Sunday, 11 March 2012

கொஞ்சம் குசும்பு - கொஞ்சம் நடப்பு


நீயும் இருக்கியே அப்பான்னு சொல்லிக்கிட்டு... முலாயமப் பாரு... 73 வயசுதான் ஆகுது, இருந்தாலும் 38 வயசு மகனுக்கு பதவியைக் குடுத்திட்டாரு. நீயி.... போன தடவை ஆட்சிக்கு வந்தப்போ உனக்கு 80 வயசாகியும் 50 வயசான என்னை முதலமைச்சாரக்க மனசு வரல்லே... இனி எங்கே சான்ஸ் வரப்போகுது...

* * *

இந்து நாளிதழ் சில பிரச்சினைகளில் எந்தவிதமான நிலைபாடுகளை என்ன காரணத்துக்காக எடுக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது - பத்திரிகைத் துறை பற்றி ஓரளவுக்குப் புரிதல் உள்ளவன் என்றாலும்கூட. ஒன்று ஈழத்தமிழர் விஷயம், மற்றொன்று கூடங்குளம் விவகாரம். கூடங்குளம் விவகாரத்திலாவது மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்பதற்காக கூடங்குள ஆதரவுநிலை எடுக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம், ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில்...

இன்றைய இந்து நாளிதழில் ஞாயிறு சிறப்புப் பக்கங்களில் கூடங்குளம்தான் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ஒரு பக்கம் முழுக்க ஆதரவுக்குரல். மறு பக்கத்தில் கால்பகுதி எதிர்புக்குரல் - மாறுபட்ட கருத்துகளுக்கும் நாங்கள் இடம் தருகிறோம் என்று காட்டிக்கொள்ளவோ என்னவோ...

The Hindu Open Page

இந்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியாகிறதா, அப்படியே வெளியாகிறதா என்று பார்ப்போம்.
Dear Sir
First article on Kudankulam Safety in Open Page by Kasinath Balaji & S.V. Jinna - one of the Directors and Engineers in the Plant - provides wrong data. First, they say 20 reactors are operating safely hiding the facts about many accidents which are now open secrets. The image and details say that 2004 tsunami was 2.5 m height whereas it was 10.5 m to 30 m in different places. Exact data is not available since there was no measurement system in place. Even in Mexico the 2004 tsunami height was 2.6 m. The second article on feasibility does not carry the credentials of the author, except his mailing address. It places the very old arguments about the contribution of nuclear power. The third one is interesting. Susan Davis through this writeup makes it open that cooling water was directly pumped back to Chambal river. (Hope she is not penalised for this!)  So, in Kudankulam case, the water will be pumped back into the sea, and there will be no harm! And lo, she argues to value science!  Is it because The Hindu has taken a stand to support Kudankulam that such articles appear a full page and opposing it takes just a quarter page?


ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்டுரைகளில் முதலாவதை எழுதிய இருவர் கூடங்குளத்தில் பணியாற்றுவோர். மற்றொரு கட்டுரையை எழுதியவரின் தொழில்முறைப் பின்னணி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. மூன்றாவது கட்டுரையை எழுதியவர் அணுஉலை ஊழியரின் குடுமபத்தவர் - மனைவியாக இருக்கலாம், அல்லது தாயாக இருக்கலாம்.

முதல் கட்டுரை, சுனாமி-பூகம்பம் உள்ளிட்ட சகல ஆபத்துகளையும் எதிர்கொள்ளும் வகையில்தான் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது என்று துவங்குகிறது. இதற்குத் துணையாக ஒரு விளக்கப்படம் வேறு. முதல் வாதமே முட்டாள்தனமாக முன்வைக்கப்பட்டுள்ளதும், அதவும் கூடங்குளத்தின் இயக்குநரே இவ்வளவு அபத்தமாக வைத்திருப்பதும் வியப்பளிக்கிறது. வாசகர் எவரும் உண்மைகளை அலசி ஆராயப் போவதில்லை, மேலோட்டமாகப் படிப்பவர்கள்தான் என்ற மனப்போக்குதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

முதலாவதாக,
20 அணுமின் உலைகள் சுமார் 350 ஆண்டு அளவுக்கு பாதுகாப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறது கட்டுரை - இது எப்படி இருக்கு. 1991 முதல் இன்று வரை இயந்திரக் கோளாறுகளாலும் மனித கவனக் குறைவுகளாலும் நேர்ந்த விபத்துகள் பட்டியலாக இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி அரசு இதுவரை வாயே திறக்கவில்லை.

இரண்டாவதாக,
கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்திற்கு - அதாவது, சுனாமி தாக்கும் உயரத்திற்கும் அதிகமாக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது, இந்தப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சுனாமியின் ஆபத்து 5.4 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது, 2004 சுனாமியின் உயரம் சுமார் 2.5 மீட்டர் என்று விளக்கமும் படமும் கூறுகின்றன. கட்டுரை எழுதுவதற்கு முன்னால் கொஞ்சம் விவரங்களைத் தேடிப் படித்திருந்தால் 2004 சுனாமியின் உயரம் பல இடங்களில் 15 மீட்டர் என்று தெரிந்திருக்கும் - மேலும் விவரங்களுக்கு - 2004 சுனாமி

2004 சுனாமியின் அதிகபட்ச உயரம் 10.5 மீட்டர் என்று கூறப்பட்டாலும், உயரம் கணக்கிடுவதற்கான அமைப்பு எதுவும் இந்தப் பகுதியில் வழக்கத்தில் இருக்கவில்லை என்பதும், உயரத்தை மதிப்பிட்டுத் தொகுக்கும் பணி நடைபெறவில்லை என்பதும் உண்மை. 2004 சுனாமியின் உயரம் 30 மீட்டர் என்கிறது விக்கிபீடியா. இதற்கு ஆதாரம், நான்கு ஆய்வாளர்களின் கட்டுரை -
2004 சுனாமி உயரம்

அத்துடன், தென்னாப்பிரிக்கத் தீவு ஒன்றில் இதே சுனாமியின் உயரம் 1.5 மீட்டர், பசிபிக் கடலில் மெக்சிகோவின்மீது சுனாமியின் உயரம் 2.6 மீட்டர். இத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து சென்ற பிறகும் மெக்சிகோவில் அலையின் உயரம் அதிகமாகவும், கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் உயரம் குறைவாகவும் இருந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் இன்றும் வியந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்மை இப்படி இருக்கையில், 2004 சுனாமியின் உயரம் 2.5 மீட்டர் என்பதும், எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச உயரம் 5.4 மீட்டர் என்பதும் முழு உலையை உப்புமாவுக்குள் ஒளிக்கும் முயற்சியன்றி வேறென்ன...


இது எத்தனை மீட்டர் ...

மூன்றாவதாக,
கூடங்குளம் அமைந்திருப்பது பூகம்ப ஆபத்து மண்டலம்-2இல் (seismic zone) என்கிறது முதல் கட்டுரை. இதே இந்து நாளிதழில் நவம்பர் 6ஆம் தேதி அப்துல் கலாம் பேசியதைக் குறிப்பிடும்போது, கூடங்குளம் எந்த பூகம்ப ஆபத்து மணடலத்திலும் இல்லை என்றும் வெளியாகியுள்ளது.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2603911.ece
இதில் எது உண்மை...

செஸ்மிக் ஸோன்-2 என்றால் ஆபத்துக்குறைவான மண்டலம் என்கிறது இந்திய அரசின் ஒரு துறை -  www.imd.gov.in/section/seismo/static/welcome.htm
 நம் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுக்கோ அது ஆபத்தே இல்லாத மண்டலம் என்று தோன்றுகிறது. அப்புறம் என்ன செய்ய, அவர் சொல்லிவிட்டால் அப்படியே ஏற்கத்தானே வேண்டும்....

சரி, செஸ்மிக் ஸோன்-2 என்பது மிகக் குறைவான ஆபத்து மண்டலம் என்றே வைத்துக்கொள்வோம். இந்தியக் கண்டத்தட்டும் பர்மியத் துணைத்தட்டும் சந்திக்கிற பகுதி தீவிர ஆபத்துப்பகுதியில் இருக்கிறது என்பதையும், இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதையும் யாராவது மறுக்க முடியுமா... இப்பகுதியில் மேலும் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
http://www.drgeorgepc.com/Tsunami2004Indonesia.html

கூடங்குளம் நிலநடுக்கப் பகுதியில் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும், கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் மேற்கோடியில் மெக்சிகோவில் சுனாமி தாக்கியதைக் கணக்கில் கொண்டால், எதிர்காலத்தில் எத்தனைஅடி உயர சுனாமி கூடங்குளத்தைத் தாக்கும் என்று யாருடைய ஜோதிடத்தை நம்புவது...


முதல் கட்டுரையின் அடுத்த பகுதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்று விளக்குகிறது. புகுஷிமாவுக்குப் பிறகு, இயற்கையின் சீற்றத்தை யாரும் முன்கணிக்க முடியாது என்பது போலவே, மனிதத் தவறுகளும் இயந்திரக் கோளாறுகளும் எந்தவிதத்தில் நிகழும் என்று யாரும் ஊகிக்க முடியாது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு விபத்தும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத்தரும்போது புதிய விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இரண்டாவது கட்டுரையாளர், மின்சாரத்திற்கு மாற்று வழிகள் கவர்ச்சியானவைதான் ஆனால் கட்டுபடியாகாது என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். உலக நாடுகளின் அணு மின்சாரப் பங்கினைச் சுட்டுகிறார். இதில் புதிய விஷயம் ஏதுமில்லை. அவர் சொல்லாமல் விட்டது - 14000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம், அதன் 40 ஆண்டுகால ஆயுளில் 40000 கோடி ரூபாயையும் விழுங்கி விட்டு, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்போகிற அணுக்கழிவுகளுக்கு எவ்வாறு செலவு செய்யப்போகிறோம், அதை எங்கே புதைக்கப்போகிறோம், அதன் கட்டுபடிச் செலவு என்ன... இதையெல்லாம் சொன்னால் கட்டுபடியாகாது அவருக்கு.

மூன்றாவது கட்டுரைதான் சுவையானது. "ராவத்பட்டா அணுஉலையைக் குளிர்விக்கப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்ட கழிவுநீர் சம்பல் நதியில் விடப்பட்டது. நான் கருவுற்றிருந்த காலத்திலும்கூட அதே நதியின் நீரை - கொதிக்க வைக்காமலேகூட - அப்படியே நான் குடித்து வந்திருக்கிறேன். எனக்கு எதுவும் ஆகிவிடவில்லை" என்று கட்டம்போட்டு பறைசாற்றுகிறார் சூசன் டேவிஸ் என்பவர். 

ராவத்பட்டா அணுஉலையில் கழிவுநீர் சம்பல் நதியில் விடப்பட்டது என்று ஒத்துக்கொண்டமைக்காக நன்றி தெரிவிக்கலாமா...

உங்களுக்கு ஒண்ணும் ஆகலைங்கிறதுல ரொம்ப சந்தோஷமுங்க...
அணு உலையில வேலை செய்யறவரோட மனைவியான / தாயான நீங்க கனநீரையே குடிச்சு, அணு உலையிலேயே சமைச்சுச் சாப்பிடுங்க. நாங்க வேண்டாங்கலே. ஆனா, We try to teach them (our children) to value science, not to denounce it... அப்படீன்னு சொல்றீங்களே... அணு சக்தி மட்டும்தான் விஞ்ஞானமுங்களா...

They are not frogs in a well அப்பிடீன்னு எழுதியிருக்கீங்க. யாரைச் சொல்றீங்க... அணுஉலையில வேலை செய்யறவங்களையா, உங்களைப் போல குடும்பத்தவங்களையா, இல்லே உங்க குழந்தைங்களையா... நீங்க கிணத்துத் தவளை இல்லைதானுங்களே... அப்ப ஒண்ணு செய்யுங்களேன்.

  • 2009இல கைகா உலையில கதிரியக்கத் தண்ணியக் குடிச்சவங்க என்ன ஆனாங்க, அவங்க இப்ப எப்பிடி இருக்காங்கன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா...
  • 2003இல கல்பாக்கத்துல 6 பேருக்கு கடுமையான கதிரியக்கம் ஏற்பட்டதாமே... அவங்க இப்ப எப்பிடி இருக்காங்க...
  • 1991இல கல்பாக்கத்துல கனநீரைக் கலந்து பெயின்ட் அடிச்ச ஒரு கான்டிராக்ட் லேபர் பத்தி தகவலே தெரியாதாமே... அவரைக் கொஞ்சம் வெளியே கொண்டாந்து காட்டறீங்களா...

இப்பிடி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.

வெளிய தெரிய வந்ததே கொஞ்சம்தான். அதுவே இவ்வளவு பெரிய பட்டியல். அப்படியானால் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டவை எவ்வளவு இருக்கும்...

எதிர்ப்பக்கத்தில் எதிர்ப்புக் கட்டுரை எழுதியிருப்பவர் ஜே.வி. விளநிலம் என்பவர். தகவல்தொடர்பு ஊடகக் கல்வித்துறையாளர். கேரளத்தில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர். அமெரிக்காவில் வசித்த ஹெலன் கால்டிகாட் என்ற மருத்துவர் எழுதிய அணுசக்தி வெறி - Nuclear Madness - என்ற நூல் இன்றும் பொருந்துமா என்று அலசுகிறார். சூசன் டேவிஸ் பார்வையில் இவரும் கிணற்றுத் தவளையா

மக்களாட்சியின் மகத்தான அம்சமே கருத்துச் சுதந்திரம்தான். அதே சுதந்திரம்தான் என்னையும் எழுத அனுமதிக்கிறது. ஆனால், ஒரு நிலைபாடு எடுத்து விட்டோம் என்பதற்காக அதைக் குருட்டுத்தனமாகப் பிடித்துக்கொண்டு தொங்குவது நூற்றாண்டு கண்ட பத்திரிகைக்கு அழகல்ல.  

1 comment:

  1. sir captain maathiri pullivivarathoda..... wow delhi captain sir neenga

    ReplyDelete