Thursday, 8 March 2012

மின்வெட்டுத் தந்திரம்


தமிழகத்திற்கு டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சென்றிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பண்பாட்டு அதிர்ச்சி என்ற பதிவில் எழுதியிருந்தேன். புத்தகக் கண்காட்சி வேலைகள் காரணமாக நீண்டநாள் பேசாமலிருந்த என் நண்பனுடன் இன்று தொலைபேசியில் பேசியபோது அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தன.

இரவு 10 மணிக்கு பொதுவாக அவன் ஆலையில் வேலையில் இருப்பான், சூபர்வைசருக்கு வேலையும் அதிகம் இருக்காது என்பதால் இரவில் நாங்கள் உரையாடுவது வழக்கம். இன்று அழைத்தபோது அவன் வீட்டில் இருப்பதாகச் சொன்னான். காரணம் கேட்டபோது, மாதத்தில் 10 நாட்கள்தான் ஆலை இயங்குகிறது, மின்வெட்டு என்றான். 

அதுமட்டுமல்ல, சென்னைக்கு மட்டும் தினமும் 2 மணிநேர வெட்டு, இதர பகுதிகளுக்கு 4 மணிநேர வெட்டு - ஆனால் உண்மையில் இதர பகுதிகளில் எட்டு முதல் 12 மணி நேரம் வரை மின்வெட்டு என்பதுதான் எதார்த்தம் என்றான். எங்கள் ஊரில் சராசரியாக 8-9 மணிநேரம் வெட்டாம். இன்று - புதன்கிழமை - நாளைய பள்ளித்தேர்வுகள் காரணமாகவோ என்னவோ, வெட்டு குறைந்திருக்கிறது என்றான்.

நாளுக்கு 2-4 மணிநேர வெட்டு என்பதையே கற்பனை செய்ய முடியவில்லை. 8-12 மணி நேர வெட்டை எப்படி சமாளிக்கிறார்கள் என்று கேட்டால், என்ன செய்ய, பழக்கப்படுத்திக்கொள்வதுதான் என்றான். கோடை வேறு நெருங்கி வருகிற நிலையில் தமிழக மக்களின் நிலையை எண்ணினால் ... அடிக்கடி பயன்படுத்துகிற நகைச்சுவையை பரிமாறிக்கொண்டோம்.

ஒருவன் சோதிடரிம் போனான். சோதிடர் அவன் கையைப் பார்த்துவிட்டு, ஒரு ஆறுமாத காலம் நாய் படாத பாடு பட வேண்டும் என்றார்.
அதற்கப்புறம்... - கேட்டான் அவன்
சோதிடர் சொன்னார் - அதுவே பழக்கமாகி விடும்.

சராசரியாக தமிழகத்துக்குத் தேவை 11000-12000 மெவா. கிடைப்பது 8000 மெவா. அப்படியானால் பற்றாக்குறை 3000-4000தானே... பிறகு எதற்காக இவ்வளவு வெட்டு...

அது என்ன சென்னை மட்டும் செல்லப்பிள்ளையா... மற்ற பகுதிகள் பாவப்பட்ட ஜென்மங்களா... சென்னையில் வெட்டு என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் - மென்மையாகவேனும் - குத்திக்காட்டும் என்பதாலா... 

தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்துக்கு பணம் தராததாலும் அரசின் பிடிவாதப் போக்காலும் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தைக் கேட்டு வாங்குவதற்கு என்ன தடை... மத்திய அரசிடம் இதற்காக சண்டை போட்டாலும் நல்லதுதானே... யூனிட் 12 ரூபாய் என்றாலும் பரவாயில்லை, வாங்கி மக்களுக்கு வழங்கலாமே... இலவசங்கள் தருவதைவிட மின்சாரம் தருவதுதானே முக்கியம்...  

கிரைண்டர், மிக்சி, மின்விசிறி - மூன்றுமே மின்சாரம் இல்லாமல் எப்படி இயங்கும் என்பது ஒருபுறம் இருக்க, முந்தை இலவசமான தொலைக்காட்சியுடன் இந்த மூன்றும் சேரந்து மின்பயன்பாட்டை அதிகரிக்க அல்லவா செய்துவிட்டன. மிக்சியோ கிரைண்டரோ இல்லாமல் கையால் அரைத்துக்கொண்டிருந்தவர்களும் இவற்றைப் பயன்படுத்திப் பழக்கப்படுத்தி விடுகிறது அல்லவா இந்த இலவசத்திட்டங்கள்...

2012 ஆகஸ்டுக்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என்று ஜெயலலிதா சொன்னது வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருந்து விட்டுப் போகட்டும். இப்போது 2013 மத்திக்குள் மின்பற்றாக்குறை இல்லாமல் ஆக்குவேன் என்பது என்ன கணக்கு... 

எல்லாவற்றுக்கும் மேலே பெரியதொரு சந்தேகம் எழுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் அந்த சந்தேகம் தீர்வுபெறும்... ஆம், மைய அரசிடம் கூடுதல் மின் ஒதுக்கீடு கேட்காமல் இருப்பதும், அதிகத் தொகை கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்காமல் இருப்பதும், 30 விழுக்காடு பற்றாக்குறைக்கு மாநிலம் முழுவதும் 50 சதவிகித நேர மின்வெட்டும் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.


ஆம், மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களை, கூடங்குளம் வந்தால் கொஞ்சமேனும் நிவாரணம் கிடைக்கும் என்ற மனநிலைக்கு மாற்றுவதுதான் இதன் தந்திரமோ... அதற்காகத்தான் மக்களை வாட்டுகிறார்களோ...

கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசின் அமைதி இதைத்தான் சுட்டுகிறது. தேர்தல் நேரத்தில் கூடங்குளத்தை அனுமதிப்பதாக அறிவித்தால் ஆளும் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம். எந்தவொரு இடைத்தேர்தலும் ஆளும் கட்சிக்கு - அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி - அதிமுக்கியம். முந்தைய ஆட்சியில் திருமங்கலத்தில் பணவிநியோகம் இதற்கு உதாரணம். 

ஆகசங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கூடங்குளம் பாதுகாப்பானது என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது, கூடங்குளத்தை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவிக்கலாம் - தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று நாராயணசாமி கூறுவதன் பின்னணி இதுவாகவே இருக்கும்.

கூடங்குள எதிர்ப்பில் முன்னிலை வகிக்கும் கிருத்துவ அமைப்புகள்மீது - அரசுசாரா அமைப்புகள்மீது - மைய அரசு - பிரதமரும்கூட - அந்நியநிதி... தவறாகப் பயன்படுத்தல்... என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தியதும் வழக்கு மிரட்டல்கள் விடுப்பதும் வருந்தத்தக்கது என்பது ஒருபுறம் இருக்கட்டும். கூடங்குளம் தமிழர்களுக்கு எதிரானது என்று தமிழ்த்தேசியவாதிகளும், கிறித்துவர்களுக்கு எதிரானது என்று கிறித்துவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கூறுவது ஒருபக்கம் இருக்கட்டும். இது மனிதகுலத்துக்கே எதிரானது என்பது மக்களுக்குப் புரியாதவரை கூடங்குளம் வந்தால் மின்வெட்டுப் பிரச்சினை தீரும், அணுஉலைகளும் அணுமின்சாரமும் தேவை என்பதே பொதுக்கருத்தாக இருக்கும்.

இதில் ஒரே ஒரு ஆறுதல் - அப்துல் கலாம் தேவையின்றி தலையிட்ட பிறகு, அவர் எதற்காக வரிந்து கட்டிக்கொண்டு கூடங்குள ஆதரவுநிலை எடுக்க வேண்டும் என்ற கேள்வி பரவலாக மக்களை அடைந்திருக்கிறது. கூடங்குள ஆதரவு நிலை எடுத்த சாமானிய மக்கள் மத்தியில்கூட சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்தான்.

மின்பகிர்மானத்தில் இழப்பை சரிசெய்தல், பெருநகர்களில் பெருநிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கலை நெறிப்படுத்தல், குண்டுவிளக்குகளுக்குப் பதிலாக மின்சிக்கன விளக்குகளைப் பரவலாக்குதல், மக்கள் மத்தியில் மின்சிக்கன வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கல் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் பதிலாக அரசு திருவாளர் முத்து போன்ற வீடியோ பிரச்சார உத்திகளை மேற்கொள்ளப் போகிறதாம். இந்த கார்ட்டூன் படத்தில் தலைப்பு - ஒரு மகிழ்ச்சியான கிராமத்தின் கதை- என்று காட்டப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான கிராமமா... நம் நாட்டிலா... நெருக்கடிநிலைக் காலத்தில் அரசின் வானொலி விளம்பரங்கள் நினைவுக்கு வருகின்றன. 

மீனவருடன் ஒரு நேர்காணல் -
கேள்வி - திரு .... அவர்களே, உங்கள் இன்றைய மீன்பிடி தொழில் எப்படி இருந்தது
மீனவர் - ரொம்ப நல்லா இருக்குங்க...
கேள்வி - கொஞ்சம் விளக்கமாச் சொல்றீங்களா
மீனவர் - முன்னாடியெல்லாம் கடலுக்குள்ள 15-20 மைல் போனாலும் ஒரு அயிரக்குஞ்சுகூடக் கிடைக்காதுங்க. ஆனா இந்த இருபது அம்சத்திட்டம் வந்த பின்னாடி நாங்க கடலுக்குள்ள போகவே வேணாம். சும்மா அப்பிடி கரையோரமா தண்ணில இறக்கினாலே போதும்... பெரிய பெரிய மீனெல்லாம் தானாவே படகுக்குள்ள வந்து குதிச்சுருது.

ஒருவேளை கூடங்குளம் இயங்கத் துவங்கி விடுகிறது என்றே வைத்துக்கொண்டாலும் - அப்படித்தான் நடக்கும் என்று தோன்றுகிறது - மக்கள் மத்தியில் எழுந்துள்ள விழிப்புணர்வே மிகப்பெரிய வெற்றிதான்.

இதை எழுதும்போது காணக்கிடைத்த ஒரு பதிவை நீங்களும் படிக்க வேண்டும் என விழைகிறேன்... 


மற்றொரு இணைப்பு - நூலை பிடிஎப் வடிவில் பதிவிறக்கலாம் - ம.க.இ.க. கருத்துகளில் எனக்கும் முழு உடன்பாடு இல்லை என்றாலும்கூட - அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய பிரசுரம் இது.


கூடங்குள ஆதரவாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தெளிவாகவும் ஆதாரங்களுடனும் ஞாநி உள்பட பலர் பலப்பல பிரசுரங்களை வெளியிட்டும் எழுதியும் வந்த பிறகும் அதே கேள்விகளை மீண்டும் மீண்டும் எழுப்புகிறார்கள் அவர்கள். ஒருவேளை இவர்கள் பதிலளித்துக்கொண்டே இருந்து தம் நேரத்தை வீணடிக்கட்டும் என்ற நோக்கமோ...

கூடங்குளத்தில் ரஷ்யா என்றால் ஜைதாபூரில் பிரான்சின் அரிவா. சுமார் 50000 கோடி ரூபாயில் அணுசக்திப் பூங்காக்கள் இந்தியாவில் அமைப்பதில் அரிவா ஈடுபடுகிறது. அணு மின்சாரம் வேண்டாம் என்று பிரான்ஸ் முடிவு செய்தபிறகு இந்த அரிவா பெரும் சிக்கலில் இருக்கிறது. 2011 டிசம்பரில் 2.1 பில்லியன் டாலர் நஷ்டம் அறிவித்திருக்கிறது. புகுஷிமாவுக்குப் பிறகு அரிவாவின் தீவிர இலக்கு இந்தியா போன்ற ஊழல் மலிந்த நாடுகளாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் இந்தியாவில் இது ஒப்பந்தம் போட்டிருக்கும் திட்டங்களின் மதிப்பு 12.3 பில்லியன் டாலர் - 600 பில்லியன் ரூபாய். ஆஹா... பத்து பர்சென்ட் கணக்குப் போட்டுப் பார்த்தாலே தலை சுற்றுமே...

இங்கேதான் அறிவுக்கு இடம் கொடுப்பதைவிட அரிவாவுக்கு இடம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அதிகம். நாம் இதையெல்லாம் அறிந்திருந்தும் என்ன செய்ய... தேனெடுத்தவன் புறங்கையை நக்கவே செய்வான் என்ற பழமொழி பரவலாக இருக்கும் நம் நாட்டில், தேன் முழுவதையும் அவன் எடுத்துக்கொண்டு புறங்கையை மட்டும் நமக்கு நீட்டினாலும் நக்கிக் கிடக்கத்தானே நாம் துடித்துக் கொண்டிருக்கிறோம். இதை மறைக்கத்தான் யார் நியாயமான கேள்வி எழுப்பினாலும் நீ என்ன அணு விஞ்ஞானியா... நீ இந்து விரோதி, அந்நிய சதி, அமெரிக்க நிதி என்று திசை திருப்புகிறோம். வாழ்க் தேசபக்தி. 

அறிவை அடகு வைப்பதில் அரசியல்வாதிகளுக்கு லாபம்தான். உங்களுக்கும் எனக்கும்... 

கடைசியாக இரண்டு செய்திகள், இன்றைய இந்து நாளிதழில் - ஒன்று, தலையங்கப் பக்கத்தில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரை. மற்றொன்று, புகுஷிமா விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர் இந்தியாவில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வருவதை தடை செய்யும் வகையில் அவருடைய விசாவை ரத்து செய்துள்ளது மைய அரசு. புகுஷிமாவில் தப்பிய ஐந்துபேர் டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு விசா மறுத்த ஒரே நாடு இந்தியாதான் என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு.

அடேயப்பா... எலும்புத்துண்டுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது....


2 comments:

  1. அருமையான அலசல்.நடுநிலையோடு பல செய்திகளை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.விவரமுள்ள நல்ல இதழாளர் என்பதை நிலைநாட்டியிருக்கிறீர்கள்.தமிழ்ப் பத்திரிகைகள் உங்களைப் போன்றவர்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.இதை எல்லோரும் அறியும் வண்ணம் தமிழ் மணம் போன்ற கருத்துக் குழுவிற்கு அனுப்பவேண்டும்.தொடர்ந்து எழுதுங்கள்.
    கி.நாச்சிமுத்து,புது தில்லி

    ReplyDelete
  2. Honestly, It is alsmost 10-12 hours electricity cut in my village though we are nearer to Sankarankovil.

    ReplyDelete