Sunday 4 March 2012

உலகப் புத்தகக் கண்காட்சி - 4-3-12

உலகப் புத்தகக் கண்காட்சியின் நாளாந்திரப் பதிவுகளின் கடைசிப் பதிவு இது. இன்னும் சுவாரசியமான புகைப்படங்களும் தில்லி அரங்கம் பற்றிய பதிவும் விரைவில் எழுத வேண்டும்.

கடைசி நாள். நேற்றுடன் வேலை முடிந்து விட்டது. இன்றைய நிகழ்வுகளை நாளை வெளியிட்டால் யாரும் இருக்கப்போவதில்லை என்பதால் கடைசி நாளுடன் செய்தி மடல் முடிந்து விடும். எனவே குடும்பத்துடன் முழுநாளும் கடைகளைச் சுற்றி வருவது வழக்கம். இன்றும் அதுவே நிகழ்ந்தது. ஒரே ஒரு வித்தியாசம் - கூட ஜிஜி குடும்பமும். எல்லாரையும் ஓடவைக்க பொடியன் ஜஸ்வின்.


காலையில்தான் வீடு திரும்பி சற்று நேரம்தான் தூங்கினேன் என்றாலும் பதினொரு மணி சுமாருக்குப் புறப்பட்டு விட்டோம். காலச்சுவடில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த புத்தகங்களுடன் இன்னும் கொஞ்சம் வாங்கி பர்சின் கனம் குறைந்தது.

மாலையில் லால் சவுக்-கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாகித்ய கலா பரிஷத் உபயம். ஒருநாள்கூட போய் பார்க்க முடியவில்லை. இன்று எட்டிப் பார்க்கலாம் என்று போனால்... காதைக் கிழிக்கும் இரைச்சல், இதயத்தை அதிர வைக்கும் ஸ்பீக்கர்கள் வைத்து இந்தியில் புதிய பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.  ஓரிரு நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியாமல் கிளம்பி விட்டோம்.

உல்ளே நுழைந்தது முதல் ஏழாம் அரங்கிலிருந்து 8-9-10-14ஆம் அரங்குகளுக்குச்சென்று விட்டு மீண்டும் 12க்கு வந்து ஏழுக்குச் சென்று ஆங்கிலப் புத்தகங்களைக் காண 1ஆம் அரங்கம்... நடந்து நடந்து கால்கள் இற்றுப்போய் வீடு திரும்பும்போது இரவு 9 மணி.


தமிழ்க் கடைக்காரர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டேன். இந்த முறை வியாபாரம் முன்னைவிட நன்றாக இருந்தது என ஒவ்வொருவரும் கூறினார்கள். அதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் திருப்தி. அடுத்தமுறை ஸ்டாண்டுக்குப் பதிலாக ஸ்டால் எடுக்கப்போவதாக சந்தியா பதிப்பகத்தார் கூறினர்.

கிழக்கு நேரடி விற்பனை செய்யாதது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பது என் கருத்து. நான் ஒரு புத்தகம்கூட ஆர்டர் செய்யவில்லை. புத்தகத்தை தேர்ந்தெடுத்து பின்அட்டையைப் பார்த்து, முன்னுரை படித்து, பிறகு விலையையும் பார்த்து வாங்குவதுதான் எனக்குப் பிடித்தமானது. வெறும் கேட்லாக் பார்த்து வாங்குவது பிரபல எழுத்தாளரின் பிரபல புத்தகத்திற்கு, அல்லது ஏற்கெனவே விமர்சனம் படித்திருந்த புத்தகங்களுக்கு மட்டும்தான் சாத்தியம். தில்லி வாசகர்களில் பலர் என்போல சிந்திக்கக்கூடியவர்களாக இருக்க பெரிதும் வாய்ப்பு உண்டு. எனவே, பத்ரி இதைப் படித்தால், அடுத்தமுறை பழையபடி நேரடி விற்பனை பற்றி யோசிக்கட்டும்.

இன்று மாலை பல கடைகளில் ஆறு மணிக்கே ஏறக்கட்டி விட்டார்கள். ஆங்கிலக் கடைகள் சிலதில் கடைசிநேர சிறப்புத் தள்ளுபடி இருந்ததில் பெரியவள், சின்னவள் இருவருக்குமே லாபம்.



கண்காட்சி என்ற சொல்கூட பொருத்தமில்லை, திருவிழா என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி முடிந்து திரும்புகிற நாள் ஒருவித இறுக்கம் மனதைக் கவ்விக்கொள்கிறது. ஏதோ கல்யாண வேலை முடிந்து மணமகளை அனுப்பிவைத்துவிட்ட பெற்றோனின் மனநிலை போல.

அடுத்த புத்தகத் திருவிழா 2014 பிப்ரவரி மத்தியில் நடைபெறும். அமைச்சர் அறிவித்ததுபோல அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது இன்னும் தெரியவில்லை. அடுத்த திருவிழாவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அடுத்த முறையும் எனக்குப் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்க வேண்டும்...

வாங்கிய புத்தகங்களின் பட்டியல் நீளமாக இருக்கும் - அடுத்த பதிவில்...

வாசிப்பை நேசிப்போம்.

2 comments:

  1. திருவிழா என்பது உண்மைதான்..இந்தமுறை தான் நானும் திருவிழாவை நல்லா கொண்டாடினேன்..

    ReplyDelete
  2. அழகாய் சொல்லியிருக்கிறிர்கள்...

    ReplyDelete