Sunday 25 March 2012

ரஜினி சக்தி

இன்று வித்தியாசமான ஒரு வலைதளம் பற்றிய செய்தி கிடைத்தது. உங்களில் சிலர் பார்த்திருக்கலாம், பார்க்காதவர்களுக்காக பகிர்ந்து கொள்வது சுவையாக இருக்கும்.

ரஜினிகாந்த் வலைதளத்தை வடிவமைத்திருக்கிறது தேசிமார்டினி என்ற நிறுவனம். நம்ப முடியாத ரஜினி சாகசங்களை பிரதிபலிக்கும் வகையில், இந்த தளத்தை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல்தான் பார்க்க முடியும் என்று சவால் விடுவதுதான் இதன் சிறப்பு.

இதில் சுவை என்னவென்றால், வலைதளத்தில் நுழைந்ததும் - இந்த வலைதளம் ரஜினி சக்தியால் இயங்குகிறது, இணைய இணைப்பைத் துண்டிக்கவும் - என்று எச்சரிக்கை வரும். துண்டித்த பிறகுதான் மேலே தொடர முடியும்.

enter image description here 

பின்னணி இசையும் (டண்டணக்கு டண்டணக்கு), தொடரும் விவரங்களும்கூட சுவையாகவே இருக்கின்றன. ரஜினியைப் பிடிக்காதவர்களாக இருந்தாலும்கூட உங்கள் உதட்டில் புன்னகை மலராமல் இருக்காது. 

சரி, வலைதளத்தில் நுழைந்தபிறகு மீண்டும் இணைய இணைப்பை செயல்படுத்தினால் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்று உங்களுக்கு வருகிற அதே சந்தேகம் எனக்கும் வந்தது. இணையத்தில் இணைந்தால் மீண்டும் எச்சரிக்கை வரும் - இணையத்தைத் துண்டியுங்கள் என்று.

allaboutrajni2 

தி லிஜண்ட் பகுதியின் குசும்புத்தனம் அருமையாக இருக்கிறது. இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா, இணைப்பு எங்கே என்று கேட்பவர்களுக்கு, இதோ கீழே. 

இணைய இணைப்பு இல்லாமல் எப்படி இயங்குகிறது என்று அறிய விரும்புவோர் இன்னும் கீழே பார்க்கவும்.


அது எப்படி இணைய இணைப்பு இல்லாமல் இயங்கும் என்று உங்கள் எல்லாருக்கும் வரும் ஐயம் எனக்கும் வந்தது. கூகிளிட்டுப் பார்த்தால் பல தளங்களில் இது பற்றிய செய்திகள் கிடைத்தன. நீங்களும் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால்

  • இந்த வலைதளம் ஃபிளாஷ் கோப்பைக் கொண்டது. 
  • பிளாஷ் கோப்புகள் அளவில் மிகச் சிறியவையாக இருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
  • வலைதளத்துக்குள் நீங்கள் நுழைந்ததும் இந்த பிளாஷ் கோப்பு உங்கள் கணினியில் பதிவிறங்கி விடுகிறது. 
  • இந்த ஃபிளாஷ் கோப்பில் இசை மட்டும்தான் பெரும்பகுதி எடுத்துக்கொண்டிருக்கிறது, அதிக இடம்பிடிக்கக்கூடிய படங்களோ வேறு விஷயங்களோ இல்லை என்பதுதான் அவ்வளவு விரைவாக இந்தக் கோப்பை உங்கள் கேச்-இல் இடம்பெறச் செய்கிறது. 
  • இருக்கிற சில படங்கள்கூட வெக்டர் கிராபிக்ஸ் - பிட்மேப் கிராபிக்ஸ் அல்ல. (போட்டோஷாப், பிளாஷ் அறிந்தவர்களுக்கு இதன் வித்தியாசம் தெரிந்திருக்கும்)
  • இணைய இணைப்பு இருக்கிறதா என்றும், இருந்தால் அதை துண்டிக்குமாறும் எச்சரிக்கிற நிரல் அதில் எழுதப்பட்டுள்ளது. 
  • அதனால்தான் நீங்கள் இடையில் இணைய இணைப்பை ஏற்படுத்தினால் மீண்டும் எச்சரிக்கை வரும், துண்டித்த பிறகு மீண்டும் இயங்கும்.
  • இணைய இணைப்பே இல்லாமல் இயங்க முடியும் என்றால், முதலில் இணைப்பைத் துண்டித்துவிட்டு முகவரியை அடித்துப் பாருங்கள், தளம் திறக்காது.
அட, இவ்வளவுதானா என்று தோன்றலாம். ஆனால் பொருத்தமான ஒரு நபருக்கு பொருத்தமான ஒரு விளம்பரத்துடன், வித்தியாசமாகச் செய்திருக்கும் முயற்சியை பாராட்ட மனம் வராவிட்டாலும் வியக்காமல் இருக்க முடியாது. சுலபமாக முட்டாளாக்கும் சமாச்சாரம்தான் என்று தெரிந்தாலும், முட்டாளானதற்காக வருத்தம் ஏற்படுவதில்லை.

என்ன... நீங்களும் முட்டாள் வரிசையில் சேர்ந்து விட்டீர்களா....

1 comment:

  1. சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.. :)

    ReplyDelete