியலில் இருந்த பெயர்தான் இது. எனவே, ஆப் கட்சி சொன்னது உண்மை என்பது உறுதியாகிறது. அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ள பெயர்களும் பட்டியலில் உண்டா இல்லையா என்று பாஜக அரசு கூறவே இல்லை.

இந்தப் பட்டியலில் உள்ள சிலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பர்மீந்தர் சிங் கால்ரா, விக்ரம் திரானி, பிரவீன் சஹானி ஆகிய மூன்று பேர் அளித்த வாக்குமூலத்தை 2012 நவம்பர் 9ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மூன்று பேரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். விந்தையிலும் விந்தை என்னவென்றால், நிதியமைச்சர் அண்மையில் அறிவித்த மூன்று பெயர்களில் இந்த மூன்று பெயர்களும் இல்லை. அது ஏன்?

பட்டியலில் உள்ள சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இதிலிருந்து தெரிய வந்துள்ளது. சிலர் மீது வீடுபுகுந்து அதிரடி சோதனை, விசாரணை என கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் செல்வாக்குள்ள வேறு சிலர் மீது எந்த நடவடிக்கையும் காணோம். மூன்றுபேரின் பெயர்களை மட்டும் மத்திய அரசு வெளியிட்டதன் மர்மம் என்ன? பட்டியலில் உள்ள மற்றவர்கள் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமானவர்களும் உண்டு என்பதாலா?


தவிர, மேற்கண்ட மூன்றுபேரும் அளித்த வாக்குமூலத்தில், வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை உள்நாட்டிலேயே எப்படித் துவக்க முடியும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர். ஹவாலா மூலமாகத்தான் பரிமாற்றம் நடைபெற்றது என்பதையும், எச்எஸ்பிசி வங்கி எவ்வாறு இந்த வங்கிக் கணக்குகளை இயக்குகிறது என்பதையும் கூறினர். (இணைத்துள்ள படங்களைக் காணவும். ஒருவர் வெளிநாட்டுக்கே போகாமல் வங்கிக் கணக்கைத் துவக்கியதாகக் கூறியுள்ளார். மற்றொருவர், தொலைபேசி வழியாகச் சொன்னால் போதும், பணம் ஹவாலா வழியில் இங்கே வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.) ஆனால், இத்தனை பிரச்சினைக்குரிய எச்எஸ்பிசி வங்கிமீது அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஆக, கறுப்புப்பண விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. அனைவரின் மீதும் ஒரேமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, சிலர் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, உண்மையில் கறுப்புப்பண விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவர்மீதும் ஒரேமாதிரியான நடவடிக்கை எடுக்கப்படாது, அரசியல் காரணங்களுக்கு ஏற்பட நடவடிக்கைகள் மாறும், அருண் ஜெட்லி நாளுக்கொரு விதமாக பல்டி அடித்ததன் பின்னணி இதுதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


கறுப்புப்பண விவகாரத்தில் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட வங்கியின்மீதும் அதன் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுத்தால் பாஜகவுக்கு நெருக்கமாக உள்ளவர்களும் மாட்டிக் கொள்வார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும்.

சிறப்புப் புலனாய்வுக் குழு அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியில், உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சுதந்திரமாக இயங்கினால்தான் உண்மைகள் வெளிவரும்.
*
கறுப்புப் பணம் என்றால் என்ன... அடுத்த பதிவு விரைவில்.

Saturday, 22 November 2014

நம்பிக்கை மனுஷிகள்



இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் தில்லி வந்தபோது அறிமுகம் கிடைத்தது. அதன் பின் அவருடைய வலைப்பக்கத்துக்கு அடிக்கடி போவதுண்டு. அதில் ஒரு பதிவின்மூலம்தான் சேலத்தில் இருக்கும் தனிச்சிறப்பான இரண்டு பெண்கள் குறித்து தெரிய வந்தது. இருவருமே தீவிர வாசகர்கள் என்றும் அறிமுகம் செய்திருந்தார் எஸ்.ரா.

அதற்குப் பிறகு அவ்வப்போது இணையத்தில் அவர்களைப் பற்றிய செய்திகளை அங்கங்கே பார்ப்பதுண்டு, வியப்பதும் உண்டு, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. ஆனால், மாறி மாறி ஏதேனும் வேண்டுகோள்கள் வந்து கொண்டே இருந்ததால், இந்த விஷயம் பின்தங்கிப்போனது. கடந்த மாதம் பேஸ்புக் நண்பர் ஒருவர் இன்பாக்சில் வந்து இவர்களைப் பற்றி ஒரு பதிவு எழுதுமாறு கேட்டார். பதிவுக்காக சற்றே விரிவாக அலசினேன்.

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி – இவர்கள்தான் அந்த இரண்டு பேர். மஸ்குலர் டிஸ்டிராஃபி (muscular dystrophy) என்கிற தசைச் சிதைவு நோய்க்கு ஆளானவர்கள். அதிகம் அறியப்படாத நோய் என்பதால், இணையத்தில் விவரங்களைத் தேடினேன்.
 
இயல் இசை வல்லபி                      வானவன் மாதேவி
தசைவளக் கேட்டினால் எலும்புகளும் சிதையும் நோய் இது. எலும்புகளை ஒட்டியிருக்கிற தசைகள் பலவீனம் அடைவதும், தசைகளின் புரோட்டீன்கள் சிதைவதும், அதன் தொடர்ச்சியாக தசை அணுக்கள், திசுக்கள் உயிரிழப்பதும் நிகழ்கிறது. ஆரோக்கியமான உடலில் எப்போதும் திசுக்கள் இறப்பதும் பிறப்பதுமாக இருப்பதுபோலன்றி, இவர்களுக்கு புதிய திசுக்கள் உருவாவதில்லை. இதன் விளைவாக எலும்புகளும் சிதைவுறும். நடமாட முடியாதபடி செய்துவிடும். தொடர்ந்து நடமாடுவதும் முடியாது, தொடர்ந்து படுத்திருப்பதும் கூடாது. நோயை குணப்படுத்த சிகிச்சை கிடையாது. நோயின் விளைவுகளையும் பாதிப்புகளையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியம். பெரும்பாலும் ஆண் குழந்தைகள்தான் இந்நோய்க்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. நோய்க்கான காரணங்களில் மரபணுவும் ஒன்று.

வானவன் மாதேவிக்குத்தான் இந்த நோய் முதலில் தாக்கியிருக்கிறது. அவர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய தங்கை இயல் இசை வல்லபிக்கும் புரிகிறது தனக்கும் இதே நோய் வந்து கொண்டிருக்கிறது என்று.

ஆக, நோயிலிருந்து மீள முடியாது, சிகிச்சையும் கிடையாது என்கிறபோது எல்லாரும் செய்வது அல்லது நினைப்பது ஒன்றே ஒன்றுதான். இருக்கிற வரையில் மருத்துவமனை, மருந்து, சிகிச்சை என்று அலையாமல் அமைதியாக நிம்மதியாக வீட்டில் இருந்து கொள்வது. ஆனால் இந்த சகோதரிகள் விதிவிலக்கு.

ஆதவ் டிரஸ்ட் என்று ஓர் அறக்கட்டளை நிறுவி, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசியோதெரபி, யோகா, மாற்று மருத்துவம் போன்ற முறைகளால் சிகிச்சை தர முன்வந்தார்கள். இதற்காக நிலம் வாங்கத் திட்டமிட்டு நன்கொடை திரட்டினார்கள். (நான் எழுதிய பதிவின் வாயிலாகவும் பேஸ்புக் நண்பர்கள் சுமார் 35 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.)

இந்த அரிய சகோதரிகளைப் பற்றி குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார் பேஸ்புக் தோழி கீதா இளங்கோவன். மாதவிடாய் குறும்படத்தின் மூலம் புகழ் பெற்ற கீதாவின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இன்று – 22-11-2014 காலை 10 மணிக்கு இக்குறும்படம் பேஸ்புக் வாயிலாக வெளியிடப்பட்டது.


https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

இந்த சகோதரிகளின் மன உறுதி போற்றத்தக்கது. அதைவிட முக்கியமானது, இவர்கள் நோய் குறித்து அறிந்து வைத்திருக்கிற செய்திகள். இயற்கைச் சீர்கேட்டுக்குக் காரணமாக இருக்கிற கார்ப்பரேட்களிடம் நன்கொடை வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை இந்தக் குறும்படத்தின் மூலம் அறிந்தபோது இன்னும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை யாரும் உணர்வது சிரமம். நடக்கவே இயலாது, யாரேனும் தூக்கிச் செல்ல வேண்டும். தூக்கிச் செல்பவர்களும் இவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து, தசைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கவனமாகத் தூக்க வேண்டும். வெளி நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது கழிப்பறைக்குப் போக வேண்டும் என்றாலும் சோதனைதான். அதற்காகவே வெளியே போகும்போது தண்ணீர் குடிக்காமல் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற பிரச்சினைகளை இந்தக் குறும்படத்தில் கேட்கும்போதே மனம் கலங்குகிறது.

நான் பதிவு எழுதியதைத் தொடர்ந்து இருவரும் பேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இணைந்தார்கள். இப்போதுதான் இவர்களின் குரல்களை நேரில் கேட்டேன், வாழ்க்கையின் சிக்கலை காட்சியில் கண்டேன். நாங்களெல்லாம் காகிதப்புலிகள், நீங்க செயல் வீர்ர்கள். கண்ணுகளா... உங்க திட்டம் எல்லாம் நிறைவேறணும் என்று கண்கள் கசிய மனதுக்குள் வாழ்த்தினேன்.

நாங்க நினைச்சிருந்தா ஒரே இடத்துல முடங்கிப் போயிருக்க முடியும், ஆனா நாங்க அப்படி நினைக்கலே, நினைக்க விரும்பலே. இங்கே வாழ நமக்குக் கிடைச்ச பிறவியை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு நல்லது செய்யணும் என்று கூறும் இந்த சகோதரிகள் குறித்த நம்பிக்கை மனுஷிகள் குறும்படத்தை நீங்களும் பாருங்கள், பகிருங்கள், பரப்புங்கள்.

*

குறும்படத்தைப் பற்றி சில ஆலோசனைகள் –
1. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ குறைகிறதே என்று யோசித்தேன். அப்புறம்தான் புரிந்தது சப்டைட்டில் இல்லாதது. ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டியது அவசியம். ஆங்கிலத்தில் தலைப்பு என்னவாக இருக்கலாம் என்று யோசித்தேன். Two Souls with Full of Hopes.
2. 15 நிமிடங்கள் என்பது மிகக்குறைவு. நோய் குறித்து மருத்துவத் துறை வல்லுநர்களின் கருத்தையும் பதிவு செய்திருக்கலாம். இப்போது ஆதவ் டிரஸ்டில் தங்கியிருக்கும் 5 நோயாளிகளின் குடும்பத்தினரிடம் பேசி அவர்களின் கருத்தையும் பதிவு செய்யலாம். கீதா இளங்கோவனுக்கு இது பெரிய விஷயமில்லை.

*

ஆதவ் டிரஸ்ட்டுக்காக நிலம் வாங்கியாகி விட்டது. 50 பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வகையில் மருத்துவமனை கட்டுவது இவர்களது அடுத்த இலக்கு. இந்த இலக்கை அடைய உங்களால் இயன்ற உதவிகளையும் செய்யுங்கள்.  
Aadhav Trust, 489-B, Bank Staff Colony, Hasthampatty, Salem – 636007, Tamil Nadu, INDIA

வங்கி விவரம்
A/c Name : AADHAV TRUST
SB Ac No.: 1219101036462
Bank : CANARA BANK
Branch: Suramangalam
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005

போகும் வழியெலாம் அன்பை விதைப்போம்
எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்.