Wednesday, 21 March 2012

இலங்கைத் தீர்மானம் - இந்தியா தீர்மானம்???


இலங்கை விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்று விட்டனர். திமுக தலைவர் கருணாநிதி தீக்குளிக்கத் தேவையில்லாமல் போயிற்று. ஏதோ இலங்கைத் தமிழர் பிரச்சினையையே மன்மோகன் சிங் தீர்த்து விட்டது போன்று காட்சிப்படுத்த முயலும் காங்கிரசுக்கு இதே சூட்டில் கூடங்குளத்தையும் முடித்துக்கொண்ட சந்தோஷம்.
இலங்கையில் இதன் விளைவு எதிர்பார்த்தபடிதான் இருக்கிறது. இந்தியாவில் எப்படி நாங்கள் – அவர்கள் என்ற வாதம் ஊன்றப்பட்டு வருகிறதோ அதே போலத்தானே இருக்க முடியும் இலங்கையிலும்... இலங்கை அரசைப் பொறுத்தவரை, அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாருமே விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்தான். அதனால்தான் தினமும் கண்டனப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. இலங்கையில் உயிர்தப்பி வாழும் தமிழர்களுக்கு இன்னும் பெரிய சிக்கல்.
உண்மையில் அந்த்த் தீர்மானம் என்னதான் சொல்கிறது, இலங்கை அரசின்மீது என்னதான் கண்டனம் செய்கிறது? இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்பவர்களும் சரி, கூடாது என்பவர்களும்சரி, பெரும்பாலோர் இந்தத் தீர்மானம் என்ன என்று முழுமையாக அறியாமல்தான் கூறிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் என் புரிதல். கூடங்குளம் விவகாரத்தில் செய்தது போல.
ஐ.நா. தீர்மானம் என்றாலே ஏதோ பெரிய தீர்மானமாகத்தான் இருக்கும்போல...! இலங்கை  அரசின்மீது கடுமையன கண்டனம் இருக்கும்போல... அதனால்தான் அப்படியே நடுங்குகிறதுபோல...!! நாளைக்கு ராஜபக்சே கைது செய்யப்பட்டு போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவார் போல... !!!
இப்படி எதுவும் அத்தீர்மானத்தில் கிடையாது என்று தெரிந்தால் எப்படி இருக்கும்... அதற்காகத்தான் இந்தப் பதிவு. நான் இதை எழுதுவதற்கு முன் கடந்த வாரம் அ. மார்க்ஸ் அவர்களின் வலைப்பக்கத்தில் இதைப் பற்றிப் படித்தேன். ஒரே ஒரு வித்தியாசம். அப்போது பிரதமரின் அறிக்கை வந்திருக்கவில்லை.
மார்க்சின் வலைப்பதிவைப் படித்தவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் அளித்த பதிலின் உண்மைப் பொருள் புரிந்திருக்கும். "தீர்மானத்தின் இறுதி வரைவு இன்னும் கிடைக்கவில்லை, இந்தியா அந்த்த் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க விருப்பமாக உள்ளது" என்றுதான் கூறியிருக்கிறார் மன்மோகன் சிங். இந்தப் பதில் தெளிவாக இல்லை என்று ஜெயல்லிதா கூறட்டும், தெளிவாக இருக்கிறது என்று கருணாநிதி கூறிக்கொள்ளட்டும். முதலில் தீர்மானம் என்ன என்று பார்ப்போம்.
Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)
Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the
International Covenants on Human Rights, and other relevant instruments,
Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applicable,
Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,
Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances, demilitarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,
Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,
1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the LLRC report and take all necessary additional steps to fulfill its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans,
2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan as expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,
3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special procedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical assistance on implementing those steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.
தமிழில் படிக்க விரும்புவோர், அ. மார்க்ஸ் அளித்துள்ள சுட்டியில் பார்க்கவும் - ஐ.நா. தீர்மானம் (இந்தப் பக்கத்தில் மொழியாக்கம் சரியாக இல்லை என்று தோன்றுகிறது.)
கடைசி மூன்று பத்திகளையும் படித்துப் பார்த்தால், முதல் இரண்டும் இலங்கை அரசை வேண்டுகிற தீர்மானங்கள்தான். மூன்றாவது மட்டும்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதுவும்கூட,
மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன், இது தொடர்பாக வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை  22 வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையரை வேண்டுகிறது.
இந்த மூன்றாவது பத்தி மட்டும்தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் செய்ய வேண்டியதைச் சொல்லுகிறது. அதுவும் அடுத்த அமர்வில் தான் செய்தது பற்றி மனித உரிமை ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறது. அதாவது, இப்போதைக்கு இலங்கையை கண்டிக்கும் எதுவும் இத்தீர்மானத்தில் இல்லை. 

அதைவிட விந்தையான விஷயம் என்னவென்றால், தீர்மானம் ஒருவகையில் முன்னுக்குப்பின் முரணாகவும் இருக்கிறது.
Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of violations of international law,
சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதான கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவலையுடன் கவனத்தில் கொண்டு...
என்று சுட்டுகிற தீர்மானம், அதே படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழுவின் அறிக்கையில் "கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வேண்டுகிறது", என்ன தீர்மானம் இது... அதாவது, நல்லிணக்க்க் குழு முன்வைத்த அறிக்கையின் விஷயங்கள் உள்நாட்டு விவகாரங்கள் என்று ஐ.நா. தீர்மானம் கருதுகிறதா என்ற குழப்பமும் எழுகிறது.
அதற்கு முந்தைய பத்தியில்
Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to credibly investigate widespread allegations of extra judicial killings and enforced disappearances,
என்று குறிப்பிட்டு விட்டு சில வரிகளுக்குக்கீழே LLRC report does not adequately address என்று சொன்னால் இது என்ன விளக்கெண்ணெய்வாதம்...
தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது என்று முன்னர் காங்கிரஸ் கூறியதற்கும் ஆதரிக்கும் என்று இப்போது கூறுவதற்கும் காரணம் என்ன என்பது இந்திய அரசியலின் அரிச்சுவடி அறிந்தவருக்கும் தெரிந்ததுதான்.
பெரிய அண்ணன் – நாட்டாண்மைக்காரன் - அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்தால் தமக்கு நிதியுதவி கிடைக்காதோ என்று அஞ்சுகிற நாடுகளும் உண்டு. இதையே முன்மாதிரியாக வைத்துக்கொண்டு வேறு நாடுகளின்மீதும் தீர்மானம் முன்வைக்கப்படலாம் என்று அஞ்சுகிற நாடுகளும் கட்சிகளும் உண்டு. பலூச்சிஸ்தானுக்காக பாகிஸ்தான் அஞ்சும்.  குஜராத் விவகாரத்திற்காக பாரதிய ஜனதா அஞ்சும். கஷ்மீருக்காக காங்கிரஸ் அஞ்சும்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்பதால் பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் பக்கம். அமெரிக்கா முன்வைத்த்து என்பதாலேயே ரஷ்யாவும் கியூபாவும் இலங்கையின் பக்கம். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பக்கம். 47 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவு குறைவுதான். சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையைப் பாராட்டும் தீர்மானத்திற்கு ஆள்பிடித்ததுபோல இப்போதும் இலங்கை தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும். ஒருவேளை இந்தியாவும் மறைமுகமாக இதில் இறங்கியிருக்கலாம் – நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு – என்பது போல, சில நாடுகளை நடுநிலை வகிக்கச் சொல்லலாம்.
மன்மோகன் சிங் சொன்னது போல இது இறுதி வரைவு அல்ல. ஒருவேளை இறுதித் தீர்மானம் இன்னும் நீர்த்துப்போனதாக இருக்கலாம் – அல்லது நீர்க்கச்செய்வதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கலாம். அந்த நம்பிக்கை காரணமாகவே, தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக மன்மோகன் சிங் கூறியும் இருக்கலாம். அல்லது மாயாவதியும் முலாயமும் அரசுக்கு ஆதரவளிக்கிற தைரியத்தில் திடீரென்று மீண்டும் பல்டிஅடித்து தீர்மானத்துக்கு எதிர்ப்பும் காட்டாமல் ஆதரவும் அளிக்காமல் ஒதுங்கியும் இருக்கலாம்.
எது நடந்தாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு இப்போதைக்கு இல்லை என்பதுதான் துரதிருஷ்டம். தீர்மானம் தோல்வி கண்டால் இலங்கை அரசுக்கு தலைக்கனம் இன்னும் பலமடங்கு அதிகமாகும். வெற்றி பெற்றால் சிங்கள வெறி இன்னும் அதிகமாகும். அதை சமாளிக்க இன்னும் கடுமையான தீர்மானங்களை ஐ.நா. கொண்டுவர வேண்டியிருக்கும்.
ஞானி எழுதியிருப்பது போல,

அறிவுப்பூர்வமாக அலசி காய்களை நகர்த்தித்தீர்வுகளைத் தேடுவதே சரியான வழி 
காய்களை நகர்த்தப்போவது யார்... காய்களை நகர்த்த வேண்டிய அவசியமும் புவியியல் முக்கியத்துவமும் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டுக்கு இருக்கிறது? இந்தியா நகர்த்துமா, நகர்த்தச்செய்ய தமிழர்களால் முடியுமா?

Sunday, 11 March 2012

கொஞ்சம் குசும்பு - கொஞ்சம் நடப்பு


நீயும் இருக்கியே அப்பான்னு சொல்லிக்கிட்டு... முலாயமப் பாரு... 73 வயசுதான் ஆகுது, இருந்தாலும் 38 வயசு மகனுக்கு பதவியைக் குடுத்திட்டாரு. நீயி.... போன தடவை ஆட்சிக்கு வந்தப்போ உனக்கு 80 வயசாகியும் 50 வயசான என்னை முதலமைச்சாரக்க மனசு வரல்லே... இனி எங்கே சான்ஸ் வரப்போகுது...

* * *

இந்து நாளிதழ் சில பிரச்சினைகளில் எந்தவிதமான நிலைபாடுகளை என்ன காரணத்துக்காக எடுக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது - பத்திரிகைத் துறை பற்றி ஓரளவுக்குப் புரிதல் உள்ளவன் என்றாலும்கூட. ஒன்று ஈழத்தமிழர் விஷயம், மற்றொன்று கூடங்குளம் விவகாரம். கூடங்குளம் விவகாரத்திலாவது மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்பதற்காக கூடங்குள ஆதரவுநிலை எடுக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம், ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில்...

இன்றைய இந்து நாளிதழில் ஞாயிறு சிறப்புப் பக்கங்களில் கூடங்குளம்தான் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ஒரு பக்கம் முழுக்க ஆதரவுக்குரல். மறு பக்கத்தில் கால்பகுதி எதிர்புக்குரல் - மாறுபட்ட கருத்துகளுக்கும் நாங்கள் இடம் தருகிறோம் என்று காட்டிக்கொள்ளவோ என்னவோ...

The Hindu Open Page

இந்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியாகிறதா, அப்படியே வெளியாகிறதா என்று பார்ப்போம்.
Dear Sir
First article on Kudankulam Safety in Open Page by Kasinath Balaji & S.V. Jinna - one of the Directors and Engineers in the Plant - provides wrong data. First, they say 20 reactors are operating safely hiding the facts about many accidents which are now open secrets. The image and details say that 2004 tsunami was 2.5 m height whereas it was 10.5 m to 30 m in different places. Exact data is not available since there was no measurement system in place. Even in Mexico the 2004 tsunami height was 2.6 m. The second article on feasibility does not carry the credentials of the author, except his mailing address. It places the very old arguments about the contribution of nuclear power. The third one is interesting. Susan Davis through this writeup makes it open that cooling water was directly pumped back to Chambal river. (Hope she is not penalised for this!)  So, in Kudankulam case, the water will be pumped back into the sea, and there will be no harm! And lo, she argues to value science!  Is it because The Hindu has taken a stand to support Kudankulam that such articles appear a full page and opposing it takes just a quarter page?


ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்டுரைகளில் முதலாவதை எழுதிய இருவர் கூடங்குளத்தில் பணியாற்றுவோர். மற்றொரு கட்டுரையை எழுதியவரின் தொழில்முறைப் பின்னணி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. மூன்றாவது கட்டுரையை எழுதியவர் அணுஉலை ஊழியரின் குடுமபத்தவர் - மனைவியாக இருக்கலாம், அல்லது தாயாக இருக்கலாம்.

முதல் கட்டுரை, சுனாமி-பூகம்பம் உள்ளிட்ட சகல ஆபத்துகளையும் எதிர்கொள்ளும் வகையில்தான் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது என்று துவங்குகிறது. இதற்குத் துணையாக ஒரு விளக்கப்படம் வேறு. முதல் வாதமே முட்டாள்தனமாக முன்வைக்கப்பட்டுள்ளதும், அதவும் கூடங்குளத்தின் இயக்குநரே இவ்வளவு அபத்தமாக வைத்திருப்பதும் வியப்பளிக்கிறது. வாசகர் எவரும் உண்மைகளை அலசி ஆராயப் போவதில்லை, மேலோட்டமாகப் படிப்பவர்கள்தான் என்ற மனப்போக்குதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

முதலாவதாக,
20 அணுமின் உலைகள் சுமார் 350 ஆண்டு அளவுக்கு பாதுகாப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறது கட்டுரை - இது எப்படி இருக்கு. 1991 முதல் இன்று வரை இயந்திரக் கோளாறுகளாலும் மனித கவனக் குறைவுகளாலும் நேர்ந்த விபத்துகள் பட்டியலாக இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி அரசு இதுவரை வாயே திறக்கவில்லை.

இரண்டாவதாக,
கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்திற்கு - அதாவது, சுனாமி தாக்கும் உயரத்திற்கும் அதிகமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது, இந்தப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சுனாமியின் ஆபத்து 5.4 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, 2004 சுனாமியின் உயரம் சுமார் 2.5 மீட்டர் என்று விளக்கமும் படமும் கூறுகின்றன. கட்டுரை எழுதுவதற்கு முன்னால் கொஞ்சம் விவரங்களைத் தேடிப் படித்திருந்தால் 2004 சுனாமியின் உயரம் பல இடங்களில் 15 மீட்டர் என்று தெரிந்திருக்கும் - மேலும் விவரங்களுக்கு - 2004 சுனாமி

2004 சுனாமியின் அதிகபட்ச உயரம் 10.5 மீட்டர் என்று கூறப்பட்டாலும், உயரம் கணக்கிடுவதற்கான அமைப்பு எதுவும் இந்தப் பகுதியில் வழக்கத்தில் இருக்கவில்லை என்பதும், உயரத்தை மதிப்பிட்டுத் தொகுக்கும் பணி நடைபெறவில்லை என்பதும் உண்மை. 2004 சுனாமியின் உயரம் 30 மீட்டர் என்கிறது விக்கிபீடியா. இதற்கு ஆதாரம், நான்கு ஆய்வாளர்களின் கட்டுரை -
2004 சுனாமி உயரம்

அத்துடன், தென்னாப்பிரிக்கத் தீவு ஒன்றில் இதே சுனாமியின் உயரம் 1.5 மீட்டர், பசிபிக் கடலில் மெக்சிகோவின்மீது சுனாமியின் உயரம் 2.6 மீட்டர். இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து சென்ற பிறகும் மெக்சிகோவில் அலையின் உயரம் அதிகமாகவும், கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் உயரம் குறைவாகவும் இருந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் இன்றும் வியந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்கையில், 2004 சுனாமியின் உயரம் 2.5 மீட்டர் என்பதும், எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச உயரம் 5.4 மீட்டர் என்பதும் முழு உலையை உப்புமாவுக்குள் ஒளிக்கும் முயற்சியன்றி வேறென்ன...


இது எத்தனை மீட்டர் ...

மூன்றாவதாக,
கூடங்குளம் அமைந்திருப்பது பூகம்ப ஆபத்து மண்டலம்-2இல் (seismic zone) என்கிறது முதல் கட்டுரை. இதே இந்து நாளிதழில் நவம்பர் 6ஆம் தேதி அப்துல் கலாம் பேசியதைக் குறிப்பிடும்போது, கூடங்குளம் எந்த பூகம்ப ஆபத்து மணடலத்திலும் இல்லை என்றும் வெளியாகியுள்ளது.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2603911.ece
இதில் எது உண்மை...

செஸ்மிக் ஸோன்-2 என்றால் ஆபத்துக்குறைவான மண்டலம் என்கிறது இந்திய அரசின் ஒரு துறை -  www.imd.gov.in/section/seismo/static/welcome.htm
 நம் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கோ அது ஆபத்தே இல்லாத மண்டலம் என்று தோன்றுகிறது. அப்புறம் என்ன செய்ய, அவர் சொல்லிவிட்டால் அப்படியே ஏற்கத்தானே வேண்டும்....

சரி, செஸ்மிக் ஸோன்-2 என்பது மிகக் குறைவான ஆபத்து மண்டலம் என்றே வைத்துக்கொள்வோம். இந்தியக் கண்டத்தட்டும் பர்மியத் துணைத்தட்டும் சந்திக்கிற பகுதி தீவிர ஆபத்துப்பகுதியில் இருக்கிறது என்பதையும், இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதையும் யாராவது மறுக்க முடியுமா... இப்பகுதியில் மேலும் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
http://www.drgeorgepc.com/Tsunami2004Indonesia.html

கூடங்குளம் நிலநடுக்கப் பகுதியில் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும், கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் மேற்கோடியில் மெக்சிகோவில் சுனாமி தாக்கியதைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் எத்தனைஅடி உயர சுனாமி கூடங்குளத்தைத் தாக்கும் என்று யாருடைய ஜோதிடத்தை நம்புவது...


முதல் கட்டுரையின் அடுத்த பகுதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்று விளக்குகிறது. புகுஷிமாவுக்குப் பிறகு, இயற்கையின் சீற்றத்தை யாரும் முன்கணிக்க முடியாது என்பது போலவே, மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளும் எந்தவிதத்தில் நிகழும் என்று யாரும் ஊகிக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத்தரும்போது புதிய விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இரண்டாவது கட்டுரையாளர், மின்சாரத்திற்கு மாற்று வழிகள் கவர்ச்சியானவைதான் ஆனால் கட்டுபடியாகாது என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். உலக நாடுகளின் அணு மின்சாரப் பங்கினைச் சுட்டுகிறார். இதில் புதிய விஷயம் ஏதுமில்லை. அவர் சொல்லாமல் விட்டது - 14000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம், அதன் 40 ஆண்டுகால ஆயுளில் 40000 கோடி ரூபாயையும் விழுங்கி விட்டு, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்போகிற அணுக்கழிவுகளுக்கு எவ்வாறு செலவு செய்யப்போகிறோம், அதை எங்கே புதைக்கப்போகிறோம், அதன் கட்டுபடிச் செலவு என்ன... இதையெல்லாம் சொன்னால் கட்டுபடியாகாது அவருக்கு.

மூன்றாவது கட்டுரைதான் சுவையானது. "ராவத்பட்டா அணுஉலையைக் குளிர்விக்கப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்ட கழிவுநீர் சம்பல் நதியில் விடப்பட்டது. நான் கருவுற்றிருந்த காலத்திலும்கூட அதே நதியின் நீரை - கொதிக்க வைக்காமலேகூட - அப்படியே நான் குடித்து வந்திருக்கிறேன். எனக்கு எதுவும் ஆகிவிடவில்லை" என்று கட்டம்போட்டு பறைசாற்றுகிறார் சூசன் டேவிஸ் என்பவர். 

ராவத்பட்டா அணுஉலையில் கழிவுநீர் சம்பல் நதியில் விடப்பட்டது என்று ஒத்துக்கொண்டமைக்காக நன்றி தெரிவிக்கலாமா...

உங்களுக்கு ஒண்ணும் ஆகலைங்கிறதுல ரொம்ப சந்தோஷமுங்க...
அணு உலையில வேலை செய்யறவரோட மனைவியான / தாயான நீங்க கனநீரையே குடிச்சு, அணு உலையிலேயே சமைச்சுச் சாப்பிடுங்க. நாங்க வேண்டாங்கலே. ஆனா, We try to teach them (our children) to value science, not to denounce it... அப்படீன்னு சொல்றீங்களே... அணு சக்தி மட்டும்தான் விஞ்ஞானமுங்களா...

They are not frogs in a well அப்பிடீன்னு எழுதியிருக்கீங்க. யாரைச் சொல்றீங்க... அணுஉலையில வேலை செய்யறவங்களையா, உங்களைப் போல குடும்பத்தவங்களையா, இல்லே உங்க குழந்தைங்களையா... நீங்க கிணத்துத் தவளை இல்லைதானுங்களே... அப்ப ஒண்ணு செய்யுங்களேன்.

  • 2009இல கைகா உலையில கதிரியக்கத் தண்ணியக் குடிச்சவங்க என்ன ஆனாங்க, அவங்க இப்ப எப்பிடி இருக்காங்கன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா...
  • 2003இல கல்பாக்கத்துல 6 பேருக்கு கடுமையான கதிரியக்கம் ஏற்பட்டதாமே... அவங்க இப்ப எப்பிடி இருக்காங்க...
  • 1991இல கல்பாக்கத்துல கனநீரைக் கலந்து பெயின்ட் அடிச்ச ஒரு கான்டிராக்ட் லேபர் பத்தி தகவலே தெரியாதாமே... அவரைக் கொஞ்சம் வெளியே கொண்டாந்து காட்டறீங்களா...

இப்பிடி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.

வெளிய தெரிய வந்ததே கொஞ்சம்தான். அதுவே இவ்வளவு பெரிய பட்டியல். அப்படியானால் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டவை எவ்வளவு இருக்கும்...

எதிர்ப்பக்கத்தில் எதிர்ப்புக் கட்டுரை எழுதியிருப்பவர் ஜே.வி. விளநிலம் என்பவர். தகவல்தொடர்பு ஊடகக் கல்வித்துறையாளர். கேரளத்தில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர். அமெரிக்காவில் வசித்த ஹெலன் கால்டிகாட் என்ற மருத்துவர் எழுதிய அணுசக்தி வெறி - Nuclear Madness - என்ற நூல் இன்றும் பொருந்துமா என்று அலசுகிறார். சூசன் டேவிஸ் பார்வையில் இவரும் கிணற்றுத் தவளையா

மக்களாட்சியின் மகத்தான அம்சமே கருத்துச் சுதந்திரம்தான். அதே சுதந்திரம்தான் என்னையும் எழுத அனுமதிக்கிறது. ஆனால், ஒரு நிலைபாடு எடுத்து விட்டோம் என்பதற்காக அதைக் குருட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு தொங்குவது நூற்றாண்டு கண்ட பத்திரிகைக்கு அழகல்ல.  

Thursday, 8 March 2012

மின்வெட்டுத் தந்திரம்


தமிழகத்திற்கு டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சென்றிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பண்பாட்டு அதிர்ச்சி என்ற பதிவில் எழுதியிருந்தேன். புத்தகக் கண்காட்சி வேலைகள் காரணமாக நீண்டநாள் பேசாமலிருந்த என் நண்பனுடன் இன்று தொலைபேசியில் பேசியபோது அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தன.

இரவு 10 மணிக்கு பொதுவாக அவன் ஆலையில் வேலையில் இருப்பான், சூபர்வைசருக்கு வேலையும் அதிகம் இருக்காது என்பதால் இரவில் நாங்கள் உரையாடுவது வழக்கம். இன்று அழைத்தபோது அவன் வீட்டில் இருப்பதாகச் சொன்னான். காரணம் கேட்டபோது, மாதத்தில் 10 நாட்கள்தான் ஆலை இயங்குகிறது, மின்வெட்டு என்றான். 

அதுமட்டுமல்ல, சென்னைக்கு மட்டும் தினமும் 2 மணிநேர வெட்டு, இதர பகுதிகளுக்கு 4 மணிநேர வெட்டு - ஆனால் உண்மையில் இதர பகுதிகளில் எட்டு முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு என்பதுதான் எதார்த்தம் என்றான். எங்கள் ஊரில் சராசரியாக 8-9 மணிநேரம் வெட்டாம். இன்று - புதன்கிழமை - நாளைய பள்ளித்தேர்வுகள் காரணமாகவோ என்னவோ, வெட்டு குறைந்திருக்கிறது என்றான்.

நாளுக்கு 2-4 மணிநேர வெட்டு என்பதையே கற்பனை செய்ய முடியவில்லை. 8-12 மணி நேர வெட்டை எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேட்டால், என்ன செய்ய, பழக்கப்படுத்திக்கொள்வதுதான் என்றான். கோடை வேறு நெருங்கி வருகிற நிலையில் தமிழக மக்களின் நிலையை எண்ணினால் ... அடிக்கடி பயன்படுத்துகிற நகைச்சுவையை பரிமாறிக்கொண்டோம்.

ஒருவன் சோதிடரிம் போனான். சோதிடர் அவன் கையைப் பார்த்துவிட்டு, ஒரு ஆறுமாத காலம் நாய் படாத பாடு பட வேண்டும் என்றார்.
அதற்கப்புறம்... - கேட்டான் அவன்
சோதிடர் சொன்னார் - அதுவே பழக்கமாகி விடும்.

சராசரியாக தமிழகத்துக்குத் தேவை 11000-12000 மெவா. கிடைப்பது 8000 மெவா. அப்படியானால் பற்றாக்குறை 3000-4000தானே... பிறகு எதற்காக இவ்வளவு வெட்டு...

அது என்ன சென்னை மட்டும் செல்லப்பிள்ளையா... மற்ற பகுதிகள் பாவப்பட்ட ஜென்மங்களா... சென்னையில் வெட்டு என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் - மென்மையாகவேனும் - குத்திக்காட்டும் என்பதாலா... 

தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்துக்கு பணம் தராததாலும் அரசின் பிடிவாதப் போக்காலும் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தைக் கேட்டு வாங்குவதற்கு என்ன தடை... மத்திய அரசிடம் இதற்காக சண்டை போட்டாலும் நல்லதுதானே... யூனிட் 12 ரூபாய் என்றாலும் பரவாயில்லை, வாங்கி மக்களுக்கு வழங்கலாமே... இலவசங்கள் தருவதைவிட மின்சாரம் தருவதுதானே முக்கியம்...  

கிரைண்டர், மிக்சி, மின்விசிறி - மூன்றுமே மின்சாரம் இல்லாமல் எப்படி இயங்கும் என்பது ஒருபுறம் இருக்க, முந்தை இலவசமான தொலைக்காட்சியுடன் இந்த மூன்றும் சேரந்து மின்பயன்பாட்டை அதிகரிக்க அல்லவா செய்துவிட்டன. மிக்சியோ கிரைண்டரோ இல்லாமல் கையால் அரைத்துக்கொண்டிருந்தவர்களும் இவற்றைப் பயன்படுத்திப் பழக்கப்படுத்தி விடுகிறது அல்லவா இந்த இலவசத்திட்டங்கள்...

2012 ஆகஸ்டுக்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என்று ஜெயலலிதா சொன்னது வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருந்து விட்டுப் போகட்டும். இப்போது 2013 மத்திக்குள் மின்பற்றாக்குறை இல்லாமல் ஆக்குவேன் என்பது என்ன கணக்கு... 

எல்லாவற்றுக்கும் மேலே பெரியதொரு சந்தேகம் எழுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் அந்த சந்தேகம் தீர்வுபெறும்... ஆம், மைய அரசிடம் கூடுதல் மின் ஒதுக்கீடு கேட்காமல் இருப்பதும், அதிகத் தொகை கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்காமல் இருப்பதும், 30 விழுக்காடு பற்றாக்குறைக்கு மாநிலம் முழுவதும் 50 சதவிகித நேர மின்வெட்டும் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.


ஆம், மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களை, கூடங்குளம் வந்தால் கொஞ்சமேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற மனநிலைக்கு மாற்றுவதுதான் இதன் தந்திரமோ... அதற்காகத்தான் மக்களை வாட்டுகிறார்களோ...

கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசின் அமைதி இதைத்தான் சுட்டுகிறது. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்தை அனுமதிப்பதாக அறிவித்தால் ஆளும் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம். எந்தவொரு இடைத்தேர்தலும் ஆளும் கட்சிக்கு - அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி - அதிமுக்கியம். முந்தைய ஆட்சியில் திருமங்கலத்தில் பணவிநியோகம் இதற்கு உதாரணம். 

ஆகசங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் பாதுகாப்பானது என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது, கூடங்குளத்தை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவிக்கலாம் - தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று நாராயணசாமி கூறுவதன் பின்னணி இதுவாகவே இருக்கும்.

கூடங்குள எதிர்ப்பில் முன்னிலை வகிக்கும் கிருத்துவ அமைப்புகள்மீது - அரசுசாரா அமைப்புகள்மீது - மைய அரசு - பிரதமரும்கூட - அந்நியநிதி... தவறாகப் பயன்படுத்தல்... என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தியதும் வழக்கு மிரட்டல்கள் விடுப்பதும் வருந்தத்தக்கது என்பது ஒருபுறம் இருக்கட்டும். கூடங்குளம் தமிழர்களுக்கு எதிரானது என்று தமிழ்த்தேசியவாதிகளும், கிறித்துவர்களுக்கு எதிரானது என்று கிறித்துவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கூறுவது ஒருபக்கம் இருக்கட்டும். இது மனிதகுலத்துக்கே எதிரானது என்பது மக்களுக்குப் புரியாதவரை கூடங்குளம் வந்தால் மின்வெட்டுப் பிரச்சினை தீரும், அணுஉலைகளும் அணுமின்சாரமும் தேவை என்பதே பொதுக்கருத்தாக இருக்கும்.

இதில் ஒரே ஒரு ஆறுதல் - அப்துல் கலாம் தேவையின்றி தலையிட்ட பிறகு, அவர் எதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கூடங்குள ஆதரவுநிலை எடுக்க வேண்டும் என்ற கேள்வி பரவலாக மக்களை அடைந்திருக்கிறது. கூடங்குள ஆதரவு நிலை எடுத்த சாமானிய மக்கள் மத்தியில்கூட சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்தான்.

மின்பகிர்மானத்தில் இழப்பை சரிசெய்தல், பெருநகர்களில் பெருநிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கலை நெறிப்படுத்தல், குண்டுவிளக்குகளுக்குப் பதிலாக மின்சிக்கன விளக்குகளைப் பரவலாக்குதல், மக்கள் மத்தியில் மின்சிக்கன வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கல் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் பதிலாக அரசு திருவாளர் முத்து போன்ற வீடியோ பிரச்சார உத்திகளை மேற்கொள்ளப் போகிறதாம். இந்த கார்ட்டூன் படத்தில் தலைப்பு - ஒரு மகிழ்ச்சியான கிராமத்தின் கதை- என்று காட்டப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான கிராமமா... நம் நாட்டிலா... நெருக்கடிநிலைக் காலத்தில் அரசின் வானொலி விளம்பரங்கள் நினைவுக்கு வருகின்றன. 

மீனவருடன் ஒரு நேர்காணல் -
கேள்வி - திரு .... அவர்களே, உங்கள் இன்றைய மீன்பிடி தொழில் எப்படி இருந்தது
மீனவர் - ரொம்ப நல்லா இருக்குங்க...
கேள்வி - கொஞ்சம் விளக்கமாச் சொல்றீங்களா
மீனவர் - முன்னாடியெல்லாம் கடலுக்குள்ள 15-20 மைல் போனாலும் ஒரு அயிரக்குஞ்சுகூடக் கிடைக்காதுங்க. ஆனா இந்த இருபது அம்சத்திட்டம் வந்த பின்னாடி நாங்க கடலுக்குள்ள போகவே வேணாம். சும்மா அப்பிடி கரையோரமா தண்ணில இறக்கினாலே போதும்... பெரிய பெரிய மீனெல்லாம் தானாவே படகுக்குள்ள வந்து குதிச்சுருது.

ஒருவேளை கூடங்குளம் இயங்கத் துவங்கி விடுகிறது என்றே வைத்துக்கொண்டாலும் - அப்படித்தான் நடக்கும் என்று தோன்றுகிறது - மக்கள் மத்தியில் எழுந்துள்ள விழிப்புணர்வே மிகப்பெரிய வெற்றிதான்.

இதை எழுதும்போது காணக்கிடைத்த ஒரு பதிவை நீங்களும் படிக்க வேண்டும் என விழைகிறேன்... 


மற்றொரு இணைப்பு - நூலை பிடிஎப் வடிவில் பதிவிறக்கலாம் - ம.க.இ.க. கருத்துகளில் எனக்கும் முழு உடன்பாடு இல்லை என்றாலும்கூட - அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய பிரசுரம் இது.


கூடங்குள ஆதரவாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தெளிவாகவும் ஆதாரங்களுடனும் ஞாநி உள்பட பலர் பலப்பல பிரசுரங்களை வெளியிட்டும் எழுதியும் வந்த பிறகும் அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்புகிறார்கள் அவர்கள். ஒருவேளை இவர்கள் பதிலளித்துக்கொண்டே இருந்து தம் நேரத்தை வீணடிக்கட்டும் என்ற நோக்கமோ...

கூடங்குளத்தில் ரஷ்யா என்றால் ஜைதாபூரில் பிரான்சின் அரிவா. சுமார் 50000 கோடி ரூபாயில் அணுசக்திப் பூங்காக்கள் இந்தியாவில் அமைப்பதில் அரிவா ஈடுபடுகிறது. அணு மின்சாரம் வேண்டாம் என்று பிரான்ஸ் முடிவு செய்தபிறகு இந்த அரிவா பெரும் சிக்கலில் இருக்கிறது. 2011 டிசம்பரில் 2.1 பில்லியன் டாலர் நஷ்டம் அறிவித்திருக்கிறது. புகுஷிமாவுக்குப் பிறகு அரிவாவின் தீவிர இலக்கு இந்தியா போன்ற ஊழல் மலிந்த நாடுகளாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் இந்தியாவில் இது ஒப்பந்தம் போட்டிருக்கும் திட்டங்களின் மதிப்பு 12.3 பில்லியன் டாலர் - 600 பில்லியன் ரூபாய். ஆஹா... பத்து பர்சென்ட் கணக்குப் போட்டுப் பார்த்தாலே தலை சுற்றுமே...

இங்கேதான் அறிவுக்கு இடம் கொடுப்பதைவிட அரிவாவுக்கு இடம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அதிகம். நாம் இதையெல்லாம் அறிந்திருந்தும் என்ன செய்ய... தேனெடுத்தவன் புறங்கையை நக்கவே செய்வான் என்ற பழமொழி பரவலாக இருக்கும் நம் நாட்டில், தேன் முழுவதையும் அவன் எடுத்துக்கொண்டு புறங்கையை மட்டும் நமக்கு நீட்டினாலும் நக்கிக் கிடக்கத்தானே நாம் துடித்துக் கொண்டிருக்கிறோம். இதை மறைக்கத்தான் யார் நியாயமான கேள்வி எழுப்பினாலும் நீ என்ன அணு விஞ்ஞானியா... நீ இந்து விரோதி, அந்நிய சதி, அமெரிக்க நிதி என்று திசை திருப்புகிறோம். வாழ்க் தேசபக்தி. 

அறிவை அடகு வைப்பதில் அரசியல்வாதிகளுக்கு லாபம்தான். உங்களுக்கும் எனக்கும்... 

கடைசியாக இரண்டு செய்திகள், இன்றைய இந்து நாளிதழில் - ஒன்று, தலையங்கப் பக்கத்தில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரை. மற்றொன்று, புகுஷிமா விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர் இந்தியாவில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வருவதை தடை செய்யும் வகையில் அவருடைய விசாவை ரத்து செய்துள்ளது மைய அரசு. புகுஷிமாவில் தப்பிய ஐந்துபேர் டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு விசா மறுத்த ஒரே நாடு இந்தியாதான் என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு.

அடேயப்பா... எலும்புத்துண்டுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது....


Tuesday, 6 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - நூல்பட்டியல்

பிரகதி மைதானத்தில் ஏழாம் வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் 14ஆம் எண் அரங்கின் முன் காணக் கிடைத்தது இந்த மரம். இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு நான்கு காய்கள் மட்டும் சுமந்து கொண்டு நிற்கிறது. வந்துவிட்டது கோடை... இனி எப்போது மீண்டும் துளிர்க்கும்... மனதில் எழுந்தது என்றோ எழுதிய கவிதை வரி...


புத்தாடை
யார் தருவார் எனக்
காத்திருக்கிறது மரம்?

நேற்றைய பதிவு மிகவும் நீளமாகி விட்டது. அதனால் பட்டியல் மட்டும் இங்கே. உழுபவன் கணக்குப் பார்த்தால்... என்பது போல, வாசகன் கணக்குப் பார்க்க முடியுமா...

பெரிய மகள் தேர்வுகள் -
  • உறங்கா நகரம்
  • அமெரிக்கா அல்கொய்தா
  • மனித உரிமைகள்
  • லெனின் வாழ்க்கை வரலாறு
  • ஏங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறு
  • மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
  • Great Indian Short Stories (Compilation of Rose Reinhardt Anthon, William Wilkie Collins, E.M. Forster, Rabindranath Tagore, Rudyard Kipling)
  • Can Love Happen Twice? - Ravinder Singh
  • Love Lasts Forever - Ramya Mishra Pandey
  • Autumn in My Heart - Saptarshi Basu
  • Choosing Your Faith (New Testament)

சின்னவள் தேர்வுகள் -

  • To the Lighthouse - Virginia Woolf
  • The Aliens have Landed & Aliens Encounters - Dilip M. Salvi
  • An Island of Trees - Ruskin Bond
  • A Bond with the Mountains - Ruskin Bond
  • Time Machine - H.G. Wells
  • The Adventures of Tom Sawyer - Mark Twain
  • The Ring O'bells Mystery - Erid Blyton
  • The Young Adventurers - Erid Blyton
  • The Secret Seven - Erid Blyton
  • Strangers on the 16:02 - Priya Basil
  • Pride & Prejudice - Jane Austen
  • Hans Brinker or the Silver Skates - Mary Mapes Dadge
  • The Goose Girl - Brothers Grimm
  • David Copperfield -  Charles Dickens
  • Around the World in Eighty Days - Jules Verne


இஸ்லாமிய நூல்கள் - துணைவியார் தேர்வுகள் -
  • என்னைக் கவர்ந்த பெருமானார்
  • இவர்தான் முஹம்மத் 
  • பெருமானார் தரும் பரிசு
  • அன்புள்ள அன்னைக்கு
  • தற்கொலை - ஆய்வும் தீர்வும்
  • சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கதைகள்
  • குகைத் தோழர்களின் கதை
  • கதைக்குள் கதை

காலச்சுவடிலிருந்து எங்கள் தேர்வுகள் -
  • 1945இல் அப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்
  • ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில்
  • இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - கார்டன் வைஸ்
  • லண்டன் உங்களை வரவேற்பதில்லை - இளைய அப்துல்லாஹ்
  • நீதி மறுக்கப்பட்ட கதை - மின்னி வைத்
  • மஹ்ஷர் பெருவெளி - புனத்தில் குஞ்ஞப்துல்லா
  • அக்கா - கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
  • நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய்
  • அரபிக் கடலோரம் - சக்கரியா
  • நளினி ஜமீலா - பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
  • திரும்பிச் சென்ற தருணம் - பி.ஏ. கிருஷ்ணன்
  • கலங்கிய நதி - பி.ஏ. கிருஷ்ணன்
  • மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்
  • பறவைகளும் வேடந்தாங்கலும் - மா. கிருஷ்ணன்
  • அமெரிக்கக்காரி - அ. முத்துலிங்கம்

பி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை (Tigerclaw Tree) ஏற்கெனவே இருக்கிறது. படித்து முடித்த உடனே அவருக்கு அஞ்சல் எழுத வேண்டும் என்று தோன்றியது, இன்று வரை செய்யவில்லை. இத்துடன் அவரது அனைத்து நூல்களும் என்னிடம் சேர்ந்து விட்டன என்று நினைக்கிறேன். அவரை அறியாதவர்களுக்கு - பி. அனந்தகிருஷ்ணன், மைய அரசில் அதிகாரியாகப் பணியாற்றியவர், கித்வாய் நகர்வாசி, தில்லித் தமிழ் இலக்கியவட்டத்தில் அறிமுகமானவர்.

வாங்கிய நூல்களில் முதலில் படிக்க எடுப்பது அமெரிக்கக்காரியையா அல்லது கலங்கிய நதியையா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழ் நூல்களை தேர்வு செய்யும்போது தெரியாமல் போனது பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது - நேற்றும் சரி, முன்னர் வாங்கியதும் சரி, பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகள். புதிய தமிழ் நூல்கள் அதிகம் வரவில்லையோ... அல்லது வாங்கியிருக்க வேண்டியவை சிலவற்றை விட்டு விட்டேனோ....

இந்தப் பதிவை ஒரு படத்துடன் நிறைவு செய்யலாம் என்று உத்தேசம். இதற்கு விளக்கம் எதுவுமே தேவையில்லைதானே... ஆயிரம் வார்த்தைகளில் விளக்க முடியாததை ஒற்றைப்படம் உணர்த்தி விடுகிறது அல்லவா...


குறிப்பு - வேடமில்லாமல் அமர்ந்திருப்பவர் குச்சிகளின்மீது நடந்துகொண்டு உயரமான நபராகக் காட்சி தந்தவர். 

வாசிப்பை நேசிப்போம்

Sunday, 4 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 4-3-12

உலகப் புத்தகக் கண்காட்சியின் நாளாந்திரப் பதிவுகளின் கடைசிப் பதிவு இது. இன்னும் சுவாரசியமான புகைப்படங்களும் தில்லி அரங்கம் பற்றிய பதிவும் விரைவில் எழுத வேண்டும்.

கடைசி நாள். நேற்றுடன் வேலை முடிந்து விட்டது. இன்றைய நிகழ்வுகளை நாளை வெளியிட்டால் யாரும் இருக்கப்போவதில்லை என்பதால் கடைசி நாளுடன் செய்தி மடல் முடிந்து விடும். எனவே குடும்பத்துடன் முழுநாளும் கடைகளைச் சுற்றி வருவது வழக்கம். இன்றும் அதுவே நிகழ்ந்தது. ஒரே ஒரு வித்தியாசம் - கூட ஜிஜி குடும்பமும். எல்லாரையும் ஓடவைக்க பொடியன் ஜஸ்வின்.


காலையில்தான் வீடு திரும்பி சற்று நேரம்தான் தூங்கினேன் என்றாலும் பதினொரு மணி சுமாருக்குப் புறப்பட்டு விட்டோம். காலச்சுவடில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த புத்தகங்களுடன் இன்னும் கொஞ்சம் வாங்கி பர்சின் கனம் குறைந்தது.

மாலையில் லால் சவுக்-கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாகித்ய கலா பரிஷத் உபயம். ஒருநாள்கூட போய் பார்க்க முடியவில்லை. இன்று எட்டிப் பார்க்கலாம் என்று போனால்... காதைக் கிழிக்கும் இரைச்சல், இதயத்தை அதிர வைக்கும் ஸ்பீக்கர்கள் வைத்து இந்தியில் புதிய பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.  ஓரிரு நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியாமல் கிளம்பி விட்டோம்.

உல்ளே நுழைந்தது முதல் ஏழாம் அரங்கிலிருந்து 8-9-10-14ஆம் அரங்குகளுக்குச்சென்று விட்டு மீண்டும் 12க்கு வந்து ஏழுக்குச் சென்று ஆங்கிலப் புத்தகங்களைக் காண 1ஆம் அரங்கம்... நடந்து நடந்து கால்கள் இற்றுப்போய் வீடு திரும்பும்போது இரவு 9 மணி.


தமிழ்க் கடைக்காரர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டேன். இந்த முறை வியாபாரம் முன்னைவிட நன்றாக இருந்தது என ஒவ்வொருவரும் கூறினார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் திருப்தி. அடுத்தமுறை ஸ்டாண்டுக்குப் பதிலாக ஸ்டால் எடுக்கப்போவதாக சந்தியா பதிப்பகத்தார் கூறினர்.

கிழக்கு நேரடி விற்பனை செய்யாதது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பது என் கருத்து. நான் ஒரு புத்தகம்கூட ஆர்டர் செய்யவில்லை. புத்தகத்தை தேர்ந்தெடுத்து பின்அட்டையைப் பார்த்து, முன்னுரை படித்து, பிறகு விலையையும் பார்த்து வாங்குவதுதான் எனக்குப் பிடித்தமானது. வெறும் கேட்லாக் பார்த்து வாங்குவது பிரபல எழுத்தாளரின் பிரபல புத்தகத்திற்கு, அல்லது ஏற்கெனவே விமர்சனம் படித்திருந்த புத்தகங்களுக்கு மட்டும்தான் சாத்தியம். தில்லி வாசகர்களில் பலர் என்போல சிந்திக்கக்கூடியவர்களாக இருக்க பெரிதும் வாய்ப்பு உண்டு. எனவே, பத்ரி இதைப் படித்தால், அடுத்தமுறை பழையபடி நேரடி விற்பனை பற்றி யோசிக்கட்டும்.

இன்று மாலை பல கடைகளில் ஆறு மணிக்கே ஏறக்கட்டி விட்டார்கள். ஆங்கிலக் கடைகள் சிலதில் கடைசிநேர சிறப்புத் தள்ளுபடி இருந்ததில் பெரியவள், சின்னவள் இருவருக்குமே லாபம்.



கண்காட்சி என்ற சொல்கூட பொருத்தமில்லை, திருவிழா என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி முடிந்து திரும்புகிற நாள் ஒருவித இறுக்கம் மனதைக் கவ்விக்கொள்கிறது. ஏதோ கல்யாண வேலை முடிந்து மணமகளை அனுப்பிவைத்துவிட்ட பெற்றோனின் மனநிலை போல.

அடுத்த புத்தகத் திருவிழா 2014 பிப்ரவரி மத்தியில் நடைபெறும். அமைச்சர் அறிவித்ததுபோல அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது இன்னும் தெரியவில்லை. அடுத்த திருவிழாவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அடுத்த முறையும் எனக்குப் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்க வேண்டும்...

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் நீளமாக இருக்கும் - அடுத்த பதிவில்...

வாசிப்பை நேசிப்போம்.

உலகப் புத்தகக் கண்காட்சி - 2 & 3-3-12

கண்காட்சியில் வேலைகள் இவ்வளவு வாட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நாளும் விடிகாலை 4 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிந்தது. சனிக்கிழமை இரவு வேலை முடிந்து ஞாயிறு காலை 5 மணிக்குத்தான் திரும்பியிருக்கிறேன். இன்றைய செய்தி மடல் எட்டு பக்கங்களுடன் வரும் என்பது காரணம்.

ஸ்டாலின் குணசேகரன் வெள்ளிக்கிழமை சந்தித்தேன். பைகள் நிறைய புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் இருந்தார். அலுவலகத்தில் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


இங்கே எத்தனை பேருக்கு அவரைத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இவர் எழதியதும் மற்றவர்கள் எழுதியதும் சேர்த்து இவர் தொகுத்த விடுதலை வேள்வியில் தமிழகம் என்னும் நூல் விடுதலைக்கு தமிழகம் ஆற்றிய பங்கின் சிறப்பான பதிவு. வரலாறு நமக்கு எந்த அளவுக்கு தெரியாதோ அதே அளவுக்கு இவரையும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது நம் துரதிருஷ்டம். இந்த வரிகளை எழுதும்போது தில்லியில் ஒருகவியரங்கில் வரலாற்றைப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றிய என் கவிதை நினைவு வருகிறது. தேடிப் பிடித்து பிறிதொருநாள் பதிவிடுகிறேன்.

மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பை நிறுவி, ஈரோடு புத்தகக் கண்காட்சியை கடந்த ஏழாண்டுகளாக சிறப்பாக நடத்தி வருபவர் ஸ்டாலின் குணசேகரன். தமிழகத்தின் முக்கியப் புத்தகத் திருவிழாக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கும் ஈரோடு கண்காட்சி பற்றி நான் இங்கே எழுதுவதைவிட சுட்டியைக் கொடுப்பது வசதி.

ஸ்டாலின் குணசேகரன்

திரைப்பட நட்சத்திரங்களின்பாலான மோகம் குறித்த என் முந்தைய பதிவைப் படித்த பதிவர் ஒருவர், இவ்வளவு காட்டமாக எழுத வேண்டுமா என்று அரட்டையில் கேட்டிருந்தார். முதலாவதாக, அதில் இருந்தது காட்டம் அல்ல, இயலாமை கலந்த வெறுப்பு. கீழே இன்னொரு படம் தருகிறேன் பாருங்கள். இவர் யார் என்று உங்களில் யாருக்கும் தெரியுமா...



படத்தைப் பார்த்தால், திரையுலகைச் சேர்ந்தவருக்கான சகல அம்சங்களும் தெரிகின்றன. யாராக இருக்கும்... முகத்தைப் பார்த்து அடையாளம் காணுங்கள்.


ஜுஹி பர்மார் என்ற தொலைக்காட்சி நடிகையாம். இவரைப்போன்ற ஆயிரம்பேர் அன்றாடம் தில்லியின் சாலைகளில் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மிகப் பிரபலங்கள் தவிர இவரைப் போன்றவர்களை யாரும் அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது. ஏதேனும் நிகழ்ச்சியில் இவர்களை முன்னிலைப்படுத்தும்போதுதான் ஓஹோ... இவரும் நடிப்புத் துறையைச் சேர்ந்தவர் என்று புரியும். உடனே பிறந்து விடுகிறது மோகம்... கையில் கிடைத்த காகிதத்தில் கையெழுத்து வாங்கும் வேகம். யாரேனும் ஒருவர் கையெழுத்து வாங்க முனைய, மற்றவர்களும் மொய்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆட்டு மந்தைப் புத்தியை என்னவென்று சொல்ல....

தமிழ்க் கடைகளை அவ்வப்போது சுற்றிவந்தபோது அறிமுகமான பலரைப் பார்க்க முடிந்தது. என் பதிவில் அளித்த செய்தி உதவியாக இருந்ததாக அவர்கள் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது. சனிக்கிழமை சந்தித்தவர்களில் குறிப்பிட வேண்டியவர் டாக்டர் ரவீந்திரன். சுரேஷுடன் காலச்சுவடில் சந்தித்தேன்.


இன்றைய தில்லி பதிவர்களில் பலருக்கும் இவரைத் தெரிந்திருக்காது. தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழத்துறைப் பேராசிரியராக இருந்தவர். நாடக இயக்கத்தில் தீவிர ஆர்வம் உடையவர். பென்னேஸ்வரனின் யதார்த்தா நாடகங்கள் பலவற்றுக்கும் ஒளியமைப்பில் உதவியவர். தகுதி பாராமல் அன்போடு கரம்பற்றிப் பேசும் இனிய பண்புகொண்டவர். இப்போது பாண்டிச்சேரியில் குடியமர்ந்து விட்டதாகச் சொன்னார். இப்போதும் நாடக உலகுடன் தொடர்பில் இருக்கிறார் - அப்படி இல்லாமல் இருக்கவும் இவரால் முடியாது. அதிகம் பேச நேரம் இருக்கவில்லை.

இவரைப்போலவே கைகளைப் பிடித்துக்கொண்டே அன்புடன் பேசக்கூடிய மற்றொரு மனிதர் வெங்கட் சாமிநாதன். இலக்கிய சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட நண்பராகப் பேசக்கூடியவர். கண்காட்சிக்கு வந்திருப்பதாக அறிந்தேன். சந்திக்க இயலவில்லை.

சனிக்கிழமை கண்காட்சிக்கு வந்த பிரபலத் தமிழர்... வேறு யாராக இருக்க முடியும்... நம்ம கலாம்தான்.

வழக்கம்போல ஒரு கதை சொன்னார். தான் சொன்ன கவிதையை ( !  ) அரங்கத்தில் இருந்தவர்கள் திருப்பிச் சொல்லும்படிச் செய்தார். கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாணவர்களும் சிறுவர்களும் அவரைக் காணவும் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தால் பேசவும் துடிக்கிறார்கள்.


முந்தைய புத்தகக் கண்காட்சியின்போது தானே வந்தவர், தமிழ்க் கடைகளை எல்லாம் சுற்றி வந்தார். இந்தமுறை அழைப்பின்வழி வந்திருக்கிறார், அதனால் உரை நிகழ்த்தியதுடன் ஒரு சில கடைகளைப் பார்த்து விட்டுப் புறப்பட்டு விட்டார். 


இன்னும் சில திரை நட்சத்திரங்கள் வந்தார்கள், பரூக் ஷேக் மீண்டும் வந்தார். மீண்டும் கூட்டம் அவர் பின்னால் ஓடியது... அமைச்சர் கபில் சிபல்வந்தார், தன் புத்தக வெளியீட்டுக்கு. சிக்கிம் கவர்னர் வால்மீகி பிரசாத் சிங் வந்தார், தன் புத்தகங்களை வெளியிட.

சனிக்கிழமை என்பதால் புத்தக ஆர்வலர்கள் நிறையவே வந்தார்கள். கடைகள் மகிழ்ச்சிப் புன்னகைகளை வெளிப்படுத்தின. ஞாயிறு கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். என் வேலை சனி இரவுடன் முடிந்து விட்டது.
கடைசிநாள் அனுபவத்தை நாளை வெளியிட முயலுவேன்.

வாசிப்பை நேசிப்போம்.

Friday, 2 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 1-3-12

நேற்று இரவு வீடு திரும்ப நேரமாகி விட்டதாலும், காலையில் நண்பர் வேணு அவர்களின் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததாலும் கண்காட்சிக்குத் தாமதமாகவே வர முடிந்தது. வந்த பின் அதிகம் புத்தகங்களை வேட்டையாட முடியவில்லை. இன்று வாங்கியவையும் ஏற்கெனவே வாங்கி பட்டியலில் விட்டவையும் -

  • நினைவின் தாழ்வாரங்கள் - கலாப்ரியா
  • நினைவு அலைகள் - தி.சே. சௌ. ராஜன்
  • தலையில்லாத பையன் - எஸ். ராமகிருஷ்ணன்
  • எனக்கு ஏன் கனவு வருது - எஸ். ராமகிருஷ்ணன்
  • எழுதத் தெரிந்த புலி - எஸ். ராமகிருஷ்ணன்
  • நீள நாக்கு - எஸ். ராமகிருஷ்ணன்
  • பீர்முகமது அப்பா கதைகள்

நியூ செஞ்சுரியில் சிலவற்றைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். நாளை கொஞ்சம் வாங்க வேண்டும்.

நேற்று கண்காட்சிக்கு வந்த பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர் நந்திதா தாஸ். குழந்தைகள் அரங்கில் நிகழ்ச்சிக்கு வந்தவர் திரை அரங்குக்கும் வந்தார். ஏராளமான படங்கள் இருந்தாலும், இந்தப் படம்தான் அவருக்கு நியாயம் சேர்க்கும் என்பது என் கருத்து.


எனக்குப் பிடித்த மிகச்சில நடிகைகளில் முக்கியமானவர். சந்திக்க வேண்டும் என்ற ஆவலும்கூட உண்டு. அவருடைய அம்மா வர்ஷா தாஸ் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளவர்தான் என்றாலும்கூட பின்னால் ஓடும் கூட்டத்துடன் ஓடிப்போய் அவசர அறிமுகம் செய்துகொள்ளும் அரிப்பில்லாததால் சந்திக்க இயலவில்லை. இன்னொரு படமும் நன்றாக வந்திருக்கிறது.


இன்று மையக் கருத்து அரங்கிற்கு வந்தவர் பரூக் ஷேக். ஒருகாலத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், பிறகு சின்னத்திரைக்குச் சென்றார். இன்று இதுபோன்ற அரங்குகளில் அதிகம் பார்க்க முடிகிறது. என்பிடி அழைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் வரக்கூடியவர். கடந்த புத்தகக் கண்காட்சியின்போதும் வந்திருந்தார். வழக்கம்போல ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கையெழுத்து வாங்க போட்டி போட்டார்கள்.



ஒன்று மட்டும் உறுதியானது - திரைப்படங்கள் இந்திய சமூகத்தின்மீது ஏற்படுத்தியதற்கு நிகரான தாக்கம் வேறெந்த நாட்டிலும் சமூகத்திலும் இருக்க முடியாது. யார், என்ன படத்தில் நடித்தார், என்னென்ன வேடங்களில் நடித்தார், வித்தியாசமான பங்களிப்பு ஏதும் அளித்தாரா என்பதெல்லாம் பொருட்டே இல்லை. திரை நட்சத்திரம் என்றால் போதும் - இந்நாள் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, முன்னாள் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் புடை சூழ்ந்துகொள்வதில் தெற்குக்கும் வடக்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஊடகங்களும் இவர்களை முன்வைப்பதில்தான் முனைப்புக் காட்டுகின்றன.

இல்லையேல், இந்த இந்திப்பட வில்லனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இப்படிப் பறப்பார்களா...


இதே இடத்துக்கு எத்தனையோ எழுத்தாளர்கள் வந்திருப்பார்கள். அவர்களுடன் யார் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள்... அல்லது அவர்கள் வந்துபோனதுதான் யாருக்குத் தெரியும்...

நேற்று ஸ்டாலின் குணசேகரன் வந்திருந்தார். மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பின் வாயிலாக ஈரோடு புத்தகக் கண்காட்சியை ஏழாண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருபவர். இந்தக் கண்காட்சியிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்க வந்திருக்கிறார். இன்றும் வந்திருந்த அவரை சந்திக்க இயலவில்லை.

தில்லி அரங்குக்குச் சென்று அங்கிருக்கும் படங்களின் குறிப்புகளை குறிப்பெடுத்துக்கொள்ள நேரம் இல்லாததால் அத்தனையையும் படமாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். அனேகமாக கண்காட்சி முடிந்தபிறகு பதிவு செய்வேன் என்று எண்ணுகிறேன். கண்காட்சிக்கு வருபவர்கள் சில நிமிடங்களை இங்கே செலவு செய்வதற்காக வருந்த மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை.

இன்னும் மூன்று நாட்கள்தான்... இன்னும் கண்காட்சிக்கு வராத நண்பர்களுக்கு தெரிவிக்கத் தவறாதீர்கள்.

வாசிப்பை நேசிப்போம்.