Sunday, 4 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 2 & 3-3-12

கண்காட்சியில் வேலைகள் இவ்வளவு வாட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நாளும் விடிகாலை 4 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிந்தது. சனிக்கிழமை இரவு வேலை முடிந்து ஞாயிறு காலை 5 மணிக்குத்தான் திரும்பியிருக்கிறேன். இன்றைய செய்தி மடல் எட்டு பக்கங்களுடன் வரும் என்பது காரணம்.

ஸ்டாலின் குணசேகரன் வெள்ளிக்கிழமை சந்தித்தேன். பைகள் நிறைய புத்தகங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் இருந்தார். அலுவலகத்தில் அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


இங்கே எத்தனை பேருக்கு அவரைத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இவர் எழதியதும் மற்றவர்கள் எழுதியதும் சேர்த்து இவர் தொகுத்த விடுதலை வேள்வியில் தமிழகம் என்னும் நூல் விடுதலைக்கு தமிழகம் ஆற்றிய பங்கின் சிறப்பான பதிவு. வரலாறு நமக்கு எந்த அளவுக்கு தெரியாதோ அதே அளவுக்கு இவரையும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது நம் துரதிருஷ்டம். இந்த வரிகளை எழுதும்போது தில்லியில் ஒருகவியரங்கில் வரலாற்றைப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றிய என் கவிதை நினைவு வருகிறது. தேடிப் பிடித்து பிறிதொருநாள் பதிவிடுகிறேன்.

மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பை நிறுவி, ஈரோடு புத்தகக் கண்காட்சியை கடந்த ஏழாண்டுகளாக சிறப்பாக நடத்தி வருபவர் ஸ்டாலின் குணசேகரன். தமிழகத்தின் முக்கியப் புத்தகத் திருவிழாக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கும் ஈரோடு கண்காட்சி பற்றி நான் இங்கே எழுதுவதைவிட சுட்டியைக் கொடுப்பது வசதி.

ஸ்டாலின் குணசேகரன்

திரைப்பட நட்சத்திரங்களின்பாலான மோகம் குறித்த என் முந்தைய பதிவைப் படித்த பதிவர் ஒருவர், இவ்வளவு காட்டமாக எழுத வேண்டுமா என்று அரட்டையில் கேட்டிருந்தார். முதலாவதாக, அதில் இருந்தது காட்டம் அல்ல, இயலாமை கலந்த வெறுப்பு. கீழே இன்னொரு படம் தருகிறேன் பாருங்கள். இவர் யார் என்று உங்களில் யாருக்கும் தெரியுமா...



படத்தைப் பார்த்தால், திரையுலகைச் சேர்ந்தவருக்கான சகல அம்சங்களும் தெரிகின்றன. யாராக இருக்கும்... முகத்தைப் பார்த்து அடையாளம் காணுங்கள்.


ஜுஹி பர்மார் என்ற தொலைக்காட்சி நடிகையாம். இவரைப்போன்ற ஆயிரம்பேர் அன்றாடம் தில்லியின் சாலைகளில் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மிகப் பிரபலங்கள் தவிர இவரைப் போன்றவர்களை யாரும் அடையாளம் கண்டுகொண்டிருக்க முடியாது. ஏதேனும் நிகழ்ச்சியில் இவர்களை முன்னிலைப்படுத்தும்போதுதான் ஓஹோ... இவரும் நடிப்புத் துறையைச் சேர்ந்தவர் என்று புரியும். உடனே பிறந்து விடுகிறது மோகம்... கையில் கிடைத்த காகிதத்தில் கையெழுத்து வாங்கும் வேகம். யாரேனும் ஒருவர் கையெழுத்து வாங்க முனைய, மற்றவர்களும் மொய்த்துக் கொள்கிறார்கள். இந்த ஆட்டு மந்தைப் புத்தியை என்னவென்று சொல்ல....

தமிழ்க் கடைகளை அவ்வப்போது சுற்றிவந்தபோது அறிமுகமான பலரைப் பார்க்க முடிந்தது. என் பதிவில் அளித்த செய்தி உதவியாக இருந்ததாக அவர்கள் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது. சனிக்கிழமை சந்தித்தவர்களில் குறிப்பிட வேண்டியவர் டாக்டர் ரவீந்திரன். சுரேஷுடன் காலச்சுவடில் சந்தித்தேன்.


இன்றைய தில்லி பதிவர்களில் பலருக்கும் இவரைத் தெரிந்திருக்காது. தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழத்துறைப் பேராசிரியராக இருந்தவர். நாடக இயக்கத்தில் தீவிர ஆர்வம் உடையவர். பென்னேஸ்வரனின் யதார்த்தா நாடகங்கள் பலவற்றுக்கும் ஒளியமைப்பில் உதவியவர். தகுதி பாராமல் அன்போடு கரம்பற்றிப் பேசும் இனிய பண்புகொண்டவர். இப்போது பாண்டிச்சேரியில் குடியமர்ந்து விட்டதாகச் சொன்னார். இப்போதும் நாடக உலகுடன் தொடர்பில் இருக்கிறார் - அப்படி இல்லாமல் இருக்கவும் இவரால் முடியாது. அதிகம் பேச நேரம் இருக்கவில்லை.

இவரைப்போலவே கைகளைப் பிடித்துக்கொண்டே அன்புடன் பேசக்கூடிய மற்றொரு மனிதர் வெங்கட் சாமிநாதன். இலக்கிய சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட நண்பராகப் பேசக்கூடியவர். கண்காட்சிக்கு வந்திருப்பதாக அறிந்தேன். சந்திக்க இயலவில்லை.

சனிக்கிழமை கண்காட்சிக்கு வந்த பிரபலத் தமிழர்... வேறு யாராக இருக்க முடியும்... நம்ம கலாம்தான்.

வழக்கம்போல ஒரு கதை சொன்னார். தான் சொன்ன கவிதையை ( !  ) அரங்கத்தில் இருந்தவர்கள் திருப்பிச் சொல்லும்படிச் செய்தார். கேள்விகளுக்கு பதில் அளித்தார். மாணவர்களும் சிறுவர்களும் அவரைக் காணவும் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தால் பேசவும் துடிக்கிறார்கள்.


முந்தைய புத்தகக் கண்காட்சியின்போது தானே வந்தவர், தமிழ்க் கடைகளை எல்லாம் சுற்றி வந்தார். இந்தமுறை அழைப்பின்வழி வந்திருக்கிறார், அதனால் உரை நிகழ்த்தியதுடன் ஒரு சில கடைகளைப் பார்த்து விட்டுப் புறப்பட்டு விட்டார். 


இன்னும் சில திரை நட்சத்திரங்கள் வந்தார்கள், பரூக் ஷேக் மீண்டும் வந்தார். மீண்டும் கூட்டம் அவர் பின்னால் ஓடியது... அமைச்சர் கபில் சிபல்வந்தார், தன் புத்தக வெளியீட்டுக்கு. சிக்கிம் கவர்னர் வால்மீகி பிரசாத் சிங் வந்தார், தன் புத்தகங்களை வெளியிட.

சனிக்கிழமை என்பதால் புத்தக ஆர்வலர்கள் நிறையவே வந்தார்கள். கடைகள் மகிழ்ச்சிப் புன்னகைகளை வெளிப்படுத்தின. ஞாயிறு கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருக்கும். என் வேலை சனி இரவுடன் முடிந்து விட்டது.
கடைசிநாள் அனுபவத்தை நாளை வெளியிட முயலுவேன்.

வாசிப்பை நேசிப்போம்.

1 comment:

  1. ஒவ்வொரு நாளும் உங்கள் பக்கம் மூலம் கண்காட்சி பற்றிய நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நண்பரே.... அதற்கு எனது மனமார்ந்த நன்றி...

    நேற்று நானும் வந்திருந்தேன். அலுவலகம் பக்கம் வந்தேன். சந்திக்க முடியவில்லை...

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete